இடஒதுக்கீடு எதிர்வினைக்கு மறுவினை – மா. தமிழ்பரிதி


மா. தமிழ்ப்பரிதி says:

September 3, 2012 at 10:36 am (Edit)

இது விபரீதமல்ல…. வேண்டாம் இந்த சாதி வெறி
எல்லா நிலைகளிலும் வேண்டும் இட ஒதுக்கீடு

தினமணியில் வெளியான ‘’வேண்டாம் இந்த விபரீதம்’’ என்னும் சாதி வன்மம் கொண்ட தலையங்கத்தையும் ( 22.08.2012) துக்ளக்கில் வெளியான சோவின் ( சோ, பதவி உயர்வில் இட ஒதுக்கீடா? 05.09.2012, பக்க எண்: 17,18,) கட்டுரையையும் மிகக்கடுமையாகக் கண்டி.த்தும் களமாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். பூணூல் புடைக்க குடுமி சிலிர்க்க தாண்டவமாடும் தினமணி, மற்றும் துக்ளக்கின் சாதிவெறி வன்மத்திற்கு எதிர்வினையாற்றும் தோழர்களுக்கு நன்றி சொல்லி நான் அந்நியப்பட்டுக்கொள்ள விரும்பவில்லை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் சாதிவெறிகொண்டு அலையும் இவர்களுக்கு எதிராக அறிவாயுதம் ஏந்த வேண்டியது மானமும் அறிவுமுள்ள நம் அனைவரின் கடமையுமாகும். அதை நாம் செய்தாக வேண்டும்.
இந்தியாவில் உரிய சட்டப்பாதுகாப்பு இருந்தாலும், ஒடுக்கட்ட மக்கள் தொடர்பான பல சட்டங்கள் செயற்படுத்தப்பெறாமல் உறக்கநிலையிலேயே இருக்கின்றன. இட ஒதுக்கீடு இன்னமும் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என்பதற்கு புதிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லை. வெள்ளிடை மலையாக உதாரணங்களும் சம்பவங்களும் கொட்டிக்கிடக்கின்றன. 2004 ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, குரூப் ஏ பதவிகளில் 10%, குரூப் பி பதவிகளில் 12%, குரூப் சி பதவிகளில் 15% என்பதாகவே இட ஒதுக்கீடு உள்ளது. (ரவிக்குமார், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியமே, புதிய தலைமுறை, 06.09.2013, பக்க எண்கள்: 50, 51); ஏன் சட்டப்படி 19% இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதற்காக தினமணிக்கும் துக்ளக்கிற்கும் கோபம் வரவில்லை.
நடுவண் அரசில் உள்ள 88 செயலர் பதவிகளில், ஒருவர்கூட ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர் இல்லை, 66 கூடுதல் செயலர் பதவிகளில் ஒருவர் தாம் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர், 249 இணைச்செயலர் பதவிகளில் 13 பேர் மட்டுமே ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சார்ந்தவர், 471 இயக்குநர் பதவிகளில் 31 பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் (ரவிக்குமார், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியமே, புதிய தலைமுறை, 06.09.2013, பக்க எண்கள்: 50, 51) இதுதான் இந்தியா இட ஓதுக்கீட்டைச் செயல்படுத்தும் நிலை. இதற்கெல்லாம் தினமணியும் துக்ளக்கும் சினம் கொள்ளவில்லை.
இந்தியாவிலுள்ள 24 நடுவண் பல்கலைக்கழத்தில் ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சார்ந்த உதவிப்பேராசிரியர்களுக்கான 740 பணியிடங்களில் நிரப்பப்பெறாதவையாக உள்ளன. 399, ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த இணைப்பேராசிரியர்களுக்கு உள்ள 84% பணியிடங்களில் நிரப்பப்பெறாதவைகளாக உள்ளன. ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு உள்ள 92% பணியிடங்களில் நிரப்பப்பெறாதவை (ரவிக்குமார், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியமே, புதிய தலைமுறை, 06.09.2013, பக்க எண்கள்: 50, 51) என தினமணியும் துக்ளக்கும் வெகுண்டெழவில்லை. ஆனால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்ற குரல் எழுந்ததுமே துள்ளியெழுந்து இவாள்கள் தங்கள் இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய அரசமைப்புச்சட்டம் நிர்ணயித்துள்ள சட்டப்படியான இட ஒதுக்கீட்டையே புறக்கணிக்கும் கடுஞ்சாதி வெறி ஒருபுறமிருக்க, சாகும்வரை சமத்துவம் பேசிய தந்தை பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் பெரியார் பல்கலைக்கழகம், உள்ளிட்ட இதர தமிழகப் பல்கலைக்கழகங்களில் (உயர்கல்வித்துறையில்) நிலவும் ஆதிக்கச்சாதி மேலாண்மைகளும் வன்மங்கள் வரம்புக்குள் அடக்கமுடியாதவை:அவற்றில் சில இதோ;

• உரிய தகுதிகள் இருந்தும், ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த பல இணைப் பேராசிரியர்களுக்கு ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாமல் சமூகநீதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இவர்கள் துறைத்தலைவர் பதவி, ஆசிரியர் தேர்வுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட எவ்வித பொறுப்புகளுக்கும் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

• டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் படத்தை பல்கலைக்கழகத்தில் வைக்க மறுப்பதோடு, அண்ணலை சாதி சார்புடையவர் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி வருகிறார். தமிழ் நாடு அரசு G.O. (Ms) No. 47, Public (General I) Department dated: 7.1.1978 நாளிட்ட அரசாணையில், அரசு அலுவலகங்களில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் படத்தை வைப்பது குறித்து தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும் தொடர்கிறது ஆதிக்க சாதி வெறி.

• ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மாணவர், ஆசிரியர்களின் சமூகநீதியைக் கண்காணிக்கும் SC/ST CELL, இன்னமும் பெரியார் பல்கலைக்கழகத்திலும், இதர தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் அமைக்கப்பெறவில்லை. (பெரியார் பல்கலைக்கழகத்தில் SC/ST CELL அமைப்பதற்கு பல்கலைக்கழக நிதி நல்கைகுழு (UGC) அளித்த ஆதார நிதியில் ஒரு காசுக்கூட செலவு செய்யாமல், வட்டியுடன், பல்கலைக்கழக நிதி நல்கைகுழுவிற்கு (UGC) பெரியார் பல்கலைக்கழகம் திருப்பி அளித்துள்ளது.இந்த சமூக அநீதிக்கு யாரைத்தண்டிப்பது?

• பல்கலைக்கழக விடுதியில் தங்கிப்பயிலும் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் தங்குமிடக்கட்டணம் (accommodation fee) செலுத்துவதிலிருந்து விலக்களித்து 2006 ஆம் ஆண்டிலேயே பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (UGC) ஆணையிட்டுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குமிடக்கட்டணம் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விடுதி மாணவர்களிடமிருந்து பெறப்படுகிறது. (மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்குமிடக்கட்டணம் செலுத்துவது விலக்களிக்கப் பெற்றுள்ளது). பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவிற்கு (UGC) விதியை மீறி 5 இலட்சத்திற்கு மேல் முறைகேடாக ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விடுதி மாணவர்களிடமிருந்து தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

• தமிழகப் பல்கலைக்கழகங்களில் பயிலும் முனைவர்ப்பட்ட மாணவர்கள் கல்விக்கட்டணம் (Tuition fees) செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப் பெற்றுள்ளனர் (G.O Ms. No.722 Social Welfare Dept. Dt. 13-10-1977). ஆனால்,பெரும் போராட்டத்திற்குப்பின் இம்முரண்பாடு, 2011 இல் தான் பெரியார் பல்கலைக்கழகத்தில் சரிசெய்யப்பெற்றது. 2011 க்கு முன்னர் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தை பெரியார் பல்கலைக்கழகம் மீள வழங்க மறுத்து வருகிறது.

• ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தை பல்கலைக்கழக வளாகத்தினுள் நடத்திட, பெரியார் பல்கலைக்கழக ஆதிகச்சாதி வன்ம நிருவாகம் மறுத்து வருகிறது.

உரிய சட்டப்பாதுகாப்பு இருந்த போதிலும், இட ஒதுக்கீடு இன்னமும் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை, நிதி செலவு செய்யப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தோர் மீதான வன்கொடுமை வழக்குகள் பெரும்பான்மையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதையெல்லாம் இதுவரை எந்த பொதுச்சங்கம் கேட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை ஒடுக்கப்பட்டோர் கேட்கக்கூடாது என்பதற்காகவும், தீண்டாமை நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காகவும் ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தப் பணியாளர்கள் சங்கம் அமைப்பதை ‘’வேண்டாம் இந்த விபரீதம்’’ என்கிறது தினமணி. ஒடுக்கப்பட்டோர் பிரிவைச் சார்ந்தப் பணியாளர்களின் சங்கங்கள் சாதி வன்மங்களை, தீண்டாமையை, எதிர்ப்பதால், உரிமைக்குக்குரல் கொடுப்பதால் தினமணி தன் நஞ்சைக் கக்குகிறது.
வன்மங்களும்,வஞ்சகங்களும்,துயரங்களும்,துரோகங்களும்,,அவமதிப்புகளும், அவதூறுகளும், அடக்குமுறைகளும்,ஆதிக்க சாதி வன்மங்களும், நீக்கமற மலிந்து அவை ஒடுக்கப்பட்ட மக்களை குறி வைத்தே வேட்டையாடி வருகின்றன. அவை அவ்வப்போது அவதாரம் தரித்து அரங்கிற்கு வருகின்றன.இதனை நாம் உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், எதிர் வினைத்தொடுக்கவும் அணியமாகவே இருக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்டோர் தமக்குரிமையான சட்டப்படியான உரிமைகளைப் பெறுவதையும், சரி நிகர் சமானமான வாழ்வைப் பெறுவதையும் தமக்கான மான இழப்பாகக் கருதுவோர், அதனைத் தாங்கிக்கொள்ள இயலாதோர், மனம் நொந்து புண்பட்டு ஆற்றாது கண்ணீர் வடிப்போர் அதிகம் வருந்தி தீரா நோயில் விழுந்து செத்துப்போவதை விட சொந்தமாக செத்துப்போவதே அவருக்கும் இந்த நாட்டிற்கும் நல்லது.

 

Advertisements

Tagged: , , , ,

One thought on “இடஒதுக்கீடு எதிர்வினைக்கு மறுவினை – மா. தமிழ்பரிதி

  1. tamil September 3, 2012 at 8:06 pm Reply

    திருவள்ளுவர் பல்கலைக்ழகத்திலோ அல்லது வேறொங்கோ விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை தினமணி ஆதரிக்கவில்லையே. இட ஒதுக்கீட்டில் இடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று உரிய தகுதி இருந்தும் விண்ணப்பதாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை என்று நிருபியுங்கள்.யாரோ எங்கோ தலித்களுக்கு அநீதி செய்கிறார்கள் என்றால் அதற்கு தீர்வு அதற்கெல்லாம் எந்த தொடர்பும் இல்லாத வேறு பலருடைய பதவி உயர்வு வாய்ப்பை பறிப்பதா.ஒரு அநீதியை சுட்டிக்காட்டி இன்னொருவருக்கு அநீதி செய்வது, நீதி மறுப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்.பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை உச்சநீதி மன்றம் கூறிய விதிகளின் அடிப்படையில் செய்வதில் என்ன தயக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: