Category Archives: தமிழ் கட்டுரைகள்

அச்சம் தவிர் அறிவு கொள்

13 14 15 16

கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம்

IMG_2716

பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

3.12.2012

சென்னை

பள்ளிநேலியனூர் கிராமத்தில் நவம்பர் 11 அதிகாலை 2.30 மணியளவில் நடந்த குடும்ப / சாதி வெறி திமிர் கொலையில்(கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா (வயது 23) என்ற பெண் அதேபகுதியை சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும், அதை தற்கொலை என்று அவர்கள் முடி மறைப்பதாக  செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஆய்வு செய்ய மாசெஸ் அமைப்பின் சார்பாக, அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம் தலைமையில் மேலும் சில மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நபர்களை ஒருங்கிணைத்து கீழ்கண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. நிர்மலா (கொற்றவை), நிறுவனர் மாசெஸ் அமைப்பு

2. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம்

3. தமிழ் மணி, தமிழக சாக்கிய அருந்ததியர் சங்கம்

4.  மாறன், மனித உரிமை ஆர்வலர்

5.  வழக்குரைஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

நாங்கள் ஐவரும் டிசம்பர் 2 அன்று சம்பவம் நடந்த பள்ளிநேலியனூர் சென்று கார்த்திகேயனின் தாய் மற்றும் கோகிலாவின் குடும்பத்தார், ஊர் பொதுமக்கள், இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சரவனன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராமமூர்த்தி, இன்றைய தலைவர் தமிழ்குடி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோரைச் சந்தித்தோம். மேலும் கார்த்திகேயன், அவரது சகோதரர் கதிர்வேல், கார்த்திகேயனின் வழக்குரைஞர் லூசி, அவரது சீனியர் வழக்குரைஞர் ஜோஸ் மற்றும் கார்த்திகேயன் நண்பர் இளையரசன் (திராவிட விடுதலைக் கழகம்) ஆகியோரையும் சந்தித்துப் பேசினோம். கோகிலாவின் குடும்பத்தார் தரப்பில் பேசிய அவரது சித்தப்பா முருகன், அந்த தெருவில் வசிக்கும் அண்டை வீட்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் தெரிவித்த தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. எங்கள் குழுவின் விசாரனை விவரங்கள் பின் வருமாறு:

 கோகிலாவின் தந்தை இதை இயற்கை மரணம் என்று சொல்ல, வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இதை தற்கொலை என்று உறுதியாகச் கொல்கிறார். தற்கொலை என்றால் போஸ்ட்மார்ட்டத்திற்கு ஏன் உடலை தரமறுக்கிறார்கள் என்ற ஒரு சிறு சந்தேகம் கூட காவல்துறைக்கு வராதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பின்னணி:

பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த 9 வருடங்களாக காதலித்துள்ளார், பெற்றோர்களுக்கு தெரியாமல் 1.10.2010 அன்று கடலுரில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கோகிலா வீட்டிற்கு விசயம் தெரிந்து ’சக்கிலியனுக்கு’ கட்டிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி கோகிலாவின் பெற்றோர் வேறிடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். கோகிலா கார்த்திகேயனுடன் தான் வாழ்வேன் என்று தீர்மானகரமாக இருந்ததால் அவரது பெற்றோர் அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. பின்னர் 10.11.12 அன்று மாலை 4 மணி அளவில் கோகிலா கார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தை தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அடுத்த நாள் (ஞாயிற்று கிழமை) பெண் பார்க்க வருமாறும் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு உறங்கச் சென்றதாகவும், 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தைராய்ட் நோய் தொந்தரவு முற்றி மூச்சடைத்து இறந்துவிட்டாள் என்று கோகிலாவின் தந்தை நாகராஜன் தெரிவித்திருக்கிறார், வேறு சிலர் அவள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர்.  

கோகிலாவின் பெற்றோர் போஸ்ட்மார்ட்டம் செய்ய காவல்துறையினரிடம் பிணத்தை ஒப்படைக்க மறுத்து இடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாலும், கார்த்திகேயன் தரப்பினர் எவரையும் பிணத்தின் அருகே அனுமதிக்காததாலும், பிணம் கண்களைத்தவிர முழுவதுமாக போர்த்தியிருந்தது என்பதாலும் தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உணர்ந்த கார்த்திகேயன், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தையடுத்து இந்த செய்தி செய்தித்தாள்கள், வார இதழ்களில் வெளிவந்தது. மேலும் அது சமூக இணையதளங்களின் வாயிலாக கதிர்வேல் அவர்கள் அளித்திருந்த தகவல்களின் ஒலிப்பதிவு  மாசெஸ் அமைப்பின் கவனத்திற்கு வந்ததையொட்டி உண்மையறியும் குழு அமைத்து விசாரனைக்குச் சென்றோம்.

1. முதலில் நாங்கள் கார்த்திகேயனின் தாயார் கஸ்தூரியை சந்தித்தோம். கார்த்திகேயன், கலியமூர்த்தி தம்பதிகளுக்கு 5 மகன்கள். கார்த்திகேயன் கடைசி மகன். அவர் செண்ட்ரிங் எனப்படும் கட்டிட வேலை பார்த்து வருகிறார். 12ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கோகிலாவும் கார்த்திகேயனும் ஒன்றாக படித்தவர்கள். 9 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அரசல் புரசலாக இந்த காதல் சேதி தனக்கு தெரியும் என்றும் ஆனால் கோகிலாவின் இறப்பிற்கு பிறகே திருமண விசயம் தனக்கு தெரியும் என்றார். அதன்பிற்கு செய்தித்தாளில் வந்த திருமணப் புகைப்படத்தையே தான் பார்த்ததாகச் சொன்னார். கோகிலாவின் தந்தை நாகராஜ் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு செல்பவர். சாதிப் பற்றின் காரணமாக, சக்கிலியப் பையனுக்கு எந்த காரணம் கொண்டும் பெண் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி அவர் அந்தப் பெண்ணை அடித்துக் கொடுமை படுத்தியிருக்கிறார்.

11.11.12 அன்று அதிகாலை 3.30 அளவில் கார்த்திகேயன் நண்பர்கள் வந்து கோகிலா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் கோகிலாவின் பெற்றோர் கடும் கோபத்தில் இருப்பதால் கார்த்திகேயனின் பாதுகாப்பு கருதி அவரது நண்பர்கள் அவரை வேறிடத்திற்கு அழைத்து சென்று விட்டனர். அடுத்தநாள் ஈம காரியங்கள் செய்ய அவர்கள் பிணத்தை தயார் படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர்.” இதற்கிடையில் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டான். அதைத் தொடர்ந்து காவல்துறை போஸ்ட்மார்டத்திற்காக உடலை கைபற்றவந்தபோது பெண்கள் எல்லாம் மறித்துக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிலர் காவல்துறையினரையே நெட்டி தள்ளியபடி பின் தள்ளினர், வேறு சிலர் உடனடியாக பெண்ணின் உடலை கட்டையில் ஏற்றி பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.

அதுமட்டுமல்லாது  என் மகனை நான் கொலை செய்வேன், இவன் யார் புகார் கொடுக்க? என்று கனவர் கலியமூர்த்தியை மிரட்டியுள்ளார் நாகராஜ். எங்ககளது வீட்டை இடிக்கப்போவதாகவும், எங்களை சும்மா விடமாட்டேன் என்று நாகராஜ் சொல்லிவருவதாகவும் எனது மகனுக்கு தகவல் கிடைக்க எங்களை உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு அவன் சொன்னான். நாங்களும் சென்றுவிட்டோம. காவல்துறையினரிடம் தனது மகன் மிரட்டல் குறித்து தெரிவித்து பாதுகாப்பு கோரியதாகவும், அதனால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு வேறு தொந்தரவுகள் இல்லை. எனவேசில நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பியதாகவும், இரவில் மட்டும் பங்காளி வீட்டில் படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அந்த ஊரில் பொதுவாக பொதுவெளியிலோ அல்லது நடைமுறையிலோ சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார். தங்களது குடும்பத்தில் கூட தனது சொந்த அண்ணன் மகள் ஒரு பறையர் சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கோகிலாவின் தந்தை மற்றும் அவரது அண்டை வீட்டார் சிலருக்கு சாதிவெறி இருந்திருக்கிறது, அருந்ததி சாதியில் பெண் கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. தனது மகன் கோகிலாவின் மரணத்தை கொலை என்றே நம்புவதாகவும், ஊரில் சிலரும் அப்படியே பேசிக்கொள்வதாகவும் தெரிவித்தார். தாங்கள் எந்தவிதத்திலும் குறைவில்லை எல்லா வசதிகளும் வீட்டில் இருக்கிறது, அநியாயமாக ஒரு பெண்ணின் உயிரை இப்படி வாங்கிவிட்டார்களே என்று ஆதங்கப்பட்டார்.

தான் அந்த வீட்டில்தான் இருப்பேன் என்றும் தனக்கு என்ன நேர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

அந்தத் தெருவில் 3 அருந்ததயிர் குடியிருப்புகள் இருக்கிறது. பறையர் சாதியே பெரும்பான்மை. எதிரில் இருந்த கார்த்திகேயனின் சித்தி கௌரி மற்றும் அவர் கணவர் (கார்த்திகேயன் சித்தப்பா) வீட்டினரை விசாரித்தோம்.

2. சில தனிப்பட்ட காரணங்களால் தாங்கள் கஸ்தூரி குடும்பத்தோடு பேசாதிருந்ததாகவும். இப்போது இந்த சம்பவத்தை ஊரில் பேசிக் கொள்வதாகவும் கேள்விபட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் வீட்டுப் பையனைக் காதலித்ததால் தான் இப்படி நேர்ந்தது, அவன் கொலைகாரன் என்று கோகிலா குடும்பத்தினர் தூற்றுவதாகவும் வேதனைப்பட்டார். அப்போது கார்த்திகேயனின் சித்தப்பா அழத்தொடங்கினார். விசாரித்தபோது, ஒருவாரத்திற்கு முன் பள்ளிக்கூடச் சாலையருகே நடந்துவந்தபோது கோகிலாவின் சித்தப்பா தனஞ்செயன் (தனசேகர் என்பதை தனஞ்செயன் என்று சொல்லிவிட்டார்) தன்னை வழியில் வைத்து அடித்ததாக கண்ணீர் மல்கச் சொன்னார். இந்த சம்பவம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டதற்கு, பெரும்பாலும் அவர் குடித்துவிட்டு வருவதால் அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர் மனைவி தெரிவித்தார்.

3. கார்திகேயன் வீட்டற்கு அடுத்த தெருவில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த அருள் என்பவரிடம் விசாரித்தோம். கோகிலா, கார்த்திகேயன் இருவரும் காதலித்திருக்கிறார்கள், திருமணம் செய்து மறைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோகிலா வீட்டில் தெரிந்து பிரச்சனையாகி இருக்கிறது, திடீரென்று ஒருநாள் அந்த பெண் இறந்துவிட்டாள் என்று அறியமுடிகிறது. திடீர் மரணம், போஸ்ட்மார்டத்திற்கு உடலைத் தர மறுத்ததால் கார்த்திகேயன் மேலும் சந்தேகம் கொள்கிறார். காவல்துறையினர் வந்தபோது பெண்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு உடலை கைப்பற்றவிடாமல் மறித்துள்ளனர் என்றார்.

ஒருவேளை கார்த்திக் ஊருக்குள் வந்து அவரை எவரேனும் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், நிச்சயம் தட்டிக் கேட்போம் உதவிக்கு செல்வோம் என்றார்.

ஆக அந்த ஊரில் ஒட்டுமொத்த சமூகம் சாதிய பாகுபாடு போற்றவில்லை என்று அறியமுடிந்தது. எல்லோரும் நட்புறவுடனேயே இருந்திருக்கின்றனர்.

4.   கோகிலாவின் பெற்றோரை சந்திக்க சென்றபோது அவர்கள் முன் ஜாமீன் வாங்குவதற்காக சென்றுள்ளதாக  கோகிலாவின் சித்தப்பா முருகன் தெரிவித்தார்.

முருகன் (தனியார் பேருந்து ட்ரைவர்) கூறியது:

எங்கள் பெண் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வாள், 6 மணிக்கு வருவால். திடீரென்று ஒரு நாள் அவன் தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கிறான் கார்த்திகேயன். அதை வெளியில் சொல்ல அச்சப்பட்டிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன் தான் கோகிலாவை திருமணம் செய்து கொண்டதாக கார்த்திகேயன் கூறுகிறான். இதற்கிடையில் இது ஏதும் தெரியாமல் எங்கள் விட்டுப் பெண்ணுக்கு நாங்கள் மாப்பிள்ளை பார்த்தோம். அவரது தொடர்பு எண் இருந்ததைக் கொண்டு கோகிலா அவரைத் தொடர்பு கொண்டு தான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று பேசியிருக்கிறாள், தன்னைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். இதைத் தெரிந்து அவளது தந்தை யாரையாவது காதலிக்கிறாயா என்று விசாரித்தபோது, தைராய்ட் பிரச்சனை இருப்பதால் அப்படிச் சொன்னதாக சொல்லியிருக்கிறாள்.

 அதிகாலை 3 மணியளவில் உறக்க கலக்கத்தில் பார்த்தபோது இறந்து கிடந்தாள் என்றார். தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையை நாடியிருக்கிறார். எங்கள் பெண் தைராயிட் பிரச்சனையால் அவதியுற்று வந்தாள், மூச்சு விட முடியாமல் சிரமப்படுவாள். அவர் எப்படி இறந்தாள் சூசைடா என்று நாங்கள் கேட்டபோது ஆம் சூசைட் தான், தூக்கு மாட்டிக் கொண்டாள். தன்னால் வாழமுடியவில்லையே என்று மன உளைச்சலடைந்திருக்கிறாள் போலும் அதான் சூசைட் செய்து கொண்டாள் என்றா.

பிறகு காவல்துறை வந்ததா என்றோம்.

மதியம் 3 மணியளவில் காவல்துறை வந்தது, கோகிலாவின் கணவர் என்று சொல்லி கார்த்திகேயன் என்பவர் கோகிலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருக்கிறான். காவல்துறை விசாரிக்க வரும்போதுதான் அவர்கள் பதிவுத் திருமனம் செய்து கொண்டார்கள் என்பதே எங்களுக்கு தெரியும்.  காவல்துறை வரும் வேளையில் எங்கள் சாதி வழக்கப்படி உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். பெண் எப்படி இறந்தாள் என்று நாங்கள் மீண்டும் கேட்டதற்கு, எந்த பெற்றோர் தான் உடனே காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள், அந்த அடிப்படையில் அவர்கள் கொஞ்சம் கண்டித்திருக்கிறார்கள் அது தவறா. அதற்குள் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கார்த்திகேயன் எங்களை நாடாது நேரே காவல்துறையை நாடியிருக்கிறார். ஒருவேளை காலையிலேயே சென்று புகார் அளித்து அவர்களும் காலையிலேயே வந்திருந்தால் நாங்கள் உடலை முறைப்படி ஒப்படைத்து, கணவன் என்ற முறையில் அவனே சடங்குகள் செய்யட்டும் என்று அனுமதித்திருப்போம். உடலைக் குளிப்பாட்டி எல்லாம் தயாரான பிறகு உடலை போட்டுவைப்பது தவறு என்பதால் நாங்கள் கொடுக்கவில்லை, ஒருவேளை ஊர்காரர்கள் அனுமதித்தால் எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னதாக எங்களிடம் தெரிவித்தார்.

உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டீர்கள் என்று சொல்லப்படுகிறதே. அது உண்மயில்லை, எங்கள் ஊர் வழக்கப்படி சர்க்கரை கொட்டி, இரப்பர் போட்டு சடங்கு வழக்கப்படிதான் எரித்தோம், அது அவர்களின் வாக்குமூலம் என்றார்.

ஓரிரண்டு நாட்கள் அந்தப் பெண்ணை எங்காவது அழைத்து சென்று குடித்தனம் நடத்தியிருந்தால் நாங்களும் எங்கள் பெண்ணைக் காணவில்லையே என்று தேடியிருப்போம் எங்களுக்கும் முன்னரே இந்த விசயம் தெரிந்திருக்கும்… இல்லையேல் முன்னரே அவன் காவல்துறை உதவியையாவது நாடியிருந்தால் இந்த அளவுக்கு சென்றிருக்காது என்றார்.

அப்போது அங்கு பறையர் சாதியைச் சேர்ந்த தெரு மக்களும் கூடியிருந்தனர். அவர்களும் ஊடே இதே கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த ஊரில் இதேபோல் சாதி மாறித் திருமணம் நடந்திருக்கிற்தே, கார்த்திகேயன் உறவினர்கூட பறையர் சாதியில் பெண் எடுத்திருக்கிறாரே என்று நாங்கள் கேட்டபோது ஆமாம் என்றார் முருகன் எங்களுக்கும் முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்து வைத்திருப்போம் என்றார். அப்போது, அங்கிருந்த கதிரவன் என்பவர் யார் அவன் சக்கிலி வூட்டில் பெண் எடுத்தது என்று எரிச்சலுடன் கேட்டார்.

தொடர்ந்த முருகன் – ஏன் எங்களிடம் சொல்லாமல் பார்த்து வைத்த மாப்பிள்ளையிடம் சொன்னாய் என்று கோகிலாவின் தந்தை கோபித்திருக்கிறார். இது பெற்றோர்களின் இயல்பான கோபம் தானே, திருமணம் முடிந்து 2 வருடங்கள் வேறு ஆனதால் சேர்ந்து வாழ முடியவில்லையே என்று அவள் மன உளைச்சலடைந்து தற்கொலை செய்யும் மனநிலைக்கு சென்றிருக்கலாம் என்றார்.

பெற்றோர் கோபித்ததற்கும், பெண் இறந்ததற்கும் எத்தனை நாள் இடைவெளி என்று கேட்டபோது மூன்றே நாள் என்றார், அவளை பெண் பார்க்க வருவதாக இருந்தது, அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இப்போது இத்தனை பேரை அனுகும் கார்த்திகேயன் ஏன் தொடக்கத்திலியே இந்த முயற்சியை எடுக்கவில்லை, எங்களிடமும் வந்து பேசவில்லை என்றார்.

திருமணம் செய்து மறைக்கும் அவசியம் ஏன் வந்திருக்கும் என்று கேட்டதற்கு, கோகிலாவின் தந்தை கோவில் நாட்டாமைக்காரராக இருந்திருக்கிறார், ஊரில் ஒரு பெரிய மனிதர் அதனால் அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம் என்றார்.

சரி பெண் ஏன் மறைத்திருப்பார் என்று கேட்டதற்கு, அவருக்கு என்ன 21 வயதுதானே ஆகிறது, என்ன மெச்சூரிட்டி இருக்கும், அதனால் தான் நாங்களே மாப்பிள்ளை பார்த்தோம். பெண் 10 ஆவது படித்திருக்கிறாள், மருந்து கம்பெனியில் வேலை பார்க்கிறாள், காலையில் செல்வாள் மாலையில் வருவாள். ஒருநாள் கூட வேறெங்கும் சென்றதில்லை எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை என்றார். ஆனால் ஊரில் அரசல் புரசலாக இவர்கள் சந்திப்பை பற்றி பேசிக் கொள்வார்கள். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றார்கள். நாங்களே காதல் ஜோடிகளை சேர்த்து வைத்திருக்கிறோம், எங்களுக்கு தெரியவே இல்லாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

கார்த்திகேயன் சித்தப்பாவை கோகிலாவின் சித்தப்பா அடித்ததாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று ஊர்காரர்கள் சொல்ல, முருகன் பெண்ணின் இறப்பு நடந்த ஓரிரு நாட்களில் கோபம் காரணமாக அப்படி ஏதாவது நடந்திருக்கலாம் ஆனால் அதன் பிறகு ஏதாவது நடந்ததா என்று விசாரித்துப் பாருங்கள் என்றார்.

அங்கிருந்த ஓர் பெண்மணியும் எவருக்கும் தெரியாதபோது இப்போது வந்து திருமணம் செய்துகொண்டதாக சொன்னால் என்ன செய்யமுடியும் என்றார் கோபமாக. யாராவது சென்று அவர்களை எதாவது செய்தால் அவர்கள் இன்நேரம் இங்கிருந்திருக்க முடியுமா, அப்படி செய்யாததால்தான் அவர்கள் அதிகம் துள்ளுகிறார்கள் (ரொம்ப போராங்க) என்றார்

முருகன் தொடர்ந்தார், கோகிலாவின் தந்தை அடுத்த நாள் கார்த்திகேயனைப் பெண் பார்க்க வருமாறு போனில் சொன்னதை பதிவு செய்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார் கேட்டுப்பாருங்கள். அதன் பிறகு கோகிலாவின் தாயார் சற்று கோபமாகப் பெண்ணிடம் பேசியிருக்கிறார், அதைத் தொடர்ந்து கோகிலா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம்.

கோகிலா தைராய்ட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கார்த்திகேயனோடு திருமணம் செய்யமுடியாதிருக்கிறதே என்று தற்கொலை செய்து கொண்டாரா என்று கேட்டதற்கு, முருகன் அது தன்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றார், ஆனால் முன்னர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார். கதிரவன் ஆணித்தரமாக தைராய்ட் பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கோகிலா புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டதற்கு அது எதுவுமில்லை எல்லாம் கொளுத்திவிட்டார்கள் என்றார். ஏன் கொளுத்த வேண்டும் என்று கேட்டதற்கு அதை தான் சொல்ல முடியாது, அவர்கள் அப்பா அம்மா இருந்தால் தான் தெரியும் என்றார்.

இது பெரிய விசயமானதற்கு காரணமே வழக்குரைஞர் லூசி தான் காரணம், எங்கள் தரப்பில் எதையும் கேட்காமல் அவர்களாகவே எல்லாவற்றையும் முடிவு செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்.

வழக்குறைஞர் கோதண்டபாணி என்பவர் லூசியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறதே என்றபோது அது தனக்கு தெரியாது ஆனால் எங்கள் ஊர் விசயத்தில் ஏன் தலையிடுகிறாய், இந்த வழக்கை விட்டுவிடு என்பதுபோல் ஏதாவது சொல்லியிருக்கலாம் என்றார். மேலும் அவர் எங்கள் நெருங்கிய உறவு, கோகிலாவின் தந்தை கூட பிறந்த சித்தப்பா மகன் என்றார்.

5. முன்னாள் ஊராட்சி தலைவர் இராமமூர்த்தி, ஆசிரியர் ரமேஷ் மற்றும் சில ஊர் மக்களை அங்குள்ள கோயில் மண்டபத்தில் சந்தித்தோம்.

இராமமூர்த்தி கூறியது:

கோகிலா இயற்கை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு தைராய்ட் பிரச்சனை இருந்தது, அதுதான் இறப்புக்கு காரணம் என்றார்.

கார்த்திகேயன் தன்னோடு தான் எப்பொழுதும் இருப்பார் என்றும் மாமன் மச்சான் என்று பழகிவந்ததாகவும் திருமணம் செய்து கொண்டதை தன்னிடம் கூடச் சொல்லவில்லை என்றார்.

ஏன் உடலைக் கொடுக்க மறுத்தார்கள் என்று கேட்டதற்கு, உடலைக் குளிப்பாட்டி எல்லாம் முடித்தபின்னர் ஊர்வழக்கப்படி அப்படி கொடுக்க மாட்டார்கள், அதனால் தான் ஊர்மக்கள் காவல்துறையை தடுத்திருக்கின்றனர் என்றார்.

ரமேஷ் குறுக்கிட்டு எங்கள் ஊரில் சாதிப் பிரச்சனையே இல்லை, முன்னர் சக்கிலியர்கள் செறுப்பு கூட அணிந்து செல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் இருந்தது ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவும் இல்ல, நாடார், வள்ளுவப் பறையர், உடையார், ரெட்டியார் என்று அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றொம் என்றார்.

ஆனால் கார்த்திகேயன் எங்கள் மேல் காவல் துறையில் புகாரளித்ததோடு லூசியின் தூண்டுதலின் பேரில் ஊரெங்கும் சாதி வெறியன் நாகராஜை கைது செய்! என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார். மன வேதனையாக இருக்கிறது. தலித்தல்லாத லூசி எதற்கு இதில் தலையிடுகிறார், அவர் ஒரு முதலியார் என்று சாதியை குறிப்பிட்டு பேசினார். இரவு வேளைகளில் காவல்துறை வந்து எங்களை தொந்தரவு செய்கிறது, இரவு வேளைகளில் ஊரில் ஆண்களே இருக்க முடியாமல் ஓடி ஒளிகிறோம். இத்தனைக்கும் அவன் தான் காரணம். தொடக்கத்திலேயே அவன் எங்களை நாடியிருந்தால் ஊர்காரகளே அவர்களை சேர்த்து வைத்திருப்போம் என்றார்.

காதிலித்த காலத்திலேயே நாங்கள் யாரும் கண்டிக்கவில்லையே. கார்த்திகேயன் கோகிலாவின் தைராய்ட் நோய் என்பது க்ரானிக் டிசீஸ் அவரை திருமணம் செய்வது பயனற்றது என்பதால் வேண்டுமென்றே அவரை பாலியல் வேட்கையை தீர்த்துக் கொண்டு கைவிட்டிருக்கிறார், இல்லையென்றால் தனது மனைவியை அவர் அழைத்து சென்று வாழ்ந்திருக்கலாமே என்று இராமமூர்த்தி சொன்னர்.

அவர் தவறு செய்துவிட்டு எங்கள் மேல் புகார் அளித்து இப்போது முன் ஜாமீன் பெறுவதற்கு அலையவிடுகிறார். யார் யார் மேல் புகார் அளித்திருக்கிறார் என்று கூட தெரியாமல் ஊரே பயப்படுகிறது என்றார்.

6. கதிர்வேல், கார்த்திகேயன் சகோதரர்:

என் தம்பியை அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தூண்டியதே இராமமூர்த்திதான் (அ.தி.மு.க – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்றார். அப்போது அவருக்கும் நாகராஜுக்கும் பிணக்கு இருந்தது, என் தம்பி எப்போதும் இராமமூர்த்தியுடனே இருப்பர். இது எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான், நீ லவ் பண்ணு நான் பாத்துக்குறேன் என்றவர், பின்னர் நாகராஜோடு ராசியான பின்னர் என் தம்பியை கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்தார். தனது மாமாவிற்காக எதையும் செய்யத் தாங்கமாட்டேன் என்று சொன்னார். இரண்டு முறை அவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார், மக்களுக்கென்று அவர் எதுவும் செய்யவில்லை, பின்னர் நாங்கள் தமிழ் குடி என்பவருக்கு எங்கள் 12-15 ஒட்டைப் போட்டோம் அவர் செயித்துவிட்டார். அப்போதும் தம்பி அவரோடு தான் இருந்தார், அவருக்கு தான் ஓட்டு போட்டார். இதற்கு மூலக் காரணமே இராமமூர்த்திதான். தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.

கோகிலா தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்று கேட்டதற்கு: இரவு 10 மணியவரை கோகிலா தம்பியோடு பேசிக்கொண்டிருந்தார். அதற்கு முந்தைய நாள் அதற்கு இரண்டு நாளுக்கு முன்பு கோகிலாவின் தாய் மாமா வீட்டில் கோகிலாவை பயங்கரமாக அடித்து கொண்டு போய் விட்டிருக்கின்றனர். அவள் மனம் மாறும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் அது நடக்கவில்லை. மீண்டும் தங்களது வீட்டிற்கே அழைத்து வருகின்றனர். சனிக்கிழமை மதியம் 12 மணி வரை அவரது அம்மா கோகிலாவை நன்கு அடித்திருக்கிறார். அதை தம்பி தனது தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அதனால் வீட்டை விட்டு ஓடிவிட முடிவெடுத்திருக்கிறார் கோகிலா. இதற்கிடையில் கோகிலாவின் தந்தை கார்த்திகேயனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகச் சொல்லி மறுநாள் கார்த்திகேயனை பெண் பார்க்க வருமாறு சொல்லியிருக்கிறார். மகிழ்ந்துபோன கோகிலா உடனே கார்த்திகேயனிடம் தெரிவித்திருக்கிறார். நண்பர்களிடமெல்லாம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதை அம்மாவிடமும் தெரிவித்துவிட்டு தூங்கிவிட்டார்.

இரவு 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. கார்த்திகேயனை பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள் அவரது நண்பர்கள். நாங்கள் உடனே வெளியேறிவிட்டோம். காலையில் அம்மாவும் அண்ணியும் அடுத்த நாள் கிளம்பிவிட்டனர். அப்பா மட்டும் இரண்டு நாள்வரை அங்கிருந்தார். மிரட்டல் வரவே அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

எப்போது கம்ப்ளையிண்ட் கொடுத்தீர்கள்? என்று கேட்டபோது.

11.11.2012 அன்று மதியம் 12 மணிக்கு புகார் அளிக்க சென்றோம். பின்னர்  கோகிலாவின் பெற்றோர்தான் நம்மை எதுவும் செய்யவில்லையே பின்னர் எதற்கு புகார் என்று நான் தெரிவித்தேன். சிறிது நேரம் கழித்து கார்த்திகேயன் நண்பர்கள் உனது பாதுகாப்பிற்காகவாவது நீ முதலில் புகார் கொடு. பிணத்தை அடக்கம் செய்துவிட்டு உன்னை நிச்சயம் தாக்குவார்கள் என்றார்கள். பின்னர் அவர்கள் சென்று தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார். புகாரளிக்க 11.30 – 12 மணியளவில் சென்றுள்ளார்கள். காவல்துறையினர் புகாரை உடனே பெறாமல் இழுத்தடித்துள்ளனர். ஒருவழியாக 12.30 மணியளவில் புகாரை ஏற்றுக்கொள்வதாக சொல்லி எழுதத்தொடங்கினர். 1.30 மணியளவில் காவல்துறை ஊருக்குள் சென்றது. 3.30 வரை என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. 3.30 மணிக்கு உடலை எடுத்து சென்றார்கள், எங்களிடம் கொடுக்க மறுத்தார்கள், மறித்தார்கள், எரித்துவிட்டார்கள் என்று சொல்கின்றனர்.

அந்த பெண் தூக்கு போட்டு கொண்டதாக நினைக்கிறீர்களா என்ன நினைக்கிறீர்கள் என்றபோது:

இல்லை அவரை தூங்கவைத்து தலகாணி வைத்து அழுத்தி கொன்று தூக்கிலிட்டிருக்கிறார்கள். தானாக தூக்கு போட்டுக்கொள்ளும் அளவுக்கு அவள் இல்லை. அவள் வீட்டை விட்டு ஓடிவிடுவாள் என்று தெரிந்துகொண்டதால், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, திட்டமிட்டு கொன்றிருக்கிறார்கள் என்றார்.

கோகிலா ஏன் வீட்டை விட்டு வர சம்மதிக்கவில்லை என்றோம்:

இல்லை பெற்றோர் சம்மதத்துடன் கௌரவமாக திருமணம் செய்து ஊரில் வாழவேண்டும், ஒடிப்போய்விட்டால் அப்பா தற்கொலை செய்து கொள்வார் வேண்டாம் என்று தடுத்துவந்தார். நெருக்கடிகள் அதிகமாக 2010 ஜனவரி மாதம் அவர்கள் இரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாது. இராமமூர்த்தி தம்பியை பேச அழைத்தபோதுதான் எங்களுக்கு விசயம் தெரியும். சாதி வேற்றுமை காரணமாக சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்பதால்தான் அவர்கள் மறைத்து வந்தனர்.

அவர்கள் காதலித்தது ஊருக்கே தெரியுமே அப்போது யாரும் தடுக்கவில்லையே என்றபோது:

இல்லை இல்லை, கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை தம்பியை கூப்பிட்டு அடித்திருக்கிறார். அதன் பிறகு தம்பி ஒதுங்கி இருந்தார். கோகிலாதான் அவரை துரத்தி துரத்தி காதலித்தார். இப்போது எங்கள் சித்தப்பாவையும் அடித்தவர் தனசேகர் தான்.

இதில் இராமமூர்த்தியின் பங்கு என்னவாக கருதுகிறீர்கள் என்று கேட்டபோது:

என் தம்பியை அழைத்துப் பேசும்போது எனது மாமா (நாகராஜுக்காக) நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றிருக்கிறார், தப்பா நினைக்காதே, மாமன் மச்சான் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். கொலையை செய்வதிலும், கொலையை மறைப்பதற்கும் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஒருகட்டத்தில் நாகராஜுக்கு பகை இருந்தது, பின்னர் சேர்ந்து கொண்டார். நேரம் போல் மாறிவிடுவார். அவருக்கு சாதிவெறி உள்ளது.

காதலித்தபோது தடுக்காதவர் இப்போது ஏன் இப்படிச் செய்கிறார் என்றதற்கு, இதை அரசியல் ரீதியாக கொண்டு சென்று அடுத்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடுகிறார். அவரை கணிப்பது யாராலும் இயலாத காரியம் என்றார். கூட இருக்கும் ரமேஷுக்குத்தான் தெரியும்.

நீங்கள் தமிழ்குடிக்கு (விடுத்லை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்) ஓட்டு போட்டதால் அவர் வஞ்சம் தீர்க்கிறார் என்று கருதுகிறீர்களா என்றதற்கு ஆம் என்றார்.

தமிழ்குடி தேர்தலில் செயித்தபின்னர் இராமமூர்த்தி அவரை அடித்திருக்கிறார். ஒரே சாதியானாலும் அவர்களுக்குள் பகை இருக்கிறது. அதற்கும் சேர்த்து இப்போது அரசியல் செய்கிறார் என்றார்.

உள்ளூரில் அருந்ததியருக்கும், பறையருக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றோம். ஆம்! அவர்கள் எங்களை எந்த நேரத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். பெரும் பாகுபாடு ஏதும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் பெறும் அன்பும் பாராட்டமாட்டார்கள். விலகியே இருப்பார்கள். நாங்களும் ஒதுங்கியே இருப்போம். பள்ளிநேலியனூரில் எங்கள் தெருவில் அந்த அளவுக்கு கிடையாது, ஆனால் கோகிலா இருக்கும் தெருவில் சாதி வெறி பயங்கரமாக இருக்கிறது என்றார்.

உள்ளூரில் நாகராஜை நிறைய பேருக்கு பிடிக்காது ஏனென்றால் அதிக வட்டிக்கு விட்டு காசு பார்ப்பார், ஆனால் அவருக்கு பயந்து கொண்டு யாரும் உண்மை சொல்ல மாட்டார்கள். மூன்று மாதம் கழித்து உண்மை மெல்ல வெளிவரும் என்றார்.

7. பெயர் சொல்ல விரும்பாத நபர்:

நாகராஜன் சாதி பார்த்ததால் கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தார். கோகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். 10.11.12 அன்று மாலை 7 மணியளவில் கோகிலாஅய்யோ அடிக்குறாங்களே, காப்பாத்துங்க என்று அலறிக்கொண்டே சாலையில் ஓடிவந்திருக்கிராள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஏன் பெண்ணை இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எங்கள் பெண்ணை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் உங்கள் வேலையைப் பாருங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சனை என்று கோகிலா அம்மா சொல்லவே எல்லோரும் கலைந்து சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் அதிகாலை கோகிலா இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். தூக்கு மாட்டிய நிலையில் அவள் உடலை யாருமே காணவில்லை. கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் முழுவதும் மறைத்தபடி உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. காலை 10 மணியளவில் ஊராட்சித் தலைவர் தமிழ்குடி என்னவென்று விசாரிக்கச் சென்றபோது கோகிலாவின் பெற்றோர் அவரை மோசமாக திட்டியுள்ளனர் என்றார்.

11.11.12 அன்று இரவு 12 மணியளவில் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர் என்றார்.

 

8.  கோகிலாவின் தோழி தொலைபேசி வழியாக:

நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம், அந்த நிறுவனம் இழுத்து முடப்பட்ட பின்னர் தொடர்பில்லாமல் இருந்தோம். எப்போதேனும் ஒருமுறை தான் பேசுவோம். கோகிலாவும் கார்த்திகேயனும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். திடீரென்று ஒருநாள் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களைக் காட்டினாள் கோகிலா. அவள் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு வீட்டில் விசயம் தெரிந்துவிட்டதால் கொடுமைபடுத்துகிறார்கள் என்று மற்றொரு தோழியிடம் கூறியிருக்கிறாள். ஒருவாரமாக வேலைக்கு வராததால், அந்த தோழியின் அப்பா கோகிலாவின் அப்பாவைத் தொடர்பு கொண்டு என்ன ஆச்சு ஏன் பொண்ணு வேலைக்கு வரவில்லை என்று கேட்டதற்கு, அவளுக்கு உடம்பு சரியில்லை என்றிருக்கிறார்கள். ஆனால் கோகிலாவை அடித்து துன்புறுத்தி அவளது தாய்மாமா வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கின்றனர். அதன் பிறகும் அவள் மனம் மாறவில்லை என்பதால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். 10.11.12 அன்று சனிக்கிழமை மதியம் அந்த தோழி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது இதற்கிடையில் அறைக்குள் வந்த கோகிலாவின் அம்மா அவளை கொடூரமாக அடித்திருக்கிறார், நான் ஏன் சாக வேண்டும் வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன் என்று கதறியிருக்கிறாள். பின்னர் அன்று மாலை தனது தந்தை திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும், கார்த்திகேயன் நாளை பெண் கேட்டு வரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறாள். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் அவள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவள் கோழை இல்லை. எங்களுக்கெல்லாம் தைரியம்  சொல்லக்கூடியவள். அவளை இழந்து நாங்கள் தவிக்கிறோம். இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். கார்த்திகேயன் அவளை இழந்து இப்போது கஷ்டப்படுகிறார் என்றார்.

9.  கண்டமங்கலம் காவல்நிலையம் – இன்ஸ்பெக்டர் சரவணன்:

11.11.2012 அன்று மதியம் 2.30 மணியளவில் கார்த்திகேயன் என்பவர் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்க வந்தார். தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வாழ்ந்ததாகவும் ஒரு கட்டத்தில் அது பெண் வீட்டில் தெரிந்து அதை கடுமையாக எதிர்த்ததாகவும், 10.11.12 அன்று மாலை தனது தந்தை திருமணம் செய்துவைக்க சம்மதித்து விட்டார், பெண் பார்க்க வா என்று கோகிலா சொன்னதாகவும், இரவு பத்து மணி வரை சந்தோசமாக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டதாகவும். 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக தகவல் வந்தது இந்த சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று புகார் அளித்தார். எஃப்.ஐ.ஆர் போடும்போதே நான் எஸ்.ஐ மற்றும் சில ஏட்டுகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். ஊர் கூடி அவர்களை உள்ளே விட மறுத்தது. நான் கிளம்பிச் செல்லும் முன் அவர்கள் பிணத்தை எரித்து விட்டனர் என்றார்.

போஸ்ட்மார்டத்திற்கு காவலரிடம் உடலைக் கொடுக்காதது, பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகியவை ‘offense’ ஆச்சே அதற்கு நீங்கள் ஏதும் வழக்கு போடவில்லையா என்றோம். சற்று தயங்கி, இல்லை உடலைக் கைப்பற்றும் அதிகாரம் இன்ஸ்பெக்டருக்குத் தான் உள்ளது, ஆனால் நான் செல்வதற்குள் எரித்து விட்டார்கள். அதனால்தான் தடையங்களை மறைத்ததற்காக 201 போட்டிருக்கிறோம் என்றார். அதற்கு முன் 174 மட்டும் தான் போட்டிருந்தோம் ஆர்.டி.ஓ விசாரனைக்கு சிபாரிசு செய்திருந்தோம்.

மேலும் கார்த்திகேயன் 4 மணிக்கு கோகிலாவோடு தொலைபேசியில் பேசியபோது, அவரது தாயார் கடுமையாக கோகிலாவைத் தாக்கியதும், நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், நான் ஏன் சாக வேண்டும், அவன் என்ன உங்களிடம் பணம் கேட்டு நிற்கிறானா. வாழ்ந்தால் அவனோடுதான் வாழ்வேன் என்று கூறியதும் பதிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் 174ஐ மாற்றி தற்கொலையை மறைத்த வழக்கில் 306ம் போட்டுள்ளோம் என்றார்.

யார் யார் மேல் வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் மற்றும் இராமமூர்த்தி, ரமேஷ் மீது என்றார்.

கைது செய்வீர்களா என்று கேட்டதற்கு. கோகிலாவின் பெற்றோர் முன் ஜாமீன் வழக்கு விசாரனையில் உள்ளது. மற்ற இருவரை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

வி.ஏ.ஓ வட்டாரத்தில் விசாரித்தவரை கோகிலா தற்கொலைதான் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள் என்றார்.

கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்ததா, வெளியிலா என்றோம், தெரியாது என்றார். 2.30 மணி அளவில் தனியாகத் தூங்கிக் கொடிருக்கும் பெண்ணின் அறையைத் திறந்து அவள் தூக்கில் தொங்கிவிட்டாளா என்று பார்ப்பதற்காக அவள் பெற்றோர் கதவைத் திறந்திருப்பார்களா என்று கேட்டோம்…தெரியவில்லை என்றார்.

 

 

10.  கார்த்திகேயன் (வயது 27), கோகிலாவின் கணவர்:

கடந்த 9 ஒன்பது வருடங்களாக காதிலித்து வந்தோம். ஒரே வகுப்பில் படித்ததால் சிறுவயதிலிருந்தே காதல். இருவர் வீட்டிலும் சொல்லாமல் இரகசியம் காத்தோம். வீட்டில் பெரியவள் ஓடிப்போய் திருமணம் செய்தால் தவறாகிவிடும், அப்பா உயிர் விட்டுவிடுவார், பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வோம் என்றதால் நானும் சரி என்றேன்.  நான் தான் தினமும் திரிபுவனத்திலிருந்து வேலைக்கு அழைத்து சென்று விடுவேன், கூட்டி வருவேன்.

ஒரு மாதத்திற்கு முன்னர் எங்கள் பதிவுத் திருமண விசயம் எவர் மூலமோ கோகிலாவின் அப்பா தெரிந்துகொண்டார். அந்த ஒரு மாதத்திலேயே 4 மாப்பிள்ளைகள் பெண் பார்க்க வந்துவிட்டனர். எவரையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கோகிலா சொல்லிவந்தார். அதற்கு காரணம் கேட்டபோது கோகிலா உண்மையை சொல்லிவிட்டார். அதற்கு அவரது தந்தையார், அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்று கேட்டிருக்கிறார். அவன் யாராக இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் அவனோடுதான் வாழ்வேன் என்று கோகிலா உறுதியாக சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு ஒரு மூன்று நாள் கோகிலாவை வீட்டில் வைத்தே மிகவும் சித்திரவதை செய்துள்ளனர். அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கொத்தாம்பாக்கத்தில் உள்ள தாய்மாமன் வீட்டில் கொண்டு விட்டனர். அங்கும் வைத்து அடித்து துன்புறுத்தி சொந்தத்தில் உள்ள பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.  அதற்கு அவர் மறுக்கவே, சரி அவனுக்கே திருமணம் செய்து தருகிறோம் என்று சொல்லி அழைத்துவருமாறு அந்த வீட்டாருக்கு போன் வரவும், 9.11.12 அன்று இரவு 8.30 மணியளவில் தாய்மாமா கோகிலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். அப்போதே எனக்கு தகவல் சொல்லிவிட்டார் கோகிலா.

இரவு முழுக்க அவளை என்ன செய்யப்போகிறாய் என்று அவரது அப்பா, அம்மா கேட்டதற்கு, அவனை திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லித்தானே அழைத்து வந்தீர்கள். இப்போது மீண்டும் பழைய பேச்சை பேசுகிறீர்களே என்றதற்கு, கோகிலாவின் தந்தை அவரை மீண்டும் அடித்திருக்கிறார். பின்னர் எனக்கு ஃபோன் செய்து கோகிலா இதைச் சொன்னார். இரவு 1 மணி வரை இருந்த தாய் மாமா பின்னர் சென்றுவிட்டார். 10.11.12 அன்று காலை 10 மணிக்கு இராமமூர்த்தி என்னிடம் பேசவேண்டும் என்று நேரில் வரச்சொன்னார்.

அந்தப் பெண் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளை வேறு யாராவது ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நீயே சொல்லு என்று இராமமூர்த்தி கூறினார். கோகிலாவின் அப்பா உன்னிடம் பேசுமாறு என்னைப் பணிந்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன், நான் அப்படிச் சொன்னால் அவள் உயிரையே விட்டுவிடுவாள், வாழ்ந்தாள் அவளோடுதான் வாழ்வேன் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றேன்.

நீங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்ட விசயத்தை அவரிடம் சொல்லவில்லையா என்றோம். இல்லை சொல்லவில்லை எவரிடத்தும் நான் அதைச் சொல்வதில்லை, ஆனால் அவருக்கு விசயம் தெரியாமல் இருந்திருக்காது என்றார்.

அதற்கு இராமமூர்த்தி, சரி இந்த விசயத்தை நான் கோகிலாவின் தந்தையிடம் கூறுகிறேன், ஆனால் அவர் என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்யத் தயங்கமாட்டேன், மாமன் மச்சான் என்று கூடப் பார்க்க மாட்டேன், அவருக்காக எதுவும் செய்யத் தயங்கமாட்டேன் என்றார். நான் கிளம்பி சேலைக்குச் சென்றுவிட்டேன் என்றார் கார்த்திகேயன்.

நீங்கள் காதலித்துவந்தபோது உங்களை யாரும் கண்டிக்கவில்லையா என்றோம்:

ஒருமுறை கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை எங்களைக் கோவிலில் பார்த்துவிட்டார். உன்னை எத்தனை தடவை அடித்தாலும் நீ அடங்கமாட்டேங்குறாய் உன்னை ஏதாவது செய்தால் தான் சரிவரும், என் அண்ணன் மகளை ஏன் காதலிக்கிறாய் என்று சொல்லி மிகவும் மோசமாகத் திட்டினார்.

முன்னர் எப்போது அடித்திருக்கிறார் என்றோம், அவர் நேரடியாக வந்து அடிக்கவில்லை திருபுவனையில் ஆட்களை வைத்து அடித்தார்கள். இந்த தொடர் மிரட்டலின் காரணமாகத்தான் பிரித்துவிடுவார்களோ என்று அஞ்சி பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.

தாய்மாமன் கிளம்பிய பின்னர் 10.11.12 அன்று என்ன நடந்தது என்றோம்.

அன்று காலை 11 மணியளவில் எனக்கு ஃபோன் வந்தது. என்னை கயிறு மாட்டி தூக்கில் தொங்கச் சொல்கிறார்கள் என்று கோகிலா சொன்னார். உடனே புறப்பட்டு அவர் வீடு வழியாக சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. போன் செய்து கேட்டேன், என்னை உள்ளே வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள், சாகச் சொல்லி அடிக்கிறார்கள், புடவையை மாட்டி விட்டு தூக்கு மாட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள் என்றார். அதுபோல் ஏது செய்துவிடாதே என்று நான் சொன்னேன். கோகிலா இல்லை நான் அப்படிச் செய்ய மாட்டேன், உன்னுடன் தான் வாழ்வேன், என்னை என்ன அடித்தாலும் நான் நாளை வீட்டை விட்டு வந்துவிடுகிறேன் நாம் எங்காவது சென்று விடுவோம் என்று உறுதியாகக் கூறினார். நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அப்பாஅம்மா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள். அவளைத் தூக்கு மாட்டி தொங்கவிட்டுவிட்டு வெளியில் தாப்பால் போட்டுவிட்டு வெளியில் வந்துவிடு…என்று சொல்லி அம்மாவை உள்ளே அனுப்பிவிட்டு அவர் அப்பா வெளியில் சென்று வருகிறேன் என்று அவர் அப்பா சொன்னார் நான் லைனில் இருந்ததால் எனக்கு அது கேட்டது ஆனால் அப்போது நான் பதிவு செய்யவில்லை. சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்ததால், உடனே வீட்டிற்கு சென்று பதிவுத் திருமணம் செய்த சான்றிதழ்களை சேகரித்துக் கொண்டு நண்பருடன் கிளம்ப்பிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் கோகிலாவிற்கு ஃபோன் செய்து விசயத்தை சொல்லிக் கொண்டிருந்தேன் அப்போது மீண்டும் உள்ளே வந்து தூக்கு மாட்டி சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். வெளியே தாழ் போட்டு சென்றுவிட்டார்கள்.  நான் எஸ்.பி அலுவலகம் சென்று புகார் கொடுக்கப்போகிறேன், இதற்கு மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது கோகிலாவிடம் போனில் கூறிவிட்டு சென்று கொண்டிருக்கையில், உடனே எனக்கு ஃபோனில் அழைப்பு வந்தது. அம்மா அப்பா மேல் புகாரெல்லாம் அளிக்க வேண்டாம், நாம் தான் நாளை கிளம்பிவிடுவோமே, புகாரெல்லாம் வேண்டாம் என்றார் கோகிலா. அவரது பேச்சைக் கேட்டு நான் வீடு திரும்பிவிட்டேன்.

மீண்டும் மாலை 4 மணி அளவில் கோகிலாவை மிகவும் அதிகமாக அடித்து டார்ச்சர் செய்கின்றனர். உன்னை அடித்துக் கொன்றாலும் கொல்வோமே தவிர, அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்றார். அப்போதுதான் நான் அந்த பேச்சைப் பதிவு செய்தேன்.

பின்னர் ஒரு மாலை 6.30 மணியளவில் கோகிலா அழைப்பு வந்தது, அப்பா சம்மதித்து விட்டார், நாளை பெண் பார்க்க வரச்சொன்னார் என்று கோகிலா சொன்னார். நான் (கோகிலா) நம்பமாட்டேன் என்றதற்கு, இல்லை அப்பா சொன்னர் உன்னிடம்தான் ஃபோன் இருக்கிறதே நீயே தொடர்பு கொண்டு அவனிடம் சொல் என்றார் என்று கோகிலா சொன்னார். உடனே எங்கள் நண்பர்களையெல்லாம் தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லி அழைப்பு விடுத்தேன். பிறகு 8.30 மணி முதல் 10 மணி வரை மிகவும் சந்தோசமாகப் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தோம். காலையில் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்துவிடு, காலை எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நான் தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்றதால், நானும் சரி என்று சொல்லி உறங்கச் சென்றேன்.

இரவு 12 மணியளவில் எனக்கு திடீரென்று உடல் பதறியது, ஏதோ விபரதீமாக தோன்றியதால் உடனே எழுந்து அவர் செல்லுக்கு ஃபோன் செய்தேன். சுவிச் ஆஃப் என்று வந்தது. வழக்கமாக செல் சார்ஜ் போடும்போது அதை அனைத்துவைத்துவிடுவார், அப்படிதான் இருக்கும் என்று நினைத்து நானும் தூங்கச் சென்று விட்டேன். 2.30 மணியளவில் நண்பர்கள் தகவல் சொல்ல ஃபோன் செய்திருக்கிறார்கள், நான் நல்ல உறக்கத்தில் இருந்திருக்கிறேன், கேட்கவில்லை. நான் எடுக்காததால், வீட்டிற்கு வந்து தகவல் சொல்லியிருக்கின்றனர். அந்தப் பெண் இறந்துவிட்டாள், அவன் ஏதாவது செய்து கொள்ளப் போகிறான் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். 2.45 / 3 மணியளவில் என்னை எழுப்பி, பக்கத்து ஊரில் இருக்கும் அண்னனுக்குப் பிரச்சனை நீ உடனே கிளம்பி அங்கே போ என்றார்கள். நான் சட்டைய மாட்டிக் கொண்டு வண்டிஎடுக்க சென்றேன், செல்லை மறந்துவிட்டோமே என்று மீண்டும் வீட்டிற்குள் சென்று செல்லை எடுத்தபோது நண்பர்களின் (பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள்) மிஸ்டு கால் நிறைய இருந்தது. தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தபோது கோகிலா இறந்துவிட்டாள் என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. அங்கு சென்று பார்ப்போமே என்று கோகிலா வீட்டுத் தெரு அருகில் சென்றேன். பெண்களின் அழுகைக் குரல் கேட்டது, அதற்கு மேல் என்னால் தாங்கமுடியவில்லை, அருகில் ரைல்வே கேட் இருந்தது, அதை நோக்கி ஓடினேன், அண்ணன் எல்லோரும் சேர்ந்து தடுத்து, கண்டமங்கலத்தில் கொண்டு சென்று விட்டனர்.

விசயம் அறிந்து நண்பர்கள் எல்லோரும் வந்தனர். 12.11.12 அன்று காலை 7.30 மணியளவில் நாங்கள் 20 பேர் சேர்ந்து எங்கள் வீட்டிற்கு சென்றோம். உடலை பார்க்க வேண்டும் என்றேன். கோகிலா வீட்டருகில் இருக்கும் நண்பர்களிடம் ஃபோன் செய்து விசாரித்தேன். நீ இங்கு வந்துவிடாதே உன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்று சொன்னார்கள். நண்பர்கள் மட்டும் சென்று பார்த்தனர். அங்கிருப்பவர்களிடம் கேட்டதற்கு இரவு 11 மணியளவில் என்னை அடிக்கிறார்கள், சாகடிக்கப்பார்க்கிறார்கள் என்று கதறிக் கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடிவந்தாள், நாங்கள் சென்று என்னவென்று கேட்டதற்கு, பெண்ணின் அம்மா, இது எங்கள் வீட்டு விசயம் நீங்கள் யாரும் தலையிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அவளது உடல் கண்களைத் தவிர முழுவதும் மூடியிருந்திருக்கிறது. இடது கண்களின் கீழ் காயம் இருந்தது, வலது கண்களின் மேல் காயம் இருந்தது என்றனர். நான் சென்று பார்க்க முடியவில்லை.

அதன் பின்னர் காலை 11 மணிக்கு புகார் அளிக்க கண்டமங்கலம் காவல் நிலையம் சென்றோம். அவர்கள் புகாரைப் பெறவே இல்லை. இண்ஸ்பெக்டர், எஸ்.ஐ இருவரும் இல்லை, 2 ஏட்டுகள் மட்டும் இருந்தனர். நாங்கள் இந்தப் புகாரைப் பெற முடியாது என்று சொல்லி தவிர்த்து வந்தனர். நாங்கள் 20 பேர் கெஞ்சிக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் அலைகழித்து 12.30 மணிக்கு புகாரைப் பெற்றனர். பின்னர் எஸ்.ஐ சேதுராமன் வந்தார், புகாரை வாங்கிப் பார்த்தவுடனே அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றார். ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் வந்தார், ஒரு அறைமணி நேரத்தில் அவரும் கிளம்பிச் சென்றார். அப்போது 1.30 மணி இருக்கும். புகார் வந்திருக்கிறது போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் உடலைத் தர மறுத்துள்ளனர். அதனால் அதிரடிப்படையை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார் இன்ஸ்பெக்டர்.  அதற்குள் பாடையைக் கூட முழுமையாகக் கட்டாமல் எஸ்.ஐ யைக்கூட அடித்து தள்ளிவிட்டு, பிணத்தை உடனடியாக எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். எங்களால் அவர்களைத் தடுக்கவே முடியவில்லை என்று இண்ஸ்பெக்டர் சொன்னதாக கார்த்திகேயன் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஊருக்குள் சென்றாரா என்று கேட்டபோது, வழக்குறைஞர் லூசி சொன்னது:

எஸ்.ஐ தள்ளி விட்டனர், ஸ்குவாட் போகும்போது பெண்களை விட்டு மறித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் எங்கிருந்தார் என்றபோது இளையரசன் என்பவர் குறுக்கிட்டு, இன்ஸ்பெக்டரும் அங்குதான் இருந்தார். சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசில் அவரும் ஒருவர்.  பின்னர் தான் ஸ்குவாட் சென்றது என்றார். தங்களையும் மீறி அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்று என்னிடம் சொன்னதே இன்ஸ்பெக்டர் தான் என்றார்.

உடனே கார்த்திகேயன் குறுக்கிட்டார். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் தமிழ்குடி சம்பவ இடத்தில் அப்போது இருந்திருக்கிறார். அவரிடம் இன்ஸ்பெக்டர் ஏம்பா நீ ஊர் பஞ்சாயத்து தலைவர் நீயாவது அவர்களிடம் சொல்லக் கூடாதா என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருக்கிறார்.

தமிழ்குடியை (ஜனார்தனன் என்கிற தமிழ் குடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், வழக்குறைஞர்) பேச அனுமதிக்காமல் இது எங்கள் குடும்ப விசயம் நீங்கள் தலையிட வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார் இளையரசன்.

இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்ன தகவலை வைத்துத்தான் எஃப்.ஐ.ஆர் காபியே நாங்கள் இம்ப்ளீட் செய்தோம். எங்களையும் மீறி பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள், எங்களைத் தடுக்கீறார்கள் என்றால் இது கொலைதான் சந்தேகமில்லை, ஆதலால் தடையங்களை மறைக்கிறார்கள் என்கிற அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று காவல் துறையினர் சிலர் கூறினார்.

பிணம் பாதி எரிந்து கொண்டிருக்கையிலேயே, அவர்கள் திரும்பிவிடுகின்றனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அது தற்கொலைதான் என்று இன்ஸ்பெக்டர் வலியுறுத்தத் தொடங்கினார். அதற்கு அழுத்தம் கொடுத்தார் என்று இளையரசன் தெரிவித்தார்.

11. வழக்குரைஞர் லூசி கூறியது:

உங்களை சந்திக்கவந்த ஊர் மக்களை நீங்கள் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறதே என்றோம்:

ஆம், பொதுவாக வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது எதிர் தரப்பினரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் மனித உரிமை இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். வழக்கமாக எஸ்.சி, எஸ்.டி வழக்குகள், பெண்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து எடுத்து போராடி வருகிறோம். வழக்குறைஞர்களுக்கெதிராக செயல்படக்கூடாது என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரீட்டா மேரி வழக்கு எடுத்தது உட்பட அவர்களுக்கு என் மேல் கோபம்.

பலம் உள்ள எதிர் தரப்பினர் பெரும்பாலும் மிரட்டவும், சமரசம் செய்யவும் பேச வருவார்கள் அதனால் நாங்கள் அவர்களை சந்திப்பதில்லை. வழக்கு மன்றத்தில் பார்ப்போம் என்று சொல்லி விடுவேன்.

கோதண்டபாணி என்ற வழக்குறைஞர், கோகிலாவின் பெரியப்பா அவர் என்னை பார்த்து இது எங்கள் குடும்ப வழக்கு விலகிக்கொள் என்று சொன்னதற்கு நான் மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து நான் நீதிமன்ற வளாகத்தில் வேலை பார்க்க செல்லும் போதெல்லாம் கோதண்டபாணி, பவாணி என்ற பெண் வழக்குரைஞரையும் இணைத்துக் கொண்டு மிகவும் ஆபாசமாகவும், ஆணாதிக்க மனநிலையோடும் அவதூறாக பேசியதாக சக வழக்குறஞர்கள் தெரிவித்தனர். என்னை பாரிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்றும் பேச்சு நடந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நான் மூத்த வழக்குரைஞரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கோதண்டபாணி, ஒரு கும்பலோடு வந்து அவதூறாக பேசியபடி என்னை அடிப்பது போல் பாய்ந்தார். போய்யா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டு என் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்படச் சென்றேன்..அப்போதும் துரத்திக் கொண்டே என்னை அடிக்க வந்தார். இளையரசன் அப்போது என்னோடு தான் இருந்தார், ஆனால் அவராலும் ஏதும் செய்ய முடியவில்லை. வழக்குரைஞர் என்றால் கோர்ட்டில் பேச வேண்டும், ரோட்டில் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு சென்றேன். அடுத்த நாள் எங்கள் இயக்கத் தலைவர் ஜோஸிடம் கூறினேன். முறைப்படி புகார் அளிக்கச் சொன்னார்கள்.

கார்த்திகேயனுக்கு ஏன் பாதுகாப்பளிக்கிறாய், ஏன் இதில் தலையிடுகிறாய் விலகிவிடு என்பதே அவர்களது வாதம்…இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் கோதண்டபாணியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக என் மேல் எஸ்.சி. எஸ்.டி வழக்கு தொடர்ந்தார்கள்.  ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னுடைய மற்ற தோழிகளையும் ஆபாசமாக பவாணி என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த வழக்குறைஞர் திட்டினார். எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை வைத்து ஆண்களோடு தொடர்புபடுத்தி, கொச்சையான பாலியல் சொற்களைச் சொல்லி ஆபாசமாக ஒன்றரை மணி நேரம் திட்டினார். பாருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொன்ன போது, நான் நீதி மன்றத்திற்கெதிராக ஏதும் செயல்படவில்லை என்று சொல்லிச் சென்று விட்டேன்.

கோகிலா எப்படி மரணமடைந்தார் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டபோது, ஸ்ரீனிவாசன் என்ற அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஒரு நியூஸ் தரகர் எங்கள் ஆலோசனைக் கூட்டங்களுக்கு வருவார். அவரிடமே கோகிலாவின் தந்தை தான் தான் பெண்ணை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதற்காக என்னை ஏன் தேவையில்லாமல் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்டிருக்கிறார். கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லி ஏமாற்றி திட்டமிட்டு அவரை வரவழைத்து அவளை கொலை செய்திருக்கிறார்கள். கார்த்திகேயன் நண்பர்கள் உடலைப் பார்க்கச் சென்றபோது கோகிலாவின் கண்களின் கீழ், புருவத்தின் மேல் காயங்கள் பார்த்திருக்கிறார்கள். உடலை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறார்கள் என்றார்.

அப்போது கார்த்திகேயன், கோகிலாவின் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது என்றார்.

தொடர்ந்த லூசி, ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் 11 மணியளவில் கோகிலா அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்ததாகவும், 12 மணியளவில் முன்னாள் தலைவர் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே சென்றதைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர்.

அப்போது வழக்குறைஞர் ஜோஸ் கூறியது:

தவறேதும் இல்லையென்றால் அவர்கள் ஏன் தடயங்களை மறைக்கிறார்கள். காவல்துறையினரே இந்த கேள்வி எழுப்புகிறார்கள்.

தொடர்ந்த லூசி:

11 மணிக்கு புகார் அளிக்க கார்த்திகேயன் தரப்பு சென்றுவிட்டது, 12.30 மணிக்கு புகாரை வாங்குகிறார்கள். அதன் பிறகு காவல்துறை சம்பவ இடத்தில்தான் இருந்தது. 3.30 மணிக்கு பிணம் எரிக்கப்பட்டிருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்பதே சந்தேகத்திற்குரியது. 

ஊரில் விசாரித்தபோது, வழக்குறைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலைத் தர மறுத்துள்ளனர். வேறு இருவர் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். கோகிலாவின் தந்தை அதை ஊற்றி எரித்திருக்கிறார். அவர் கையில், மாமாவுக்கும் முகத்தில் காயம் இருக்கு.

பெண்களை வைத்து மறித்திருக்கிறார்கள், ஆனால் காவல்துறை நினைத்திருந்தால், எரியும் நிலையிலேயேகூட பிணத்தை மீட்டிருக்கலாம். அவர்கள் அதைச் செய்யவில்லை. அதிரடிப்படை 3 குழுக்களாக இறக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலரை கண்டமங்கலம் எல்லையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர், சிலர் மட்டும் தான் ஊருக்குள் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.  ஏன்? அ.தி.மு.க கவுன்சிலர் கண்ணா என்பவர் அந்த காவல்நிலையத்திற்கெதிராகத்தான் வசிக்கிறார். அவரை மீறி இங்கு எதுவும் நடக்காது. அதிரடிப்படையும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்றார்.

11.11.12 அன்று மாலை 4 மணியளவில் இன்ஸ்பெக்டர் சரவணன் என்னிடம் தொலைபேசியில் பேசினார், என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா, இந்த வழக்கெல்லாம் எப்படி நிற்கும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், உடலைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள், மறித்திருக்கிறார்கள் அதற்கு முதலில் எஃப்.ஐ.ஆர் போடுங்கள், ஃபாரன்சிக்கிற்கு உடனடியாகத் தகவல் தெரிவியுங்கள் என்று சொன்னேன் என்று லூசி தெரிவித்தார்.


 

எமது பார்வைகள், கேள்விகள், பரிந்துரைகள்:

1.  கோகிலா தைராய்ட் பிரச்சனையால்தான் இறந்தார் என்று அவரின் தந்தை நாகராஜன் 5.12.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். கோகிலாவின் மாமா முருகனோ, அவர் மன உளைச்சல் தாங்காமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்கிறார். இக்குடும்பத்திற்கு உறவினரான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இராமமூர்த்தி அது இயற்கை மரணம் என்கிறார். இப்படி குடும்ப உறவுகளே வெவ்வேறு தகவல்களைத் தருவது கவனத்திற்குறியது. ஆகவே கோகிலாவின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது.

2.  ஒருவேளை கோகிலா தற்கொலை செய்து கொண்டார் என்றிருந்தாலும், அதை காவல்துறையினருக்குச் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள். தடையங்களை ஏன் மறைத்தார்கள். உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு தர மறுத்தது, மேலும் பெண்களை ஒன்று திரட்டி காவல்துறையினரை மறித்து, வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் ஊற்றி எரித்தது ஆகிய செயல்கள் கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது.

3.  முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்துவைத்திருப்போம், காலையிலேயே கார்த்திகேயன் வந்து உடலைக் கேட்டிருந்தால்  தந்திருப்போம் என்று சொல்லும் அவர் மாமன் முருகனோ அல்லது கோகிலாவின் குடும்பத்தாரோ, கார்த்திகேயன், அதாவது கோகிலாவின் கணவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவோ, கணவன் என்ற முறையில் சடங்குகள் செய்யவோ ஏன் அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனையோ, அவரது பெற்றோரையோ எவரையும் அழைக்காமல், உடலைக் காட்டாமல் அவசர அவசரமாக ஏன் எரித்தார்கள்?

உடலை எரித்த பின்னர் ஒரு சம்பிரதாயமாகவேனும் சாம்பல் கணவனிடம் ஒப்படைக்கப்படவில்லை.

4.  சடங்கு, சம்பிரதாயம் என்று சொல்லி உடலைக் கொடுக்க மறுத்த அந்த தெரு அண்டைவீட்டார் ஏன் கணவன் வந்து முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

5.  இயற்கை மரணமோ, தற்கொலையோ…. ஊர்தலைவர் இராமமூர்த்தி கார்த்திகேயன் தன்னோடு மிகவும் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொள்கிறார், அந்த உறவின் அடிப்படையில் அவராவது கோகிலாவின் உடலை முறைப்படி கார்த்திகேயன் காண வழிசெய்திருக்க வேண்டும்.  செய்யவில்லை. அதுமட்டுமல்லாது, கோகிலா இறந்ததற்கு முந்தைய நாள் அவர் கார்த்திகேயனை கூப்பிட்டு மனம் மாறிவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார், நாகராஜனுக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டேன் என்று அவர் சொன்னதும், மரணம் நிகழ்ந்திருக்கும் நள்ளிரவு 12 மணியளவில் அவர் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றதைப் பார்த்ததாக வரும் தகவல்களும் பெறும் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க பிரமுகராக இருப்பவருக்கு சட்டம் நன்றாக தெரிந்திருக்கும், அத்தோடு அவருக்கு காவல்துறையினரிடம் செல்வாக்கு இருந்திருக்கும் அப்படியிருக்க அவர் நினைத்திருந்தால் சடங்கு செய்ய, உடலை ஒரு முறை பார்க்க கார்த்திகேயனுக்கு உதவியிருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை என்பது அவர் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் கோகிலா தன்னை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று அலறிக்கொண்டு இரவு 11 மணி அளிவில் வீட்டிற்கு வெளியே ஓடிவந்ததாக சொல்லப்படுகிறது. ஊர்மக்கள் என்ன பிரச்சனை என்று கேட்க, கோகிலா தாயார் இது எங்கள் குடும்ப பிரச்சனை என்று சொன்னதும் ஊர்மக்கள் ஒதுங்கிவிட்டிருக்கின்றனர்.  பின்னர் 12 மணி அளவில் இராமமூர்த்தி அந்த வீட்டை விட்டு வெளியில் சென்றதை பலரும் பார்த்துள்ளனர். இரவு 2.30 மணிக்கு கோகிலாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்யாததால் கோகிலா எத்தனை மணிக்கு இறந்தார் என்பதை உறுதியாக அறியமுடியவில்லை. இரவு 11 முதல் 12 மணி வரை ஏதோ நடந்திருக்கிறது என்பதும் இராமமூர்த்திக்கும் அதில் தொடர்பிருக்கலாம் என்பதும் கார்த்திகேயன் குடும்பத்தார் மற்றும் ஊர்மக்கள் சிலரின் சந்தேகமாக இருக்கிறது. உடலைத் தரமறுத்தது இதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

மரணத்தில் சந்தேகம் என்று வந்தபின்னர் – கோகிலாவின் உறவினர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஆளும் கட்சி பிரமுகர் என்கிற செல்வாக்கில் இராமமூர்த்தி உடலை மீட்டு போஸ்ட்மார்டத்திற்கு கொடுக்க வழிவகை செய்திருக்கமுடியும்.

இப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் குடி மீது அவர் கடும் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் கார்த்திகேயன் குடும்பத்தார் அவர்களுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைத்துவிட்டார்கள் என்பதில் அவர்கள் மீதும் கோபத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  அவர் ஒரு முறை தமிழ்குடியை அடித்ததாகவும் சொல்கிறார்கள். தொடக்கத்தில் கார்த்திகேயனை காதலிக்க தூண்டியவரே இராமமூர்த்திதான் பின்னர் அரசியல் ஆதாயங்களுக்காக நாகராஜனுக்கு ஆதரவாக மாறிவிட்டார். நாகராஜனுக்காக எதுவும் செய்வேன் என்று இராமமூர்த்தி சொல்லியிருப்பது கூட அடுத்த தேர்தலில் செயித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் செய்த கொலையை மறைக்கப்பார்க்கிறார், 12 மணியளவில் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றார் என்பதை வைத்துப் பார்க்கும்போது கொலையிலும் அவருக்கு பங்கிருக்கிறது என்று கார்த்திகேயன் அண்னன் கதிர்வேலின் கருத்து கவனிக்கத்தக்கது.

6.  புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிரியர் ரமேஷும் இராமமூர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர், இரமமூர்த்திக்காக மிகவும் பரிந்து கொண்டு பேசினார், மேலும் வழக்குறைஞர் லூசி மீது கடும் கோபமான  சொற்களைப் பிரயோகித்தார். அவர் தலித்தல்லாதவர், முதலியார் இந்த பிரச்சனையில் அவருக்கு என்ன ஆர்வம் என்று சொன்னபோது அவருடைய சாதி வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது. ஒரு பெண்ணின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்ட விஷயத்தில், மனித உரிமையில் அக்கறையுள்ள யாரும் தலையிட உரிமையுள்ளது. இதில் தலித் உயிர், முதலியார் உயிர் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. லூசியை சாதி ரீதியாக தனிமப்படுத்திவிட்டால் வழக்கு இல்லாமல் செய்யல்லாம் என்றே ரமேஷ் கருதுகிறார்.

7.  கோகிலாவின் வீட்டருகே உள்ளவர்களின் பேச்சுக்களிலும் சாதிப் பற்றை காண முடிந்தது.

8. கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை உடனே வாங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்கள். ஆனால் எங்களிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் 2.30 மணிக்குத்தான் அவர்கள் வந்தார்கள், உடனே புகாரைப் பெற்றுக் கொண்டு தன் சகாக்களை அனுப்பியதாகவும், தான் செல்லும் முன்னரே பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்றும் சொன்னார்.

மாறாக 5.12.12 தமிழக அரசியல் நாளிதழில் “கோகிலாவின் உடலை எடுக்கச் சென்றபோது எடுக்க விடாமல் கோகிலாவின் குடும்பத்தினர் என்னைத் தடுத்தனர். நாங்கள் செய்த விசாரணையில் அந்தப்பெண் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்கொலையை மறைத்தது தவறு. அதற்காக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியிருக்கிறார்.

 

இந்த இரண்டு தகவல்களிலும் முரண் இருக்கிறது. உடலைக் காணாதபோது, ஊரே கூடி உடலை தர மறுத்து, மறித்து போஸ்ட்மார்ட்டமும் நடக்காதபோது ஒரு காவல்துறை ஆய்வாளராக அது கொலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொள்வதே யதார்த்தம் ஆனால் இவர் தற்கொலைதான் என்று அழுத்தமாகச் சொல்வதின் பின்னணி என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும்.

உடல் எரிக்கப்பட்டிருந்தாலும் ஃபாரென்சிக் துறைக்கு தகவல் சொல்லுங்கள் என்று வழக்குறைஞர் லூசியா சொல்லியும் இதுவரை ஃபாரென்சிக் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, ஆய்வு செய்யப்படவுமில்லை.

காவல்துறையினர் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக சம்பந்தபட்ட ஊர் மக்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவுமில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமமூர்த்தியையும், ரமேஷையும் நாங்கள் எளிதாக பார்த்துபேச முடிந்தபோது அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அகப்படவில்லை அதனால் கைது செய்யமுடியவில்லை என்று இன்ஸ்பெக்டர் சரவணன் தெரித்தது வேடிக்கையாக இருந்தது.

கோகிலா தூக்கில் தொங்கிய அறையில் அவள் எப்போதும் தனியாகவே தூங்குவாள் என்று சரவணன் தெரிவித்தபோது, அப்படியென்றால் அதிகாலை இரவு 2.30 மணிக்கு என்ன காரணத்திற்காக கோகிலாவின் பெற்றோர் அந்த கதவைத் திறந்து பார்த்திருப்பார்கள் என்று கேட்டதற்கு அவரிடத்தில் பதில் இல்லை. மேலும் உள் தாழ்பால் போடப்பட்டிருந்ததா, வெளிதாழ்ப்பால் போடப்பட்டிருந்ததா என்ற கேள்விக்கும் அவரிடத்தில் பதில் இல்லை. ஆனால் விசாரனையில் அவள் தற்கொலைதான் செய்து கொண்டதாகத் தெரிகிறது என்று எங்களிடமும் உறுதியாகக் கூறினார். அப்படியென்றால் இதுபோன்ற அடிப்படை கேள்விகளைக் கூட கேட்காமல் அவர் என்ன விசாரனை செய்திருப்பார் என்பது கேள்வியாக இருக்கிறது. 

9. கோகிலாவின் பெற்றோர் அடித்து துன்புறுத்தியிருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் தன்னை சாகச்சொல்வதை எதிர்க்கும் கோகிலாவின் பேச்சும் தொலைபேசியில் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தாய் மாமன் வீட்டிலிருந்த கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்துவைப்பதாகச் சொல்லி வரவழைத்திருக்கிறனர். அதன் பிறகும் கோகிலாவை அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். தற்கொலைக்கும் தூண்டியுள்ளனர். இந்த முரண்பட்ட செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போதும், சக்கிலியப் பையனுக்கு கட்டிக் கொடுப்பதா என்ற அவர்களின் பேச்சைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு சாதி வெறி இருந்திருப்பதைக் காணமுடிந்தது.

இந்த சாதி வெறிக் கொலையில் சாதியத்தின் பங்கும், வர்க்க அரசியலின் ஆதிக்கமும்

பரந்த அளவில் சாதி மறுப்பை பேசுபவர்கள் கூட ஆண் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்தால் பெண் கொடுப்பதை விரும்புவதில்லை. பெண்ணை அடக்கி வைப்பதுன் மூலமே பல்லாண்டு காலமாக சாதிகள் கட்டிக் காக்கப்பட்டுள்ளன. அந்த உளவியல் படி பார்த்தால் மேல் சாதியில் (அப்படி வகுக்கப்பட்ட) உள்ள ஆணை காதலித்தால் ஏற்றுக் கொள்ளும் மனம் தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஆணை ஏற்றுக் கொள்வதை அவமானமாகவே கருதுகிறது. சாதிய அடுக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் இருசமூகத்திற்குள்ளும் (பறையர்-அருந்ததியர்) இத்தகைய ஒரு சாதியப் பற்றை வெளிப்படுத்துகிறது. அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என்ற ஒரே காரணம் ஒரு பெண்ணின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

பள்ளிநேலியனல்லூரில் கார்த்திகேயன் வசிக்கும் பகுதியிலும் ஊரின் மற்ற பகுதிகளிலும் பொதுவாக சாதிய பாகுபாடு வெளிப்படையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றபோதிலும் கோகிலாவின் தாய், தந்தை சாதி பார்த்த்தால் தான் கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை, அதைத் தொடர்ந்து அவரை சித்திரவதை செய்திருக்கிறார். இன்று அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இத்தனை நாள் பதுங்கியிருந்த சாதியப் பூனை இப்போது வெளிவந்திருப்பதாகவேத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த தெருவேச் சேர்ந்து (பறையர் பெரும்பான்மையினர்) உடலை எரித்திருக்கிறது. விசாரணைக்கு சென்றபோதும் ஒன்று கூடி நாகராஜன் குடும்பத்தாருக்கு சாதகமாகவே பேசுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரும் வெளிப்படையாக பேசமுடியாத அளவுக்கு வர்க்க செல்வாக்கும், அதே சாதியைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் ஆதிக்கத்தையும் காண முடிகிறது. பறையர் பெரும்பான்மையினர் தங்களின் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை காக்கும் முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

தருமபுரி தலித் கிராமங்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பெரும் ஆர்பாட்டங்களைச் செய்த அமைப்புகள், கட்சிகள் அருந்ததியினர் இன மக்கள் ஒடுக்கப்படும்போதும் அப்படிப்பட்ட ஆர்பாட்டங்களைச் செய்கிறார்களா என்பது ஒரு கேள்வியாக வைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரி மாணவி காயத்திரி மர்மமான  முறையில் இறந்து போனார். அப்போதும் அருந்ததியர் அமைப்புகளும், பெரியார் திராவிடக் கழகமும், எஸ்.எஃப்.ஐ போன்ற மாணவ அமைப்புகளும் சிறு சிறு போராட்டங்களை நடத்தின ஆனால் தர்மபுரி தலித் கிராமங்கள் தீக்கிரையான பிரச்சனையில் கூட்டியக்கங்கள் வரை அமைத்து நீதி கேட்டுப் போராடும் அமைப்புகள் ஏன் காய்த்ரி பிரச்சனையில் முழுவீச்சான ஒரு போராட்டத்தை முன் எடுக்கவில்லை என்ற கேள்வி அருந்ததியர் மத்தியில் எழுகிறது.

பரிந்துரைகள்:

1.  காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2.  புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சனைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து பெற்றோர் பெண்கள் மிது நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை, ஆகவே பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும். 

 

4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த சம்பந்தப்பட்ட நபர்களை, ஊர் மக்களை ஐ.பி.சி  பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.  (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )

5.  கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6.  கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணமாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8.  கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குறைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அணைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

604066_559752967374487_1375838431_n

summary of the report in English

11th November, 2012 – in Pallineliyanoor, a village near Villupuram, Tamilnadu, a girl named Kokila (age 23) was reported to have committed suicide due to ill health.  MASES initiated a fact finding on this case as it was suspicious of the caste based Honor Killing.

Kokila belongs to Pariyar caste and she was in love with Karthikeyan (age 25) a boy who belonged to Arunthathiyar Caste. Though both castes are termed as Dalit caste, in the Caste pyramid Pariyar is in higher order than Arunthathiyar (these are the labors who do ‘cleaning’ jobs in toilets, sweeping roads etc).

They were in love for  9 years. When Kokila’s family came to know about their love they started looking for an alliance  to get her married to a person belonging to their own Caste and of their equal ‘status’. The family harassed her saying we will never get you married to a ‘chakliyan’.  When the pair was afraid of being separated, they chose to secretly get married. They got their marriage registered on 1.10.2010.

Later on 10.11.12 around 4 p.m. Kokila had called Karthikeyan saying that her father accepted their love and he has consented to get them married ‘officially’. Karthikeyan was asked to come home the next day for formal talk. But around 2.30 a.m in the early morning (11.11.12) Karthikeyan receives a call which conveyed that Kokila commited suicide unable to bear the trauma of Thyroid which had been killing her for long time.

When Karthikeyan rushed to see  Kokila’s body, friends stopped him from saying, he might be trashed. Kokila’s family refused to give her body to do postmortem and created a scene by deploying People of their caste to quarrel with the police. Hurriedly they burnt her body as well by pouring sugar and petrol on the corpse.

We as a group of 5 People went to find facts regarding this case and interviewed all concerned. We even interviewed the Inspector. We also met Karthikeyan who was under the custody of his Lawyer. The lady lawyer also faced lots of threats and verbal abuses for helping a low caste boy.

Through our fact finding report, it was very evident that it was an ‘Honor’ based killing. There were testimonials which stated physical abuse just before her death and that she ran out of the house seeking help. There were marks of physical abuse and many such violence on her body. The police had delayed accepting to file FIR and it is needless to say that they had some ties with Kokila’s father and the panchayat leader. There were many contradicting statements made by Police, Villagers and Kokila’s Family. Karthikeyan’s friends reported that the panchayat leader was seen in Kokila’s house that midnight when Kokila ran out of house crying for help.

We made a detail draft of the finding and released it to press.

மாசெஸ் அமைப்பின் துவக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சாரம்

10.3.2012 – மாசெஸ் அமைப்பின் துவக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்ச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண் விடுதலை, பெண்ணியம் தொடர்பான பேச்சு, 20 நிமிட காட்சிப்படம், ஓவிய பட்டறை ஆகியவை இடம்பெற்றன. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைப்பாடு கொண்டவர்கள் கலந்து கொண்டு ஒரே மேடையில் பேசினார்கள். கருத்தியல் தளம், மனித உரிமை செயல்பாடு, அரசியல் களம், கல்வியியல் தளம் ஆகியவற்றில் இயங்குபவர்கள் கருத்துரையாற்றினர், இதன் மூலம் பெண் விடுதலை சிந்தனையின் பல்வகை பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள்:

தோழர். ப. சிவகாமி (நிறுவனர், சமூக சமத்துவப் படை கட்சி), பேரா. அ. மார்க்ஸ், பேரா. பத்மினி, பேரா. மோனிக, கோ. சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி)

நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்தவர்கள்:

தோழர்கள் விஸ்வம், ராஜன், வசந்த், ஏழுமலை, ஆனந்த், கிரிஸ்டி, ரோஹினி மணி, விதார்த்தி, மோனிகா, திலிப், சூரஜ், யுகன். கிரன் துளசி என்பவரின் ’பாலுறுப்பு அடையாளம் அழித்த’ புகைப்படம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

மாலை 3 மணி அளவில் ஓவியர்கள் இக்சா மையத்திற்கு வந்து ஓவியங்களை வரையத் துவங்கினர். ஆணாதிக்க கருதூன்றியப் பார்வையிலிருந்து  (male gaze) பெண் உடலை மீட்டு ஒரு புதிய பொருள் கொடுக்கூடிய வகையில் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு ஓவியமும் பெண்ணின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. 5.45 மணி அளவில் துவக்க நிகழ்வு தொடங்கியது. கொற்றவை வரவேற்புரையாற்றினார். மாசெஸ் அமைப்பின் செயல் திட்ட முன் வரைவை வெளிட்டு அமைப்பு துவக்கம் பற்றி அதிகார பூர்வ அறிவிப்பை வைக்குமாறு தோழர் ப. சிவகாமி அவர்களை கேட்டுக்கொண்டார் கொற்றவை. சிவகாமி அவர்கள் வெளியிட, பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் அதை பெற்றுக் கொண்டார். பின்பு பேரா. பத்மினி, பேரா. மோனிகா, கோ. சுகுமாரன் ஆகியோரிடம் செயல் திட்ட பிரதி கொடுக்கப்பட்டது.

கருத்துரை நிகழ்த்துவதற்கு முன் கொற்றவை தயார் செய்திருந்த 20 நிமிட காட்சிப்படம் ஒன்று திரையிடப்பட்டது.  இலக்கியம் தொடங்கி, இன்றைய விளம்பரங்கள், திரைப்பட பாடல்கள் ஆகியவற்றில் நிகழும் பெண் கதாபாத்திர சித்திரங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டிருந்தன. பெண் விடுதலை, மானுட விடுதலை குறித்து முன்னோடிகள் சொல்லியிருப்பது எனும் பகுதியில் பெரியார், அம்பேதகர் ஆகியோரின் பேச்சுக்கள், இவற்றோடு பெண் எழுத்தாளர்கள், உளவியலாளர்கள், புரட்சியாளர்கள் சிலரது குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த காட்சிப்படத்தின் ஊடாக ஒரு பெண்ணியவாதியாக எனக்குள் (கொற்றவை) நெடுநாள் நெருடிக்கொண்டிருந்த ஒரு கேள்வியும், அதன் இறுதில் கோரிக்கைகள் சிலவும் வைக்கப்பட்டன. உழைக்கும் உடல்களை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் வைக்கபட்டிருக்கும் உழைப்பாளர் சிலையில் ஏன் ஒரு பெண் உழைப்பாளி கூட இடம்பெறவில்லை என்பதே அக்கேள்வி. பெண் உழைப்பாளர்களுக்கான சிலை வைக்கப்பட வேண்டும், அது பெண் மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் இனைந்து இருக்கும் சிலையாக இருக்க வேண்டும், மூன்றாம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்தும் சிலையும் வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசப்படும் அளவுக்கு லுக்சம்பர்கிசம் ஏன் பேசப்படுவதில்லை – மார்ச் 5, 2012 சே குவேரா அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய ஒரு பெண் ஆளுமை பிறந்து 141 வருடங்கள் முடிவடைகிறது… அவர்தான் ரோசா லுக்சம்பர்க்.

ஆணாதிக்கம் இயற்கை மீது போர் தொடுப்பது போல் இயற்கையின் பிரதியான பெண்ணிடமும் போர் புரிந்தவாரிருக்கிறது, ஆங்காங்கே சில பெண்கள் சீறிக்கொண்டிருப்பது போய், ஒட்டுமொத்த பெண்ணினமும் பொங்கி எழும் காலம் வெகுதொலைவில் இல்லை எனும் முழக்கத்தோடு அந்த காட்சிப் படம் முடிந்தது.

அதைத் தொடர்ந்து:

முதலில் பேசிய பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் 90களில் நிறப்பிரிகை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் பெண்ணியம், மாற்றுச் சிந்தனைகள், அரசியல் குறித்தெல்லாம் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. வெவ்வேறு அரசியல், கருத்து நிலைப்பாடு கொண்டிருந்தவர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து நிறைய உரையாடல்கள் நிகழும். புதிய சிந்தனைகளை அறிவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. ஆனால் தற்போது அச்சூழல் குறைந்து வருகிறது என்று சொன்னார். மேலும் பெண் உடல், காமம் குறித்து  பெண்கள் எழுதும் போது எத்தகைய எதிர்ப்புகளைப் பெண்கள் சந்திக்க நேர்கிறது என்று சொல்லி, முத்துப்பழனி அவர்களின் நூல் மீது கொண்டுவரப்பட்ட தடை குறித்தும் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ப. சிவகாமி அவர்கள் பேசினார். மூத்த அரசியல் செயல்பாட்டாளராக அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசினார். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதும், அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபறுவதும் அதிகரித்திருக்கிறது என்றார்.  சுமார் ஒன்றரை லட்சம் பெண்களைத் திரட்டி மாநாடு நடத்தியதை குறிப்பிட்டார். படித்த மேல்தட்டுப் பெண்கள் பெண்ணியம், பெண் விடுதலை சிந்தனை என்பதை ‘பாலியல்’ என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கி விடாமல், பெண்களை அரசியல் படுத்துவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களின் விடுதலைக்காக போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்றார். பெண் உடல் மீதான கருத்தாக்கங்களை மாற்றியமைப்பது என்பது அவசியம், அதற்கு ஆண்களிடத்தில் மாற்றம் கொண்டுவருவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களின் மன நிலையைலும் மாற்றம் வரவேண்டும். பாலியல் சுரண்டல் குறித்து அதிக கோஷங்கள் எழுப்ப்பப்பட்டு வருகிறது. அதுவும் தேவைதான், அதற்கப்பால் பெண்களின் தேவை, உரிமைகளை சட்டபூர்வமாக பெருவதற்கு பெண்கள், பெண்ணியவாதிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உதாரணமாக பொது இடங்களில் ஆண்கள் தனியாக உலவுகின்றனர், ஆனால் ஒரு பெண் அப்படி தனியாக நிற்பதோ, சாலையை, சுற்ற வட்டாரத்தை வெறுமனே ரசிப்பதற்கோ சாத்தியமில்லை. அதேபோல் பெண்களின் பெயரில் பாட்டா கோருதல், நிலம் கோருதல், பெண்களுக்கென்று விளையாட்டுத் திடல் வேண்டும் என்று சட்ட ரீதியான கோரிக்கைகளை வைக்கலாம். உடல் ரீதியாக பெண்களைப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால். பெண்கள் இன்று அரசியல் வந்துவிட்டல் 33% என்ன 50% சதவிகிதம் கூட அவர்களால் கைப்பற்ற முடியும் என்றார்.

அதைத் தொடர்ந்து கொற்றவை பெண்கள் அரசியல் பங்கு பெருவதில் குடும்பம் எனும் அமைப்பு ஒத்துழைப்பதில்லை, குறிப்பாக உயிர் குறித்த அச்சம் ஆண்களையே அரசியல்களத்தில் தயக்கம் கொள்ளச் செய்கிறது, பெண்களுக்கு அதைவிட மிகுந்த அச்சறுத்தல்கள் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி பெண்கள் செயல்படவேண்டியது அவசியமாகிறது என்றதோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பிரச்சனைகளை எடுத்துப் போராடும் அமைப்புகளோடு மாசெஸ் அமைப்பு சேர்ந்து பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக முனைவர் பத்மினி பேசினார். பெண்ணியக் கல்வியின் அவசியம் குறித்தும், அது பள்ளி பாடதிட்டத்திலேயே சேர்க்கப்படவேண்டும் என்பது குறித்தும் பேசுமாறு அவரைக் கேட்டிருந்தேன்.  இலக்கியம் தொடங்கி பெண் உடல் மீது என்ன வகையான பிம்பங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, பெண் ஒடுக்குமுறையில் உற்பத்தி முறை, பொருளாதார முறை ஆகியவற்றின் தொடர்பு ஆகியவற்றை பேசியவர், அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருக்கக்கூடிய பெண்ணியக் கல்வியை அரசாங்கம் பாடதிட்டத்தில் சேர்க்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, இருந்தாலும் முயல்வோம். அதைத் தாண்டி இதுபோன்ற முயற்சிகள் மூலம் பெண் உடல் மீதான பிம்பங்களை கலைக்கும் உரையாடல்களை நிகழ்த்தி பெண் எழுத்துக்கான புதிய மொழியை உருவாக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேரா. மோனிகா பேசினார்.  பாலினம், பாலியல் ஆகியவற்றின் வேறுபாடுகளை சுட்டிக்காட்டியவர், பிம்பம் என்பது எவர் அதை உருவாக்குகிறாரோ அவரின் மனம்படியே இருக்கும் என்றார். அந்தவகையில் ஆணாதிக்கமானது ஒவ்வொருவரின் மனதில் பெண் என்பவள் பாலியல் பண்டம் எனும் பிம்பத்தையும், அவளுக்கான தன்மைகள், கடமைகள் யாவை என்றும் ஏற்றிவைத்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சுற்றி ஒரு உடையால் நிகழும் போது அந்த பிம்பங்கள் எப்படி தோற்றுவிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைப்பது எளிதாகிறது என்றார். மேலும் அவர் மாசெஸ் அமைப்பு மூன்று மாதிதிற்கு ஒருமுறை வெளிவரக்கூடிய ஒரு சஞ்சிகையை கொண்டுவர முயலவேண்டும் என்று கூறினார்.

அடுத்ததாக தோழர். கோ. சுகுமாரன் அவர்கள் பேசினார். மனித உரிமை செயல்பாட்டாளரான இவர் காவல் நிலயத்தின் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பத்மினி மற்றும் இதர பெண்கள் வழக்கு விசாரனைகளின் போது எப்படி வேசி என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்று சொன்னதோடு, அவ்வழக்குகள் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்றும் பேசினார். அத்தோடு அ. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய இப்போதை உரையாடலுக்கு சாத்தியமற்ற சூழல் குறித்தும், அதனால் கருத்தியல் தளத்தின் பின்னடைவுகள் குறித்தும் பேசினார்.

கொற்றவை நன்றியுறையாற்றி நிகழ்ச்சியை முடித்தார்.

(அன்றைய நிகழ்ச்சியில் பேசுவதற்காக ஒரு நீண்ட உரையை தயார் செய்து வைத்திருந்தேன். நேரம் காரணமாக அதை பேச முடியவில்லை. வேறொரு தளத்தில் அது பதிவு செய்யப்படும்)

Related Links:

http://www.newsalai.com/2012/03/blog-post_8589.html

https://masessaynotosexism.wordpress.com/events/

 

‘சி.பி.ஐ விசாரணைக்குக் குரலுயர்த்துவோம்’ – மீனா

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் பலமுறை கேட்டதற்கும் கண்டித்தற்கும் பதில் கூறுமுகமாக, மருத்துவப் பரிசோதனையில் எந்த ஆதாரங்களும் இல்லையென்றும் எனவே பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்றும் டி.ஜி.பி. ராமானுஜமும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலும் சொல்லியிருக்கிறார்கள். நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறை மிருகங்களால் வன்புணரப்பட்ட பெண்கள் மிகச்சரியாக ஒருவாரத்திற்குப் பின்பு நவ.29 ஆம் நாள் தான் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட உடல் அதன் இயல்புநிலைக்குத் திரும்பியபின்பு ஆதாரங்கள் எப்படிக் கிடைக்கும்?

நவ.26 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்கள், இருளர் அமைப்பினர் எல்லோருடனும் சென்று தோழர்.கல்யாணி விழுப்புரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்டகாவல் கண்காணிப்பாளர்  நீ. பாஸ்கரன் ஐ.பி.எஸ்  புகாரைப் பெற்றுக் கொண்டு உரியநடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குஅனுப்புவதாகவும் வாக்களித்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களைத் தவிரமற்றவர்களைப் போகுமாறு கூறினார். பிறகு அவர்களை ‘விசாரித்துவிட்டு’ காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு பொய் எனத் தெரிவதால் விசாரணைகைவிடப்படுவதாகக்  குறிப்பிட்டு திருக்கோவிலூர் நீதித் துறை நடுவரிடம் வழக்கு தாக்கல் செய்தார். மொத்தத்தில், வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்பது சோதனைக்குப் பிறகு அல்ல, இந்தச் சோதனைகளுக்கு முன்பே காவல்துறை ‘கண்டுபிடித்துவிட்டது’.

வன்புணர்ச்சிக்கு மருத்துவப் பரிசோதனை ஒன்றே இறுதிச்சான்றாகிவிடாது. அந்தப் பெண்களோடு கடத்திச் செல்லப்பட்ட அவர்கள் வீட்டு மூதாட்டிகள், சிறுவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலே தான் இருந்தார்கள். அவர்களெல்லாம் இந்த அட்டூழியங்களுக்கு சாட்சியமாக இருக்கிறார்கள். வெறிபிடித்த அந்த மிருகங்களின் தடயங்கள் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்களின் இந்த வாக்குமூலத்தில் இன்னமும் அழிக்கப்படாமல் தான் இருக்கிறது : “ இரவு 12 மணி அளவில் என்னோடு கார்த்திகா,வைகேஸ்வரி, ராதிகா எங்க நாலு பேரையும் கீழே இறக்கி, வண்டியில் வந்த நாலுபோலீசும் ஆளுக்கு ஒருத்தரா எங்களை தனித்தனி மறைவிடங்களுக்குத் தள்ளிப்போனாங்க. என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே தள்ளி என்சேலையை உருவி மார்பகங்களைக் கசக்கினார். ‘நான் மூணு மாசம் முழுகாமல்இருக்கேன்….என்ன உட்டுடுங்க அய்யா’ன்னு கெஞ்சியும் அவர் விடல. நான் கத்தமுயன்றபோது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழிச்சார். இதேபோல கார்த்திகாவைத்தள்ளிச் சென்ற போலீசிடம் அவள், ‘என்னக் கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி நினைச்சுஉட்டுடுங்க’ண்ணு சொல்லிக் காலில் விழுந்து கெஞ்சினாள். அவளையும் கீழ தள்ளிப்படுக்கவச்சு அவ தாலிக் கயிற்றை அறுத்து எறிஞ்சிட்டு அந்தப் போலீஸ் கற்பழிச்சார்(ஆகா, என்ன சென்டிமென்ட் பாருங்கள். தாலிக்குத்தான் நமது காவல் துறையினர்எத்தனை மதிப்பளிக்கிறார்கள் !). வைகேஸ்வரியை தள்ளிச் சென்ற போலீஸ்அவளை முழு நிர்வாணமாக்கி, மார்புல எட்டி உதச்சுக் கீழே தள்ளிக் கற்பழிச்சார்.ராதிகாவை மட்டும் இந்த நாலு போலீசில் மூணு பேர் மாறி மாறிக் கற்பழிச்சாங்க.நாங்க சத்தம் போடாம இருக்குறதுக்காக எங்க வாயைப் பொத்தி அமுக்குனாங்க.”

இந்த பகிரங்க வாக்குமூலத்திற்குப் பிறகும் காவல்துறை ரவுடிகளின் குற்றத்தை மூடிமறைக்க இவர்களுக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்? நமக்கு ஒன்று விளங்குகிறது. தமிழகப் போலிஸின் ரவுடித்தனத்தை தமிழகப் போலிஸே (!) ‘விசாரிக்கும்போது’ நீதிகளுக்கோ உண்மைகளை வெளிக்கொணர்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை. தோழர்.கல்யாணி இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றச் சொல்லி வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரோடு இணைந்து நாமும் குரலுயர்த்துவோம்.

பெண்மையை இழிவுபடுத்தும் இமாமி முகப்பூச்சு விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்

மாசெஸ் அமைப்பு இமாமி முகப்பூச்சு விளம்பரத்தில் பெண்கள் இழிவு படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது.  நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் ஒன்றில் –  ஒரு பயிலாவன் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுவதை எள்ளல் செய்கிறது. அங்கு அவதாரமாக தோன்றும் சூர்யா / கான் அந்த பயில்வானை நோக்கி “ஐய்யோ இன்று பெண்களுக்கான க்ரீம், பிறகு நெயில் பாலிஷ், பின்னர் லிப்ஸ்டிக்கா” என்று கர்ஜிக்கவும், பயில்வான் தன்னை ஒரு பெண்ணின் உடையோடு கற்பனை செய்து பார்ப்பார். உடனே சூர்யா கையெடுத்துக் கும்பிட்டு “Fair & Handsome cream for men” உபயோகிங்க என்று ஆணையிடுவார். அதை உபயோகித்து வெள்ளையாகிவிடும் “ஆண்மை” நிறைந்த அந்த பயில்வானைச் சுற்றி தாவணி கட்டியப் பெண்கள் “ஹாய் ஹேண்ட்ஸ்ம், ஹாய் ஹேண்டஸ்ம்” என்று ஆடி பாடியபடி அவரை உரசிக்கொண்டு அவரது ‘ஆண்மையை’ போற்றுவர்.

இந்த விளம்பரத்தில் நாம் கவனிக்க வேண்டியது மீசை.  ஆண்மைக்கு அடையாளமாக சில மயிர்களை உயர்த்திப்பிடிக்கும் ஆணாதிக்கம், அந்த பயில்வானுக்கும், இந்தியில் ஷாருக்கானுக்கும் அதை செயற்கையாக ஒட்டி…அவர்களது ஆண்மையை எடுத்துரைக்கிறது.  சூர்யாவின் மீசை ‘சிங்கம்’ மீசை.

ஆணுக்கு பெண்ணைக் கவர்வதை விட்டால் வேறு வேலையே இல்லையா. கருமை நிறம் அத்தனை அவமானகரமானதா? பெண்மை என்பதும் ஆணாதிக்க கருத்தாக்கமே, அதை அவர்களே உருவாக்கி, அவர்களே எள்ளலும் செய்கின்றனர்.  பெண்கள் எப்பொழுதும் வெள்ளை நிறத்தோலையும், அழகான, வாளிப்பான ஆண்களைத் தான் விரும்புவர் என்பது பெண்களை இழிவு படுத்தும் ஒரு பிரச்சாரம். ஆண்மை பற்றிய ‘கட்டளைகள்’ ஆண்களுக்கும் மன அழுத்தம் கொடுப்பவை. பெண்ணால் நிராகரிக்கப்படுவது அவமானகரமானது என்று அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது அது.

அந்த பிரச்சாரத்தில் பெண்களுக்கான முகப்பூச்சை பயன்படுத்துவது அவமானகரமானது என்பது போல் கர்ஜிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அத்தோடு முகப்பூச்சு விளம்பரங்கள் அனைத்தும் நிறவெறி, இனவெறி, பாலினப் பாகுபாடு நிறைந்தவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  அதுமட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆண்மை, பெண்மைக் கருத்தாக்களே காரணம். இருமைவாதத்திற்குள்ளேயே விளம்பரங்களும், திரைப்படங்களும் தங்கள் கதைகளை உருவாக்குகின்றன. இது முற்றிலும் இயற்கைக்கு விரோதமானது. இருக்கும் தோற்றத்தை நிராகரித்து அழகூட்டிக்கொள்ளச் சொல்லும் அணைத்து பண்டங்களும் இயற்கைக்கு விரோதமானவையே.

ஆணாதிக்க முதலாளித்துவ பண்டங்கள் பெரும்பாலும் பாலினவாதத்தை, பிரிவினைவாதத்தை, இயற்கை நிராகரிப்பை முன் வைக்கும் விளம்பரங்கள் மூலமே சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்போக்கை இனியும் ஊக்குவிக்கக்கூடாது.

சமத்துவ சமுதாயத்தில், பெண் விடுதலையில் அக்கறையுடையோர் இவ்விளம்பரத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்விளம்பரத்தை இமாமி நிறுவனம் திரும்பப்பெற வேண்டும்.  இல்லையெனில் நீதிமன்றத்த்தை அணுகவும் மாசெஸ் அமைப்பு தயங்காது.  அந்நிறுவனம் இவ்வெதிர்ப்பை பொருட்படுத்த நிறையே பேரின் கையெழுத்து தேவைப்படுகிறது.  ஆதரவு தெரிவியுங்கள் தோழர்களே.

கையெழுத்திட – https://www.change.org/petitions/director-emami-group-emami-group-stop-telecasting-gender-discriminating-bailwan-advertisement

மாசெஸ் அமைப்பில் இணைய தொடர்பு கொள்க – kotravaiwrites@gmail.com

முகப்புத்தக பக்கம்: http://www.facebook.com/pages/MASES-Movement-Against-Sexual-Exploitation-and-Sexism/280244415362023

m.a.s.e.s blog – https://masessaynotosexism.wordpress.com/

தொலைக்காட்சி பயங்கரவாதம் – – மெய். சேது ராமலிங்கம்

(அனைத்து ஊடகங்களுமே பன்னாட்டு கம்பெனிகளினாலும் பெருமுதலாளிகளினாலும் உயர்சாதி இந்துக்களினாலும் எந்த விதிவிலக்குமின்றி ஆணாதிக்க சிந்தனையுடன் தான் நடத்தப்படுகின்றன என்பது தான் யதார்த்தம். ஆனால் இங்கு ஒரு ஆய்வுக்காக மட்டுமே இந்த இரு ஊடகங்களும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற புரிதலுடன் இந்த கட்டுரையை வாசகர்கள் படிக்க வேண்டுகிறோம். இங்கு கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் என்ற புரிதலுடன் கட்டுரைகளுக்கு பயணிக்க கேட்டுக் கொள்கிறோம்.)

மெய். சேது ராமலிங்கம்

இன்று ஊடகம் என்றாலே வெறும் பொழுது போக்கு சாதனமாக பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஒரு சிலரே அதை செய்தி அறிந்து கொள்வதற்கான சாதனமாக மட்டும்புரிந்து கொண்டுள்ளனர். ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள புகழ்பெற்ற ஊடக விமர்சர்கரும்  நவீன மொழியியலின் தந்தையுமான அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறுவதிலிருந்து துவங்குவோம்.

எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம்? எந்த மாதிரியான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை பொறுத்தே  ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய முடியும். அதாவது சமூகத்தை ஜனநாயகமாகவோ சர்வாதிகாரமாகவோ  மாற்றுவதில் ஊடகமானது தீர்மானகரமான பங்காற்றுகிறது .ஒரு சமூகம் அது ஜனநாயக சமூகமாக இருக்க வேண்டுமானால் மக்கள் தங்களை நிர்வகித்துக்கொள்ளும் வழிமுறைகளில் பங்கேற்பதற்கு  அனைத்து வழிமுறைகளும் இருக்க வேண்டும் அதற்கான தகவல்கள் இலவசமாகவும் சுதந்திரமாகவும் கிடைக்க வேண்டும் இதுதான் ஜனநாயகம் ஆகும். இதற்கு எதிரான நிலை. மக்கள் தங்களை நிர்வகித்துக் கொள்வதை தடுப்பது. அதற்கான தகவல்களை வெட்டிச் சுருக்கியும் குறுக்கியும் தருவது. முழுமையான தகவல்கள் பெறவிடாமல் கட்டுபடுத்துவது. இதன் மூலம் மக்களை அதிகாரத்திலுள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுவது. ஊடகத்தின் மூலம் மக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விட முடியும் என்பதற்கு உலக வரலாற்றில் நடந்த இரண்டு உதாரணங்களை இங்கே காண்போம்.

1916ல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவில்  உட்ரோ வில்சனின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வில்சனின் அரசும் போரில் ஈடுபட்டிருந்தது.ஆனால் அன்றைய மக்களோ போரில் தங்களது நாடு ஈடுபடுவதை விரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகள் நடத்தும் போரில் சம்பந்தமில்லாமல் நாம் ஏன் ஈடுபட வேண்டும் என நினைத்தனர். அவர்கள் அமைதியை விரும்புபவர்களாக இருந்தனர். வில்சன் அரசின் நடைமுறைகள் மூலம் போருக்கு மக்களின் ஆதரவைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்து பார்த்தார். மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. கடைசியில் ஊடக்த்தின் பக்கம் தமது பார்வையைத் திருப்பினார். கீரில் என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து மொத்த ஊடக்த்தையும் கட்டுபடுத்தும் அதிகாரத்தையும் அளித்தார். அத்தனை ஊடகங்களும் அனைத்து வித பொய்ப் பித்த்வாட்டஙகளை கையாண்டு போர் வெறியை மக்களிடம் உருவாக்கின. ஆறே மாதத்தில் மக்கள் போர் வெறியர்களாக மாறினர். உலகினை காப்பாற்ற வேண்டுமானால் ஜெர்மானிய மக்களை கை கால் வேறாக வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்று வெறியுடன் மாறினர். ஊடகம்தான் சமாதானத்தை அமைதியை விரும்பிய மக்களை இரத்த வெறி பிடித்த போர்வெறியர்களாக மாற்றியது.

இரண்டாவது  வரலாற்று நிரூபணம் – ரசியாவில் புரட்சி வெற்றி பெற்றது .அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சிவப்பு வண்ணம் குறித்தும் தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் விளைவாக பல தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன. ஊடகத்தின் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் ரத்து செய்யப்பபட்டது. இந்த இரண்டு வரலாற்று சம்பவங்களும் இட்லரின் கோயபல்சின் வெற்றிகரம்ன ஊடக பிரச்சாரத்திற்கு முன்னரே நடைபெற்றவை. இதன் வெற்றியை முன்வைத்தே இட்லர் கோய பல்சை வைத்து  வரலாற்று புகழ்மிக்க பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டான் என்பதை சாம்ஸ்கி குறிப்பிடுகிறார். இந்த இரண்டு உதாரணங்களையும் இங்கு விரிவாக குறிப்பிட்டதன் நோக்கமே தமிழகம் எத்தகைய அபாயத்தை நோக்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். மேலும் முக்கியமாக ஊடகமாக அதிலும் காட்சி ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது அதன் மூலம் யாரைம் எப்படியும் மாற்றிவிட முடியும் என்பதை உணரவுமே இந்த வரலாற்று உதாரணங்கள். இப்போது தமிகத்தின் மிகப்பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்து விட்ட சன் டிவி மற்றும் கலைஞர் டிவி ஊடகங்களை பார்ப்போம்.

முதலாக, இந்த ஊடகங்கள் எந்த நோக்கத்தோடு யாரால் நடத்தப்படுகின்றன? அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து விட்டு திரும்பிய பேரன் கலாநிதி மாறனுக்கு பொழுது போக்கிற்கான வேலைவாய்ப்பாக கட்சிப்பணத்தில்  பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது. அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்பட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்பட்டது. கட்சிப் பணத்தில் கட்சி அலுவலகத்தில் சன் டிவி தொடங்கப்பட்டு அதன் அரவணைப்போடு வளர்ந்தது. இது அனைவரும் அறிந்த வரலாறு. அனைவரும் அறியாத ஒன்று சமூக சீர்திருத்தங்களை பரப்புவதற்காகவோ அல்லது சமூக சிந்தனையோடே சன் டிவி தொடங்கப்படவில்லை.  80களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட தொடங்கிய நேரம். உலக சந்தைகளின் ஒருங்கிணைப்பு நடைபெற்று கொண்டிருந்த காலம். எந்த நாட்டவரும் எந்த நாட்டிலும் தொழில் தொடஙகலாம் அனுமதிகள் சட்டஙகள் மற்றும் உரிமங்கள் தேவையில்லை என் நாடுகளின் கதவுகள் தாராளமாக திறந்து விடப்பட தாராளமயமாக்கல் கொள்கைகள் அநேகமாக அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட துவங்கிய காலத்தில் பன்னாட்டுக்கம் பெனிகளுக்கும்  தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் மிக விரிவான விளம்பரங்களும் தொடர்பு முறைகளும் அந்தந்த நாட்டுக்கு மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ப தேவைப்பட்டன.பன்னாட்டு கம்பெனிகளின் சரக்குகளுககு விளம்பரங்களுக்கு அந்தந்த மொழியிலேயே தொலைக்காட்சி சேனல்கள் தேவைப்பட்டன. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஒரு சரக்கு உலகம் முழுவதும் விற்கப்பட வெறும் பொருளாதார உலகமயமாக்கல் மட்டுமின்றி பண்பாட்டு உலகமயமாக்கலும் அவசியமாகும். அதாவது இந்திய அளவில் பல மொழி பேசும் தேசிய இனத்தின் கலாச்சார வேறுபாடுகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் சரக்குக்ளை விற்பதற்க இடைஞ்சலாக உள்ளன. எனவே வளமான தேசிய இன பண்பாட்டு வேறுபாடுகளை அழித்து ஒரே மாதிரியான மேற்கத்திய பண்பாட்டுடன் ஆங்கிலக் கலப்புடனான பண்பாட்டு பரப்பல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதைத்தான் எல்லா சேனல்களும் செய்கின்றன. எல்லா சேனல்களிலும் வெள்ளைத்தோல் சிகப்பழகு தொப்புள் தெரியும் ஜீன்ஸ் உடை பீசா உணவு உள்ளிட்ட துரித உணவு நுனி நாக்கு ஆங்கிலம் கலந்த மொழி பேசுவதுதான் சரக்கு விற்பனைக்கு சௌகரியமான ஒன்று என்பது பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார யுத்தி. பன்னாட்டு மூலதனத்தின் இந்த தேவைகளை அமெரிக்க வார்ப்பும் இயல்பிலேயே தீவிர கம்யூனிச எதிப்பாளருமான கலாநிதி சரியாக புரிந்து  கொண்டார். (அத்துடன் அவர் முதல் முதலாக சன் டிவியை தொடங்கியதால் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பரசந்தையை கைப்பற்றுவதும் எளிமையாகிற்று. தனியார் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் அடிப்படை ஆதாரங்கள் ஆகும்  .விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிடும்போது கேபிள் சந்தாவிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைவானது. (அதையும் சன் டிவி விட்டு வைக்க வில்லை என்பது வேறு விட்யம்) கேபிள் சந்தாவை மட்டும் நம்பி யாரும் தொலைக்காட்சி  சேனல்கள் துவங்குவதில்லை என்பதை வலியுறுத்தவே இதைக் குறிப்பிடுகிறோம். தொலைக்காட்சியின் உயிர்நாடியாக இருப்பது விளம்பரங்கள்தான்.எனவே விளம்பரங்களுக்கு எதிரான விடயங்களோ  கம்பெனிகளுக்கு எதிரான விடயங்களோ எதுவுமே தொலைக்காட்சி சேனல்களில் இடம் பெற வாய்ப்பே இல்லை.இங்கு விளம்பரங்களுக்குத்தான் நிகழ்ச்சிகளே அன்றி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்கள் அல்ல. நாட்டின் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தையையும் (பெருந்தன்மையுடன்தான்) வழங்குவது பெப்சியாகவோ அல்லது யூனிநாராக இருக்கும். எனவே அதிகமான சந்தையைக்கொண்ட (பார்வையாளர்களைக் கொண்ட) ஒரு நிகழ்ச்சிக்குத்தான் கம்பெனிகள் விளம்பரதாரர்களாக இருப்பர். எனவே முழுமையாக செய்தி உட்பட விளம்பரதாரர்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படும். எனவே சமூக சிந்தனையாவது பெரியார் மொழியில் சொன்னால் வெங்காயாமாவது. இங்கு எப்போதும் இலாப நோக்கம்தான், விளம்பரத்திற்குத்தான்.

விளம்பரங்களுக்கான கட்டணம் வினாடிக்கு இவ்வளவு எனவும் ஒரு நாளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையையொட்டி பிரைம் டைம் பாதி பிரைம் டைம் கால் பிரைம் டைம் (மாலை நேரம், பிற்பகல் மற்றும் காலை நேரம்) என பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வலிமையான அரசியல் அதிகார பலத்துடன் முதன்முதலாக தனியார் தொலைக்காட்சியாக களமிறங்கிய சன் டிவியின் இலாபம்  பத்தாண்டுகளுக்கு முன்னதாக சில நூறு கோடிகளாக இருந்தது. இப்போது பல ஆயிரம் கோடிகளைத்தாண்டி விட்டது என்பது  அனைவருமே அறிந்த ஒன்று. இன்று சன் டிவி நெட்வொர்க்கில் 95 மில்லியன் குடும்பங்களை (ஒன்பதரைக்கோடி) சென்றடையும் 20 சேனல்கள் உள்ளன. வெளிநாடுகளில் வாழும் தென்னிந்தியர்களைக் அதிகம் கொண்ட அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற 27 நாடுகளிலும் சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு எட்டுகிறது. 45 எஃஎம் வானொலி நிலையங்களை வைத்துள்ளனர். கூட்டாக 1.2 மில்லியன் விற்பனை கொண்ட 2 நாளிதழ்கள், 4 பருவ இதழ்கள், 5.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் சன் டைரக்ட் டி.டி.எச் சேவை, கேபிள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை கையில் வைத்திருக்கும் 90 கோடி ரூபாய் புரளும் சுமங்கிலி கேபிள் விஷன் என்ற கிளை நிறுவனம். இவ்வளவு நிறுவனங்களோடு 2007 முதல் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத் தொழிலும் இறங்கியுள்ளது. (திரைப்படத்துறையிலுள்ள ஆதிக்கம் குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்)சன் நெட் வொர்க்கின் மொத்த மதிப்பு ரூ 1000 கோடி.மும்பை பங்குச் சந்தை இணையதளம் அளித்துள்ள தகவலின்படி சன் நெட் வொர்க்கின் மொத்த பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 18 ஆயிரத்து 307 கோடி.சன் குழுமத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூபாய் 464 ஆகும். சமீபத்தில் விமானப் போக்குவரத்து துறையிலும் நுழைந்திருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 37.7 விழுக்காடு பங்குகளை வாங்கி இருக்கிறது.இன்று இந்திய அளவில் அதிலும் தனியார் துறையில் அதிக சம்பளம் ஈட்டும் மூத்த நிர்வாகி கலாநிதி மாறன்தான்.அவரது சம்பளம் ரூ 37 கோடிரூபாய் ஆகும்.

ஆக, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சன் நெட் வொர்க் இன்று ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டுக்கம்பெனியாக வளர்ந்துள்ளது என்பது வெளிப்படையானது. சன் டிவி நெட்வொர்க் பன்னாட்டு மூலதனத்தின் உறுதியான கூட்டாளியாக அதன் பண்பாட்டு ஆன்மாவாகவும் செயல்படுகிறது.அது மக்களின் பார்வையில் அவர்களுக்கு சாதகமாக அதிலும் தமிழர்களுக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும் என்று நினைப்பதும் எதிர்பார்ப்பதும் எவ்வளவு பாமரத்தனமானது?

கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக ஈட்டும் சன் டிவி நெட்வொர்க் என்ற பன்னாட்டுக் கம்பெனியின் உண்மை முகத்தை அதாவது அதன் பண்பாட்டு முகத்தை காண்போம். உலகமயமாக்கலின் கொள்கைகளின் உருட்டு திரட்டு வடிவமாகவும் பன்னாட்டுக்கம்பெனிகளின் தேவைகளுக்காகவே பிறப்பெடுத்ததுமான சன் டிவியின் பண்பாட்டு கருத்தியல் மிகவும் கொடூரமானது.அதன் மொழியிலேயே கூற வேண்டுமானால் உலக தொலைக்காட்சி வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையாக  நிறவெறியையும் மறைமுகமாக நுட்பமான சாதியத்தையும் மேட்டுக்குடித்தன திமிரையும் முன்வைத்தது. சன் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையான பொழுது போக்கு சார்ந்த நிகழ்ச்சிகளாக உள்ளன. அதில் 80 விழுக்காடு சினிமா சார்ந்தவை. மீதியுள்ளவை நகரஞ்சார்ந்த மேட்டுக்குடி மக்களினால் தயாரிக்கப்பட்டு அவர்களின் பார்வையில் முன் வைக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகம் என்பது வெறும் பொழுது போக்கிற்கான விடயம் அல்ல. ஊடகத்தின் மூலமாக நல்ல கருத்துகளை கூறி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மிக சொற்பமான அளவில் அரசல் புரசலாக வாதங்கள் நடந்து வந்தன. சன் டிவி வந்த பின்னர் அந்த பார்வையையே முற்றிலுமாக ஒழித்து கட்டி ஊடகம் என்பதை மாற்றுக் கேள்விக்கே இடமில்லாத ஒரு பொழுது போக்கு தொழிற்சாலையாக மாற்றியது. இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிகழ்ச்சிகளும் இல்லை. நிகழ்ச்சிகளில் இடமுமில்லை. இங்கு சிகப்பழகும் வெள்ளைத்தோலும் கவர்ச்சியும்தான் இடம்பெறுவதற்கான தகுதி என்ற நிறவெறி இனவெறி மற்றும் சாதியம் கலந்த பார்வையே உள்ளது. வெயிலில் உழைத்து கருத்துப்போன முகங்களுக்கு இங்கு இடமில்லை.கிராமங்களில் மிகப்பெரிய அளவில் மரணங்கள் நிகழ்ந்தால் அல்லது விசித்திரமான மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டாலோதான் கிராமப்புற மனிதர்கள் சின்னத்திரை வெளிச்சத்திற்கு வருவார்கள். கருப்பு நிறத்தை உடையவர்கள் சாதாரண தோற்றம் உடையவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களால் சாதனைகளை படைத்த பெரிய திரை உலகில் நடைபெற்ற எந்த மாற்றங்கள் சின்னத்திரை உலகில் நுழையக்கூட முடியவில்லை. நிறத்தில் அப்படி ஒரு பாகுபாடு காட்டப்படும்போது சாதியப் பாகுபாடு என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.துப்புரவுத் தொழிலாளி நிலைக்கு மேல் எந்த தலித் மக்களுக்கும் இடம் இருந்ததில்லை.அவர்கள் நிகழ்ச்சி தயாரிப்பில் இடம் பெறுவது நினைத்து பார்க்க முடியாதது.

25 ஆண்டுகளுக்கு முன்னதாக வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் அட்டைபடங்களில் ஆபாசப்படங்கள் போட்டதற்கு எதிர்ப்பு போராட்டஙகள் நடத்தப்பட்டு அப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம். ஆனால் உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட பின்னர் அப்போராட்டங்கள் இல்லை. இந்த சூழ்நிலையில் அந்த ஆபாசங்களை விட 100 மடங்கு ஆபாசங்களை காட்சி படங்களாக காண்பித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக துணிச்சலாக மிட் நைட் மசாலா என்ற பெயரில் ஆபாசங்களை அரங்கேற்றியது. இன்று அதை விட பல மடங்கில் ஆபாச நடனங்களுடன் திரைப்பட விழாக்களை ஒளிபரப்பி வருகிறது. பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் சன் டிவியின் கொள்கை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மாறியதே இல்லை. எப்படியும் வாரம் ஒரு திரை விழாவோ பாராட்டு விழா அல்லது முதல்வருக்கு பாராட்டு விழா நடந்தால் அதன் ஒளிபரப்பு உரிமையை பெறுவதில் கலைஞர் டிவிற்கும் சன் டிவிக்கும் கடும்போட்டியே நடைபெறுகிறது. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆடவரெல்லாம் ஆட வரலாம் என்ற வெளிப்படையான  ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி கடும் கண்டனத்திற்குள்ளாகி அந்நிகழ்ச்சியை கைவிட்டது நினைவுக்கு வரலாம். சன் டிவியின் ஆபாசக் கலாச்சாரத் தொழிற்சாலையின் உற்பத்தியை பற்றி மக்களுக்கு இன்னும் விரிவாக கூற வேண்டிய அவசியமே இல்லை. நித்யானந்த விவகாரம் குறித்த அதன் நீலப்பட ஒளிபரப்பு ஒன்றே போதும்.

சரி, பெரும்பான்மையான மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் தலித் மக்கள் ஆகியோருக்கு சன் டிவியில் இடம் பெறுவதில்லை என்றால் யார் தான் அதில் இடம் பெறுகிறார்கள்? வேறு யார் .நடிக நடிகைகள்தான் அதில் சந்தேகமே வேண்டாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சன் டிவியின் தொடக்க நாளிலிருந்தே எனலாம். அது தீபாவளி, பொங்கல் கிருத்துமஸ் (ரமலானுக்கும் பக்ரீத்திற்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது வேறுவிடயம்) சுதந்திர நாளாக இருக்கட்டும் அல்லது எந்த நாளாக இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் தமிழ் மக்கள் தரிசனம் செய்வது ஏதாவது சினிமாக்காராக இருப்பார்கள். ஒரு நாடு என்றோ மக்கள் என்றோ சினிமாக்காரர்களைத்தான் சன் டிவி கருதுகிறது. ஆதாரம் வேண்டுமென்றால் நீங்களே சோதித்து பாருங்கள். குடியரசு தினத்தன்று குடியரசு நாளின் பெருமை குறித்து அசினோ நயன்தாரவோ பேட்டி அளித்து கொண்டிருப்பார்கள் அதே போல தமிழர் திருநாளன்று தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தமன்னா கலந்துரையாடிக் கொண்டிருப்பார். இந்த பண்பாட்டு ஆதிக்கமும் சீரழிவும் இத்தோடு சன் டிவி நிறுத்திக்கொள்கிறதா?

இன்று நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள நமது பரீசிலினையை 20 ஆணடுகளுக்கு முன் செல்வோம்.

தொலைக்காட்சி பயங்கரவாதம் – பகுதி – 2

மார்க்சிய அறிஞர் லுயிஸ் அல்துசர் ஒரு அரசு மக்களை அடக்கி ஆள இரு வழி முறைகளை கையாள்கிறது என்பார். ஒன்று சிறை போலீஸ் இராணுவம் போன்ற அடக்குமுறைகள் இரண்டாவது கருத்தியல் சார்ந்த அடக்குமுறைகள். இந்த இரு அடக்குமுறைகளையும் கொண்டு இரு வேறு அமைப்புகளுடன் செயல்படுகிறது என்பார். இதில் நவீன அரசு முன்னர் கூறிய அடக்குமுறை எந்திரங்களை விட கருத்தியல் சார்ந்த பரப்புரையையே அதிகம் சார்ந்து இருப்பதாக குறிப்பிடுவார். சமூக ஏற்றத்தாழ்வுகளான வர்ககங்ளையும் வர்க்க ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்த உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்கள் கருத்தியல் சார்ந்த அடக்குமுறையை யே சார்ந்துள்ளன.

கருத்தியல் சார்ந்த அடக்குமுறை என்பது மக்களையே மனமுவந்து ஆளும் வர்க்கங்களையும் அதற்கான பிரதிநிதிகளான அரசியல் கட்சிகளையும் ,ஒடுக்குவதற்கான அரசமைப்பையும் ,அதற்கான சட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான கருத்தியல் பரப்புரையாகும். குழந்தையாக இருக்கும்போதே இளம் உள்ளங்களில் கல்வி முறையில் அரசு என்பதற்கு கீழ்படிந்த குடிமக்களாக நடக்க வேண்டும். மறைமுகமாக அரசு என்பது  இறைவனுக்கு சமமானதாக பதிக்கப்படுகிறதுஅதே போல சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கற்பிக்கப்பட்டு அது ஆழமாக உள்வாங்கப்படுகிறது.இதன் இணையாகவும் தொடர்ச்சியாகவும் கணவனுக்கு மனைவி கட்டுபட வேண்டும் தந்தைக்கு மகனும் மகளும் கீழ்படிய வேண்டும் என்று குடும்பத்தில் ஆதிக்க கருத்தியல் ஊட்டப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கருத்தியல் கல்வியினால் ஆட்சிகளும் அரசும் நீடிக்கின்றன. இதில், இந்தியாவில் குறிப்பிடத்தக்க அம்சமாக சாதி அமைப்பும் சாதிய உணர்வும் நுட்பமான முறையில் ஊட்டப்படுகிறது.இதன் விளைவாக வர்க்க ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் மக்கள் அரசமைப்புக்கு கீழ்படியும் நேர்மையான குடிமக்களாக இருக்கிறார்கள். சுரண்டல் சமூக அமைப்பும் அதனைக் கட்டி காக்கும் அரசமைப்பும் குறித்தும் அவர்களுக்கு எந்த வித வெறுப்புணர்வும் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு இளம் வயதிலேயே சாதிய உணர்வும் இயல்பாக ஊட்டி வளர்க்கப்படுவதால் ஒவ்வொரு சாதியினரும் ஒருவர் மற்றொருவருடன் இணைய முடியாதபடி, தனித்தனித் தீவுகளாகவும் ,அண்ணல் முனைவர் அம்பேத்கர் கூறியதுபோல் மேன்மை உணர்வுடன் உள்ளனர்,இந்த மேன்மை உணர்வு  செயற்கையாக கட்டியமைக்கப்பட்டது என்பதைக்கூட உணர முடியாத படி சாதிய உணர்வில் ஊறிக்கிடக்கின்றனர். சக மனிதனை மிருகத்தை விட கேவலமாக நடத்தி அவன்பால் தீண்டாமையை கடைப்பிடிப்பது குறித்து அவர்களுக்கு எந்தவித குற்றஉணர்வும் ஏற்படுவதில்லை. தீண்டாமையை கடைபிடிப்பவர்களே பொது வெளியில் அல்லது வெளிஉலகிற்கு அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமையான தீண்டாமை ஒழிப்பைக் காட்டி சமாதானம் செய்கின்றனர். எங்கே சாதி பார்க்கப்படுகிறது? என்று கேள்வி கேட்கின்றனர்.

சாதி அமைப்பு இருக்கும் வரை தீண்டமையும் இருக்கும். தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் இந்த அடிப்படை அறிவியல் கூட மறைக்கப்பட்டு மோசடித்தனமாக தீண்டாமையை மட்டும் கடைபிடிப்பது குற்றமாக அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தில் சாதி அமைப்பையே குற்றமாக அறிவிக்காமல் தீண்டாமையை எந்த காலத்திலும் ஒழிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் பல காலமாகவே சாதி அமைப்பும் அதன் பிரிக்க முடியாத பகுதியான தீட்டு மற்றும் துhய்மை கருத்தியல்கள் இயற்கையானதாக  இந்து மதச்சடங்குகள் மூலமாக அதாவது அன்றாடம் ஒவ்வொரு பண்டிகையின்போதும் ஒவ்வொரு மதச்சடங்கின்போதும் உயிர்ப்பிக்கப்பட்டு உறுதிபடுத்தப்படுகிறது. இந்த சடங்கு சம்பிராதயங்களில் சிறிது சலனம் கூட ஏற்படுத்த முடியாதபடி அரசு கட்டிக்காத்து வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் அரசின் கருத்தியல் அடக்குமுறை குறித்த இந்த புரிதலுடன் இப்போது சன்டிவி நிகழ்ச்சிகளை ஆராய்வோம்.

சன் டிவி நிகழ்ச்சிகள் முழுமையாகவே பொழுது போக்கு சார்ந்தவை என்பது சிறிய குழந்தைக்கு கூட தெரியும். பொழுது போக்கு நிகழ்ச்சிகளினால் என்ன வந்துவிடப்போகிறது? அதை போட்டு ஏன் இப்படி அலசுகிறீர்கள்? என்று பலரும் அலுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக பொழுது போக்கு என்பது குறித்து பல மாயைகள் நிலவுகின்றன. பொழுது போக்கு நிகழ்ச்சிகள் சமூக உணர்வூட்டுவதாகவும் மனதுக்கும் உடலுக்கும் இதமாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஆனால் சன் டிவி நிகழ்ச்சிகள் இதற்கு நேர் மாறானவை .அவை  என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன? ஏற்படுத்தியுள்ளன?

பன்னாட்டு கம்பெனிகள், தேசங்கடந்த தொழிற்கழகங்கள்  மற்றும் பெரும் முதலாளிகள் வணிக நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் அளிக்கும் விளம்பரங்களைத் சார்ந்துதான் சன் டிவி மற்றும் கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதை முன்னரே கண்டோம். இந்த விளம்பரதாரர் நலன்களுக்கு எதிராக எந்த நிகழ்ச்சிகளும் டிவியில் இடம் பெறாது என்பது முக்கியமான விடயம். உதாரணமாக நான் உயரமாக வளர்கிறேன் என்ற காம்பளான் குழந்தைகள் சத்துபான விளம்பரம்  மோசடியானது. காம்ப்ளான் குடித்தால் எந்த குழந்தைகளும் உயரமாக வளர்ந்ததற்கு எந்த அறிவியல் ஆய்வும் இல்லை என்று கூறி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் சன் டிவியில் இதைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் வந்து கொண்டே இருக்கும். இந்த வழக்கு பற்றி அவர்கள் செய்தி சேனலில் எந்த செய்திகளும் வராது. ஏனெனில் விளம்பரம் கொடுப்பவர்கள் ஆயிற்றே. இதே போன்று பெப்சி கோலா குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு பன்னாட்டு கம்பெனிகளினாலும் தமிழக நிலத்தடி நீர் களவாடப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடந்த போது அதைப்பற்றி கிஞ்சித்து கவலை கொள்ளாமல் அந்த நிறுவனங்கள் அளித்த நிகழ்ச்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ராதிகா துவங்கி விஜய் மாதவன் சூர்யா என இக்குளிர்பானங்களுக்காக விளம்பரம் அளித்ததும் தொடர்ந்தன. சன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பதையே பொழுது போக்குக்குத்தான் வேறு எதற்கும் அல்ல என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியாக நிறுவியுள்ளது.

விளம்பரதாரர் நலன்களிலிருந்து மட்டுமே எந்த நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் எதையும் அறிவுபூர்வமாக அலசும் முறை தவிர்க்கப்படுகிறது.விளம்பரதாரரின் வியாபார நோக்கம் பாதிக்கும் என்பதால் ஆழமான விசயங்கள் எது குறித்தும் விமர்சனக் கண்ணோட்டமும் தவிர்க்கப்படுகிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லாத மேலோட்டமானதும் முட்டாள்தனமான மட்டமானதுமான ரசனையைத் தூண்டும் நிகழ்ச்சிகளே ஆக்ரமித்துக் கொள்கின்றன. இவை. நடுத்தர வர்க்கத்தின் சொல்லாடலின்படி அனைத்தும் லைட்டான விசயங்களே. சன் டிவி ஏற்படுத்திய இப்பபண்பாட்டினால் கனமான விசயங்களை படிப்பது மிகவும் குறைந்து விட்டது. பெருகி விட்ட தொலைக்காட்சி ஊடகங்களினால் பொதுவாக நூல்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாசிக்கும் வழக்கம் மிகவும் குறைந்துள்ளதாக பல ஆய்வு அறிக்கைகள் குறிப்பிட்டு கூறியுள்ளன. மூளைக்கு வேலை கொடுக்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை தூண்டும் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதால் வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே நீண்டகாலமாக பார்க்கும் பார்வையாளர்களை மூளை உழைப்பு சோம்பேறிகளாகவும் மாற்றப்படும் அபாயம் ஏற்படுகிறது. இவ்விசயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகள். டிவி பார்ப்பதை பொருத்தவரை வயது வந்தோரும் குழந்தைகளும் ஒரு விசயத்தில் வேறுபடுகின்றன. டிவியில் வரும் தொடர்கள் திரைப்படங்களை பார்க்கும்போது வயது வந்தவர்கள் இது வெறும் நடிப்பு என்பதைபுரிந்து கொண்டு பார்க்கின்றனர். ஆனால் டிவி நிகழ்ச்சிகளை குழந்தைகள் உளப்பூர்வமாக நம்புவதோடு பலவீனமான நிலையில் இருந்தால்  அதை ஏற்றுக் கொண்டு செயல்படவும் தொடங்குகின்றனர். தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

விளம்பாரதாரர்கள் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரங்களை அளிக்கின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் முதலிடம் வகிப்பது வன்முறை மற்றும் பாலியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத்தான். இரண்டாவது இடம் வகிப்பது மெகா தொடர்களுக்குத்தான் .அதில் கள்ள உறவு இல்லாமல் கதையே இருக்காது. ஒரு நகைச்சுவை காட்சியில் நடிகர் விவேக் குறிப்பிடும் வருவது போன்று கள்ள உறவு இல்லைன்னா மெகா சீரியலில் கிக் ஏது?

நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இடம் பிடிப்பவை சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள், மெகா தொடர்கள் மற்றும் செய்திகள் ஆகும்.அன்றாடம் அதிக பட்சமாக நேரம் ஒதுக்கப்படுவது சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் மெகா தொடர்களுக்கும்தான். செய்தி சேனல்கள் குறித்து தனியே பின்வரும் கட்டுரைகளில் பார்ப்போம். முதலில் மெகா தொடர்ககளைப் காண்போம். தமிழ் திரைப்படத்துறையை  பல ஆண்டுகாலமாக புற்று நோயாக அரித்து வருவது கதாநாயகனின் மிகப்பெரிய சம்பளத்கொகை ஆகும். அதனால் தவிர்க்க முடியாமல் உயரும் திரைப்படத் தயாரிப்புச் செலவு, செக்குமாடு போல கதை அம்சமும் இல்லாமல் வரும்மசாலா வணிக படங்கள் ஆகிய காரணங்ளினால் திiப்படத்துறை நலிவடைந்து வருகிறது. இந்த காரணங்களுடன் திரை அரங்கத்தில் மிகவும் உயர்த்த பட்ட டிக்கெட்டின் விலை ஆகியவை திரை அரங்குகளுக்கு மக்கள் வருவதை பெரும்பாலும் குறைத்து விட்டன இந்தச் சூழலில். உலகமயமாக்கலின் ஏற்பட்ட தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி வீட்டிலிருந்தபடியே குறுந்தகடு மற்றும் இணைய தளத்தில் திரைப்படங்களை பார்க்கும் வசதிகளும் உருவாகின. அதிகமான சமூகத்தொடர்பின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலையையும் டிவி ஊடகங்கள் ஏற்படுத்தின. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு மெகா தொடர்கள் எடுக்கபட்டன. அவை வீட்டில் அதிக நேரம் இருக்கும் மக்கள்பிரிவினரை குறிப்பாக, பெண்களை குறிவைத்து முதலில் சில தொடர்கள் எடுக்கப்பட்டு அவை வெற்றிக்கண்டவுடன் புற்றீசல் போல தொடர்கள் எடுத்து தள்ளப்பட்டன.மக்களிடம் பிரபலமான சித்தி கோலங்கள் முதல் இன்றைய செல்வி வரை குடும்பங்களை சுற்றி பின்னப்படும் கதைகள்தான்.

ஒரு தொடரின்கதையை மட்டும் கூறி அதை பரிசிலித்தால் அது நூறு இதழ்களுக்கு தொடரும் என்பதால் தொடர்களின் கதைகள் இங்கே தவிர்க்கப்படுகிறது. இந்த தொடர்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் நிலை மிகவும் கண்டனத்திற்குரியது. பெண்ணடிமைத்தனத்தின் அத்தனை அம்சங்களையும் விழுமியங்களையும் ஒரு சேரத் தொகுத்து வழங்குவதாகவே தொடர்கள் உள்ளன. பெண்களே அதிகம் பார்வையாளர்களாக இருப்பதால் எளிமையான முறையில் அவர்களை அடிமைத்தளையில் வைத்திருக்கும்படி கதைகளும் நிகழ்ச்சிகளும் பின்னப்படுகின்றன. இந்த தொடர்களில் வரும் பெண் பாத்திரங்கள் வெளி உலகை அறியாதவர்கள் தன்னைச்சுற்றி என்ன நடக்கும் என்பதை அறியாத கிணற்றுத்தவளைகiளாகவும் கணவனுக்காகவும் ஆண்களுக்காகவும் வாழும் பாத்திரங்களாக இருப்பர். மிகவும் படித்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ மாநில அளவில் தலைமை போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி கணவனுக்கு வீட்டில் கணவனுக்கு பணிவிடை செய்வதிலேயே மகிழ்ந்திருப்பாள் உதாரணமாக ராதிகாவின் ராடன் நிறுவனம்தயாரிக்கும் சீரியல்கள். இவற்றில் கணவனுக்கு அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனுக்கு கீழ்டிந்து நடக்கும் அவனின் தேவைகளை (அவன் ஒதுக்கித்தள்ளினாலும்) மனமுவந்து பூர்த்தி செய்பவளாக இருப்பாள். அனைத்துத்  தொடர்களிலும் கதாநாயகன் இரண்டு பொண்டாட்டிகாராக இருப்பார். அது தவறு என்று ஒரு காட்சியிலும் சித்தரிக்கப்படாமல் அதை நியாயப்படுத்தும் விதமாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைவிட கொடுமையாக இரண்டு மனைவி உடைய கதாநாயகன் மிகவும் சிரமங்களுக்கு ஆளாவதைக் காட்டி அவர் மீது அனுதாபம் பிறக்கும்படி காட்சிகள் இருந்து வருகின்றன.

மெகாத் தொடர்களில் ஆணாதிக்கம் என்பது இயற்கையானது அதை மீறாமல் நடப்பதே குடும்ப பெண்களுக்கு நல்லது என்பதை தொடர்ந்து மூளைச்சலவவை செய்யப்படுகிறது.இதன் மூலம் அடிமைத்தனத்தை பெண்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி அவர்களின் மனநிலையை தயார் செய்கின்றனர்.


தொலைக்காட்சி பயங்கரவாதம் – பகுதி – 3

மெகாத்தொடர்கள்

 இந்த மெகாத்தொடர்கள் ஏன் வெற்றி பெறுகின்றன? என்பது குறித்து நடத்தப்பட்ட உளவியல் ஆய்களில் வெளியிடப்பட்ட சில காரண்ங்கள்

பெரும்பாலான பெண்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாத வீட்டு வேலைகளின்  சுமைகளில் மூழ்கி முடங்கி போகின்றனர். இவர்களுக்கான உணர்வுகளுக்கான வடிகாலாகவே தொடர்கள் விளங்குகின்றன. எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் சமூகத்திலும் குடும்பத்திலும் அவள் அறிவிற்காக என்றுமே அங்கீகரித்து நடத்தப்படுவதில்லை. அவள் இரத்தமும் சதையும் கொண்ட மனுஷியாக நடத்தப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் தொடர்களில் வரும் கதாநாயகிகள் அறிவாளிகளாகவும் தலைமைப்பண்பு உடையவர்களாகவும் மிக மிக  நேர்மையாளர்களாகவும், அதே சமயத்தில் குடும்ப அமைப்பிற்குள் நல்ல குடும்ப பெண்ணாகவும் காட்டப்படுவதால் பெண் பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரத்துடன் அய்க்கியப்படுத்திக் கொள்கின்றன. கதாபாத்திரங்களாக உள்ள ராதிகாவின் அல்லது தேவயானியின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அவள் தோல்வி கண்டால் அவளது துன்பத்தில் இவர்கள் துன்பமுற்று கண்ணீர் வடிக்கிறார்கள். குடும்பம் என்ற அமைப்பிற்கு சிறிது கூட சலனம் ஏற்படாமல் கணவனுக்கு சேவை செய்வதற்காகவே வாழ்கின்ற பதிவிரதைகளாக புகுந்த வீட்டாரின் மகிழ்ச்சியில் தனது மகிழ்ச்சியை காண்பவர்களாக வாழ்ந்து காட்டுவது அதே போல சமூகத்திலுள் பெண் பார்வையாளர்களை வசீகரப்படுத்தி விடுகிறது. அதே சமயத்தில் பார்வையாளர்களை மேலும் ஈர்ப்பதற்கு குடும்ப ஆணாதிக்க  வரம்பிற்குள் கதாநாயகிகள் சிறிது எதிர்ப்பைக் காட்டுவார்கள். பின்னர் சமரசப்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். அக்குடும்பத்தில் அனைத்து பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அதிசய பிறவிகளாக ஆபத்து வரும்போதேல்லாம் எம்.ஜி.ஆர் போல அங்கு தோன்றி அவர்களை காப்பாற்றுகின்றனர்.ஒரு பெண் எம்.ஜி.ஆராக  வலம் வருவதால் இந்த கதாபாத்திரங்கள் நேசிக்கப்படவும் தொடங்குகின்றனர்.இதே காரணத்தால்தான் ராதிகாவை  வைத்து கொலைகார கோலா கம்பெனி விளம்பரம் செய்து மீண்டும் அனைத்து மக்களையும் இந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் காட்டும்போது குறிப்பாக தலித் மக்கள் மீனவர்கள் சிறுபான்மையினராகிய கிருத்துவர்கள் மற்றும இஸ்லாமிய சமூகத்தினர் ஆகியோரைக் சித்தரிக்கும்போது யதார்த்தில் இல்லாதபடி, விநோதமானவர்களாக சித்தரிப்பர். தலித் மக்களாக இருந்தால் அவர்கள் கருப்பான நிறம் கொண்டவர்களாக இருப்பர். கிழிந்த உடையுடன், சேரியிலுள்ளவர்களாகவும் உதிரித்தனமான வேலைகளை செய்பவர்களாகவும்  காட்டப்படுவர்.இது ஆதிக்க சாதியினரின் நிறவெறி மனப்பான்மையாகும். பெரும்பாலும் தலித் மக்கள் உழைப்பாளிக்குரிய அழகுடன் சாதி இந்துக்களைவிட நல்ல உடை அணிவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால் ஆதிக்க மனப்பான்மையுட்ன் அவர்கள் எப்போதும்  பரிதாபமான தோற்றத்துடனே சித்தரிக்கப்படுகிறார்கள்.சின்னத்திரையினரின் இந்த பார்முலா பெரிய திரையினரிடமிருந்து பெறப்பட்டதே.

 

கிருத்துவர்களாக இருந்தால் சிலுவையை அது வெளியில் தெரியும் படி மாட்டிக்கொண்டு வலம் வருவதாக காண்பிப்பதும் முஸ்லீமாக இருந்தால் தலையில் குல்லா அணிந்து இருப்பதாக காட்டுவதும் இந்துத்துவ மனப்பான்மையே. (நடைமுறையில் இறைவழிப்பாட்டில் இருக்கும்போது மட்டுமே அவர்கள் மத அடையாளங்களுடன் இருக்கின்றனர்)

இன்னொரு முக்கிய விசயம். கடந்த பத்தாண்டுகளாக தொடர்களை தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள் ஒரு மாற்றத்தை கவனிக்க முடியும்.அந்த மாற்றம் அபாயகரமான மாற்றமாகும். அது பெண் வில்லிகள் ஆண் வில்லன்களுக்கு நிகரான கொடூரமானவர்களாகவும் உருவாக்கப்பட்டு வருவதுதான்.

அடக்கி ஒடுக்கத்துடன் உள்ள பெண்கள் அதிகம் எண்ணிக்கையில் வலம் வரும் தொடரில் இவர்கள் மிகவும் வேறுபட்டு படைக்கபடுகின்றனர், எப்படி?

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே அன்றாடம் நடைபெறும் பரிமாற்றங்கள், உறவில் ஏற்படும் மனக்கசப்புகள் மற்றும் விரிசல்கள், கள்ள உறவுடன் கணவனோ மனைவியோ இழைக்கும் துரோகங்கள் இதனால் ஏறபடும் பாதிப்புகள் ஆகியவற்றுடன் தொடர்கள் சுவராஸ்யமாக துவங்கும். பின்னர் இதில் மாமியார் அல்லது மருமகள் அல்லது இரண்டாவது மனைவி அல்லது ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பெண் வில்லியாக உருவாகுவர். படிப்படியாக அவள் கொடிய தீய சக்தியாக உருவெடுப்பதாக கதை அமைக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தினரே அனைத்து மக்களுக்காகவும் பேசுகிறார்கள்.நடுத்தர வர்க்க குடும்பங்களே நாட்டில் அனைத்து மக்களின் பிரதிநிதிகளாகவும் அவர்களின் பிரச்சினைகளை நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகளாகவும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் பண்பாடே அனைத்து மக்களின் பண்பாடாகவும் முன் வைக்கப்படுகிறது.இத்தொடர்களில் பெண்ணுக்கு பெண்னே எதிரியாக இருப்பதாக நம்ப வைக்கிறார்கள். ஒரு பெண் வில்லி பாத்திரம் என நிறுவிட அவள் எப்போதும் சதிகளில் ஈடுபடுவதாகவும் திருமணத்திற்கு முன்னரும் திருமணமாகியும் கள்ள உறவு கொள்வதாகவும் அப்பாத்திரத்தை உருவாக்கிறார்கள். கதாநாயகனை அடைய எல்லாவித வழிகளையும் கையாள்வதாகவும் காண்பிக்கப்படுகிறது. இந்த வில்லிகள் கண்ணை உருட்டி மிரட்டி (குளோசப் ஷாட்டில் தொடர்நது அதிக நேரம் வேறு காட்டி தொலைக்கிறார்கள்) அடியாள்களுக்கு தனது விலையுயர்ந்த செல் போனில் பேசுவதாகவும் அடிக்கடி காட்டுகிறார்கள். பிரம்மாண்டமான பார்ட்டிகளில் கலந்து கொள்பவர்களாகவும் அதிகமான நகை அணிபவர்களாகவும் ஆடம்பர கார்களில் வந்து இறங்குபவாகளாகவும் வேறு காட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிட்டமனநிலையை பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறார்கள். மெகா தொடர்களில் பெண்கள் எப்படி கொடியவர்களாக குரூரமாக காட்டப்படுகின்றனர் என்பதற்கு சமீபத்தில் இந்து நாளேட்டில் (அக்டோபர் 31) மாலதி மோகன் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளதே சிறந்த சான்றாகும். அண்மையில் தெலுங்கு மெகாத்தொடரில் ஒரு சிறுமிக்கு எண்ணெய் குளியல் அளிக்கப்படுகிறது. அப்போது அவளுக்கு அளிக்கப்படும் தலைக்கு தேய்க்கப்படும் சீயக்காய்த்தூளில் கண்களை குருடாக்கும் இராசாயனத்தை வில்லி கலந்து விடுகிறாள். அதன்பின்னர் அதைத் தெரியாக அந்த சிறுமி குளிப்பதை காட்டுகிறார்கள். அந்த சீயக்காய் கண்களில் பட்டு 15 நிமிடம் வரை அந்த சிறுமி எரிச்சல் தாங்க மாட்டாமல் அலறித் துடிக்கிறாள். அதை பார்த்து வில்லி பயங்கரமாக சிரித்து ரசிக்கிறாள். அதற்கு பின்னணி இசை பயங்கரமாக உச்சத்தில் ஒலிக்கிறது .இதை அந்த எழுத்தாளரின் வீட்டிலுள்ளவர்கள் நிலை குத்தியவாறு பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவர்களுடன் இதை எப்படி பார்த்து உங்களால் ரசிக்க முடிகிறது என்று கேள்வி கேட்டு வாக்கு வாதம் செய்ததாக கூறியுள்ளார். தமிழக வில்லிகள் அடியாளை வைத்து பிறரை அடிப்பதை ரசிப்பதை அன்றாடத் தொடர்களில் காணலாம்.

ஏன் இந்த போக்கை அபாயகரமானது என்று குறிப்பிடுகிறோம்? சினிமாவில் வில்லிகளை பார்த்துள்ளளோம். அவர்கள் சினிமா முடிந்து வெளியில் வந்தவிடன் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு விடுவோம். ஆனால் இந்த வில்லிகள் நமது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கும் உணவருந்தும் அறையிலும் படுக்கை அறையிலும் அன்றாடம் ஊடுருவி பாதிப்பது தான் .அந்த பாதிப்பு நீடிப்பதும்தான் பிரச்சினை. குறிப்பாக இளம் தலைமுறையினரையும் ஆண்களையும் உளவியல் ரீதியாக மாற்றுகின்றன. உண்மையில எந்த பெண்களும் அப்படி இல்லை.ஆனால் இப்படி காட்டுவது மூலம் பெண்களுக்கு சுதந்திரமான முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருந்தால் இப்படித்தான் மாறி விடுவார்கள் என்றபடி ஆணாதிக்க மனநிலையிலுள்ள ஆண்களின் அடிமனத்தில் திட்டமிட்டு அச்சத்தை உருவாக்குகிறார்கள்.குடும்பத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிறிய அளவு சுதந்திரதிற்குகூட உலை வைக்கின்றனர்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது பெண்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சிகள் பெண்களின் பிரச்சினைகளை மறந்தும்கூட பேசுவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பெண்களுக்கு எதிரான அவர்களை அடிமைப்படுத்தும் விசயங்களை அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி அளிக்கின்றன என்பது தான் உண்மை. ஏற்கனவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக அணிதிரள்வதும் ஒன்று சேர்வதும் கடினமான ஒன்றாக உள்ளது. .ஆண் தலைமையிலுள்ளதும் ஆணாதிக்க அமைப்பாகவும்  உள்ள சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும்  தடையாக உள்ளது. இந்த நிலையில் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையை வலிமைப்படுத்துகிறது இந்த தொலைக்காட்சிகள். ஒரு வகையில் மிகப்பெரிய போதைப் பொருள் தொழிற்சாலையாக இவை இயங்கி வருகின்றன.

தலித் என்பதால் கிராம பஞ்சாயத்து தலைவரின் மருமகளை “சூனியக்காரி” என்று முத்திரை குத்தினர் ஆதிக்க சாதி ஆண்கள்.

நார்தி பாய், ராஜஸ்தானில் உள்ள ஹர்மாராவின் கிராம பஞ்சாயத்து தலைவர் (sarpanch) ஆவார். ஆதிக்க சாதி ஆண்களின் ஆணைகளுக்கு அடிபணிய மறுத்ததால் அவரது மருமகள் ராம் பியாரியை “சூனியக்காரி” என்று முத்திரைக் குத்தியதோடு, கிராமத்தவர் பியாரியை “சமூக புறக்கணிப்பு” செய்யவும், விலக்கிவைக்கவும் அழைப்பு விடுத்தனர்.

அம்மாநிலத்தில், பஹெதக்காவின் சுனிதா பைவாரா என்பவர் ஒரு  தலித். அவர்,  கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிருப்தி கொண்ட ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டார்.

‘ஆல் இண்டியா தலித் மஹிளா அதிகார் மன்ச்’ எனும் அமைப்பு செவ்வாய்க் கிழமை ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் பொதுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் தலித்துகளாக இருந்தால் எதிர்கொள்கிற பல்வேறு சாதிய பாகுபாட்டையும், வன்கொடுமைகளையும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் பீஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள தலித் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பாகுபாடு ஆகியவை குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

”ஒரு புகாரை காவல் துறையை பதிவு செய்ய வைகக்வே எங்களுக்குப் பல நாட்கள் பிடிக்கிறது.  நான் பாதிக்கப்பட்டுள்ளேன், ஏனென்றால் நான் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவள். என் மாமியார் இந்த கிராமத்திற்கு நிறைய நல்லதை செய்துள்ளார், அதை ஆதிக்க சாதி ஆண்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை தங்கள் வழிக்கு கொண்டு வர முனைந்தனர், என் மாமியார் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்  அவர்கள் என்னை சூனியக்காரி என்றும், மற்றொரு பெண் மேல் பில்லி சூனியம் ஏவியவள் என்றும் பழிக்கின்றனர்” என்றார் ராம் பியாரி.

இதுபோன்ற வன்கொடுமைகளை சந்தித்த பல பிரதிநிதிகள் காவல்துறையினறும், நிர்வாகிகளும் தங்களுக்கு உதவுவதில்லை என்று கூறினர். ஔரங்காபாத் மாவட்ட கவுன்சிலின்  தலைமை அதிகாரியாக அன்றாட நிகழ்வுகள் கூட எனது கவனத்திற்கு எடுத்து வரப்படுவதில்லை, என் சாதியின் காரணமாக எனக்கு ‘பேச்சுரிமை’ இல்லை என்று சொல்லப்படுகிறது” என்று புகார் கூறினார் பீஹாரின், ரஞ்சு தேவி.

அவரது கிராமத்தில் தனது வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் கணவர், ஆதிக்க சாதி ஆண்களால் அடித்து துன்புறுத்தப்பட்டார்.

படிநிலையில் எந்த மாற்றமும் இல்லை

தலித் பெண்களின் நிலை காலம் காலமாக இப்படித்தான் இருந்து வருகிறது என்று சையீதா ஹமீத், திட்டக்குழுமத்தின் உறுப்பினர் இந்த நிகழ்வில் பேசும்போது கூறினார். மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றிணைந்து தலித் பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக நிறைய செய்யவேண்டியுள்ளது. முன்ணேற்றத்திற்கான பல்துறை அணுகுமுறை மற்றும் கொள்கைகளை சரியாக செயல்படுத்தும் வழிமுறைகள் ஆகியவை தேவை.

பல்வேறு சான்றுகளை வைத்து, நடுவர் குழு சில பரிந்துரைகளை முன் வைத்தது.  ஒவ்வொரு மாவாட்டத்திலும், தலித், ஆதிவாசிகள் மற்றும் பெண் பஞ்சாயத்து பிரசிடண்டுகளுக்குதவியாக ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும் அதில் உதவி இயக்க முறைகளை உருவாக்க வேண்டும். இந்த அலுவலகம் மற்ற பஞ்சாயத்து உறுப்பினர்களால், அரசு அதிகாரிகளால் நேரக்கூடிய இடைஞ்சல்களை சமாளிப்பதற்கான ஆலோசனை, பயிற்சி கொடுக்கும். மேலும் அவர்களின் பணிகளையும் கண்காணிக்கும்.

இந்த சிறப்பு அலுவலகம், பஞ்சாயத்து பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இடையீடு செய்து, தீர்வுகளை பரிந்துரைக்க வேண்டும்.

தலித், ஆதிவாசிப்  பெண்களுக்கென மாநில தேர்தல் ஆணையம் தனி நிதியுதவியை தோற்றுவித்து, அவர்களில், சொற்ப வருவாய் மட்டுமே பெரும்  நபர்களுக்கு அடிப்படை தேர்தல் செலவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மற்றொரு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவில் உள்ள ’ரிசர்வ்’ பஞ்சாயத்துகளுக்காக ஒரு தன்னாட்சி சட்ட ஆணையரகத்திற்கான அழைப்பும் விடுக்கபப்ட்டது. இதில் தலித், ஆதிவாசி, பெண் ஐ.ஏ.ஸ். அதிகாரி உள்ளடக்கிய குழு தலைமை தாங்க வேண்டும் மேலும், மாவட்ட அளவில் துணை ஆணையரகங்கள், தலித், ஆதிவாசி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கீழ் வரிசையில் உள்ள அதிகாரிகள் குழுவால் வழிநடத்தப்படவேண்டும். இவர்கள் தலைமை ஆணியரகத்தின் கீழ் பணிபுரிய வேண்டும். இந்த இரண்டு அமைப்புகளும், கவர்னரின் மேற்பார்வையில் உள்ள சட்டமன்றத்தின் சட்ட அதிகார வரம்பின் கீழ் இருக்க வேண்டும். அவர்கள், ரிசர்வ் பஞ்சாயத்துகளின் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய நிகழ்வுகளை, செயல்பாடுகளை கண்காணித்து சட்டமன்றத்திற்கு வருடாந்திர அறிக்கைகளை அளிக்க வேண்டும்.

தலித் ஆண், பெண், ஆதிவாசி மற்றும் இதர பெண் பிரதிநிதிகளின் மீது நடத்தப்படும் வன்கொடுமை மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகள விசாரிக்கும் சிறப்பு உரிமை, தேசிய மற்றும் மாநில பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆணியங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று நடுவர் குழு கோரியது.

எஸ்.சி/எஸ்.டி (POA – வன் கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டம், 1989,  மற்றும் அதை அமலாக்கும் முகவர்களுக்கான சட்ட வரைவை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆங்கிலத்தில் –

ஸ்ம்ருதி காக் ராமச்ந்திரன். (தி ஷிந்து)

புது தில்லி, ஃபிப்ரவரி 8, 2012

தமிழ் மொழிபெயர்ப்பு – கொற்றவை

சுட்டி:

http://www.thehindu.com/news/states/other-states/article2869614.ece

பெண்களுக்கு நீதியை மறுக்கும் ஒழுக்கம் – கோ. சுகுமாரன்

கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் பள்ளியில் நான்கு வயதேயான யூ.கே.ஜி. படிக்கும் குழந்தை மீது அரங்கேற்றப்பட்ட பாலியல் கொடுமைக் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் “சி.பி.ஐ. விசாரணை செய்தால் குழந்தையின் மனநிலைப் பாதிக்கப்படும். தொடக்கத்தில் நடு இரவில்  தூக்கத்தில் அழுவாள். நாங்கள் சமாதானப்படுத்தி தூங்க வைப்போம். தற்போது அவள் தேறி வருகிறாள். அவள் வெளியே போனால் யாராவது அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தினால் அவள் மிகவும் காயப்படுகிறாள். அதனாலேயே அவள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க நேர்கிறது. மற்றவர்கள் செய்த குற்றத்திற்காக நாங்கள் துன்பப்படுகிறோம்” என கூறியுள்ளது  துயரமானது. மேலும், அக்குழந்தையை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டாமென சி.பி.ஐ.யிடம் பெற்றொர்கள் வேண்டியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் திட்டக் கமிஷன் செயலர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சக செயலர்) பாலியல் தொடர்புடைய வழக்குகள் ‘இருவிரல் சோதனை’ செய்வதைத் தடை செய்ய வேண்டுமெனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நோக்கில் திருத்தப்பட்ட வேண்டும்’ எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சம்பவத்தை உறுதி செய்ய இதுபோன்ற ‘இருவிரல் சோதனைகள்’ தடய அறிவியல் துறை மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுவது நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறை. இச்சோதனை முறை காலாவதியானது, பழமையானது எனக்கூறி அதனைக் கைவிட பெண்ணுரிமை இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை பாதிப்பதோடு, அறிவியலுக்குப் அப்பாற்பட்டது, பெண்களை இழிவுப்படுத்துவது எனவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் சார்ந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் போலீசார், நீதிபதிகள், நீதிமன்றங்கள் என பல இடங்களில், மீண்டும் மீண்டும் சம்பவத்தைப் பற்றி வாக்குமூலங்கள் பெறுவது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது எனவும் திட்டக் கமிஷன் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் குழந்தைகள் சார்பில் உளவியல் நிபுணர்களோ அல்லது மருத்துவரோ நீதிமன்றத்தில் சம்பவம் குறித்து சாட்சியம் அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் மனநிலைக் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு பற்றியும் இந்திய அளவில் போதிய விவாதம் நடைபெறவில்லை. 22 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு, பல வழக்குகளைச் சந்தித்து வரும் எனக்கு, இதுபோன்ற தருணங்கள் சவால் நிறைந்தவையாக அமையும். இவற்றையெல்லாம் தாண்டிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்க நீண்ட தூரம் போராட வேண்டியுள்ளது.

இதில் மக்களின் மத்தியதர மனநிலையும் முக்கிய செயல்படுகிறது. பெண்கள் எப்போதும் கற்போடு, ஒழுக்கம் நிறைந்தவளாகவே இருக்க வேண்டுமென்கிற கருத்தாக்கம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிக் கிடைக்க தடையாக உள்ளது. பாலியல் குற்றம் நிகழ்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தன்னை வெளியே அடையாளப்படுத்திக் கொண்டால் அது அக்குற்றம் ஏற்படுத்தும் துன்பத்தைவிட அதனைச் சமூகம் எதிர்கொள்ளூம் விதம் அதனினும் கொடுமையானது. இதுகுறித்து பொதுவெளியில் விவாதம் தேவைப்படுகிறது.

ஆனால், அடித்தட்டுப் பெண்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொன்னால் பழங்குடியின பெண்கள் தங்கள் மீதான பாலியல் வன்கொடுமையை வெளிப்படையாக போட்டுடைத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதும், எக்காலத்திலும் உண்மையைப் பேசியும், சமரசமின்றி, நியாயம் கிடைக்கும் வரை உறுதியாக இருப்பதும் அவர்களுக்காகப் போராடுவதை எளிதாக்குகிறது.

பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா புதுச்சேரி போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு முதல் இன்றைக்கு திருக்கோவிலூர் போலீசார் நான்கு இருளர் இனப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு வரையிலும் பாதிக்கப்பட்டவர்களின் வெளிப்படைத்தன்மை  கவனிக்கப்பட வேண்டியது. திருக்கோவிலூர் சம்பவம் குறித்து புகார் அளித்துவிட்டு விழுப்புரம் எஸ்.பி. அலுவலகம் முன்னால் பாதிக்கப்பட்ட இருளர் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதலைக் காட்சி ஊடகங்களுக்குப் பச்சையாக விவரித்தது காவல்துறையை தோலுரித்து அம்பலப்படுத்தியது. அவர்கள் வெளிப்படையாக பேசியதே உலக கவனத்தை ஈர்த்தது. அதுவே அவர்களுக்கு ஓரளவுக்கு நீதிக் கிடைக்க உதவக்கூடும்.

இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களில் நேரடியாக கூறும் வாக்குமூலங்கள் பார்ப்பவர்களிடையே அனுதாபத்தையும், கோபத்தையும், நம்பகத்தன்னையையும் ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் நிரப்பட்ட தாள்களை நம்பியே அனைத்தையும் தீர்மானிக்கும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் கருத்துருவாக்கவும் உதவுகிறது. நீதி வழங்கு முறை புதிரான பல கேள்விகள் நிறைந்தது. நீதி வழங்குபவரின் மனநிலையே பல சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் நீதியைத் தீர்மானிக்கிறது.

திருக்கோவிலூர் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதற்காக தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் “ஏன் இன்னமும் குற்றமிழைத்த போலீசாரை கைது செய்யவில்லை, சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி, போலீசுக்கு ஒரு நீதியா?” என கேள்வியெழுப்பி தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் அரசு அசைந்துக் கொடுக்கவில்லை. குற்றவாளிப் போலீசார் சுதந்தரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல இதுபோன்ற கவனம் பெற்ற வழக்குகளில் சாட்சிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அதனினும் கடுமையான, ஆபத்து நிறைந்த பணியாகிறது. மேலவளவு, சென்னகரம்பட்டி என தலித்துகள் மீதான அடக்குமுறை ஏவப்பட்ட வழக்குகளில் வழக்கறிஞர் இரத்தினம் போன்றவர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்று தர எதிர்க்கொண்ட நெருக்கடிகளை நான் அருகிலிருந்து அறிந்தவன்.

குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் முக்கிய சாட்சியான ஜகீராவுக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. மது ஸ்ரீவஸ்தவா ரூ. 18 லட்சம் லஞ்சம் கொடுத்ததை தெகல்கா நிறுவனம் வீடியோ காட்சி மூலம் அம்பலப்படுத்தியது. இதனால், வழக்குப் பாதிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிப்பது ஒருபுறம் என்றால், குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு நீதிக் கிடைக்கப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா மீதே புகார் கூறப்பட்டது வேதனைக்குரியது. அவர் தன்னைக் காப்பாற்றி கொள்ள உச்சநீதிமன்றம் சென்று போராட வேண்டியிருந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தினுள் சாட்சிக் கூண்டில், குற்றவாளிகளுக்கு ஆஜராகும் திறமையான ‘கிரிமினல்’ வழக்கறிஞர்களால் கேள்விக் கேட்டுத் துளைக்கப்படும் போது அவர் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். தர்மபுரி மாவட்டம் தளியில் கல்பனா சுமதி என்ற ஆசிரியை போலீசாரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விக்கு கூனிக்குறுகி சொல்வதறியாது ‘ஒருகட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தேன்’ எனக் கூறினார். இந்த ஒரு வாக்கியத்தை முன்வைத்தே அவர் விரும்பித்தான் போலீசாரோடு உறவுக் கொண்டார் என வழக்கறிஞர்கள் வாதிட்டதை நாம் எப்படி எதிர்கொள்வது.

அரசால் நியமிக்கப்பட்ட சட்டக் கமிஷன்கள், மாலிமத் கமிட்டி போன்றவை சாட்சிகளைப் பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் கொண்டு வர செய்த பரிந்துரைகள் காற்றில் பறந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வழக்கின் முதுகெலும்பே சாட்சிகளும், சான்றுப் பொருள்களும்தான் என்பது சட்டம் அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல சாமனியர்களுக்கும் தெரியும். பல சந்தர்ப்பங்களில் சாட்சிகள் குற்றவாளிகளால் கொல்லப்படுவதும் உண்டு. இதனால், சாட்சி சொல்ல வருபவர்கள் அச்சப்பட்டு விலகி ஓடுவதும் பரவலாக நிகழ்கிறது. இவை தற்போதைய நீதி வழங்கும் முறையையே சீர்குலைக்கிறது.

இன்றைய சமூக, அரசியல் சூழலில் வழக்குப் பதியவே காவல்துறையினரிடம் போராட வேண்டியுள்ளது. அதன்பின்னர் வழக்கு புலன் விசாரணை முழுமையடைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது அரிதானது. நீதிமன்றத்தில் சாட்சிகளை முன்னிறுத்தி, வழக்கைத் திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனைக் கிடைக்கச் செய்வது எளிதானதல்ல. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என சட்டப் போராட்டம் நடத்த ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அதற்கென நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்குவது வெகுமக்களுக்கு சாத்தியமற்றது. பொதுவான நிலையே இவ்வாறிருக்க குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக தொடர்ந்துப் போராடி வெற்றிப் பெறுவது அரிதிலும் அரிதானது.

சமூகம் பெண்களை எதிர்கொள்ளூம் பாகுபாடு கொண்ட விதம் சகல தளங்களிலும் எதிரொலிப்பதால், பெண்கள் பாதிக்கப்படும் போது நீதிக் கிடைக்க கடைசி வரை போராட வேண்டியுள்ளது. பெண்கள் ‘விடுதலை மனநிலை’ பெறுவதும், அதற்காக கருத்துருவாக்கம் செய்வதும், விடாது போராடுவதும் அவசியமாகிறது. இதன் முன் நிபந்தனையாக ஒழுக்கம் சார்ந்த சமூகத்தில் நிலவுகிற பிற்போக்கு மனநிலை மாற்றப்பட வேண்டும்.

____________

* Below references are posted by Kotravai:

*The pic of the girl in this post is taken from rawa.org  – in post titled 10 year Old Naznin claims she was raped…

 related links:

http://ab.nalv.in/tag/assault-on-mandapam-irular-women-a-detailed-report/

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/cbi-probe-girl-sex-abuse-case-778

http://sites.google.com/site/savenazanin/

http://www.stopfundamentalism.com/index.php?option=com_content&task=view&id=290&Itemid=71

http://childsexualabuseinindia.blogspot.com/2012/01/its-trial-by-fire-for-kids.html