புண்படும் பெண் மனம் – தமயந்திஇன்றைய காலகட்டப் பெண்கள் மிகவும் முன்னேறி விட்டார்கள்.

ஆமாம்!

பொருளாதார ரீதியாக மிகப் பெரிய எழுச்சியைச் சந்தித்திருக்கிறார்கள்.

உண்மை!

தங்கள் ஆடைகளை வசதிக்குத் தக்க அணிந்து கொள்கிறார்கள்.

சரி!

அவர்கள் அவர்களாய் இருக்கிறார்கள்!

இதை மட்டும் ஆமோதிக்க முடியவில்லை. எந்தப் பெண்ணும் அவளுக்கான முகத்தை அணிந்து வாழ்வது மிகக் கடினமாக உள்ளது. இவ்வளவு ஏன்? அலுவலகச் சூழலிலேயே திறமை கொண்ட ஒரு பெண் சந்திக்கும் எதிர்ப்புகள் எத்தனை எத்தனை? சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பாலியியல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஐ.டி. பெண்களுக்காகவே புகார்ப் பெட்டிகள் நிறுவியுள்ளார்கள்!

சமீபகாலங்களாய் பெண்கள் சம்பந்தப்பட்ட பல செய்திகளைப் பார்க்கிறோம். இந்தூரில் கணவனால் பிறப்புறுப்பில் பூட்டு போட்டுக்கொண்ட பெண். குடிகாரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் என்று வரிசை நீண்டுகொண்டே செல்கிறது.

பெண்ணுடலைத் தான் வளர்க்கும் மிருகத்தைக் காட்டிலும் கேவலமாக நினைக்கும் மனோபாவம் இந்தச் சமூகக் கட்டமைப்பின் அடிநரம்பு. இதற்குப் பலியாகும் ஆண்கள் பெண்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். ஆண்களுக்காகவே படைக்கப்பட்டு அவர்களுக்காக பிள்ளைபெறும் இயந்திரத்தனமான வாழ்க்கையையே பெண்களும் தங்களுக்கான வாழ்வாய்ப் பார்க்கிறார்கள்.

கடந்த சில நாள்களாய் செய்தித்தாள்களில் மதுரையில் கிரிக்கெட் மட்டையால் தன் கணவனைக் கொன்ற உஷாராணி என்னும் பெண் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற செய்தி வலம் வருகிறது. உஷாராணி கடந்த பிப்ரவரி மாதம், தன் மகளைப் பாலியல் இச்சையோடு அணுகிய தன் கணவன் ஜோதிபாசுவை கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் அவர் இறந்தார். தான் அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட உஷாராணி, ஐ.பி.சி. செக்ஷன் 100-ன்படி விடுவிக்கப்பட்டார். (கற்பழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியவரை, தற்காப்புக்காக தாக்குவது தவறல்ல; அப்படி தாக்கும்போது எதிரி உயிரிழந்தால் அது கொலைக்குற்றமாகாது என்று இச் சட்டப்பிரிவு தெரிவிக்கிறது.)

இதை எதிர்த்து ஜோதிபாசுவின் தந்தை வழக்கொன்று தொடர்ந்தார். அதில் ஜோதிபாசுவை உஷாராணி கொன்றதாகப் புகார் தெரிவித்திருந்தார். அவ்வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இருக்கும் காலகட்டத்தில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்திடம் ஜோதிபாசுவின் தந்தை ஒரு மனு அளித்திருக்கிறார். அந்த விசாரணை என்னவாயிற்று என்று தகவல் அறியும் சட்டம் வாயிலாக ஜோதிபாசுவின் தந்தை கேட்டதற்கு மாவட்ட ஆட்சியரின் அறிக்கையைப் பதிலாக அவரது நேர்முக உதவியாளர் கொடுத்திருக்கிறார்.

அதில் அந்த மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கும் விஷயங்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றன. முதலில் வழக்குப் பதிவாகியுள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்திலிருந்து தனக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறுபவர், ஜோதிபாசு இறந்த புகைப்படத்தில் பல காயங்கள் இருந்ததாகவும் எனவே அவரது மரணம் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதால் மட்டும் நிகழ்ந்திருக்காது எனத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

புகைப்படத்தைப் பார்த்தே காயங்கள் எந்த வகையானது, எதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளும் மாவட்ட ஆட்சியரின் தனித்திறன் வியக்க வைக்கிறது. அவற்றை ஒருவரால் ஏற்படுத்த முடியாது என்னும் தீர்மானமும் மிகுந்த ஆச்சரியத்தை வரவழைக்கின்றன.

யூகங்களின் அடிப்படையில் அறிக்கை கொடுக்கும் வழக்கம் மட்டுமல்ல, மற்றொரு செய்தித்தாளில் வெளிவந்திருக்கும் அவரது அறிக்கையில் உஷாராணிக்கு “”வேறு சில நபருடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது” என்னும் வரி நம்மை மேலும் அதிர்ச்சியில் மூழ்க வைக்கிறது.

ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தோமானால் அதற்கான ஆதாரங்களையும் முன்வைப்பதுதான் அந்தக் குற்றசாட்டின் நம்பகத்தன்மையை ஆழப்படுத்தும். பொத்தாம்பொதுவாகவே நம் சமூகத்தில், “ஓ அவளா. அவளுக்கு அவனோட தொடர்பு. இவனோட தொடர்பு’ என்கிற பேச்சின் எதிரொலியாகவே அறிக்கையின் ஆழத்தில் ஒலிக்கும் குரல் உள்ளது. அப்படி தொடர்பு உண்டு என்றால் யாருடன் உண்டு, அதன் ஆதாரம் என்ன என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதேசமயம் ஜோதிபாசுவின் மீது மதுரையில் தொடரப்பட்ட மற்ற வழக்குகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

பொறுப்பான பதவியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், பொறுப்பற்றத்தனமாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்மீது வீண்பழி சுமத்துவதை இந்த ஆணாதிக்க சமுதாயம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பெண்மைக்குப் பாதுகாப்பளிக்கும் பெண்மணி முதல்வராக இருக்கும் ஆட்சி எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பெற்ற மகளைப் பாலியல் வக்கிரத்துக்கு உள்ளாக்கும் தந்தைமார்கள் நமது கலாசாரக் கேடயங்களால் பாதுகாப்புப் பெறுகிறார்கள். இந்தூரில் பிறப்புறுப்பில் பூட்டுப் போடப்பட்ட பெண்ணின் மகளிடம் அவளது தந்தை தவறாக நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்தக் குழந்தைகள் மனரீதியாக எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பது நினைத்தும் பார்க்க முடியாது.

வெறும் சட்டரீதியாக இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வதே இந்தப் பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு காரணம். பாலினம் பற்றியும் பாலியல் உணர்வுகள் பற்றியுமான புரிதல் அற்ற சமூகத்தில் தமிழ் சினிமாக்களும் ஊடகங்களும் பிரகடனப்படுத்திய ஒழுக்கநிலைகள் ஆண்களை என்றுமே சாராதவையே.

உஷாராணி வழக்கில், பேசப்படாத ஒரு பெண்ணின் மனநிலையும் உள்ளது. அதுவே அவரது மகள்.

கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுக்குத் தந்தையின் மரணம், மட்டுமல்ல. தாய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, குடும்பத்தின் வறுமை எல்லாமே எத்தனை மன அயர்ச்சியைத் தந்திருக்கும்? அதைக் களையும் பொறுப்பும் நம் சமூக அதிகார கட்டமைப்புகளுக்கும் சட்டத்துக்கும் உண்டுதானே?

அதுபோலவே ஊடக தர்மங்களும். ஆனால், ஒரு குடிகாரக் கும்பல் ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியபோது அதைச் சுற்றிச் சுற்றி விடியோ எடுத்த நபர் அந்தப் பெண் தன் குடும்பத்தில் ஒருவராக இருந்திருப்பின் அதைச் செய்திருப்பாரா என்று யோசிக்கும்போது, “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்தவன்தானா?’ என்று ஆண்களை நோக்கி வீசப்படும் சொற்றொடர்கள் பெண்களின் உணர்வுசார்ந்த வெளியைச் சார்ந்தும், அடைகாக்கப்பட்ட அமைதியைக் கீறியும் வந்தவையாகவே தோன்றுகிறது.

எத்தனை எத்தனை பெண்கள் இதுபோல் சமூக, ஊடக அராஜகங்களால் மனதளவில் மரணித்திருப்பார்கள்? அதை ஏன் யாருமே யோசிப்பதில்லை? மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் உஷாராணி அவரது கணவரின் மர்ம உறுப்பை அழுத்திக் கொன்றதாகக் கூறியுள்ளது தற்காப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. இதே அறிக்கையின் தொடர்ச்சியாய் ஒரு இரண்டாம் பாகம் எழுதப்பட்டு தற்காப்புக்காக எங்கெங்கு தாக்க வேண்டும் என்கிற விவரங்களும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்! தற்காப்புக்காகப் போராடும் பெண்ணை, இன்னின்ன இடங்களில்தான் ஆணைத் தாக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் மாவட்ட ஆட்சியரின் பெருந்தன்மையும், புரிந்துணர்வும் பிரமிக்க வைக்கிறது!

இந்தச் சமூகம் ஒரு காலத்தில் தாய்வழிச் சமூகமாக இருந்ததுதான். ஆனால், இப்போது கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் பிரச்னைகளை ஒரு ஆணின் பார்வை எத்தனை மலிவானதாக எடைபோடும் என்பது மேலே குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் மூலம் தெளிவாகிறது.

அருள் எழிலனின் சிறுகதையொன்று, தையல்நாயகி என்னும் பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் அவரின் எதிர் ஃப்ளாட்டில் இருப்பார். எப்பவும் அந்த வீட்டிலிருந்து தையல் மிஷின் சத்தம் கேட்டபடி இருக்கும். அந்த வீட்டைவிட்டு அந்தப் பெண் குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே வெளியே வருவார். பால் வாங்க, தண்ணீர் எடுக்க என்று. யாருடனும் பேச மாட்டார். லேசாகச் சிரிப்பதோடு சரி, அதுவும் எப்போதாவதுதான்.

இரவு நேரங்களில் அவர் கணவர் குடித்துவிட்டு அவரை அடிக்கும் சத்தம் கேட்கும். இவர் “”சரியில்லாததால்”தான் அவர் அடிக்கிறார் என்று சுற்றிலும் பேசிக்கொள்வார்களாம். சில இரவுகளில் நீண்ட நேரம் அந்தப் பெண் தனியாக பால்கனியில் நின்றிருப்பார். ஒரு நாள் விடியற்காலை அவரது கணவர் இறந்திருந்தார். “ஹார்ட் அட்டாக்’ என்றும் “இந்தப் பெண்தான் கொன்று விட்டார்’ என்றும் பல குரல்கள். எதனாலும் பாதிக்கப்படாமல் அழாமல் அவர் கணவரின் பிணத்தோடு சொந்த ஊர் நோக்கிச் செல்வதாய் அந்தக் கதை முடியும். அந்தப் பெண்ணின் பெயர் தெரியாததால் “தையல்நாயகி’ என்று பெயரிட்டதாய் ஞாபகம்.

நம் சமூகத்தில் அதுபோன்ற தையல்நாயகிகள் ஏராளம். பெண்களின் தளம் இன்று விரிந்திருக்கிறது. இன்னும் போலியான கட்டமைப்புகளை ஆமையோடாய் சுமக்கப் பெண்கள் தயாரில்லை. யதார்த்த வாழ்வின் சவால்கள் அவர்களை வழிநடத்துகிறது.

உஷாராணி வழக்கு குறித்த அறிக்கையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அதைப் பரிந்துரைப்பது அவரின் முழு உரிமை.

மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதிலும் அரசியல் இருப்பது அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவருடைய அறிக்கையின் இறுதிப் பக்கங்களில் தெளிவாகத் தெரிகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மீது அவருக்கிருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை ஊர்ஜிதப்படுத்துவதுபோல, “”உஷாராணியை விடுதலை செய்யும் உரிமை அவருக்கில்லை” என்றும், “”அரசு ஒருவரது அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் கூறியிருப்பதன் மூலம் அவரது நோக்கம் உஷாராணி வழக்கு விசாரணைக்கான தீர்வை முன்வைப்பது அல்ல, தனிப்பட்ட பேதங்களைப் பஞ்சாயத்து செய்து கொள்வதுதான் என்பது தெளிவாகிறது.

அது மட்டுமல்ல, தன்னிடம் வந்த புகாரை விசாரித்தவர், அறிக்கை சமர்ப்பித்தவர், ஏன் உஷாராணியை அழைத்து விசாரிக்கவில்லை என்கிற கேள்வியும் எஞ்சி நிற்கிறது.

ஊமச்சிகுளக் காவல் நிலைய அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால், மண்டல தடய அறிவியல் ஆய்வக அறிக்கையை மட்டும் மையமாக வைத்து விசாரணையின் விவரங்களைச் சேகரித்து அறிக்கை அளித்தாரா?

உள்நோக்கோடு தனது தனிப்பட்ட விரோதத்தையோ, கருத்து வேறுபாட்டையோ தீர்த்துக் கொள்ள இந்த வழக்கு ஒரு கருவியாக இருக்குமெனில், அதற்குப் பலி ஒரு பெண்ணின் தன்மானமும் அவரது குழந்தைகளின் நிம்மதியும்தான். உஷாராணி அவரது கணவரைக் கொன்றிருப்பாரானால் அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். முன்தீர்மானத்தோடு ஆதாரங்களில்லாமல், “அவருக்குப் பலருடன் தொடர்பு’ என்று எவ்வாறு கூற முடியும்?

சொல்லக் கூடாதுதான். ஆனால், சொல்லாமலும் இருக்க இயலவில்லை. உங்கள் தாய் ஒரு பெண். உங்கள் சகோதரி ஒரு பெண். உங்கள் மனைவி ஒரு பெண். உங்கள் குழந்தைகளில் ஒருவர் பெண் என்று புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். பெண் மனதைப் புண்படுத்துவதற்கு முன் சற்று யோசித்துச் செயல்படுங்கள். அது சராசரி ஆணாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் சரி…!

Source: http://tinyurl.com/9bjhjfv – DInamani

Tagged: , , , , , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: