ஆணின் பெண்: உடை அரசியல். – கொற்றவை


நவீனம் அதி நவீனமாகி ஊதிப் பெருத்து மனிதனின் வாழ்க்கை முறைகளை தன் இரக்கமற்ற பொருளாதார வாய்களால் மென்று தின்று கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் என்பது நடை, உடை, உண்ணும் உணவு வரை இன்னும் ஆழச்சொன்னால் மனிதர்களது கனவுவரை பெரும் தாக்கத்தைப் பாய்ச்சியிருக்கிறது. அதன் வெற்றியை பன்னாட்டு நிறுவனங்களின் பெருக்கம் உறுதி செய்கிறது. சமூகம் என்பது ஆணின் வெளி. அதில் பெண் பார்வையாளர்களாய் இருப்பதற்கும் தகுதியற்றவர்கள். ஆண் வெளிக்காட்டும் பாவனைகளில் எவ்வளவு நவீனங்கள் பெருகியிருந்தாலும் பெண் பற்றிய ஆணின் பார்வை ஒரு போதும் மாறுவதில்லை. ஆணுக்கு எப்போதும் பாலுறவுக்கான ஒர் பொருளே பெண். அதைத்தான் அன்றைய மனுதர்ம சாஸ்திரம் முதல் இன்றைய ஊடகம் வரை முன் மொழிகிறது. ஆண் இவ்விசயத்தில் பழமைவாதியாகவே இருக்கிறான்.

நவீனம், உடைகள் மூலம் சமூகத்தில் ஏற்றிவைக்கும் பெண் பற்றிய கருத்தாக்கங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். உடை ஒன்றே நம் உடலுக்கு எப்போதும் மிக நெருக்கமான ஒன்றாக திகழ்கிறது. அது அல்லாதவரை பிச்சைக்காரர் என்றும், மன நிலை பிறழ்ன்றவர் என்றும் அடையாளம் காணப்படுகிறது. ( ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை நினைவில் கொள்க) உடலை மறைக்கவும், பாதுகாக்கவும், சுற்றுச்சூழலின் தாக்கத்திலிருந்து காக்கவும் உடை அவசியமாகிறது. ஆனால் இப்பயன்களையும், கண்ணோட்டங்களையும் தாண்டி உடை என்பது ஓர் மொழியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது உடல் பற்றிய மொழியாகவும், ஒருவரது சிந்தனை, தேர்வு, சமுதாய வெளிப்பாடு மற்றும் மதம், ஜாதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் அங்கிகாரம், மற்றும் மொழியாகவும் திகழ்கிறது. (புத்தரும், காந்தியும் தங்கள் உடையை ஒரு ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் வன்புணர்ச்சிக்கெதிராக மணிப்பூர் பெண்கள் நிர்வாணத்தையும் ஆயுதமாக பயன்படுத்தியிருப்பது இங்கு நினைவில் வருவது தவிர்க்கவியலாதது)

உடைகளுக்கு இவ்வளவு பின்புலமும் அரசியலும் இருக்கையில் பெண்ணுடைகள் மட்டும் ஆணுக்கு கிளர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும் என்ற ஆண்களது பார்வையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்களாகிய முதலாளிகள் பெண்கள் மேல் செலுத்தும் உடைத்திணிப்பை நாம் அரசியலாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண் பெண் உடலீர்ப்பு இயற்கையால் தீர்மானிக்கப்பட்டது. உடல் என்பது உயிருள்ள, உணர்ச்சிகளால் தூண்டப்பெறும் சாதனமாய் இருப்பதால்,. பெண்களுக்கான உடை வடிவமைப்பு குறித்தும் அதற்கு பின்னால் செயல்படும் ஆண் அரசியல் குறித்தும் நோக்கவேண்டும். பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பதில் பெரும் பங்கு ஆடை, அலங்கார, அழகுணர்ச்சி கருத்தாக்கங்களே. நவ நாகரீகம், பெண் சமூகவயப்படுதல் மற்றும் பெண் சுதந்திரம், முற்போக்கு சிந்தனை, இன்னபிற…. பெயரால் பெண்கள் ஆண்களின் இச்சைகளுக்கு காட்சிப் பொருளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல் திரைப்படங்கள், விளம்பரங்களைப் பார்த்து பெண்கள் “நவீன பாணி” (ஃபேஷன்) பித்து பிடித்தலையுமாறு பல்வேறு புனைவுகள் நடைபெறுகின்றது. பெண்ணுக்கு முன் நிறுத்தப்படும் சுதந்திரமானது ஆண் அவளுக்கு தர நினைக்கும் ( தன் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ) சுதந்திரம்தானேயொழிய அது பெண்ணுக்குரிய சுதந்திரம் ஆகாது.

நாகரீகமானது அதிகாரத்தின் கட்டமைப்பு. ஒவ்வொரு சமூகத்தையும் ஆளும் கருத்துக்கள் ஆள்வோரின் கருத்துக்களே என்கிற மார்க்சின் கூற்றை இங்கு நான் நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். அடிமைத்தனத்தின் வடிவம் தான் மாறுகிறது, அடிமைத்தனம் அப்படியே இருக்கிறது. நிலவும் சூழலுக்கேற்ப பெண் உரிமைக் கோட்பாடுகளை ஆராய்தல் காலத்தின் அவசியம். பெண்கள் தங்களது உடல், உணர்வு சுதந்திரம், அதற்கான தேவைகளை சிந்திக்கத் தவறும் நேரத்தில் ஆண்கள் அப்பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட்வர்களின் சுதந்திர நோக்கத்தை, அரசியல் பார்வையை ஒடுக்குகிறவர்கள் எழுத முடியாது. முடியுமாயின் அது முற்றும் திரிபாகவே முடியும், அமையும். பெண்ணானவள் தான் செல்லும் வழி தன் தேர்வா, அல்லது திணிக்கப்பட்ட தேர்வா, அறியாமையால் பின்பற்றும் தேர்வா, சுயநலத் தேர்வா என்று பகுத்தாராய்வது தத்தமதுசிந்தனைகளை வேவு பார்க்க உதவியாக இருக்கும்.

ஆதி காலத்தில் இருப்பியல் சூழலினால், பிறகு குழு வாழ்க்கை முறையினால், பின்னர் வணிக பரிமாற்றங்களினால் உடையின் வகைகள் பற்றிய தேர்வு (choice) கிட்டியது. மற்றொரு வகையில் புராணங்கள், புனிதப் புத்தகங்கள் வாயிலாகவும், பண்டைய சிற்பம், ஓவியங்கள் வாயிலாகவும் உடை பற்றிய அறிதல் கிடைக்கிறது. விவசாய பொருளாதாரத்திலிருந்து, தொழில் பொருளாதாரத்திற்கு மாறுதல் பெரும்பொழுது உடை வகைகளில் பெரும் மாறுதல் ஏற்படத்துவங்கியது. தொழில் சார்ந்து உடை வடிவமைக்கப்பட்டாலும், அந்நிறுவனங்களில் அதிகார படிநிலைகள் நிர்ணயிக்கும் பொருளாதார சூழல் உடைகளிலும் ஏற்றத் தாழ்வுகளை நிறுவியது. உலகமயமாக்கல் மூலம் அந்நிய பொருளாதார படையெடுப்பு நாகரீகத்தின் பெயரால் உடை என்பதை பயன்பாட்டுப் பொருட்குறிப்பிலிருந்து மாற்றி சமுதாய படிநிலை கருத்தாக்க குறியீடாக மாற்றிப்போட்டது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உடை என்பது அறிவு நிலையின் வெளிப்பாடாக, சுதந்திர சிந்தனையின் (கட்டமைக்கப்பட்ட) வெளிப்பாடாகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. (உடை என்று நாம் பேசும்போது ஆடை, அணிகலன் இதர அலங்காரப் பொருட்களையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.)

இது எவ்வாறு நடக்கிறது? ஒவ்வொரு தனி நபரிடமும் உடை வடிமைப்பாளர் ஒருவர் வந்து கற்றுக்கொடுப்பதில்லை. மாறாக கூட்டுத் தகவல் தொடர்பு (group / mass communication) மூலம் நடக்கிறது. இது நாமே அறியா வண்ணம் நிகழ்கிறது. இது ஒரு மூளை மழுங்கடிக்கும் செயல். (Brain Washing). இச்செயலுக்கு முழுவதும் உறுதுணையாக இருப்பது ஊடகங்கள் (சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், காலாந்திர இதழ்கள், (periodical magazines), விளம்பரங்கள், இவர்கள் முன்னிறுத்தும் ஊடக மனிதர்கள் (media personalities) ).

ஒரு காலக்கட்டத்தில் புராணங்களிலிருந்தும், பக்தி இலக்கியங்களிலிருந்தும், கோயில் சிற்ப ஓவியங்களிலிருந்தும் கதாப்பத்திரங்களை மாதிரிகளாக்க் கொண்டு அதில் குறிப்பிடப்படும் குணங்களுக்கும், வாழ்வியலில் ஒருவர் செயல்படும் கதாப்பத்திரத்திற்கும் (role) தக்கவாறு ஆடைகள் வடிவம் பற்றிய தேர்வு கிடைக்கப்பெற்றது (உ.ம் அரச / அரசியர் உடை, குடியானவன் உடை, திருடனின் உடை, ஒடுக்கப்பட்ட மக்களின் உடை, ஆண் உடை, பெண் உடை என்று பல. கண்ணகி, சீதை, தலைவி அணிந்த உடை, ஆடல் மகளிர், பரத்தையர் ஆகியோர் அணியும் உடை). உடை பற்றிய விளக்கங்கள் நமக்கு அதுபோன்ற உடைகளை அணிபவர் பற்றிய குணச்சித்திரத்தைத் தருகிறது. அச்சித்திரம் காரணமாக அன்றாட வாழ்வில் நம் சார்பை பிரதிபலிக்க உடைகளை தேர்ந்தெடுக்கும் போக்கு ஏற்படுகிறது. அதேபோல் அங்க லட்சணங்கள் பற்றிய வருணனைகள். வில்லொத்த புருவம், மீன் போன்ற கண்கள் கொண்டவளே சிறந்த அழகி என வருணிக்கப்பட்ட பெண்களைப் பின்பற்றி அழகு பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அது போன்று அலங்காரம் செய்து கொள்வது நடக்கிறது. இதன் உச்சக்கட்ட வருணனை பெண் தெய்வங்கள் பற்றியது. நீண்ட கூந்தல், வளைந்த இடைகள், பெரிய பொட்டு, அணிகலன்கள் என்று தீட்டி இவைகளைக் கொண்டவளே தெய்வீகத் தன்மை நிறைந்தவள், பத்தினித் தன்மை நிறைந்தவள் என்று உள்வாங்கிக் கொண்டு அது போன்ற ஒப்பனைகளை செய்துக் கொள்வதும் உண்டு. இப்படி புத்தகங்கள் வாயிலாக கிடைத்த அறிதலின் அடுத்தக் கட்டமாக திரைப்படங்கள் உடைகளின் மூலமாய் அணிபவரின் குணாதியசங்களை சித்தரிக்கத் துவங்கின.

நடிகர்கள் அணியும் உடையானது சித்தரிக்கும் கதாப்பத்திரங்களின் குணம் பற்றியக் கருத்து மக்களைப் பற்றத் துவங்கியது. பெரும்பாலும், கற்பு நெறியில் உயர்த்தி சித்தரிக்கப்படும் நடுத்தர குடும்பக் கதாநாயகிகள் அணியும் புடவை, முக்கால் கை கொண்ட ரவிக்கை, நடு வகிடெடுத்து சீவி, புட்டம் வரை தொங்கும் கூந்தல், மஞ்சள் பூசிய முகம், பெரிய பொட்டு, கை நிறைய வளையல்கள், போன்றவை நடுத்தரக் குடும்பப் பெண்கள் தங்களுக்கன அடையாளங்களாய் மாற்றிக்கொண்டனர். பணக்காரப் பெண்ணாய், கற்றவளாய் வலம் வரும் கதாநாயகிக்கான அடையாளம் உடலைக் கவ்விப் பற்றிய சுடிதார், வடிவமைக்கப்பட்ட புடவை (designer saree) குதிகால் உயர செருப்பு, அரிதாரம் பூசிய முகம், நவ நாகரீக கைப்பை போன்றவை ஒரு அடையாளத்தை முன் மொழிந்தது. வெளிநாட்டுக்குச் சென்று வரும் கதாநாயகி அல்லது மெத்தப் படித்தவள் என்றால் குட்டைப்பாவாடை, விரித்த கூந்தலுடன் திரியும் திமிர் பிடித்தப் பெண். இப்படி பெண்களின் குணத்தை கற்பனைக்கேற்றவாறும், அவர்களின் எதிர்பார்புகளுக்கேற்றவாறும் ஆண் படைப்பாளிகள் அக்காலம் முதல் இக்காலம் வரை புனைந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களும் அவை சித்தரிக்கும் குணங்களும் மக்கள் மனதை பெரிதும் ஆட்கொள்ளத் தொடங்கின. அதற்கு பெரிதும் உதாரணமாக நடிகர்கள் பெயரில் சந்தையில் உலவும் ஆடை அணிகலன்கள். கதாநாயகிகளின் பெயரால் தயாரிக்கப்பட்டு, திரைப்படங்களின் பெயராலும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. அவற்றைத் தேடிப் போய் பெண்கள் வாங்குகிறார்கள். திரைப்படங்களில் அவற்றை அணிந்துக் கொண்டு வரும் பெண் மிகவும் அழகானவளாகவும், தேவதையாகவும், எல்லோரையும் கவர்பவளாகவும், உயர்வானவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். அவற்றைப் பார்க்கும் பெண்களின் மனது அவற்றை அணிவதன் மூலம் தன்னையும் ஒரு கதாநாயகியாகக் கற்பனை செய்துக்கொண்டு மகிழ்கிறது. (இது ஆணுக்கும் பொருந்தும் என்று சொன்னாலும் அவனது ஆண் தன்மைதான் பெண்மையை வடிவமைக்கும்போது அவன் தன் தேர்வை மிக எளிதாக மாற்றிக்கொள்ளக்கூடும்.) பெண்ணுக்குரிய உடல் அளவு (size zero), அங்கங்களின் அளவுகளை குறைவின்றிக் காட்டும் இறுகப் பற்றும் உடைகள், அதற்கு பொருந்தும் இதர அணிகலன்கள், காலணி, கைப்பை என எல்லாவற்றையும் விளம்பரங்களும், திரைப்படங்களும்தான் கற்றுத் தருகின்றன. சரியாகச் சொல்வதென்றால் நாம் ‘நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாறிப்போன உடல்கள்’ – ராமாநுஜம்.

திரைப்படங்களில் தாய், தங்கை கதாப்பாத்திரங்கள் அணியும் உடையும், கதாநாயகி அணியும் உடையும் எவ்வாறு இருக்கிறது? குறிப்பாக பாடல் காட்சிகளில் கதாநாயகி அணியும் உடை எத்தகையது? தாய், தங்கையான பெண்கள் மங்கலமான (அவர்களின் குறிப்பின்படி), முழுவதும் போர்த்திய உடை அணிபவர்களாக இருப்பார்கள். கதாநாயகியோ மார்புக்கோடு தெரியும் உடை, தொப்புள் காட்டும் உடை, குட்டைப் பாவாடை, குட்டைச் சட்டை, ஸ்லீவ்லெஸ் உடை என்று அணிந்துக் கொண்டு சுற்றி சுற்றி வருவார்கள். கதாநாயக ஆணின் பார்வையைக் கவரும் விதத்தில் வலம் வருவாள். அவளது நோக்கம் முழுதுமே கதாநாயகனான ஆணைக் கவர்வதும், அவனை மகிழ்சிக்குள்ளாக்குவதும் மட்டுமே. (அப்படிக் கவர்ந்தால்தான் அவள் கதாநாயகியாக முடியும் என்ற ஆணின் கட்டமைப்பு). இதற்கு எதிர்மறையாக கதாநாயகனது தங்கை கதாப்பாத்திரமானது குடும்பப் பாங்கான பெண்ணாக இருப்பாள், ஒழுக்கமான (கதாநாயக ஆணின் குறிப்பின்படி, எதிர்பார்ப்பின் படி) உடை அணிந்திருப்பாள். அவளை வேறு ஆண் உற்று நோக்கினால் அண்ணனாகிய கதாநாயகன் வெட்டிப் போடவும் தயங்கமாட்டான். ( இதிலிருந்து நாம் ஆணாதிக்க வரலாற்றை கூறு போடலாம்.) அதே கதாநாயகன் கதாநாயகியை உள்ளாடைக்கு நிகரான ஆடையை அணியவைத்து தானும் அவள் தொப்புளைச் சுற்றி நடனமாடிக்கொண்டிருப்பான்.

ஆண் பித்தாகித் திரியும் அக்கதாநாயகிகளை வாழ்வின் மாதிரிகளாக பாவித்து அவர்கள் அணிவது போன்று உடைகளைத் தேர்வு செய்யும் போக்கு இன்று அதிகமாக்க் காணப்படுகிறது. இன்று நடிகர்களுக்கு கிடைக்கும் புகழும், பணமும் வேறு எந்தத் துறையினருக்கும் கிடைப்பதில்லை. உயரிய, பயனுள்ள படைப்புகளை கொடுத்த எழுத்தாளர்கள், சமுதாய சீர்த்திருத்தவாதிகளின் பெயர்களை எவரும் அறிந்து வைத்திருப்பதில்லை, ஆனால் ஒரு திரைப்படத்தில் / தொலைக்காட்சி நாடகத்தில் ஒரே ஒரு காட்சியில் தலைக் காட்டிவிட்டுப் போகும் ஒரு நடிகரை எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். நடிகர்களை ஊடகம் கொண்டாடும் விதமே இதற்குக் காரணம்.

கற்பு நெறி, ஒழுக்கம், சமுதாய அக்கறை பேசும் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அதற்கு முரணாக கதாநாயகியின் உடை விஷயத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருப்பார். இது எதன் பொருட்டு? பெண் சுதந்திரமா? அப்படியென்றால் அவர் தாயும், தங்கையுமாய் நடிக்கும் பெண் பெண் இல்லையா? நிஜ வாழ்க்கையிலும் தங்களின் குடும்பப் பெண்களுக்கும் அந்த சுதந்தித்தைக் கற்றுத் தர வேண்டியதுதானே. திரைப்படங்களில் தாய்மைப் பற்றியும், பெண்ணின் பெருமைகளைப் பற்றியும் கண்களில் கருணையோடு பேசும் கதாநாயகர்கள் ஏன் முதலாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காக குரல் கொடுப்பதில்லை? பெண்களைக் கவர்சிப்பொருளாகக் காட்டுவதை எதிர்த்து தீர்மானங்கள் இயற்றுவதில்லை. கவர்ச்சி நடனங்கள் வேண்டாம் என்று மறுப்பதில்லை? மாட்டார்கள், அவர்களின் கதாநாயகத் தன்மை கெட்டுவிடும். அதற்கும் மேலான காரணம் மூலதனம்.

இதற்கடுத்து விளம்பரங்கள் இதில் பெண் சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் அனைத்துமே அவள் உடை சார்ந்தே இருக்கிறதே ஏன்? அல்லது ஆணுக்கு நிகராய் பெண்களும் ஊர் சுற்றலாம் என்று முன் வைக்கிறார்கள். இது தான் ஒட்டு மொத்தப் பெண்களுக்கான சுதந்திரம் என்று இவர்கள் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கான பொருளாய் விளம்பரப்படுத்தப் படுபவையெல்லாம் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்கள். அவள் அந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தி அழகாய் மாறியவுடன் நடப்பது என்ன.. மாடலிங்கிற்கான வாய்ப்பு, நடிப்பதற்கான வாய்பு அவளைத் தேடிக்கொண்டு வரும். அல்லது பல ஆண்கள் அவளை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு பின்னால் ஓடுவார்கள்.

வீட்டு உபயோகப்பொருட்கள் என்றால் போர்த்திய உடையணிந்தப் பெண் சமைத்துப்போட்டு தன் கணவனைக் கவர்வது, மாமியாரைக் கைக்குள் போட்டுக்கொள்வது, உறவினர்களை திருப்திப்படுத்துவது. ஆணுக்கான பொருட்கள் என்றால் அவன் அதை உபயோகித்து அடைவது பெண் அல்லது பெண்கள். அதுவே அவனுக்கு சாதனை. ஆக இப்பொருட்கள் எதுவுமே தனக்கான பயன்பாட்டை விட, மற்றவரைக் கவர்வதற்கான ஒன்றாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அங்கிகாரம் ஒன்றே மனிதத் தேவையாக, அவஸ்தையாகக் கட்டமைப்பது முதலாளிகளே. அப்பொழுதுதான் அந்த அங்கிகாரத்தை தங்கள் பொருள் கொடுக்கும் என்று தங்கள் பொருகளை சந்தைப் படுத்த முடியும்.

பெரும்பாலும் அவற்றை எவ்வித எதிர் கேள்வியும் இல்லாமல் பொதுமூளையில் அழுத்தமாகப் பதியவைக்கிறார்கள்.. ஊடகக் கதாபத்திரங்கள் மூலம் உடல் மற்றும் உடை பற்றியக் கருத்துக்கள் அல்லாமல், சமுதாயப் படிநிலைகளையும் ஏற்றிவைக்கிறார்கள். உதாரணமாக கருமைத் தோலுடன் இருக்கும் ஒர் பெண் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவளாக இருப்பாள், அல்லது வேலைக்காரியாக இருப்பாள். கருமை நிறத் தோலுக்கு கிரீம்களைப் பூசி வெண்சருமம் பெற்றதும் பணக்காரியாகி விடுவாள். இவற்றைப் பார்க்கும் ஒரு பெண் முதலில் தன் சரும நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை வள்ர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருக்கின்றது. பின்பு பொருளாதார நிலைக் குறித்து அவமான உணர்வை வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் தன் பணத்தகுதியை உயர்த்திக்கொள்ள எப்பாடுபட்டாவது அப்பொருட்களை வாங்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறார்கள். அது தன் உடம்பாலும், அழகாலும் மட்டுமே முடியும் என்றும் கட்டமைத்துவிடுகிறார்கள் ஆண் முதலாளிகள்.

நாம் எதற்காக அழகாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்? கவர்சியான உடை அணிகிறோம், உயர்த்திக்காட்டிக்கொள்ள முனைகிறோம்? மற்றவர்களின் அங்கிகாரத்திற்காகத் தானே, குறிப்பாக எதிர் பாலின் கவனத்தைப் பெறவே. இது நேர்மையாக ஏற்றுக்கொள்ள கூசத்தான் செய்யும். சந்தேகியுங்கள். உடலைக் கொண்டாடவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடுதான் ஆனால் அது ஆணின் வக்கிரங்களுக்கு முன்னால் ரசனையாக அல்ல ஆயுதமாக.

மேலை நாட்டுப் பெண்கள் மட்டும் அங்கங்கள் தெரிய உடை அணியவில்லையா? ஆண்களுக்குப் பயந்து நாங்கள் போர்த்திக்கொண்டு நடக்க வேண்டுமா? இது போன்ற கேள்விகள் இங்கு எழலாம். எங்கிருந்தாலும் பெண் ஆணுக்கு போகப் பொருளே இந்தியாவில் மார்பகம் கண்ணுக்கு விருந்தென்றால் ஃப்ரான்சில் பெண்ணின் கால்கள், இப்படி ஆணுக்கு ஒட்டு மொத்த பெண்ணுமே கிளர்ச்சிச் சாதனம்தான்.

மேலை நாட்டவர் உடல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்து வேறு, காமம் பற்றிய அவர்கள் புரிதல் வேறு. கலாச்சாரத்தை மறு நிர்மாணம் செய்து கொண்டார்கள் அவர்கள். கருத்துக்களை அறிவியல் விளக்கங்களோடு பகுத்தாராயும் முறையை கையாளுகிறார்கள். கல்லாமை என்பது அங்கு குறைவு. அறிவியல் நிகழ்வான கிரகணத்தைக் கூட பாம்பு சூரியனை விழுங்கும் பார்பணியக் கதைகளை நம்பிக்கொண்டிருக்கும் மத நம்பிக்கைவாத மக்களின் மனநிலையை நாம் நிணைவுக்கொள்ளவேண்டும். (பார்பணிய வர்ணபேதத்தால்) கல்வியறிவு நிராகரிக்கப்பட்டு பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவும் சூழலில் நாம் வாழ்கிறோம். ஒழுக்கம், கற்பு என்று கட்டுப்படுள்ள நம் நாட்டில் தான் வன்புணர்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன .(2,3 வயது குழந்தைகள் உட்பட), ஒருத்தனுக்கொருத்தி என்பது இந்திய சமூகம் என வாய்கிழியப் பேசிய இந்தியத் தன்மான வாயில்தான் எயிட்ஸ் சிறுநீர் பெய்தது. இன்னும் அசிங்கமாகச் சொல்லப்போனால் ஜாதி இங்குதான் தன் வெறிக்கரங்களை ஆழ அகல பரப்பிப் பற்றியிருக்கிறது. இதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும் – எதேனும் ஒரு ஜாதியையோ, மதத்தையோ கதா நாயகன் அசிங்கப்படுத்தியோ தரக்குறைவாகவோ பேசினால் கொதிக்கும் அமைப்புகள் ஒரு பேச்சுக்குக் கூட தங்கள் ஜாதி, மத, பெண்களை இவ்வளவு அசிங்கமாகக் காட்டியிருக்கிறார்கள் என்று போராடுவதில்லை. (பெண்களமைப்புகள் உட்பட, பெண் கற்பு பற்றி ஏதாவது கருத்து தெரிவித்துவிட்டால் போராட்டங்கள் செய்கிறார்கள்) அப்படி ஒன்றிரண்டு நடந்தாலும் அது அந்தப் பெண்ணை வைத்து சம்பந்தப்பட்ட தனிமனித விரோதங்களை பயன்படுத்திக்கொள்ளவே.

மேலும் ஊடகங்கள் மற்றும் பாலியல் பற்றிய அறியாமை – எங்குப் பார்த்தாலும் பெண்ணின் மார்பும், தொப்புளும், இடுப்பும், தொடையையும் காட்டும் சுவரொட்டிகள், பத்திரிகை அட்டைப்படங்கள், சினிமாக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் என்று கவர்ச்சித் திணிப்பு. மறு பக்கம் கற்பு, ஒழுக்கம், ஆண் பெண் வேற்றுமை என்று கட்டுப்பாடுகள். எப்படி சாத்தியம் பெண்களின் விடுதலை…..

நடிகைகள், மாடல்கள் அணியும் உடைகளாக முதலாளிகள் கொடுப்பவை எது போன்றவை? உடலை, பாலுறுப்புகளை அங்கும் இங்கும் காட்டும் உடைகள். உலகமயமாக்கலின் காரணத்தினால் முதலாளிகள் வெளிநாட்டு உடைகளை சந்தைகளில் நிரப்பி விடுகிறார்கள். அவற்றை அணிந்துக் கொண்டு நடிகைகள்,மாடல்கள் வருவதால் எல்லோரும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதாக விளம்பரப்படுத்துகிறார்கள். அது ஏதோ பெரிய மரியாதைக்குரிய விஷயமாகவும், முற்போக்குச் செயலாகவும் கட்டமைக்கிறார்கள். அவ்வுடைகளை அறிமுகப்படுத்தும் பெண்கள் பணம் படைத்தவர்கள். ஆகையால் கார்களில் பாதுகாப்பாக செல்வார்கள். ஆண்களோ வீதியில் செல்லும் பெண்களின் மேல்அவ்வுடைகளை அணிந்து அவர்களே அதைக் கிழித்தும் வன்புணர்ச்சி செய்வார்கள். உடையை அறிமுகப்படுத்திய பெண்ணோ காரில் வலம் வருவாள், ஆண்களின் பாதுகாப்போடு. இங்கு பெண் என்பவள் ஆணின் கருத்தாக்கத்தை ஏற்று அதை பணமாக மாற்றும் முதலாளி என்றும் பொருள் கொள்ளலலாம்.

ஒரு நடிகை, மாடல் ஆணைப் பொருத்த வரை வேசி ஆகவே அது போல் உடை அணியும் அப்பெண்ணும் அதுபோலத்தான் இருப்பாள் என்று வம்புக்கிழுக்கிறான். ஆம், திரைப்படங்களில் கதாநாயகியைக் கவரும், வம்பு செய்யும் ஆணைக் கதாநாயத் தன்மைக் கொண்டவராக காட்டும் பொழுது இப்பெண்ணைக் கவர்வதின் மூலம் , வம்பிழுப்பதின் மூலம் அவன் அந்த அந்தஸ்தைப் பெற நினைக்கிறான்.

“காலங்காலமாக ஆண்கள் பெண்களைப் பகுத்தறிவற்றவர்களாக, பகுத்தறிவுக்கு உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக கருதி வந்ததால் பெண்கள் பகுத்தாய்ந்து சிந்திக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது; பெண்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழப் பழகிவிட்டனர்.; தம்மைக் கட்டுப்படுத்தி ஆண்களுக்கு அடிமையாக்கும் விஷயங்களில் காதலுக்கும், இதர உணர்ச்சிகளுக்கும் பங்குண்டு என்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; காதலைத் தூண்டும், உணர்ச்சி ததும்பும் அனுபவங்களையும் மோகத்தையும் பகுத்தறிவின் துணை கொண்டு கடந்துச் செல்ல பெண்கள் பழக வேண்டும்; உணர்ச்சிகள், உடலுறவு ஆகியவற்றைக் கடந்த தனிமனித உறவுகள்தான் அறிவான, முறையான குடும்பம், பகுத்தறிவுக்கு கட்டுப்பட்ட நெறியான, நீதியான சமுதாயம் ஆகியன உருவாக வழிவகுக்கும்” என்கிறார் மேரி வுல்ஸ்டன்க்ராஃப்ட்.

ஆண் வக்கிரங்களிலிருந்து பெண் தன்னைக் காத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது அழகுணர்சியிலிருந்து மீள்தல். உங்கள் உடலை சுயமரியாதையுடன் அணுகுங்கள், அவற்றை முன்னிறுத்திக் காட்டுவதன் மூலம் நீங்கள் (உங்களையறியாமலேயே) ஆண்களுக்கு விடுப்பது அழைப்பு. ஆம் ஒரு ஆணின் அங்கிகாரம் தேவையில்லை என்றால் ஏன் அழகை , உடலை எடுத்துக்காட்டும் விதத்தில் உடை அணியும் எண்ணம் தோன்றுகிறது? என்று உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்புங்கள். ”cleavage” தெரிய உடை அணிந்து செல்லும் ஒரு பெண்ணைக் காணும் ஆண் அதைக் கண்டுக் கொள்ளக் கூடாது என்று சுதந்திரம் பேசும் நாம், கொலையுணர்சி என்பதையும் ஒருவரின் சுதந்திரமாக கருதலாமா? இக்கருத்துக்கள் யாருடைய திணிப்பு என்று சிந்திக்கவேண்டும்.

ஆண் ஏற்றிவைக்கப்பட்ட ஆண்மைக் குணங்களைக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்கிற அளவுக்கு பண்டைய வேதக் கலாச்சாரம் முதல் இன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்திய கலாச்சாரம் வரை முன் மொழிவது ஆணாதிக்கத்தைத் தான். முந்தையப் பெண்ணினம் கலாச்சார அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கோரியக் காலத்தில் அவர்கள் கல்வியறிவு இல்லாமலும், பொருளாதார சுதந்திரம் இல்லாமலும் இருந்தார்கள் ஆகையால் கலாச்சார அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். பெண்களின் உற்பத்தி திறன் மீது ஆண்கள் கொண்ட பயமும், குடும்பம் எனும் நிறுவனம் மூலம் கிடைக்கும் சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளே அதற்கு காரணமாய் அமைந்திருக்கிறது.. இன்றைய பெண்கள் கல்வி, பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் கலாச்சார மீறலை முன்னிறுத்தி, அழகுணர்சிகளுக்கு அடிமைகளாக்கி, பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது ஆண் முதலாளித்துவம். ஆகவே இன்றையப் பெண்ணியமானது பொருளாதார அடிமைகளாகிப் போன சமுதாயத்தில் பெண் மீதான நவ நாகரீகத் திணிப்புகளைக் கண்டறிந்து மீண்டும் ஆண்களுக்கு இரையாகமல் இருப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகிறது. உடை பற்றிய திணிப்பு கருத்தாக்கங்களை மீள் கருத்தாக்கம் செய்வது, பெண் பற்றிய பார்வையை சரியாக எடுத்துரைப்பதற்கு வித்திடும்.

நாம் நமக்கெதிரான பார்வைகளை களைந்தெரிய (மார்க்சிய, ஷோசலிச) பெண்ணியக் கல்வியை பயன்படுத்த வேண்டும். பிரிவினைகளை உண்டாக்கும் முதலாளித்துவ சிந்தனைகளைக் கைவிட்டு முதலில் பெண்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். மதம், கலாச்சாரம், கல்வி, அரசியல் பொருளாதார சுதந்திரம் பற்றிய சரியான அறிதல் இல்லாமல் வாழும் பெண்கள் ஒரு புறம், கலாச்சார புரட்சி, கல்வி, பொருளாதார சுதந்திரம், நவநாகரீக கருத்தாக்கங்கள் கொண்ட பெண்கள் மறுபுறம் என்று நாம் சிதறுண்டு கிடக்கிறோம். நமக்குத் தேவையானது மொத்த இனத்திற்குமான சுதந்திரம். அது ஒருமித்த அடையாளங்களை தோற்றுவிப்பதின் மூலமே சாத்தியம்.

லெனினின் வாசகங்களை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இது நடைமுறை புரட்சிகர உசிதமேயன்றி, முதலாளித்துவ பெண்ணுரிமைவாதமல்ல”. மேலும் அவர் கூறுகிறார் – “சுதந்திரக் காதல், பாலுறவு சுதந்திரம், இதயத்திலிருந்து விடுதலை, குடும்ப அமைப்பை நிராகரித்தல், ஆகியவை தொழிலாளி வர்கத் தேவையில்லை. அது குட்டி-பூர்ஷ்வா ஜனநாயக கோட்பாடுகள், முதலாளித்துவ-தனிமனித நோக்கம் நிறைந்தவை”.

ஆண்களுக்கு நிகராய் புகைப்பிடிப்பதும், மது அருந்துவது பாலியல் உறவுகளுக்கான சுதந்திரம் கோருவது போன்றவை ஆண்களை முன் உதாரணமாக நாம் ஏற்றுக்கொண்டதாக அமையும். மேலும் இவையெல்லாம் முதலாளித்துவ பெண்ணுரிமை வாதம், எல்லோருக்கும் பொதுவான உரிமைப் பிரச்சனையாக கருதிவிட இயலாது. இது பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இயங்கும் பெண்களுக்கே நன்மையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயமும் பொதுவாக உடல் பற்றிய கருத்தாக்கங்களை மாற்றிகொள்ளாத போது பணம் படைத்தவர்கள், ஆதிக்கவாதிகள் (குறிப்பாக ஆங்கிலேய நாடுகள்) பேசும் சுதந்திரமானது பெரும் சுயநலம் கொண்டது, நம்மை விலைப் பேசும் தன்மைக் கொண்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால் முதலாளிகள் (ஊடகங்கள் மூலம்) பெண் பற்றிய தவறான கருத்தாக்கங்களைத்தான் ஏற்றிவைத்திருக்கிறார்கள். ஆணாதிக்க முதலாளிகள் கட்டமைக்கும் ஒன்றை பெண்கள் தேர்வாகக்கொண்டால் பெண்கள் அடிமைகளே. முன்பு பெண்கள் அதிகாரத்தின் அடிமைகள், இப்பொழுது “பொருளாதார அடிமைகள்”. அன்று கற்பின் பெயரால் பெண்களை அடிமையாக்கினார்கள், இன்று போலி பெண் சுதந்திரத்தின் பெயரால் பெண்களை இரையாக்குகிறார்கள். இதிலிருந்து விழித்துக்கொள்வது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது. ஆண் முதலாளிகள் தங்களது வக்கிரத்தை ஆதிக்கப்பார்வையை, தங்களது சுதந்திரத்தை, எதிர்பார்ப்புகளை பெண்கள் சுதந்திரமாக மாற்றி பெண்களின் உடலைக் கண்காட்சிப் பொருளாக மாற்றி பெண் என்பவள் வெறும் பாலியல் பண்டமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

பெண் என்பவள் ஆணுக்கு யார்? பெண் என்பவள் யார்? விவாதிப்போம் தோழர்களே.

Tagged: , , , ,

7 thoughts on “ஆணின் பெண்: உடை அரசியல். – கொற்றவை

 1. ஜமாலன் January 26, 2012 at 3:42 am Reply

  விரிவாக எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை. மார்க்சிய அடிப்படையிலான பெண்ணியம் குறித்து விரிவாக இங்கு பேசப்படவில்லை. எனக்கு தெரிந்து ஒரு கட்டுரைத்தொகுப்பு என்.சி.பி.ஹெச்-சில் வெளிவந்து உள்ளது. குமாரி ஜெயவர்த்தனாவின் ஒரு நூல் உள்ளது. நீங்கள் அதை நூலகத்தில் இணையத்தில் வாசிக்கலாம்.

  உடை என்பது ஒரு குறியியல் செயல்பாடாகி உள்ளது. அது கலாச்சார மூலதனத்தின் அடிப்படையில் இயங்கும் ஒன்று. இது குறித்து எனது இரண்டாவது நூலில் ஒரு கட்டுரை உள்ளது. மார்க்ஸ் சொன்ன மதிப்பு என்பது பயன் மற்றும் பரிவர்த்தனை என்பதிலிருந்து இன்று குறியியல் மதிப்பைக் கொண்டிருக்கிறது. உடை அந்தஸ்தை தரும் என்பது ஒரு குறியியல் மதிப்பீடுதான். இந்த சுட்டியில் நான் நடத்திய ஒரு விவாதம் உள்ளது. http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html

  உங்களுக்கு பயன்படலாம். உங்கள் முயற்சிகள் நன்று. தொடருங்கள். பெண்ணியம் என்கிற வலைதளத்தில் பெண்ணிய எழுத்துக்களை தொகுத்து உள்ளனர். அதுவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொடர வாழ்த்துக்கள் தோழர்.

 2. நன்றி தோழர் ஜமாலன். உங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேண். நீங்கள் சுட்டியுள்ள் கட்டுரைகளைப் படிக்கிறேன். நன்றி.- கொற்றவை.

 3. malligamohan September 10, 2013 at 2:21 am Reply

  Women should think about their self and has to do what they want and need as they wish, Why should they obey for other gender that is the male.

 4. Siva Gnanam September 10, 2013 at 7:13 am Reply

  தோழர் கொற்றவை…..

  உங்களது கட்டுரை எனக்கு உடன்பாடு

  டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவத்தை ஒட்டி எனது பேஸ் புக்கில் நான் எழுதிய விஷயமும் அதை ஒட்டி வந்த கமென்ட்டுகளையும் கொடுத்துள்ளேன்.

  தூக்கு விதிக்கத் தக்கவர்கள்
  டெல்லியில் இருந்து
  தூத்துக்குடி வரையில்
  பெண்களுக்கு
  பாலியல் வன்கொடுமை இழைத்த
  ஆண்கள்
  தூக்குத் தண்டனை விதிக்கத்தக்கவர்கள்
  காலையில் எழுந்து தினசரியைப் புரட்டுகையில்
  ஏதேனும் ஒரு நிறுவன விளம்பரத்தில்
  யாரேனும் ஒரு பெண்
  நிர்வாணத்திற்குச் சற்றே நெருக்கமான ஆடையுடன்
  இதோ இப்போதே உடலுறவுக்கு தயார்
  போன்ற தோற்றத்துடன்
  சிரித்துக் கொண்டிருக்கிறாள்……
  குளித்து முடித்து அவசர கதியில்
  வெளியே கிளம்புகையில்
  உடலை இறுக்கிப் பிடித்து
  அதன் உண்மையான
  கனபரிமாணத்தைக் காட்டும்
  உடைகளை அணிந்தபடி
  பெருநகரப் பெண்களில் சிலர்
  எதிர்ப்பட்டு மறைகின்றனர்……
  மதிய இடைவேளையில் புரட்டும்
  வார, மாத இதழ்களின்
  வண்ணப்பக்கங்களில்
  நிர்வாணத்திற்குச் சற்றே நெருக்கமான
  ஆடையுடன்
  இதோ இப்போதே உடலுறவுக்குத் தயார் எனும்
  தோரணையில்
  யாரேனும் ஒரு நடிகை சிரித்துக் கொண்டிருக்கிறாள்……
  மாலையில் பொழுது போக்கலாம்
  என தொலைக்காட்சியைத் திருப்பினால்
  அங்கும் இதே போல பெண்கள் கூட்டமாகக்
  குத்தாடிக் கொண்டிருக்கின்றனர்
  இரவில் சில நேரங்களில் போட்டி என்ற பெயரில்
  பெண் குழந்தைகள் கூட அப்படிக் குத்தாடத் தவறுவதில்லை
  இத்தனை தூண்டல்களுக்குப் பின்னும்
  எதிர்ப்படும் பெண்கள் எவரையும் சீண்டாது
  அன்றாட வாழ்க்கையில்
  சஞ்சரிக்கும்
  கோடானு கோடி
  ஆண்கள்
  ஆச்சரியத்துக்குரியவர்கள்
  டெல்லியில் இருந்து
  தூத்துக்குடி வரையில்
  பெண்களுக்கு
  பாலியல் வன்கொடுமை இழைத்த
  ஆண்கள்
  தூக்குத் தண்டனை விதிக்கத்தக்கவர்கள்
  62Like · · Promote · Share

  Su Po Agathiyalingam பார்வைக் கோளாறைச் சரிசெய்/மனதை விசாலமாக்கு/நீ ஒரு நிமிடம் அந்தப் பெண்ணாய் இருந்து பார்/ வலி புரியும்/திறந்த வீட்டில் நுழையும் நாயா நீ?
  24 December 2012 at 07:07 · Like

  Siva Gnanam திருடர்கள் உலவும் தேசத்தில் வீட்டைத் திறந்து வைக்காதீர்
  24 December 2012 at 07:12 · Like

  Siva Gnanam என்றுதான் சொல்ல வருகிறேன் நான் நாயா இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையில்லாதது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களின் வலி எனக்குப் புரிகிறது இதுபோல கொடுமைகளுக்குக் காரணமான ஆண்களின் வக்கரித்துப் போன பார்வைக்கும் மனவியலுக்கும் எது காரணம் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிக்கும் திரைப்படங்களும் இத்தியாதிகளும்தானே. ஒரு சின்ன விஷயம் நான் பொருளாகவே இருக்கிறேன். என்னிடம் இருக்கும் உடலைக் காட்டுவதால் எனக்கு ஏராளமாய் பணமும் புகழும் கிடைக்கும் என்று சொன்னால் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறும் பெண்களைப் பற்றித்தான் நான் எழுத வந்தேனே தவிர வேறல்ல
  24 December 2012 at 07:16 · Like

  Siva Gnanam அந்தப் பெண்களாக இருந்து பார்த்தால் எனக்கு வலி வரவில்லை
  24 December 2012 at 07:17 · Like

  Siva Gnanam பெண் என்பதற்காக இழிவுபடுத்துவதும் அவளைப் பொருளாக்கிப் பார்ப்பதும்பெண் என்பதற்காகவே அதீத சலுகை காட்டுவதும்
  24 December 2012 at 07:18 · Like

  Siva Gnanam பெண் என்பதற்காகவே அவர் பொருளாக தானே முன்வந்தாலும் அதை அங்கீரிப்பதும் ஆணாதிக்கத்தனமே

 5. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.இதைப் பேசியிருக்கிறீர்களா அதைப் பேசியிருக்கிரீர்களா என்ற கேள்விக்குப் பதிலாக எனது கட்டுரைகளையே வைக்கிறேன். மேலும் உங்களது முற்சார்புகளுக்கும் ஒப்புமைகளுக்கும் என்னால் பதில் அளிக்க முடியாது. நன்றி.

 6. Viswajith January 19, 2015 at 8:52 am Reply

  hello maam. i am a ug 1st year student. in my opinion, this article has included various aspects and really good. shall i get an english version of this article?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: