Articles

செல்ஃபியும் சமூகமும்

page-0

சமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான்.  இச்சூழலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அவரது தோழியான நவ்யா (அமிதாப்பச்சனின் பேத்தி) என்று சொல்லப்படும் இருவர் காருக்குள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எம்.எம்.எஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது இப்போது தீவிரமான விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

தம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு  அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.

அழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது ‘தகுதி’ படைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம்.  இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன.

புகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு  போதைப் பழக்கம் போல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).

 எந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். 

இணைய மற்றும் தொழில்நுட்ப தாக்கங்களுக்கு பதின்பருவ வயதினர் வெகு எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவரிச்சித் தன்மையில் தன்வயம் இழந்து பகிரக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பல தொல்லைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாக நேர்கிறது. ஆணாதிக்கச் சமூக கட்டமைப்பின் விளைவாக, பாலியல் ரீதியாக அப்பெண்கள் பற்றிய தவறான முன்முடிவுகளுக்கு வரவும் இது வகை செய்கிறது.

பல வேளைகளில் சக தோழர்கள், காதலர்கள் என்று சொல்லிக் கொள்வோருமே பெண்களின் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் ஆபாசமாக உலவவிட்டு, சம்பந்தப்பட்டப் பெண்களை தங்கள் பாலியல்  இச்சைக்கு அடிபணியச் செய்வதும் நடந்துவருகிறது. ஆகவே எவராக இருப்பினும், புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க ஆயத்தமானால் – பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, தங்களது அந்தரங்கத் தருணங்களை எவரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது.  ஏனென்றால், என்னதான்   ‘கேட்ஜெட்’டில் இருந்து அவை அழிக்கப்பட்டாலும்கூட இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அழிக்கப்பட்டக் கோப்புகளை மீண்டும் எடுத்துவிடலாம். பெரும்பாலும் நம் கேட்ஜெட்களை விற்பதற்காகவோ அல்லது பழுதுபார்க்கவோ கொடுக்கும் இடங்களில் நமக்குத் தெரியாம்லே நமது கோப்புகள் பிரதி எடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. நண்பர்களும் இத்தகைய திருட்டு வேலைகளைச் செய்யும் சாத்தியம் உண்டு.

வெறும் கட்டுப்பாடுகள் மூலம் நம் பிள்ளைகளை இதிலிருந்து நாம் காத்துவிட முடியாது. புறச் சூழலின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கையில் என்னதான் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், எச்சரித்து வந்தாலும் பதின்பருவ வயதின் கோளாறு காரணமாக அது சர்வாதிகாரம் போல் அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. பல நேரங்களில் அவர்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றும் அளவுக்கும் சென்று விடுகின்றனர்.

இச்சூழலில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்:

முதலில் அவர்களே இந்தச் சமூக வலைதளங்களை சிலக் கட்டுப்பாடுகளோடு கையாள வேண்டும்.

குழந்தைகளுக்கு அரசியல் பொருளாதார அறிவூட்ட வேண்டும். அதாவது வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள், நுகர்வு கலாச்சாரம் இவற்றைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றியும் குடும்பமாகச் சேர்ந்து ஒரு விமர்சன உரையாடலை நிகழ்த்தலாம். அதில் வலியுறுத்தப்படும் அழகு, சிவப்பு நிறம், அந்தஸ்து, ஆடம்பரங்கள் என எல்லாமே போலியானது என்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்யலாம்.

நேரடியாக விமர்சிக்கப்படும் போது தம்மைக் குற்றவாளிகளாகப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் என்று குழந்தைகள் கருதுவார்கள். ஆனால் இது ஒரு வணிகரீதியான மூளைச் சலவை, அதனால் ஏற்பட்டிருக்கும் சில ஆபத்தான நிகழ்வுகள் இவற்றைப் பற்றி குடும்பமாகப் பேசுவதும், அதுபற்றி குழந்தைகளின் கருத்தைக் கேட்பதும், அவர்களுக்குத் தங்களது பொறுப்பை உணர்த்துவதும் பயன் தரும்.

இரண்டாவதாக, ஒருவேளை ஒரு உணர்ச்சி வேகத்தில் படங்களைப் பகிர்ந்து எவரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைகள் கொடுத்தால், அதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்துவதுடன், பிரச்சினையை நிதானமாகக் கையாள வேண்டும். மானம் அவமானம் என்று அச்சுறுத்தாமல் அந்த நிலையிலாவது அத்தளங்களைப் பயன்படுத்துவதை சிலக் கட்டுபாடுகளோடு பயன்படுத்தச் சொல்லி வழி நடத்தலாம்.

தம் மகனோ அல்லது மகளோ பதின்பருவத்திலேயே காதல்வயப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பதிவு செய்து அதைப் பொதுவெளியில் காண நேர்ந்தால் ஆணாதிக்க ஒழுக்க விதிகளை மனதில் கொண்டு இச்சூழலைக் கையாளக் கூடாது. அதேவேளை எந்த ஒரு தவறான சீண்டல்களையும் மனத் துணிவுடன், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் துணிவைப் போதிப்பதே நல்லது. மகனைப் பெற்றவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகளை, சினிமாக்கள் ஏற்றிவைக்கும் பாலியல் கவர்ச்சி பற்றிய கருத்துகளை மாற்றியமைக்கத் தேவையான அறிவை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வறிவு கல்விக் கூடங்களுக்கு வெளியில்தான் கிடைக்கும்.

மற்றபடி இதில் ஒழுக்கரீதியான சரி தவறுகளுக்கு இடமில்லை. உண்மையில் இந்த தொழில்நுட்பங்கள் வரவேற்கத் தக்கவையே, குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்கள், நண்பர்களோடு மகிழ்ச்சிகரமானத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.

கவனமாகக் கையாண்டால் மகிழ்ச்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

நன்றி, உயிரோசை மாத இதழ்.

 

அரசின் அதர்மம்

Dec Inner Dummy Final

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் நடந்த 12 பச்சிளம் குழந்தைகளின் உயிரழ்ப்பு அனைவரது மனதையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வாரத்தில் பிலாஸ்பூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் விளைவாகப் 12 பெண்கள் இறந்தனர் என்ற செய்தியும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு உயிர் இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் நடுவிலும் மத்திய மாநில அரசுகள் சடங்குரீதியான அறிவுப்புகளை வெளியிட்டு, தப்பித்தல் மனப்பான்மையுடனேயே செயல்படுகின்றன. ஊட்டச் சத்து குறைபாடு, குறைமாத குழந்தைகள், இளம் தாய்மார்கள் கர்ப்பமுற்றது என்று காரணங்கள் ஒருபுறம் சொல்லப்பட்டாலும் இலக்குகளை பூர்த்தி செய்யச் சொல்லி மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி, செவிலியர்கள் பற்றாக்குறை, போதிய வசதியின்மை, சுகாதாரமின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, போதிய பயிற்சியின்மை, முறையான கண்காணிப்பின்மை என்று ‘இன்மை’களின் காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏதோ தற்போதுதான் ஆய்வு செய்து கண்டுபிடித்ததுபோல் அரசு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கிராமப்புற பகுதிகளில், அடித்தட்டு மக்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளதைப் பற்றியும், அது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அமர்த்தியா சென் உட்பட பல அறிஞர்கள், ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்துள்ளனர். நலத்திட்டம், விசாரணை, ஆய்வு என்கிற பெயரில் அரசு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு, இருப்பிடம் ஆகியவை ஒருவரின் அடிப்படைத் தேவைகளை எவ்விதக் குறைபாடும், பாகுபாடும் இன்றி ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றை சரியாகப் பராமரிப்பதும் அரசின் கடமையாகும். உண்மையில் இப்பணிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டதே அரசு*. ஆனால் முக்கியத் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கிவிட்டு சடங்கு ரீதியாக அவற்றை நடத்தி வருவதே இக்கொடுமைகளுக்குக் காரணம்.

தனியார் சேவையே அரசின் சேவை என்பதே இங்கு நிதர்சனம். தனியார் நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தோடு வாழ்வதற்காக எவ்வளவுக்கெவ்வளவு பொதுத்துறை நிறுவனங்களை மோசமாகப் பராமரிக்க முடியுமோ அதைச் செய்கிறது அரசு. இதில் மத்திய மாநில அரசுகளுக்குள் எந்தப் பேதமும் இல்லை.

இதற்கு முன்பு நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது ‘ஓட்டு’ என்னும் ஒரு நம்பிக்கை. மக்களை ஏமாற்றும், மக்கள் நலன்களைப் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு ஓட்டளிப்பதில்லை என்று மக்கள் முடிவெடுக்கும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேர்தல் வெற்றி என்பதும் மக்கள் கையில் இருப்பதைவிட பெருநிறுவனக் குழுமங்களிடமே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. பெருநிறுவன முதலாளிகளோ பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அடிவருடிகள். மூலதனக் குவிப்பு ஒன்றே இவர்களது குறிக்கோள்.

இன்றைய காலகட்டத்தில் முதலாளிகள் தீர்மானிப்பவரே ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும். அவர்களின் தயவில் ஆட்சியில் அமரும் ‘முதலமைச்சர்’ அல்லது ‘பிரதமர்’ எப்படி முதலாளிகளுக்குத் துரோகம் செய்வார்? ஆக அவர்களால் முடிந்ததெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை சீரழியச் செய்வதே. அதன் முதல்படி மோசமான பராமரிப்பு. மருத்துவத் துறையில் இப்போக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சென்று விட்டது.

எதேச்சிகாரம் நிறைந்த அரசின் இயந்திரத்தில் பணிபரிபவர்களுக்கும் அதே மெத்தனப் போக்குத்தானே இருக்கும். மக்களின் வரிப்பணம்தான் தங்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற ஒரு தன்னுணர்வுகூட இல்லாமல் அரசுத் துறை அலுவலர்கள், குறிப்பாக மருத்துவத் துறைப் பணியாளர்கள் பலர் மக்களை அலைக் கழிப்பதையும், சேவை செய்ய மறுப்பதையும் நாம் அன்றாடம் காணலாம். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி உண்மையில் மக்கள் சேவை ஆற்ற வேண்டிய அரசோ மக்களின் இடுப்பெலும்பை முறித்து தனது சேவையை தனியாருக்கு ஆற்றுகிறது.

மக்கள் இனியும் இறைஞ்சிக் கொண்டிராமல், அரசு விடுக்கும் அறிக்கைகளை நம்பிக் கொண்டிருக்காமல், அரசின் முதலாளிகளை கதிகலங்க வைக்கும் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். உதாரணமாக, அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களோ, மரணமோ நேர்ந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளின் கதவுகளையும் இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் போன்ற போராட்ட முறைகளில் ஈடுபடலாம்.

நாம் கத்தினால் அரசின் செவிகள் திறக்காது, ஆனால் முதலாளிகள் முகம் சுருங்கினாலே போதும் அரசு பதறி அடித்துக் கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரும். ஆக பொதுத்துறை நிறுவனங்களை காக்க தனியார் நிறுவனங்களைக் கைப்பற்றுவோம். பொதுத்துறை நிறுவனங்களை மூடினால் அதே ‘சேவையில்’ ஈடுபட்டிருக்கும் சுற்று வட்டார தனியார் துறை நிறுவனங்களுக்கு இழுத்து பூட்டு போடுவோம்.

நமக்காக அவர்களைக் குரல் கொடுக்க வைப்போம்!

இது ஒரு நீண்ட காலப் போராட்டமாக அமையும். மேலும் இதற்கெதிராக நிச்சயமாக கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற நூதனப் போராட்ட முறைகளை முன்னெடுப்பதோடு நாம் சட்டரீதியாகவும் உடனடி தீர்வுக்கு வழி வகை செய்யலாம். முதல் அமைச்சர்கள், பிரதம மந்திரி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவம் பெற வேண்டும், அதை மீறினால் அவர்களது பதவிகள் பறிக்கப்படும் என்று ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் அரசு மருத்துவமனைகளின் தலையெழுத்து திரைப்படங்களில் வருவது போல் ஒரே இரவில் மாறிவிடும்!

இது அதிகப்படியான கற்பனையோ! ஆனால் கற்பனையை மெய்யாக்கும் வலிமை மக்கள் சக்திக்கு உண்டு.

*அரசு தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட விளக்கத்தின்படி… பொதுபுத்தியின் புரிதலின்படி

நன்றி, உயிரோசை மாத இதழ்.

 

இதுவரை ஏன் இதனை எவரும் முயற்சித்திருக்கவில்லை?:

‘பாலியல் தொழிலை ஒழிக்க முடியாது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்பன போன்ற நூற்றாண்டுகால வழமையான பேச்சுக்களுக்கு மத்தியில், அத்தொழிலை ஒழிப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கும் வெற்றியானது தீர்வை நோக்கி ஒளியூட்டும் ஒரு தனித்த கலங்கரை விளக்கம் போல் உள்ளது. ஐந்தே வருடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சுவீடனில் குறைந்துள்ளது. தலைநகர் ஸ்டால்க்ஹோமில் தெருவோர பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காகக் குறைந்துள்ளன. ஜான்களின் (பாலியல் வாடிக்கையாளர்) எண்ணிக்கையும் 80% குறைந்துள்ளன. பல சுவீடிஷ் தெருக்களில் பாலியல் தொழில் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சுவீடனில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டின் கடந்த மூன்று பத்தாண்டுகளாக அதிகரித்து வந்த பிரபல சுவீடிஷ் விபச்சார விடுதிகளும், மசாஜ் பார்லர்களும்கூட மறைந்துவிட்டன.

பாலியல் தொழிலுக்கு சுவீடன் நாட்டின் தீர்வு: ஏன் இதை எவரும் முன்னரேமுயற்சி செய்திருக்கவில்லை?

கூடுதலாக, பாலியல் தொழிலுக்காக சுவீடனுக்குக் கடத்தப்படும் வெளிநாட்டுப் பெண்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றளவிற்கு வந்துவிட்டது. கடந்த சில வருடங்களில் வருடத்திற்கு 200 முதல் 400 பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டனர் என்று சுவீடிஷ் அரசாங்கம் கூறுகிறது. அண்டை நாடான ஃபின்லாந்தில் வருடத்திற்கு 15,000 முதல் 17,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர் எனும் நிலையை ஒப்பிடுகையில் மேற்சொன்ன எண்ணிக்கை வெகு சொற்பமே.
மற்ற எந்த நாடுககளோ அல்லது மற்ற எந்த சமூகப் பலப்பரீட்சை முயற்சிகளோ சுவீடனின் நம்பிக்கைக்குறிய முடிவை ஈன்றதில்லை.
மகத்தான இந்த சாதனையை அடைய அப்படி என்னதான் சிக்கலான சூத்திரத்தை சுவீடன் கையாண்டது?
வியப்புகுரிய வகையில், சுவீடனின் சூத்திரம் ஒன்றும் அப்படி சிக்கலானதல்ல. உண்மையில், அதன் கொள்கை மிகவும் எளிதானதாகவும், சமயோசித அறிவைக் கொண்டு எவரும் எளிதில் கண்டுவிடக் கூடியத் தீர்வாகவே தெரிகின்றது. அதனால்தான் உடனேயே இக்கேள்வி நமக்கு எழுகிறது, “ஏன் இதை இதுவரை எவரும் முயற்சிக்கவில்லை?”
சுவீடனின் 1999ஆம் ஆண்டின் புரட்சிகரமான சட்டம்
பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு 1999இல் சுவீடன் ஒரு சட்டத்தை அறிமுகம் செய்தது: அ) பாலின்பத்தை (Sex) வாங்குவதை குற்றமெனக் கருதுதல் ஆ) பாலின்பத்தை விற்பதை குற்றமற்றதாகக் கருதுதல். இந்தச் சட்டத்தின் பின் இருக்கும் புதுமையான கொள்கையை அரசு தனது சட்ட ஆவணத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறது:
“சுவீடன் நாட்டைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் என்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான ஆணாதிக்க வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் ஒரு சுரண்டல் எனவும் அது ஒரு பிரதான சமூகப் பிரச்சினை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது… பெண்களை, குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக ஆண்கள் வாங்குவதும் விற்பதும் நடக்கும்வரை பாலியல் சமத்துவத்தை நாம் அடைய முடியாது.”
பாலியல் தொழில் பற்றிய சுவீடனின் இரண்டுபக்க சட்ட செயல்திட்டத்தோடு கூடுதலாக ஒரு பக்கமானது பாலியல் தொழிலிலிருந்து வெளியேற நினைக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான சமூக நல நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மக்களுக்கான விழிப்புணர்வுக் கல்விக்காகவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளபடியே, சுவீடனின் தனித்துவமான இந்த செயல்திட்டம் பாலியல் தொழிலை பெண்களுக்கெதிரான வன்முறையாகக் கருதுகின்றது. அதனால் பாலின்பத்தை வாங்குவதன் மூலமாக பெண்களை சுரண்டும் ஆண்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர், பெண் பாலியல் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், இதுநாள்வரை இருந்த பாலியல் தொழில்குறித்த மடத்தனமான ஆண் சார்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. அவர்களது கண்ணோட்டத்தை சட்டத்தின் பிடி கொண்டு இருக்கிப் பிடிக்கும் வகையில், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டத் தொகுப்பின் ஓர் அங்கமாக பாலில் தொழில் சட்டம் சுவீடனில்1999ஆம் வருடம் இயற்றப்பட்டது.
அதன் பாதையில் தொடக்ககாலத் தடைகள்
ஆர்வமூட்டும் வகையில், அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரான விரிவான திட்டமிடல் காலத்தின்போது முதல் ஓரிரு வருடங்களில் இந்தப் புதுமையானத் திட்டத்தில் பெரிதாக ஏதும் நடைபெறவே இல்லை. பாலியல் தொழில் சுவீடனில் சட்டபூர்வமாக இருந்த காரணத்தால் முந்தைய மனநிலையிலேயே இருந்த காவல்துறையானது மிகவும் குறைவான ‘ஜான்களையே’ கைது செய்தது. தோல்வியை உலகெங்கிலும் உள்ள எதிர்ப்புவாதிகள் மிதமிஞ்சைய வகையில் விளம்பரப்படுத்தியதோடு “பாருங்கள்! பாலியல் தொழில் எப்போதும் இருந்திருக்கிறது, இனியும் இருக்கும்” என எக்காளமிட்டனர்.
அவர்களது திட்டத்தை சரியாகப் புரிந்துகொண்ட சுவீடர்கள் அவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்கவில்லை. விரைவில் பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கு தீர்வும் கண்டனர். அவர்களின் சிறப்பான முயற்சி எங்கு கோளாரில் சிக்கியது என்பதைக் கண்டுபிடித்தனர். சட்ட அமலாக்கப் பிரிவானது தன் கடமையை சரிவரச் செய்யவில்லை. சுவீடிஷ் மக்களும், சட்டமும் புரிந்துகொண்ட பிரச்சினையின் ஆழத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத காவல்துறைக்கே தீவிர பயிற்சித் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தது. பாலியல் தொழில் என்பது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க வன்முறை. சுரண்டுபவர்கள் மற்றும் வாங்குபவர்களே தண்டனைக்குரியவர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகள் உதவிக்குரியவர்கள் என்பதில் சுவீடன் அரசு உறுதியாய் இருந்தது. சுவீடிஷ் அரசாங்கம் பெரும் நிதியை ஒதுக்கி அந்நாட்டின் காவல்துறையினர், அரசு வழக்குறைஞர்கள், மேலிருந்து கீழ்நிலை வரையிலான அதிகாரிகள் ஆகியோருக்கு தீவிர பயிற்சி அளித்து, இலக்கையும் கண்டிப்போடு தெளிவுபடுத்தியது. அதன் பிறகே எவரும் ஒப்பிட முடியாத விளைவுகளை அந்நாடு கண்டது.
சட்டத்தின் தோல்வி அல்லது ஒழுங்கமைப்பு உத்தி
பாலியல் தொழில் பெருமளவில் நடைபெறும் ஒரு நாட்டில், நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் செயல்புரிந்த இந்த சுவீடிஷ் முறையானது ஓர் தனித்த உதாரணமாகும். 2003இல், பாலியல் தொழில் குறித்த தன்னுடைய அனுகுமுறையை மறுஆய்வு செய்யும் வகையில், சுவீடிஷ் அரசாங்கமானது மற்ற நாடுகளில் உள்ள பாலியல் தொழில் கொள்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்யுமாறு லண்டன் பல்கலைக்கழகத்தைப் பணித்தது. சுவீடனின் செயல்திட்டத்தை ஆய்வு செய்ததோடு, ஆய்வாளர்கள் ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உத்திகளான பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல், ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை ஆய்வு செய்தது. பாலியல் தொழிலை குற்றமென அறிவிக்கும் அமெரிக்கச் சட்டம் போன்ற சட்டங்கள் இருக்கும் சூழல்களை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகள் என்னவென்பது வெட்டவெளிச்சம். பாலியல் தொழிலாளிகளை மீண்டும் மீண்டும் கைது செய்வதன் தோல்வியும், பயனின்மையும் உலகறிந்ததே.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாடுகளில் கிடைத்த தரவுகளின்படி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற நிலையும், மரபார்ந்த நிலையிற்கு ஒத்ததாகவும், சொல்லப் போனால் அதனைவிட ஏமாற்றமளிப்பதுமாகவே இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் விளவு எதிர்மறையாகவே இருந்தது.
அவ்வாய்விபடி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற அனுகுமுறையானது:
  • பாலியல் தொழிலின் அனைத்து பண்புக்கூறுகளிலும் ஓர் அதிகரிப்பு,
  • பாலியல் தொழிலை மையப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றங்களின் அதிகரிப்பு,
  • குழந்தைப் பாலியல் தொழில் அதிகரிப்பு
  • வெளிநாட்டுப் பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் நம்பமுடியாத வகையிலான அதிகரிப்பு
ஆஸ்திரேலியாவில், விபச்சாரம் என்பது ஒழுங்கிற்குட்பட்ட ஒரு தொழிலாக நிறுவப்பட்ட விக்டோரிய மாகாணத்தில், விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தன. அதை ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமானதாகி, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் மற்றும் பாலியல் தொடர்புடைய குற்றங்களின் ஊற்றானது விக்டோரியா. கூடுதலாக, பாலியல் தொழிலாளிகளிடம் நடத்திய ஆய்வில், அவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது சட்டபூர்வமாக்கப்பட்ட சூழலிலும் பாலியல் தொழிலாளிகள் அத்தொழிலில் தள்ளப்பட்டதாகவும், பலவந்தப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் சட்டபூர்வமாக பாலியல் தொழில் செய்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 79% பேர் அத்தொழிலிருந்து விடுபட நினைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நாடுகளில் ஒவ்வொரு சட்ட அல்லது ஒழுங்கமைப்பு திட்டங்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் நபர்களுக்கு உதவிகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தாலும், எதுவும் பயனளிப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, சுவீடனில், பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அரசாங்கம் எராளமான சமூக சேவை நிதி கொண்டு உதவி செய்தது.
சுவீடனின் 60% பாலியல் தொழிலாளிகள் அரசின் அந்த நிதித் திட்டங்களை செவ்வனே பயன்படுத்தி, பாலியல் தொழிலிலிருந்து வெளியேறினர்*.
* பாலியல் தொழில் கொள்கை பற்றிய ஸ்காட்டிய அரசாங்கத்தின் முழு அறிக்கையையும் படிக்க www.scottish.parliament.uk
ஏன் இதுவரை இதை எவரும் முயற்சிக்கவில்லை?
சுவீடனின் வெற்றி நாம் பின்பற்ற வேண்டிய பாதைக்கு இவ்வளவு தெளிவாக ஒளியூட்டிய பின்னரும், ஏன் இதுவரை எவரும் அப்பாதையைப் பின்பற்றவில்லை? அப்படி சொல்லிவிட முடியாது. ஃபின்லாந்து மற்றும் நார்வே அப்பாதையில் செல்வதற்கான அடிகளை எடுத்து வைக்கவிருக்கிறது. மேலும், தன்னுடைய ஆய்வின் பரிந்துரைகளை ஸ்காட்லாந்து எடுத்துக்கொள்ளும் எனில், அதுவும் அதே பாதையில் செல்லும். ஆனால், சுவீடனின் திட்டத்தை ஏன் மற்ற நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கேள்விக்கு ஏன் மற்ற அரசாங்கங்கள் சுவீடனின் தீர்வை நடைமுறைப்படுத்திப் பார்க்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பாலியல் தொழிலாளிகளை ஆண் பலாத்காரத்திற்கும், ஆணின் வன்முறைக்கும் உள்ளாகும் பலியாள்களாகக் காண ஒரு அரசாங்கம் முதலில் பாலியல் தொழிலை ஆணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பதை விட ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பது அவசியம். உண்மையில், பெரும்பாலான, சொல்லப்போனால் உலகின் அனைத்து நாடுகளும் பாலியல் தொழிலை மட்டுமின்றி மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முதன்மையில் ஆணின் கண்ணோட்டத்திலிருந்தே காண்கின்றன.
அதற்கு நேரெதிராக, சுவீடன் நாடானது பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, 1965இல் திருமணத்தில் வல்லுறவை குற்றமென அறிவித்தது சுவீடன். 1980களில் கூட பெண்களுக்கு தன் உடல் மீதான கட்டுப்பாடு உண்டு என்னும் அடிப்படை உரிமையைக் கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உறுதி செய்யவில்லை. அதேபோல் அரசாங்கப் பணிகளில், அனைத்து மட்டங்களிலும் அதிகமான பெண்கள் வேலை செய்யும் நாடாக சுவீடன் நாடே திகழ்கிறது. 1999இல், அப்புரட்சிகரமான சட்டத்தை சுவீடன் நிறைவேற்றியபோது 50% பெண்கள் சுவீடிஷ் அரசாங்கத்தில் அங்கமாய் இருந்தனர்.
சுவீடனின் பாலியல் தொழில் கொள்கையானது முதலில் தயாரித்து ஆதரவு தேடும் பணியில் இறங்கியது பெண்களின் பாதுகாப்பிற்கான சுவீடன் நிறுவனம் (Sweden’s organization of women’s shelters) ஆகும். பிறகு சுவீடனின் இருகட்சிகளைச் சார்ந்த தனித்துவமான சக்திவாய்ந்த எண்ணற்ற பெண் பாராளுமன்றவாதிகள் அக்கொள்கையைப் பேணி வளர்த்து, போராடினர். அத்தோடு சுவீடன் நின்றுவிடவில்லை. 2002இல், முந்தைய பாலியல் தொழில் சட்டத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதல் சட்டங்களை இயற்றியது. பாலியல் சுரண்டலுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் 2002ஆம் ஆண்டின் சட்டமானது முந்தைய சட்டத்திலிருந்த ஓட்டைகளை அடைத்து, பாலியல் தொழிலை ஆதரிக்கும் தரகர்கள், ஆட்சேர்ப்பாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் விருந்தாளிகளின் வலைப்பின்னல்களைக் கண்டுபிடிக்கும் அரசாங்கத்தின் பணிக்கு வலு சேர்த்தது.
சுவீடனின் வெற்றிப் பாதையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
நம் நாடும் சரி மற்ற நாடுகளும் சரி, தந்தை ஆதிக்க சமூக அமைப்பின் இருளில் ஆழ மூழ்கி இருப்பது உண்மைதான் எனினும், சுவீடன் நடைமுறைப்படுத்திய கொள்கை மாற்றங்களை வலியுறுத்தக் கூடாது என்பதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை. அடித்தளம் தகர்க்கப்பட்டு, வெற்றிக்கான சான்று நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அப்பாதையில் செல்லும்படி மற்றவர்களை ஏற்கச் செய்வது எளிதான காரியமே.
நன்றி: http://www.eanil.com/?p=605#&page=2

 

தற்கொலை எனும் சமூக-அரசியல் கொலை

IMG

தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குறிய குற்றமல்ல என்று அறிவிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டப் பிரிவான 309ஐ நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுநாள் வரை தற்கொலை செய்து இறப்பவர்களை தண்டிக்க முடியாத நிலையில், அம்முயற்சியில் தோல்வியுற்றவர்கள் தண்டனைக்குள்ளாகி வந்தனர்.  மனமுடைந்து வாழ்வைத் துறக்க முயற்சித்த அந்நபர்களுக்கு தண்டனை என்பது மேலும் துன்பகரமானது; வாழும் உரிமை உள்ளது போல் வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமையும் ஒருவருக்கு உண்டு; தற்கொலை கோழைத்தனம் என இப்படியாகப் பலவிதமானக் கருத்துகளை நாம் கேட்டு வந்திருக்கிறோம்.

உலகளவில் ஓர் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், அதில் 1,35,000 பேர் இந்தியர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வருடந்தோறும் தற்கொலை எண்ணிக்கைகள் கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 15-29 வயது வரம்பிற்குள் இருப்பவர்களே அதிகம் பேர்  என்றும், 2012ஆம் ஆண்டில் 75% கீழ்-மத்தியத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகளும், உடல்நலமும் தற்கொலைக்கு முதன்மை காரணங்களாக உள்ளன. (மேலும் விவரங்களுக்கு http://ncrb.nic.in/CD-ADSI-2012/suicides-11.pdf)

பொருளாதாரம், குடும்ப பிரச்சினை, உடல்நலம், காதல் பிரச்சினை, என அப்புள்ளி விபரங்கள் காரணங்களை வகைப்படுத்துதன் மூலம் தற்கொலை என்பது தனிநபர் பிரச்சினையாக, ஒருவரது மனத்திடத்தின் குறைபாடாக இன்னும் முத்தாய்ப்பாக கோழைத்தனம் என்று முத்துரை குத்தும் செயலைதான் செய்து வருகின்றன. ஆனால் சமூக அரசியல் பிரக்ஞையுள்ள எவரும் இவ்வனைத்து காரணங்களையும் ஒரே ஒரு காரணியின் கீழ் வகைப்படுதவே விரும்புவர். அதுவே ‘சமூகம்’ என்னும் காரணி – அதாவது தற்கொலை என்பது தற்கொலை அல்ல அது ஒரு சமூகக் கொலை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு சமூக-அரசியல் பிரச்சினையாகும்.

குடும்ப பிரச்சினை, தொழிலில் நஷ்டம், இன்னும் இதர என எந்த காரணங்களை எடுத்துக்கொண்டாலும் ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்வது என்பது கடும் நெருக்கடிகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்பதே நிதர்சனம். குடும்ப பிரச்சினைக்கு சமூக அமைப்பு எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை அதில் நிலவும் பொருளாதார அமைப்பைக் கொண்டே நாம் எடைபோட வேண்டும். பொருளாதாரம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, பொருளாதாரம் என்றால் ஒரு சமூகத்தின் தேவைக்கான உற்பத்தி, பரிவர்த்தனை, பண்ட விநியோகம், நுகர்வு மற்றும் செல்வ விநியோகம் ஆகிவற்றை உள்ளடக்கியதாகும். இது ஒரு பரந்த துறையாகம். இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்பு குறித்துச் சொல்வதானால் உற்பத்தி செய்வதற்கான கருவிகள், சாதனங்கள் மற்றும் மூலதனம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் இருக்க மற்றையோர் தங்களது உழைப்புச் சக்தியை விற்று பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலை கொண்ட அமைப்பாகும். இதனை நாம் முதலாளித்துவ அமைப்பு என்கிறோம். அதனோடு நிலத்தை தனியுடமையாகக் கொண்டு இயங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பும் இங்கு பிரதானமாக நிலவுகின்றது. இவ்விரண்டிலும் மேல் கீழ் அதிகார ஓட்டம் என்பது உள்ளார்ந்த பண்பாக இருக்கின்றது. இலாபம் மற்றும் செல்வக் குவிப்பே அதன் குறிக்கோளாக இருக்கையில் சமத்துவம் அற்ற, ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு வாழ்வையே அதனால் மக்களுக்கு அளிக்க முடிகின்றது. தம் வாழ்விற்காக, தம் உயர்விற்காக மனிதர்களை பந்தையக் குதிரைகளாக மாற்றி வைத்திருப்பதே இந்த தனியுடமை பொருளாதார அமைப்பின் சாதனை.

இந்த உற்பத்தி முறை இயல்பானதுதானே என்று கருதுவீர்களேயானால் அது தவறு. ஆனால் அதுபற்றிய விவாதத்திற்கான வேறு ஒரு சமயத்தில் மேற்கொள்வோம். இப்போது நமது விவாதப் பொருளுக்கு திரும்புவோமானால், குடும்ப பிரச்சினைக்கும் அல்லது தற்கொலைக்கான மேற்சொன்ன மற்ற காரணங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு விடை காண முயற்சிப்போம்.

நான் மேலே சொன்னதுபோல் அதிகார ஓட்டம், ஏற்றத் தாழ்வு, போட்டி பண்புகள் நிறைந்த ஒரு கட்டமைப்பில் அதனை வாழவைக்கத் தேவையான அனைத்து அலகுகளிலும் (மேற்கட்டுமானம்) அதே பண்புகள் நிறைந்திருக்கும். ஆக குடும்பப் பிரச்சினை என்பது ஏதோ ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமன்று. அடிப்படையில் தற்போதைய வடிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடும்பம் என்னும் அமைப்பில் நிலவும் சமத்துவமற்ற தன்மை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. அதாவது குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றவரை தாக்குவது, கொடுமைபடுத்துவது போன்றவை தனிநபர் அளவிலான குணம் சார்ந்த பிரச்சினை மட்டுமன்று, ஒரு மனிதர் எவ்வாறு சமூகவயப்படுத்தப்படுகிறார் என்பதில் தொடங்கி, இந்த பொருளாதார அமைப்பு ஒரு மனிதரின் மேல் என்னவிதமான எதிர்பார்ப்புகளைத் திணித்திருக்கிறது, ஒரு குடும்பத்தின் சமூக பாத்திரம் என்ன என்பது வரை நாம் கவனமாக விவாதிக்க வேண்டியுள்ளது.

அவ்வெளியில் நின்று நாம் சிந்திக்கத் தொடங்கினால் குடும்பமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஏற்படும் மனநெருக்கடிகளுக்கும், இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், மறுக்கப்படும் உரிமைகளுக்கும் சமூக-அரசியலின் தாக்கம் பெரிதும் இருக்கிறது. உதாரணமாக, வரதட்சனை கொடுமை காரணமாகவோ அல்லது கடன் தொல்லை காரணமாகவோ குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்லது பெற்றோர் ஏராளம் பேர் உள்ளனர். தற்கொலை முயற்சி வெற்றி என்றால் அவர்கள் இறந்து விடுவார்கள், தோல்வி என்றால் முந்தைய நிலையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இப்போது அந்த தண்டனை கிடையாது அவ்வளவுதான், ஆனால் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டிய சமூகக் காரணிகள் இறுதிவரை களையப்படாமலே இருக்கும்.

அடுத்ததாக, தற்கொலைக்கான முதன்மைக் காரணங்களில் இரண்டாவது காரணம் உடல்நலக் குறைபாடு. மருத்துவச் செலவை சமாளிக்க முடியாதது, கோமா நிலை, தாங்கொணாத் துயரினால் மரனத்தை நாடுதல் என இதில் பல்வேறு வகையான நெருக்கடிகள் அடங்கும். ஆனால் இதுவும் அந்த தனிநபர் சார்ந்த பிரச்சினையாகத்தானே சொல்லப்படுகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான மருத்துவ உரிமை இந்த ‘ஜனநாயக’ ’குடியரசில்’ உறுதி செய்யப்படுகிறதா? மருத்துவ சிகிச்சை என்பது கற்பனை செய்தும் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அரசின் மருத்துவத் துறையோ ஆட்கொல்லி நிறுவனங்களாக இருக்கிறது. மருத்துவத் துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோகமானது ஒன்று மருத்துவம் பார்த்து மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்துக் கொல்கிறது அல்லது மனிதர்களை பரிசோதனை எலிகளாக கையாண்டு கொல்கிறது.  இப்பின்னணியில் மருத்துவம் என்பதை எட்டாக்கனியாக மாற்றியதும், அதற்கு செலவு செய்ய முடியாமல் மேற்கொள்ளப்படும் தற்கொலை முடிவிற்கும் யார் காரணம்?

சமீபத்திய தற்கொலை முயற்சிகளில் கல்வித் துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. நேரடியாக கல்வி, மதிப்பெண்கள் சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கான வங்கிக் கடன்கள் மறுக்கப்படுதல், ஆண் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத் துறையினரின் பாலியல் தொல்லை, ராகிங் கொடுமைகள் என காரணங்களின் பட்டியல் நீள்கிறது. விவசாயி ராஜாவின் மகன் மருத்துவம் படிக்கச் சென்று இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அர்மேனியாவில் தற்கொலை செய்து கொண்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியுமா?

இதற்கெல்லாம் உச்சபட்சமாக ஆணாதிக்கம் நிறைந்த சாதி இந்தியாவில் கௌரவக் கொலைகள் அதிகரித்து வரும் சூழலில், கொலைகளுக்கே நியாயம் கிடைக்காத போது ஒரு பெண்ணை அல்லது காதலர்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்று எளிதாக வழக்கை முடித்து விடலாம்.

இப்படி நம்முடைய அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் பின்னால் சமூக-அரசியல்-பொருளாதார காரணங்கள் இருக்கையில் தற்கொலை முயற்சி என்பதை வெறும் தனிநபர் பிரச்சினையாகவோ அல்லது ஒருவருக்கு தனது உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை உண்டு என்று மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவோ மட்டும் பார்ப்பது சரியாக இருக்குமா?

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குதல், தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதாதிருத்தல் போன்ற அறிவிப்புகளால் அரசு தன்னை  பெரும் மனித உரிமை காவலராகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் உண்மையில் அது மக்கள் காவலர் என்னும் தனது கடமையை தட்டிக் கழிக்கவே பார்க்கிறது.

என்ன செய்யலாம்?

தற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டம் வேண்டும் என்பதல்ல எமது வாதம். ஒவ்வொரு தற்கொலைக்கும் அதற்குக் காரணமாகும் தனிநபர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதுபோல் மக்களை வாழவைக்கவியலாத இந்த கையாலாகாத அரசும், அதன் பிரதிநிதிகளும் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும்.

தற்கொலை வழக்குகளை விசாரிக்க மனித உரிமை ஆணையம் போன்று மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் ஒன்றை அமைக்கலாம். ஒவ்வொரு தற்கொலையும் ஒரு சமூகக் குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  காரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையிலிருந்து விடுபட தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்.  மேலும், தற்கொலை தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு அதன் மூலம் உளவியல் ரீதியான உடனடி உதவிகள் நீட்டிக்கப்படலாம்.

அரசுக்கு இது சுமையாகி விடும், அரசை மிரட்டி பலர் ஆதாயம் காண்பார்கள் போன்ற வாதங்கள் பொருளற்றவை. ஏனென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் எவரும் தம் வாழ்வோடு விளையாடி, உயிரைப் பணையம் வைத்து அரசை மிரட்டி ஆதாயம் தேடும் அளவுக்கு செல்லப் போவதுல்லை. மக்கள் அவ்வளவு அற்பமானவர்கள் அல்ல (அதெல்லாம் முதலாளிகளின், ஏகாதிபத்தியங்களின் பண்பு).  மேலும் ஒவ்வொரு மக்களும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி செய்வது அரசின் கடமையாகும். ஆக, எவ்வகையான போதாமையாக இருப்பினும், அதனை ஈடுசெய்வது அரசின் கடமையே. என்ன மாதியான உதவிகளை, வாழ்க்கை வசிதகளை அரசு வழங்கும் என்பதை வகுக்க, அவற்றுக்கான நடைமுறை விதிகளை வகுக்க மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு வரையறுத்து ஒழுங்குபடுத்தலாம்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், எதிர்கட்சிப் பிரதிநிதிகள் தேவைப்பட்டால் தொழிற்துறை வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு அக்குழுவை அமைக்கலாம். நிச்சயமாக இந்த வாழ்வுரிமை அளிக்கும் செயல்பாடுகளில் அரசுசாரா நிறுவனங்களை, தொண்டு நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. வகுக்கப்பட்ட விதிகள், உதவிகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு தேவைப்படும் இடங்களில் திருத்தங்கள் செய்து அவற்றை சட்டமாக்க வேண்டும்.

அவ்வளவு பணத்திற்கு அரசு எங்கே போகும் என்ற கேள்வி பூர்ஷுவா மட்டத்தில் எழும். அதானி போன்ற நிறுவனங்களுக்கு 6,200 கோடி ரூபாய் கடனாக வழங்க வங்கிகள் மூலம் வகை செய்ய முடிகிறது, மேலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களும் அமைத்துக் கொடுத்து, அதில் இலவச மின்சாரம், தண்ணீரும் கொடுத்து, வரி விலக்கும் கொடுத்து முதலாளிகளை காப்பதற்கு அரசிடம் பணம் இருக்கிறதென்றால் மக்களைக் காப்பாற்றவும் அரசிடம் பணம் இருக்க வேண்டும். இந்நாட்டில் வந்து தொழில் தொடங்கி, பொய்யாக நஷ்டப் பாட்டு பாடி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளை இலாபங்களை வாரிச் சுருட்டி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக் கடன், நிலுவையில் இருக்கும் வரிகள் போன்றவற்றை வசூல் செய்தாலே போதும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் அடிப்படை வாழ்வாதாரங்களை இந்திய அரசு உறுதி செய்ய முடியும்.

சட்டங்களை வகுப்பதும், வகுத்த சட்டங்களை போலி ஜனநாயக முகமூடிகளை அணிந்து ரத்து செய்வதும் மட்டுமல்ல ஒரு அரசின் பணி. ஒவ்வொரு சமூகப் பிரச்சினையை உண்மையான சமூக அக்கறையோடு ஆய்வு செய்து, குறிப்பாக அப்பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணங்களையே வேரோடு களைவதற்கான அறிவுபூர்வமான நிரந்தர தீர்வுகளைக் கண்டு ஒவ்வொரு குடிமகரும் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்போது மட்டுமே  ‘இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு’ நாடாக இந்தியா இருக்க முடியும் . இல்லையேல் எவர் மடிந்தால் எனக்கென்ன, இறப்பிற்கு காரணமாக எம்மையோ, எமது அரசு இயந்திரங்களையோ மக்கள் காரணம் சொல்லி விடக்கூடாது, அத்தகைய தலைவலிகளிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள அத்தனை சட்ட திருத்தங்களையும் யாம் செய்வோம் என்று அரசு கருதுவதாகவே நாம் பொருள் கொள்ளமுடியும்.

பிரச்சினைகளின் வேர்களைக் களையாமல் தற்கொலை முயற்சியை (அல்லது தற்கொலை) குற்றமாகக் கருதுவதில்லை போன்ற மேலோட்டமான போலி மனித உரிமை சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வருமேயானால், அரசானது தான் கையாலாகாத அரசு என்பதை ஒப்புக்கொண்டு எவ்வித குற்றவுணர்வுமின்றி மீண்டும் மீண்டும் ஒரு சமூக-அரசியல் கொலைக்கு தயாராகிறது என்பதை நாம் உறுதி செய்துகொள்ளலாம்.

நன்றி – உயிரோசை மாத இதழ், மதுரை (பக்க வரையறையின் காரணமாக சுருக்கப்பட்ட வடிவம் இதழில் வெளியானது. முழு வடிவம் இங்கே…)

 

கொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது…

ff

இந்தியா என்றாலே அதன் பன்மைக் கலாச்சாரமும், ‘ஒழுக்க நெறியும்’, குடும்ப அமைப்பின் மகத்துவமும் புகழ்ந்துரைக்கப்படும் நிலை மாறி இப்போது இந்தியா என்றால் அது ஒரு வல்லுறவு தலைநகரமாக, பெண்களுக்குப் பாதுகப்பற்ற நாடாக , பெண்களின் அடிப்படை உரிமைகளான வாழும் உரிமை, உடல் நலம், திருமண உரிமை ஆகியவைகூட மறுக்கப்படும் நாடாக உலக வரைபடத்தில் காட்சி அளிக்கிறது. வளர்ந்து வரும் நாடு இந்தியா என்று சொல்வதைக் காட்டிலும் பெண்கள் விஷயத்தில் பிற்போக்குத்தனம் பெருகி வரும் நாடாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகி விடாது.

ஆனால் இந்தியா பற்றி நாம் இப்படி தொடங்கும்போது இவர்கள் அவநம்பிக்கைவாதிகள், கேடுகெட்ட பெண்ணியவாதிகள், விளம்பரப்பிரியர்கள், வேலையற்ற கம்யூனிஸ்டுகள் என்று வசைபாடப்படுவோம்.  ஏன்றால் ‘நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்னும் மாயாவாத மதவாத நம்பிக்கைகளை சாஸ்வதம் என்று நம்பும் ‘ஆன்மீக’ நாடல்லவா இது. ஆகவே, நாம் எப்போதும் எதிர்மறைகளையோ, குறைகளையோ பேசக்கூடாது. 2 வயது பெண் குழந்தைகளின் பாலுறுப்பை கீறி ஒரு ஆண் தனது  ‘ஆண்மையை’ திணித்து இரத்தம் பீறிட வல்லுறவு செய்து கொன்றாலும் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடுவதோ அல்லது அப்பாடல் பாடப்படும் சபாக்களுக்கோ சென்று தாள-சுருதிகள் பிழையின்றி போடப்படுகிறதா, ஆலாபனைகளில் பிருகா சரியாக விழுகின்றதா என்று கவலை கொள்வதே உத்தமம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள், அவர்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய புள்ளி விபரங்கள் போதுமான அளவுக்கு அன்றாடம் வெளியிடப்பட்டு வருகின்றன. உலகளவில் பெண்கள் வாழ்வதற்கான பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இன்றும் பட்டிமன்ற தலைப்பாக ‘இந்தியா 2020இல் வல்லரசாகுமா 2040இல் வல்லரசாகுமா’ என்றே விவாதம் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை மங்கல்யான் ஏவுகனைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து விண்ணில் ஏவும் அரசே வல்லரசு. நம் நாட்டு வளங்களை அந்நிய மூலதனத்திற்குத் தாரை வார்க்கும் ஒப்பந்தங்களைப் போடுவது, ‘சக்தி வாய்ந்த’ அனு உலைகளை அமைப்பதுமே வல்லரக்கான இலக்கணம். நாடு இத்தகைய வளர்ச்சிகளை துய்த்துக் கொண்டிருக்கும்போது ஆங்காங்கே சில நூறு பெண்கள் கொடுமைக்குள்ளாவது ஒரு விஷயமா. அதிலும் பாருங்கள்! பெண்கள் பலவீனமான பாலினம், அவர்களை பலவீனமாகப் படைத்தது ஆண்டவன் குற்றம், அதற்கு யார் என்ன செய்ய முடியும்? மேலும், வல்லரசில் பெண்களுக்கு என்ன இடம் இருக்கிறது? அரசு என்றாலே அது ஆண்பால்தானே?  என்னதான் இந்தியா தாய் நாடாக இருந்தாலும், இந்தியா ஒரு வல்லரசி நாடாவதை எவர்தான் விரும்புவர்?

இந்தியப் பெண்களின் அவல நிலைக்குப் பின்னால் இருக்கும் இந்திய மனநிலை இதுவே. மற்ற நாடுகள் மட்டும் என்ன ஒழுங்கா? இதைவிட மோசமானக் கொடுமைகள் நடக்கவில்லையா என்று கேட்போரும் உண்டு. ஆனால் நாம் இந்தியர்கள் என்றளவில் நாம் வாழும் நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்த சிந்திப்பது அவசியம்தானே. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், பெண்களை உடன்கட்டை ஏறச் செய்து, வரதட்சனை என்னும் கொடிய தீயில் பெண்களை காவு கொடுத்து, இன்னும் இதர கொடுமைகள் செய்து  இன்றைக்கும் ஒரு பெண் குழந்தை என்பதே பெரும் சுமையாக கருதும் நிலை இந்தியாவைத் தவிர வேறெங்கும் நிலவுமா என்பது சந்தேகமே.

இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து ஒற்றை வரியில் சொல்வதானால், பெண் என்பவள் அடக்கப்பட வேண்டியவள், அவள் ஆளப்பட வேண்டியவள், அவள் ஆணுக்கான, ஆணின் தலைமையிலான குடும்பத்திற்கு ஒரு பணிப் பெண்.  பெண்களுக்கெதிரான அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாய் இருப்பது இக்கருத்தியலே.

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே ஒரு பொய், ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள், வேலை வாய்ப்பில் அவர்களுக்கே முக்கியத்துவம், நிறைய சம்பாதிக்கிறார்கள், நவநாகரீகமாகத் திரிகிறார்கள், சொல்லப்போனால் ஆண்கள்தான் பாவம், ஆண்கள்தான் அடங்கிப் போகிறார்கள் என்பதே பெரும்பாலாரின் வாதமாய் இருக்கிறது. நம் நாட்டில் எங்கே சாதி இருக்கிறது? தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்கள்? எல்லாத் துறையிலும் அவர்கள்தான் இப்போது பெருகி வருகிறார்கள். பிராமணர்கள்தான் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பேசுபவர்களுக்கும் மேற்சொன்னவர்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. எந்த ஒரு மேலாதிக்கத்தையும் மேலாதிக்கமாகப் பார்க்காமல் உயர்வு தாழ்வு என்பதை ஒரு இயற்கையான நடைமுறையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கின்றனர், அல்லது அந்நிலை அவர்களுக்குத் தகும் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்.

பேருந்தில் ஒரு இளைஞி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி, வீட்டிற்குள் ஒரு பாட்டி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி இவர்கள் பெண்களின் உடையையும், கலாச்சாரத்தையுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வரதட்சனைக் கொடுமையால் ஒரு பெண் கொல்லப்படும்போதோ அல்லது ஏழ்மையால் ஒரு பெண் தன் மனதில் இரும்பைக் காய்ச்சி ஊற்றி தன் பிள்ளைகளின் வாயில் விஷத்தை ஊற்றிக் கொல்லும்போதோ இத்தகைய கதாகாலட்சேபவாதிகளால் பெண்களிடம் குற்றத்தைக் காண முடியவதில்லை. வெறும் அனுதாபங்களோடு நிறுத்திக்கொள்வார்கள். அல்லது ‘மற்றையோர்’ நிலையிலிருந்து குற்றவாளிகளை தூக்கிலிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள்.

உண்மையில், இந்தியாவில் பெண்களின் நிலைக்கு அத்தகைய குற்றவாளிகளைவிட நிலவும் தந்தை ஆதிக்க சமூக அமைப்பிற்கும், ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார அமைப்பிற்கும் நிபந்தனையற்ற ஆதரவு தருபவர்களே முதன்மை காரணம். குறிப்பிட்ட குற்றத்திற்கு தனிநபர் காரணமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருக ஆணாதிக்க சமூக அமைப்பே காரணம். அதைக் களைவதற்காகப் பெண்கள் பெண்ணியம், பெண் உரிமை என்று பேசும்போதும், போராடும்போதும் அதை ஏளனப்படுத்துவோரும், அப்பெண்களை ஆபாசமாகப் பேசுவோரும் ஆணின் அதிகார மனதிற்கு மறைமுகமாக தீனி போடுகின்றனர்.

குறிப்பிட்ட சதவிகிதம் பெண்கள் கல்வியில், பொருளாதார ரீதியில் சில படிகள் முன்னேறியுள்ளனர், உண்மைதான்; பல்வேறு துறைகளில் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர் என்றாலும் பாலினம் என்ற அடிப்படையில் அவளது உடலுக்கு எவரும் பாதுகாப்பை உறுதி செய்திட முடிவதில்லை. அச்சமின்றி அவள் சுதந்திரமாகப் பொதுவெளியில் நடமாட முடியாது. ஆண்களைப் போல் இரவு 12 மணிக்கு தெருவோர தேனீர் கடையில் கூட்டமாக நின்று அரசியல் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை, இயற்கைத் தேவையான சிறுநீர் கழிக்க பகிலிலாவது அவள் அச்சமின்றி பொது வெளியை பயன்படுத்த முடியுமா? பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பு பெருகியிருக்கலாம், விண்கல தொழில்நுட்ப பிரிவில் முக்கியப் பணி ஆற்றியிருக்கலாம், ஏன் ஒரு பெண் ஜனாதிபதியாகக்கூட ஆகி இருக்கலாம் ஆனால் பள்ளிகளில், குறிப்பாக அரசு பள்ளிகளில், பொது வெளியில், ஏழைகளாக இருந்தால் வீட்டிலாவது சுகாதாரமான கழிப்பறை இருக்கிறதா?  இதுதான் ‘வியத்தகு இந்தியா’வில் பெண்கள் நிலை.

எத்தனை குற்றங்களைதான் நாம் பட்டியலிடுவது? 60 வயது முதியவர் 3 வயது சிறுமியை வல்லுறவு செய்தார் என்பதில் தொடங்கி சமீபத்தில் ஒடிசாவில் 16 வயது சிறுவன் 6 வயது சிறுமியை வல்லுறவு செய்தது, வேலூரில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 வயது சிறுமியை வல்லுறவு செய்து கொன்றது (இன்னும் விசாரணையில் உள்ளது), வாடகை டாக்சியில் பெண்கள் வல்லுறுவு (தொடர்ச்சியாக), இவ்வளவு ஏன் கௌஹாத்தில் ஐ.ஐ.டி என்னும் ‘பெருமை’ வாய்ந்த கல்வி நிறுவனத்தில், ஒரு பேராசிரியர் அலுவலக உதவியாளர் பெண் ஒருவரை வல்லுறவு செய்தது… இன்னும் எத்தனை எத்தனை. வரதட்சனை பிரச்சினையில் கர்பிணிப் பெண் அடித்துக் கொலை. ஆதிவாசிகள் உரிமைப் போராட்டத்தில் காவல் துறையினரால், இராணுவத்தினரால் வல்லுறவு சித்திரவதை, சாதிய ரீதியான கௌரவக் கொலை…. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் பதிவின் படி ஒவ்வொரு 1.7 நிமிடங்களுக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை பதிவு செய்யப்படுகிறது, அதோடு ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு வல்லுறவு புகார் மற்றும் ஒவ்வொரு 4.4 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி குடும்ப வன்முறைக்குள்ளாகிறாள் என்று தெரிவிக்கிறது.

இவ்வளவு குற்றங்கள் நடந்தும் தண்டனைகளை கூட்டுவது பற்றியும், பெண்களையே பொறுப்பேற்கச் சொல்வதுமாகத்தான் அரசு பெண்கள் பிரச்சினையை கையாண்டு வருகிறது. 2013இல் நீதியரசர் வர்மா குழு பரிந்துரைத்த எந்த சட்டபூர்வ சீர்திருத்தங்களும் நடைமுறைபடுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டத்திற்காக நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 1000கோடி ரூபாய் (2013-14) மேலும் ஒரு 1000 கோடி (2014-15) ரூபாய் பணம் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்று பாராளுமன்ற குழு கேள்வி எழுப்பும் நிலையில்தான் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. 660 நிர்பயா மையங்கள் அமைக்கப்படும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியும், மறு வாழ்வும் அளிக்கப்படும் என்று ஜூலை 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை அவ்வறிவுப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, குற்றமிழைத்தவருக்கு தண்டனை இவையெல்லாம் உடனடி நடவடிக்கைகள். அவற்றை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், பெண்களின் நிலையை உயர்த்த, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ அடிப்படை சிந்தனை மாற்றங்களை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். பாலின உணர்வூட்டல் (gender sensitizing) கல்வியை வகுக்க வேண்டும். பாலியல் கல்வி என்பது வேறு.  பாலினக் கல்வி என்பது வேறு பாலியல் கல்வி என்பது இயற்கையான பாலியல் அடையாளம்  பற்றிய உயிரியல் கல்வி, ஆனால் பாலினக் கல்வி என்பது ஆணாதிக்க சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனையோடு சமூகமயமாக்கப்பட்ட மனங்களுக்கு சமத்துவ சிந்தனையை போதித்தலாகும். இதுவே நிரந்தர தீர்வை வழங்கும்.

நன்றி: தினகரன் நாளிதழ்

 

(இந்தியாவில் பெண்கள் நிலை என்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு மேற்சொன்ன தலைப்பை கொடுத்திருப்பது அப்பத்திரிகையினரின் முடிவாகும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: