தூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி


thooththukkudi

தூத்துக்குடி கடற்கரையில்

17.3.2013

பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி என்ற பெயரில், தூத்துக்குடி ராஜா சில்க்ஸ் நிறுவனம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்திட உறுதிமொழி எடுக்கவும், கையெழுத்து பிரச்சாரம் செய்திடவும் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் இந்த நிகழ்வை ஏற்றுக்கொண்டேன்.

வழக்கமாக மூடிய அறையில், ஓரளவு ஒத்த சித்தனையோ அல்லது மாற்று தேடலோ உள்ள கூட்டத்தினர் மத்த்யில், கல்லூரி மாணவர் மத்தியில் உரையாற்றி இருக்கும் எனக்கு ஒரு திறந்தவெளியில், கடற்கரை ஓரத்தில் பொது மக்கள் மத்தியில் உரையாடியது ஒரு மாறுபட்ட அனுபவம். பொது புத்தியில் அத்தனை ஆழமாக ஊறிப்போயிருக்கும் மக்களிடையே நான் பேசப்போவது கிரக்கமும், லத்தீனும் ஆகிவிடக் கூடாது எனும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தது. மைய நிகழ்ச்சி தொடங்கும் முன் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், கடற்கரைக்கு வந்திருந்த மக்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஈர்க்கும் வகையிலும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை அறிவித்தார்கள்.

உற்சாகத்துடன் குழந்தைகள் மேடை ஏறி தங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பாடினார்கள், சில குழந்தைகள் தமிழ் அறப் பாடல்களைப் பாடினார்கள். குழந்தைகளின் இந்த இனிமைக் குரலில் கடலும் தன் இரைச்சலை குறைத்துக் கொண்டது போல் இருந்தது. குழந்தைகளின் குறும்பு மனதை ஆட்கொண்ட அதேவேளை, திறமை எனும் பெயரில் ‘சினிமாப் பாடல்களை’ப் பாடியபோது மனம் பதைபதைத்தது.

என்னுடைய பேச்சு பின் வருமாறு:

“எல்லோருக்கும் வணக்கம். பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி எனும் பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி, தாங்கள் அதை உறுதிபடுத்துவோம் என்று உறுதி மொழி ஏற்கும் வகையில் ராஜா சில்க்ஸ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பாராட்டுக்குறியது.

மேடை ஏறும் முன் என்னை “பாசிடிவ்வாக பேசுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள். அதுதான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய குறிக்கோள் மக்களுக்கு அறிவூட்டுவது, அவ்வறிவு பாசிடிவ்வா, நெகட்டிவ்வா என்பதை பேசிய பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.  ஏனென்றால் சுற்றிலும் அச்சுறுத்தும் வகையிலான மனநிலையைக் காணும் போது நான் எங்கிருந்து பாசிடிவ்வாக தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்வோம். நாளுக்கு நாள் பெண்கள் வன்கொடுமை அதிகரித்து வருகிறது, உங்கள் வீட்டுப் பெண்களை தைரியமாக வெளியில் அனுப்ப இயலவில்லை எனும் நிலையிருந்தும், அதை மாற்றுவதற்கான ஒரு முயற்சி, அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்குகூட சில ‘பொழுது போக்கு’ விளையாட்டுகள் மூலமே உங்களை ஈர்க்க முடிகிறது. விளையாட்டு, மேஜிக் ஷோ என்று அறிவித்து கூப்பிட்ட பின்னரே இங்கு கூட்டம் வந்துள்ளது. இந்த மனநிலையை நாம் எப்படி புரிந்து கொள்வது சொல்லுங்கள்.

அதேபோல் குழந்தைகள் பாடல்கள் பாடினர். சில குழந்திகள் ‘ரைம்ஸ்’ பாடினர். மகிழ்ச்சி. ஒன்றிரண்டு குழந்தைகள் பாடிய சினிமா பாடல் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. “வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு” எனும் அந்த பாடல் வரிகளின் பொருள் கூட தெரியாமல் அந்த குழந்தைகள் அதைப் பாடிச் சென்றது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் குழந்தை டவுசர் அவுருண்டா, ஃபிகரு வேணாண்டா என்று தன்னை அறியாமல் பாடுகிறது.

(அந்த தத்துவப் பாடல்

” வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு…

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா…”)

அதாவது ஃபிகரு எனும் அந்தச் சொல் பெண்ணினத்தை இழிவுபடுத்துகிறது என்று தெரியாமல் பாடுகிறது, அதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்கின்றனர். பொது புத்தி அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்களை நான் குறை சொல்வதாகவோ, பொது புத்தி என்று சொல்வதால் எனக்கேதோ விசேச புத்தி இருப்பதாகவோ புரிந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பொது புத்தி என்றால் நாம் ஒரு குறிப்பிட்ட வகையான சிந்தனைப் போக்கிற்கு பழக்கப்பட்டுவிட்டோம் என்று பொருள். கேள்வி ஏதுமின்றி கண்மூடித்தனமாக அடிபணியும், உள்வாங்கிக் கொள்ளும் ஒரு புத்தி. அது ஒரு பழக்கம். உ.ம்: குழந்தைகளை A to Z நேரடியாக சொல்லச் சொல்லும் போது அவர்கள் வேகமாக சொன்னார்கள், ஆனால் அதை தலைகீழாகச் சொல்லச் சொன்னபோது தடுமாறினர்கள். காரணம் என்ன? பழக்கம், ஒரு குறிப்பிட்ட முறையில் பழக்கம், பயிற்சி அவ்வளவே. நம் மூளையும் அப்படித்தான் செயல்படுகிறது. அதுபோன்ற ஒரு சில உதாரணங்களை உங்களுக்கு சுட்டிக் காட்டவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

ஆண் பெண் பேதம் முதலில் நம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது, அது குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்படுகிறது. உ.ம்: ஆண் குழந்தைக்கு விளையாட, மெக்கானிக்கல் பொம்மைகளையும், பெண் குழந்தைகளுக்கு சொப்பு, பார்பி போன்ற பொம்மைகளையும் நாம் வாங்கிக் கொடுக்கிறோம். ஏன்? சமைப்பது, பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற விளையாட்டுகளைத்தான் பெண் குழந்தைகள் விரும்புகிறது என்றால் ஏன்? சிந்திக்க வேண்டும்.

அதேபோல் “பொம்பளையா நடந்துக்க”, “ஆம்பிளையா நடந்துக்க” போன்ற வசனங்கள். திரைப்படங்களில் கூட ஒரு ‘தாதா பெண்’ என்றால் “ஹே…. நான் பாக்கத்தாண்டா பொம்பள… நிஜத்துல ஆம்பளை” என்று கர்ஜிப்பார். ஏனென்றால் ஆணாக இருப்பது அத்தனை உயர்வானது, வீரம் நிறைந்தது எனும் புரிதல். அதேபோல் ஒரு ஆண் “ஹே…. நான் பாக்கத்தாண்டா ஆம்பிளை….. நிஜத்துல பொம்பள…” என்று கர்ஜிப்பாரா. அப்படி கர்ஜித்தால் நாம் சிரித்துவிடுவோம் இல்லையா? ஏனென்றால் பெண்ணாக இருத்தல் என்பது அத்தனை கேவலமானது? ஏன் அப்படி?

இந்த நிகழ்ச்சியில் என் பெயருக்கு முன்னர் போடப்பட்டிருக்கும் ஒரு சொல் கூட ஆண் பெண் பாகுபாட்டிற்கு ஒரு உதாரணம் தான். ‘திருமதி. கொற்றவை’ என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் ஆணுக்கு எப்போதும் ‘திரு.’ மட்டுமே, பெண்ணுக்கு மட்டும் திருமணம் முடிந்தவுடன் திருமதி சேர்க்கப்படும். ஏன்? பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் அல்லது கணவன் பெயரை போட்டுக் கொள்கிறார்கள் (போட வேண்டும் என்ற விதி) எந்த ஒரு ஆணாவது தனது பெயருக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்கிறாரா? எனக்கு திருமணமாகிவிட்டது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. ஆனால் அந்த அடையாளப்படுத்துதல் ஏன் பெண்ணுக்கு மட்டும் வலியுறுத்தப்படுகிறது. சிந்திக்கவும்.

ஆண் பெண் பாகுபாடு வளர, இடைவெளி பெருகிட ஊடகங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. முதலாளிகள் உருவாக்கும் பண்டங்கள் மீண்டும் மீண்டும் ஆண், பெண் அடையாளங்களுக்கு விதிகள் வகுத்து, நீ ஆண், நீ பெண் என்று அழுத்தம் கொடுத்துக் கொடுத்து பெண்களை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறது.  ஒரு பெண்ணுக்கு ’இடுப்பு, தொடை, மார்பு, நீளமான கூந்தல்’ இவைகள் அழகு என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார். ஒரு புறம் பெண்களை புகழ்வது போல், பெண்கள் மிது அக்கறை உள்ளது போல் ஒரு நாடகம், மறுபுறம் பெண்களைக் கேவலப்படுத்துவது.

இத்தகைய சித்திரிப்புகளை, பாலியல் பாகுபாட்டு அடையாளவாதங்களை சுட்டிக் காட்டுவது, விழுப்புணர்வை ஏற்படுத்துவது இவையே மாசெஸ் அமைப்பின் குறிக்கோள்.  உ.ம்: உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த ஒரு நடிகர் நடித்த விளம்பரம். இமாமி ஃபேர் & ஹாண்ட்சம் க்ரீம் ஃபார் மென் எனும் விளம்பரத்தில் சூர்யா சொல்வது ‘பெண்மையோடு இருப்பது அவமானத்திற்குரியது’ என்பதாகும். அதில் அவரது தோற்றத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு ‘குறியீடு’ என்று பெயர். அவர் பெரிய மிசையோடு வருவார், ஏன் அவர் சாதாரண மீசையோடோ அல்லது மிசை இன்றியோ வரவில்லை? ஏனென்றால் மீசை என்பது ‘ஆண்மைச் சின்னம்’ பெரிய மிசை ‘பெரிய ஆண்மை’! அதேபோல் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுபவர் ‘பயில்வான்’ அதுவும் ஒரு ஆண்மைச் சின்னம். பெண்களுக்கு அடையாள விதிகளை வகுத்து வந்தக் கூட்டம் இப்போது ஆண்களுக்கும் அழகு, சிக்ஸ் பேக்ஸ் என்று விதிகளை வகுக்கிறது. ஆண்கள் பாவம்.

பெண்களுக்கான முகப்பூச்சை போட்டால், பெண்மை மேலோங்கும், அது எத்தனை அவமானகரமானது என்றொரு கேள்வியை ஏழுப்புகின்றனர். நிச்சயம் இவர்கள் பெண் வயிற்றிலிருந்துதானே பிறந்து வந்திருப்பார்கள்? ‘ஆண்’ முகப்பூச்சைப் பூசிய பின்னர், ஐந்தாறு பெண்கள் பயில்வானைச் சுற்றி நடனமாடுவார்கள். எத்தனை அசிங்கமான ஒரு கற்பனை, சிந்தனை? இதை நாம் கவனித்திருக்கிறோமா?

பொதுவெளியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்ளும் இத்தகைய நடிகர்கள் எப்படி இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல், பொது நலனில் ‘அக்கறை’ காட்டும் இவர்கள் ஏன் பெண்களை அரைகுறை ஆடையோடு நடனமாட வைத்து பிழைக்கிறார்கள்?

இந்த ஊர் மீனவர்கள் பெரும்பகுதியாக வாழும் ஊர். சமீபத்தில் இலங்கை இராணுவம் மீனவர்களுக்கு அளித்து வரும் துன்பங்கள் நிச்சயம் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. அதேபோல் தமிழ் இனப் போராட்டம், தமிழீழப் போராட்டம் ஆகியவை. அதற்கு ஆதரவளிப்பது அவசியமே. ஆனால் அதற்கு ஆதரவளிக்கும் நடிகர்கள், சினிமாக்காரர்கள் செய்வது என்ன? சிந்தித்திருக்கிறோமா? நடிகர் விஜய், மீனர்வர்களுக்கு இலவச வலை கொடுத்து தன் கடமையை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு கதாநாயகிக்கு அரைகுறை உடை கொடுத்து ஆடக் கிளம்பிவிடுவார். மற்றவர்களும் இதேபோல், பெயருக்கு உண்ணாவிரதம், ஆதரவு என்று தெரிவித்துவிட்டு தங்கள் படங்களில் பெண்கள் விசயத்தில் சிறிதளவும் பண்பின்றி நடந்து கொள்கின்றனர்.

அந்த நடிகைகளும் அதற்கு உடன்படத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், பணம் ஆண் பெண் பேதமறியாது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவறாக சித்தரித்துவிட்டால் எத்தனை கொந்தளிப்பு நிகழ்கிறது. பெண்களை இத்தனை கேவலமாக சித்திரிப்பதற்கெதிராக பெண்களாகிய நாம் கொத்தித்தெழுகிறோமா? இல்லையே?

இதுபோன்ற இழிவான சித்தரிப்புகளுக்கெதிராகவும் நாம் கொத்தெழ வேண்டும். இன்று உறுதிமொழி எடுக்க வந்திருக்கும் இளைஞர்கள் அதற்காகவும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சிந்தனையில் மாற்றமின்றி செயலில் வராது. பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துக்களை மாற்றாமல் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.

இன்றைய நிகழ்ச்சியில் முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு சில மாற்று கருத்தும் விமர்சனமும் உண்டு. ஆனால் மற்ற மாநிலங்கள் ஏதும் அறிவிக்காத முன்னர், முதலமைச்சர் அவர்கள் முன் கை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. அதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அதில் உள்ள ஒன்றிரண்டு பரிந்துரைகளில் எனக்கு மாற்று கருத்துள்ளது. மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம். இந்த இரண்டுமே பயனற்றது. மேலும் இது மற்றவரைக் குற்றவாளியாக்கி நாம் தப்பித்துக் கொள்ளவே உதவும். ஏனென்றால் இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களிலும் அனைவருக்கும் பங்குண்டு. நாமனைவரும் ஒவ்வொரு பங்கு வகிக்கிறோம். மேற்சொன்ன அந்த ‘பாலியல் சுரண்டல்களைக்’ கண்டு கொள்ளாமல் இருப்பது கூட ஒரு குற்றமே.

எந்த காரணத்தாலும் நாம் மரண தண்டனையை ஆதரிக்க முடியாது. ஏனென்றால் அது தீர்வல்ல. அது குற்றத்தை தடுக்காது. உ.ம் புதிதில்லி சம்பவம் நடந்தவுடன் பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை என்று முழங்கினார்கள். நேற்று ஒரு ஸ்விஸ் தம்பதிகள் சுற்றுலா சென்றபோது, அப்பெண் குழு வல்லுறவுக்கு உள்ளானார். வல்லுறவு செய்தவருக்கு மரண தண்டனை விவாதம் குறித்து தெரியாதா? அதையும் மீறி அவர்களை அந்த குற்றத்தை செய்விப்பது எது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் எவ்வித மனநிலையிலிருந்து அதைச் செய்கிறார்கள் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உளவியல் ரீதியான அனுகுமுறை அவசியம்.

சுற்றிலும் பெண் உடலை கவர்ச்சியாக காட்டி, வெறி ஏற்றி ஒரு கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிலரை மட்டும் குற்றவாளியாக்குவது சரியல்ல.

அதேபோல் ஆண்மை நீக்கம், இது நிச்சயம் ஆண்களைக் கேவலப்படுத்தும் செயல். ஆம் நீ ஆண் என்று அழுத்தம் கொடுத்து மீண்டும் ஆண்மைச் சிந்தனையை தூக்கிப் பிடிக்கும் செயல். இதனால் பகைதான் வளருமே ஒழிய மாற்றம் ஏற்படாது.

(rel. interview http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=3&contentid=875a4b56-d2c0-45b5-80ea-1f0112df57ff)

ஆண்மை பெண்மை அடையாளங்கள் எப்படி உருவானது என்று புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆண் பெண் என்பது உயிரியல் ரீதியான அடையாளம், ஆனால் ஆண்மை பெண்மை என்பது உயிரியல் ரீதியானதல்ல. அது சமூகத்தால் உருவாக்கப்பட்டது. அப்படியே வேறுபாடுகள் இருந்தாலும், அது வேறுபாடே ஒழிய அதில் ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு என்று கருதுவதற்கு இடமில்லை. அது அது அதன் தன்மையில் இருக்கிறது. அந்த வேறுபாட்டை நாம் மதிக்க வேண்டுமே ஒழிய, அதைவைத்து ஒருவரை பலவீனமானவர் என்று சொல்லும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படியே பலவீனமானவராகப் பெண் இருந்தாலும், அவரை ஒடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை.

பேசுவதற்கு நிறைய இருக்கிறது. நேரத்தோடு முடித்துக் கொள்வது நலம். நம் மூளைகள் எப்படி ஒரு பொதுச் சிந்தனைக்கு பழக்கப்படுகிறது என்பதை ஒரு சில உதாரணங்கள் மூலம் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். பெண் பற்றிய கருத்துக்கள் மாறாமல் பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது, இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, ஆண்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்தல், கையெழுத்திடுதல் போன்ற முயற்சி பாராட்டுக்குறியது. இதில் கலந்து கொள்ள வந்திருக்கும் அத்தனை இளைஞர்களையும் நான் பாராட்டுகிறேன்.

பகுத்தாய்ந்து செயல்படுதல் பயனளிக்கும். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

Tagged: , , , ,

3 thoughts on “தூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி

 1. spartagus March 19, 2013 at 8:58 pm Reply

  தோழர் நாங்க எங்க ஊருல இப்பத்தான் பெண் விடுதலையை பற்றி யோசிக்கவே ஆரம்பித்து இருக்கின்றோம். நாங்க தெளிவாகிறதுக்கு ரொம்ப வருடம் ஆகும். இதை குறிப்பிட காரணம் எங்களிடையே ஊறி இரண்டற கலந்து இருக்கும் ஜாதி. ஆகவே அதிகமாக எதிர்பார்க்காதீர்கள் இப்போது. மேலும் மாசெஸ் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வை சிறிய அளவிலாவது நடத்த நினையுங்கள்.

  • உங்கள் பதில் எனக்கு மிகவும் நெகிழ்ச்சி அளிக்கிறது அதே நேரம் உங்கள் அவதனிப்பு மனதை வருத்துகிறது…மாற்றத்திற்கான விதை விதைக்க சற்று தாமதமாகலாம்…விதைத்துவிட்டால் பற்றி கொள்ளும்….செய்வோம்..

   விரைவில் ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்படும்… நன்றி,

 2. Spartagus March 20, 2013 at 2:27 am Reply

  அய்யோ தோழர்… நான் ஏதோ பெண்ணடிமைதனத்தை ஆதரிப்பது போல் நினைக்காதீர்கள். எங்கள் மாவட்டங்களில் நிலவும் நிலையைப் பற்றித்தான் கூறவந்தேன்…//விரைவில் ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்படும்// உங்கள் முகவரியை தாருங்கள். என்னால் ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: