Category Archives: தமிழ் கட்டுரைகள்

தொலைக்காட்சி பயங்கரவாதம் – பகுதி – 3

மெகாத்தொடர்கள்

 இந்த மெகாத்தொடர்கள் ஏன் வெற்றி பெறுகின்றன? என்பது குறித்து நடத்தப்பட்ட உளவியல் ஆய்களில் வெளியிடப்பட்ட சில காரண்ங்கள்

பெரும்பாலான பெண்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாத வீட்டு வேலைகளின்  சுமைகளில் மூழ்கி முடங்கி போகின்றனர். இவர்களுக்கான உணர்வுகளுக்கான வடிகாலாகவே தொடர்கள் விளங்குகின்றன. எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் சமூகத்திலும் குடும்பத்திலும் அவள் அறிவிற்காக என்றுமே அங்கீகரித்து நடத்தப்படுவதில்லை. அவள் இரத்தமும் சதையும் கொண்ட மனுஷியாக நடத்தப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் தொடர்களில் வரும் கதாநாயகிகள் அறிவாளிகளாகவும் தலைமைப்பண்பு உடையவர்களாகவும் மிக மிக  நேர்மையாளர்களாகவும், அதே சமயத்தில் குடும்ப அமைப்பிற்குள் நல்ல குடும்ப பெண்ணாகவும் காட்டப்படுவதால் பெண் பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரத்துடன் அய்க்கியப்படுத்திக் கொள்கின்றன. கதாபாத்திரங்களாக உள்ள ராதிகாவின் அல்லது தேவயானியின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அவள் தோல்வி கண்டால் அவளது துன்பத்தில் இவர்கள் துன்பமுற்று கண்ணீர் வடிக்கிறார்கள். குடும்பம் என்ற அமைப்பிற்கு சிறிது கூட சலனம் ஏற்படாமல் கணவனுக்கு சேவை செய்வதற்காகவே வாழ்கின்ற பதிவிரதைகளாக புகுந்த வீட்டாரின் மகிழ்ச்சியில் தனது மகிழ்ச்சியை காண்பவர்களாக வாழ்ந்து காட்டுவது அதே போல சமூகத்திலுள் பெண் பார்வையாளர்களை வசீகரப்படுத்தி விடுகிறது. அதே சமயத்தில் பார்வையாளர்களை மேலும் ஈர்ப்பதற்கு குடும்ப ஆணாதிக்க  வரம்பிற்குள் கதாநாயகிகள் சிறிது எதிர்ப்பைக் காட்டுவார்கள். பின்னர் சமரசப்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். அக்குடும்பத்தில் அனைத்து பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அதிசய பிறவிகளாக ஆபத்து வரும்போதேல்லாம் எம்.ஜி.ஆர் போல அங்கு தோன்றி அவர்களை காப்பாற்றுகின்றனர்.ஒரு பெண் எம்.ஜி.ஆராக  வலம் வருவதால் இந்த கதாபாத்திரங்கள் நேசிக்கப்படவும் தொடங்குகின்றனர்.இதே காரணத்தால்தான் ராதிகாவை  வைத்து கொலைகார கோலா கம்பெனி விளம்பரம் செய்து மீண்டும் அனைத்து மக்களையும் இந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் காட்டும்போது குறிப்பாக தலித் மக்கள் மீனவர்கள் சிறுபான்மையினராகிய கிருத்துவர்கள் மற்றும இஸ்லாமிய சமூகத்தினர் ஆகியோரைக் சித்தரிக்கும்போது யதார்த்தில் இல்லாதபடி, விநோதமானவர்களாக சித்தரிப்பர். தலித் மக்களாக இருந்தால் அவர்கள் கருப்பான நிறம் கொண்டவர்களாக இருப்பர். கிழிந்த உடையுடன், சேரியிலுள்ளவர்களாகவும் உதிரித்தனமான வேலைகளை செய்பவர்களாகவும்  காட்டப்படுவர்.இது ஆதிக்க சாதியினரின் நிறவெறி மனப்பான்மையாகும். பெரும்பாலும் தலித் மக்கள் உழைப்பாளிக்குரிய அழகுடன் சாதி இந்துக்களைவிட நல்ல உடை அணிவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால் ஆதிக்க மனப்பான்மையுட்ன் அவர்கள் எப்போதும்  பரிதாபமான தோற்றத்துடனே சித்தரிக்கப்படுகிறார்கள்.சின்னத்திரையினரின் இந்த பார்முலா பெரிய திரையினரிடமிருந்து பெறப்பட்டதே.

 

கிருத்துவர்களாக இருந்தால் சிலுவையை அது வெளியில் தெரியும் படி மாட்டிக்கொண்டு வலம் வருவதாக காண்பிப்பதும் முஸ்லீமாக இருந்தால் தலையில் குல்லா அணிந்து இருப்பதாக காட்டுவதும் இந்துத்துவ மனப்பான்மையே. (நடைமுறையில் இறைவழிப்பாட்டில் இருக்கும்போது மட்டுமே அவர்கள் மத அடையாளங்களுடன் இருக்கின்றனர்)

இன்னொரு முக்கிய விசயம். கடந்த பத்தாண்டுகளாக தொடர்களை தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள் ஒரு மாற்றத்தை கவனிக்க முடியும்.அந்த மாற்றம் அபாயகரமான மாற்றமாகும். அது பெண் வில்லிகள் ஆண் வில்லன்களுக்கு நிகரான கொடூரமானவர்களாகவும் உருவாக்கப்பட்டு வருவதுதான்.

அடக்கி ஒடுக்கத்துடன் உள்ள பெண்கள் அதிகம் எண்ணிக்கையில் வலம் வரும் தொடரில் இவர்கள் மிகவும் வேறுபட்டு படைக்கபடுகின்றனர், எப்படி?

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே அன்றாடம் நடைபெறும் பரிமாற்றங்கள், உறவில் ஏற்படும் மனக்கசப்புகள் மற்றும் விரிசல்கள், கள்ள உறவுடன் கணவனோ மனைவியோ இழைக்கும் துரோகங்கள் இதனால் ஏறபடும் பாதிப்புகள் ஆகியவற்றுடன் தொடர்கள் சுவராஸ்யமாக துவங்கும். பின்னர் இதில் மாமியார் அல்லது மருமகள் அல்லது இரண்டாவது மனைவி அல்லது ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பெண் வில்லியாக உருவாகுவர். படிப்படியாக அவள் கொடிய தீய சக்தியாக உருவெடுப்பதாக கதை அமைக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தினரே அனைத்து மக்களுக்காகவும் பேசுகிறார்கள்.நடுத்தர வர்க்க குடும்பங்களே நாட்டில் அனைத்து மக்களின் பிரதிநிதிகளாகவும் அவர்களின் பிரச்சினைகளை நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகளாகவும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் பண்பாடே அனைத்து மக்களின் பண்பாடாகவும் முன் வைக்கப்படுகிறது.இத்தொடர்களில் பெண்ணுக்கு பெண்னே எதிரியாக இருப்பதாக நம்ப வைக்கிறார்கள். ஒரு பெண் வில்லி பாத்திரம் என நிறுவிட அவள் எப்போதும் சதிகளில் ஈடுபடுவதாகவும் திருமணத்திற்கு முன்னரும் திருமணமாகியும் கள்ள உறவு கொள்வதாகவும் அப்பாத்திரத்தை உருவாக்கிறார்கள். கதாநாயகனை அடைய எல்லாவித வழிகளையும் கையாள்வதாகவும் காண்பிக்கப்படுகிறது. இந்த வில்லிகள் கண்ணை உருட்டி மிரட்டி (குளோசப் ஷாட்டில் தொடர்நது அதிக நேரம் வேறு காட்டி தொலைக்கிறார்கள்) அடியாள்களுக்கு தனது விலையுயர்ந்த செல் போனில் பேசுவதாகவும் அடிக்கடி காட்டுகிறார்கள். பிரம்மாண்டமான பார்ட்டிகளில் கலந்து கொள்பவர்களாகவும் அதிகமான நகை அணிபவர்களாகவும் ஆடம்பர கார்களில் வந்து இறங்குபவாகளாகவும் வேறு காட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிட்டமனநிலையை பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறார்கள். மெகா தொடர்களில் பெண்கள் எப்படி கொடியவர்களாக குரூரமாக காட்டப்படுகின்றனர் என்பதற்கு சமீபத்தில் இந்து நாளேட்டில் (அக்டோபர் 31) மாலதி மோகன் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளதே சிறந்த சான்றாகும். அண்மையில் தெலுங்கு மெகாத்தொடரில் ஒரு சிறுமிக்கு எண்ணெய் குளியல் அளிக்கப்படுகிறது. அப்போது அவளுக்கு அளிக்கப்படும் தலைக்கு தேய்க்கப்படும் சீயக்காய்த்தூளில் கண்களை குருடாக்கும் இராசாயனத்தை வில்லி கலந்து விடுகிறாள். அதன்பின்னர் அதைத் தெரியாக அந்த சிறுமி குளிப்பதை காட்டுகிறார்கள். அந்த சீயக்காய் கண்களில் பட்டு 15 நிமிடம் வரை அந்த சிறுமி எரிச்சல் தாங்க மாட்டாமல் அலறித் துடிக்கிறாள். அதை பார்த்து வில்லி பயங்கரமாக சிரித்து ரசிக்கிறாள். அதற்கு பின்னணி இசை பயங்கரமாக உச்சத்தில் ஒலிக்கிறது .இதை அந்த எழுத்தாளரின் வீட்டிலுள்ளவர்கள் நிலை குத்தியவாறு பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவர்களுடன் இதை எப்படி பார்த்து உங்களால் ரசிக்க முடிகிறது என்று கேள்வி கேட்டு வாக்கு வாதம் செய்ததாக கூறியுள்ளார். தமிழக வில்லிகள் அடியாளை வைத்து பிறரை அடிப்பதை ரசிப்பதை அன்றாடத் தொடர்களில் காணலாம்.

ஏன் இந்த போக்கை அபாயகரமானது என்று குறிப்பிடுகிறோம்? சினிமாவில் வில்லிகளை பார்த்துள்ளளோம். அவர்கள் சினிமா முடிந்து வெளியில் வந்தவிடன் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு விடுவோம். ஆனால் இந்த வில்லிகள் நமது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கும் உணவருந்தும் அறையிலும் படுக்கை அறையிலும் அன்றாடம் ஊடுருவி பாதிப்பது தான் .அந்த பாதிப்பு நீடிப்பதும்தான் பிரச்சினை. குறிப்பாக இளம் தலைமுறையினரையும் ஆண்களையும் உளவியல் ரீதியாக மாற்றுகின்றன. உண்மையில எந்த பெண்களும் அப்படி இல்லை.ஆனால் இப்படி காட்டுவது மூலம் பெண்களுக்கு சுதந்திரமான முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருந்தால் இப்படித்தான் மாறி விடுவார்கள் என்றபடி ஆணாதிக்க மனநிலையிலுள்ள ஆண்களின் அடிமனத்தில் திட்டமிட்டு அச்சத்தை உருவாக்குகிறார்கள்.குடும்பத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிறிய அளவு சுதந்திரதிற்குகூட உலை வைக்கின்றனர்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது பெண்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சிகள் பெண்களின் பிரச்சினைகளை மறந்தும்கூட பேசுவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பெண்களுக்கு எதிரான அவர்களை அடிமைப்படுத்தும் விசயங்களை அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி அளிக்கின்றன என்பது தான் உண்மை. ஏற்கனவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக அணிதிரள்வதும் ஒன்று சேர்வதும் கடினமான ஒன்றாக உள்ளது. .ஆண் தலைமையிலுள்ளதும் ஆணாதிக்க அமைப்பாகவும்  உள்ள சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும்  தடையாக உள்ளது. இந்த நிலையில் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையை வலிமைப்படுத்துகிறது இந்த தொலைக்காட்சிகள். ஒரு வகையில் மிகப்பெரிய போதைப் பொருள் தொழிற்சாலையாக இவை இயங்கி வருகின்றன.

தலித் என்பதால் கிராம பஞ்சாயத்து தலைவரின் மருமகளை “சூனியக்காரி” என்று முத்திரை குத்தினர் ஆதிக்க சாதி ஆண்கள்.

நார்தி பாய், ராஜஸ்தானில் உள்ள ஹர்மாராவின் கிராம பஞ்சாயத்து தலைவர் (sarpanch) ஆவார். ஆதிக்க சாதி ஆண்களின் ஆணைகளுக்கு அடிபணிய மறுத்ததால் அவரது மருமகள் ராம் பியாரியை “சூனியக்காரி” என்று முத்திரைக் குத்தியதோடு, கிராமத்தவர் பியாரியை “சமூக புறக்கணிப்பு” செய்யவும், விலக்கிவைக்கவும் அழைப்பு விடுத்தனர்.

அம்மாநிலத்தில், பஹெதக்காவின் சுனிதா பைவாரா என்பவர் ஒரு  தலித். அவர்,  கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிருப்தி கொண்ட ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டார்.

‘ஆல் இண்டியா தலித் மஹிளா அதிகார் மன்ச்’ எனும் அமைப்பு செவ்வாய்க் கிழமை ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் பொதுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் தலித்துகளாக இருந்தால் எதிர்கொள்கிற பல்வேறு சாதிய பாகுபாட்டையும், வன்கொடுமைகளையும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் பீஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள தலித் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பாகுபாடு ஆகியவை குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

”ஒரு புகாரை காவல் துறையை பதிவு செய்ய வைகக்வே எங்களுக்குப் பல நாட்கள் பிடிக்கிறது.  நான் பாதிக்கப்பட்டுள்ளேன், ஏனென்றால் நான் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவள். என் மாமியார் இந்த கிராமத்திற்கு நிறைய நல்லதை செய்துள்ளார், அதை ஆதிக்க சாதி ஆண்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை தங்கள் வழிக்கு கொண்டு வர முனைந்தனர், என் மாமியார் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்  அவர்கள் என்னை சூனியக்காரி என்றும், மற்றொரு பெண் மேல் பில்லி சூனியம் ஏவியவள் என்றும் பழிக்கின்றனர்” என்றார் ராம் பியாரி.

இதுபோன்ற வன்கொடுமைகளை சந்தித்த பல பிரதிநிதிகள் காவல்துறையினறும், நிர்வாகிகளும் தங்களுக்கு உதவுவதில்லை என்று கூறினர். ஔரங்காபாத் மாவட்ட கவுன்சிலின்  தலைமை அதிகாரியாக அன்றாட நிகழ்வுகள் கூட எனது கவனத்திற்கு எடுத்து வரப்படுவதில்லை, என் சாதியின் காரணமாக எனக்கு ‘பேச்சுரிமை’ இல்லை என்று சொல்லப்படுகிறது” என்று புகார் கூறினார் பீஹாரின், ரஞ்சு தேவி.

அவரது கிராமத்தில் தனது வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் கணவர், ஆதிக்க சாதி ஆண்களால் அடித்து துன்புறுத்தப்பட்டார்.

படிநிலையில் எந்த மாற்றமும் இல்லை

தலித் பெண்களின் நிலை காலம் காலமாக இப்படித்தான் இருந்து வருகிறது என்று சையீதா ஹமீத், திட்டக்குழுமத்தின் உறுப்பினர் இந்த நிகழ்வில் பேசும்போது கூறினார். மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றிணைந்து தலித் பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக நிறைய செய்யவேண்டியுள்ளது. முன்ணேற்றத்திற்கான பல்துறை அணுகுமுறை மற்றும் கொள்கைகளை சரியாக செயல்படுத்தும் வழிமுறைகள் ஆகியவை தேவை.

பல்வேறு சான்றுகளை வைத்து, நடுவர் குழு சில பரிந்துரைகளை முன் வைத்தது.  ஒவ்வொரு மாவாட்டத்திலும், தலித், ஆதிவாசிகள் மற்றும் பெண் பஞ்சாயத்து பிரசிடண்டுகளுக்குதவியாக ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும் அதில் உதவி இயக்க முறைகளை உருவாக்க வேண்டும். இந்த அலுவலகம் மற்ற பஞ்சாயத்து உறுப்பினர்களால், அரசு அதிகாரிகளால் நேரக்கூடிய இடைஞ்சல்களை சமாளிப்பதற்கான ஆலோசனை, பயிற்சி கொடுக்கும். மேலும் அவர்களின் பணிகளையும் கண்காணிக்கும்.

இந்த சிறப்பு அலுவலகம், பஞ்சாயத்து பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இடையீடு செய்து, தீர்வுகளை பரிந்துரைக்க வேண்டும்.

தலித், ஆதிவாசிப்  பெண்களுக்கென மாநில தேர்தல் ஆணையம் தனி நிதியுதவியை தோற்றுவித்து, அவர்களில், சொற்ப வருவாய் மட்டுமே பெரும்  நபர்களுக்கு அடிப்படை தேர்தல் செலவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மற்றொரு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவில் உள்ள ’ரிசர்வ்’ பஞ்சாயத்துகளுக்காக ஒரு தன்னாட்சி சட்ட ஆணையரகத்திற்கான அழைப்பும் விடுக்கபப்ட்டது. இதில் தலித், ஆதிவாசி, பெண் ஐ.ஏ.ஸ். அதிகாரி உள்ளடக்கிய குழு தலைமை தாங்க வேண்டும் மேலும், மாவட்ட அளவில் துணை ஆணையரகங்கள், தலித், ஆதிவாசி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கீழ் வரிசையில் உள்ள அதிகாரிகள் குழுவால் வழிநடத்தப்படவேண்டும். இவர்கள் தலைமை ஆணியரகத்தின் கீழ் பணிபுரிய வேண்டும். இந்த இரண்டு அமைப்புகளும், கவர்னரின் மேற்பார்வையில் உள்ள சட்டமன்றத்தின் சட்ட அதிகார வரம்பின் கீழ் இருக்க வேண்டும். அவர்கள், ரிசர்வ் பஞ்சாயத்துகளின் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய நிகழ்வுகளை, செயல்பாடுகளை கண்காணித்து சட்டமன்றத்திற்கு வருடாந்திர அறிக்கைகளை அளிக்க வேண்டும்.

தலித் ஆண், பெண், ஆதிவாசி மற்றும் இதர பெண் பிரதிநிதிகளின் மீது நடத்தப்படும் வன்கொடுமை மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகள விசாரிக்கும் சிறப்பு உரிமை, தேசிய மற்றும் மாநில பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆணியங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று நடுவர் குழு கோரியது.

எஸ்.சி/எஸ்.டி (POA – வன் கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டம், 1989,  மற்றும் அதை அமலாக்கும் முகவர்களுக்கான சட்ட வரைவை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆங்கிலத்தில் –

ஸ்ம்ருதி காக் ராமச்ந்திரன். (தி ஷிந்து)

புது தில்லி, ஃபிப்ரவரி 8, 2012

தமிழ் மொழிபெயர்ப்பு – கொற்றவை

சுட்டி:

http://www.thehindu.com/news/states/other-states/article2869614.ece

பெண்களுக்கு நீதியை மறுக்கும் ஒழுக்கம் – கோ. சுகுமாரன்

கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் பள்ளியில் நான்கு வயதேயான யூ.கே.ஜி. படிக்கும் குழந்தை மீது அரங்கேற்றப்பட்ட பாலியல் கொடுமைக் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் “சி.பி.ஐ. விசாரணை செய்தால் குழந்தையின் மனநிலைப் பாதிக்கப்படும். தொடக்கத்தில் நடு இரவில்  தூக்கத்தில் அழுவாள். நாங்கள் சமாதானப்படுத்தி தூங்க வைப்போம். தற்போது அவள் தேறி வருகிறாள். அவள் வெளியே போனால் யாராவது அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தினால் அவள் மிகவும் காயப்படுகிறாள். அதனாலேயே அவள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க நேர்கிறது. மற்றவர்கள் செய்த குற்றத்திற்காக நாங்கள் துன்பப்படுகிறோம்” என கூறியுள்ளது  துயரமானது. மேலும், அக்குழந்தையை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டாமென சி.பி.ஐ.யிடம் பெற்றொர்கள் வேண்டியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் திட்டக் கமிஷன் செயலர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சக செயலர்) பாலியல் தொடர்புடைய வழக்குகள் ‘இருவிரல் சோதனை’ செய்வதைத் தடை செய்ய வேண்டுமெனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நோக்கில் திருத்தப்பட்ட வேண்டும்’ எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சம்பவத்தை உறுதி செய்ய இதுபோன்ற ‘இருவிரல் சோதனைகள்’ தடய அறிவியல் துறை மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுவது நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறை. இச்சோதனை முறை காலாவதியானது, பழமையானது எனக்கூறி அதனைக் கைவிட பெண்ணுரிமை இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை பாதிப்பதோடு, அறிவியலுக்குப் அப்பாற்பட்டது, பெண்களை இழிவுப்படுத்துவது எனவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் சார்ந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் போலீசார், நீதிபதிகள், நீதிமன்றங்கள் என பல இடங்களில், மீண்டும் மீண்டும் சம்பவத்தைப் பற்றி வாக்குமூலங்கள் பெறுவது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது எனவும் திட்டக் கமிஷன் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் குழந்தைகள் சார்பில் உளவியல் நிபுணர்களோ அல்லது மருத்துவரோ நீதிமன்றத்தில் சம்பவம் குறித்து சாட்சியம் அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் மனநிலைக் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு பற்றியும் இந்திய அளவில் போதிய விவாதம் நடைபெறவில்லை. 22 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு, பல வழக்குகளைச் சந்தித்து வரும் எனக்கு, இதுபோன்ற தருணங்கள் சவால் நிறைந்தவையாக அமையும். இவற்றையெல்லாம் தாண்டிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்க நீண்ட தூரம் போராட வேண்டியுள்ளது.

இதில் மக்களின் மத்தியதர மனநிலையும் முக்கிய செயல்படுகிறது. பெண்கள் எப்போதும் கற்போடு, ஒழுக்கம் நிறைந்தவளாகவே இருக்க வேண்டுமென்கிற கருத்தாக்கம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிக் கிடைக்க தடையாக உள்ளது. பாலியல் குற்றம் நிகழ்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தன்னை வெளியே அடையாளப்படுத்திக் கொண்டால் அது அக்குற்றம் ஏற்படுத்தும் துன்பத்தைவிட அதனைச் சமூகம் எதிர்கொள்ளூம் விதம் அதனினும் கொடுமையானது. இதுகுறித்து பொதுவெளியில் விவாதம் தேவைப்படுகிறது.

ஆனால், அடித்தட்டுப் பெண்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொன்னால் பழங்குடியின பெண்கள் தங்கள் மீதான பாலியல் வன்கொடுமையை வெளிப்படையாக போட்டுடைத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதும், எக்காலத்திலும் உண்மையைப் பேசியும், சமரசமின்றி, நியாயம் கிடைக்கும் வரை உறுதியாக இருப்பதும் அவர்களுக்காகப் போராடுவதை எளிதாக்குகிறது.

பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா புதுச்சேரி போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு முதல் இன்றைக்கு திருக்கோவிலூர் போலீசார் நான்கு இருளர் இனப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு வரையிலும் பாதிக்கப்பட்டவர்களின் வெளிப்படைத்தன்மை  கவனிக்கப்பட வேண்டியது. திருக்கோவிலூர் சம்பவம் குறித்து புகார் அளித்துவிட்டு விழுப்புரம் எஸ்.பி. அலுவலகம் முன்னால் பாதிக்கப்பட்ட இருளர் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதலைக் காட்சி ஊடகங்களுக்குப் பச்சையாக விவரித்தது காவல்துறையை தோலுரித்து அம்பலப்படுத்தியது. அவர்கள் வெளிப்படையாக பேசியதே உலக கவனத்தை ஈர்த்தது. அதுவே அவர்களுக்கு ஓரளவுக்கு நீதிக் கிடைக்க உதவக்கூடும்.

இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களில் நேரடியாக கூறும் வாக்குமூலங்கள் பார்ப்பவர்களிடையே அனுதாபத்தையும், கோபத்தையும், நம்பகத்தன்னையையும் ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் நிரப்பட்ட தாள்களை நம்பியே அனைத்தையும் தீர்மானிக்கும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் கருத்துருவாக்கவும் உதவுகிறது. நீதி வழங்கு முறை புதிரான பல கேள்விகள் நிறைந்தது. நீதி வழங்குபவரின் மனநிலையே பல சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் நீதியைத் தீர்மானிக்கிறது.

திருக்கோவிலூர் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதற்காக தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் “ஏன் இன்னமும் குற்றமிழைத்த போலீசாரை கைது செய்யவில்லை, சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி, போலீசுக்கு ஒரு நீதியா?” என கேள்வியெழுப்பி தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் அரசு அசைந்துக் கொடுக்கவில்லை. குற்றவாளிப் போலீசார் சுதந்தரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல இதுபோன்ற கவனம் பெற்ற வழக்குகளில் சாட்சிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அதனினும் கடுமையான, ஆபத்து நிறைந்த பணியாகிறது. மேலவளவு, சென்னகரம்பட்டி என தலித்துகள் மீதான அடக்குமுறை ஏவப்பட்ட வழக்குகளில் வழக்கறிஞர் இரத்தினம் போன்றவர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்று தர எதிர்க்கொண்ட நெருக்கடிகளை நான் அருகிலிருந்து அறிந்தவன்.

குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் முக்கிய சாட்சியான ஜகீராவுக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. மது ஸ்ரீவஸ்தவா ரூ. 18 லட்சம் லஞ்சம் கொடுத்ததை தெகல்கா நிறுவனம் வீடியோ காட்சி மூலம் அம்பலப்படுத்தியது. இதனால், வழக்குப் பாதிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிப்பது ஒருபுறம் என்றால், குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு நீதிக் கிடைக்கப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா மீதே புகார் கூறப்பட்டது வேதனைக்குரியது. அவர் தன்னைக் காப்பாற்றி கொள்ள உச்சநீதிமன்றம் சென்று போராட வேண்டியிருந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தினுள் சாட்சிக் கூண்டில், குற்றவாளிகளுக்கு ஆஜராகும் திறமையான ‘கிரிமினல்’ வழக்கறிஞர்களால் கேள்விக் கேட்டுத் துளைக்கப்படும் போது அவர் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். தர்மபுரி மாவட்டம் தளியில் கல்பனா சுமதி என்ற ஆசிரியை போலீசாரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விக்கு கூனிக்குறுகி சொல்வதறியாது ‘ஒருகட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தேன்’ எனக் கூறினார். இந்த ஒரு வாக்கியத்தை முன்வைத்தே அவர் விரும்பித்தான் போலீசாரோடு உறவுக் கொண்டார் என வழக்கறிஞர்கள் வாதிட்டதை நாம் எப்படி எதிர்கொள்வது.

அரசால் நியமிக்கப்பட்ட சட்டக் கமிஷன்கள், மாலிமத் கமிட்டி போன்றவை சாட்சிகளைப் பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் கொண்டு வர செய்த பரிந்துரைகள் காற்றில் பறந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வழக்கின் முதுகெலும்பே சாட்சிகளும், சான்றுப் பொருள்களும்தான் என்பது சட்டம் அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல சாமனியர்களுக்கும் தெரியும். பல சந்தர்ப்பங்களில் சாட்சிகள் குற்றவாளிகளால் கொல்லப்படுவதும் உண்டு. இதனால், சாட்சி சொல்ல வருபவர்கள் அச்சப்பட்டு விலகி ஓடுவதும் பரவலாக நிகழ்கிறது. இவை தற்போதைய நீதி வழங்கும் முறையையே சீர்குலைக்கிறது.

இன்றைய சமூக, அரசியல் சூழலில் வழக்குப் பதியவே காவல்துறையினரிடம் போராட வேண்டியுள்ளது. அதன்பின்னர் வழக்கு புலன் விசாரணை முழுமையடைந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது அரிதானது. நீதிமன்றத்தில் சாட்சிகளை முன்னிறுத்தி, வழக்கைத் திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனைக் கிடைக்கச் செய்வது எளிதானதல்ல. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என சட்டப் போராட்டம் நடத்த ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அதற்கென நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்குவது வெகுமக்களுக்கு சாத்தியமற்றது. பொதுவான நிலையே இவ்வாறிருக்க குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக தொடர்ந்துப் போராடி வெற்றிப் பெறுவது அரிதிலும் அரிதானது.

சமூகம் பெண்களை எதிர்கொள்ளூம் பாகுபாடு கொண்ட விதம் சகல தளங்களிலும் எதிரொலிப்பதால், பெண்கள் பாதிக்கப்படும் போது நீதிக் கிடைக்க கடைசி வரை போராட வேண்டியுள்ளது. பெண்கள் ‘விடுதலை மனநிலை’ பெறுவதும், அதற்காக கருத்துருவாக்கம் செய்வதும், விடாது போராடுவதும் அவசியமாகிறது. இதன் முன் நிபந்தனையாக ஒழுக்கம் சார்ந்த சமூகத்தில் நிலவுகிற பிற்போக்கு மனநிலை மாற்றப்பட வேண்டும்.

____________

* Below references are posted by Kotravai:

*The pic of the girl in this post is taken from rawa.org  – in post titled 10 year Old Naznin claims she was raped…

 related links:

http://ab.nalv.in/tag/assault-on-mandapam-irular-women-a-detailed-report/

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/cbi-probe-girl-sex-abuse-case-778

http://sites.google.com/site/savenazanin/

http://www.stopfundamentalism.com/index.php?option=com_content&task=view&id=290&Itemid=71

http://childsexualabuseinindia.blogspot.com/2012/01/its-trial-by-fire-for-kids.html

மரண அங்கிகளும் அம்மண உடல்களும் – ஜமாலன்

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்கள் ஒரு காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்திக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் பற்றிய தனிக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகமாக இங்கு விவாதிக்கவில்லை எனறாலும், சமீபத்திய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடை பற்றிய ஒரு விவாதம் பதிவுலக நண்பர்களிடம் நடைபெறுவதால் அதை ஒட்டிய வழக்கமான பின்னோட்டம் இங்கு தனிப்பதிவாக வெளியிடப்படுகிறது.

இந்த விவாதம் டிபிசிடியிடம் துவங்கி சுந்தர் மற்றும்  கல்வெட்டுவிடம் வளர்ந்து பாரி.அரசுவிடம் தொடர்கிறது.  பல பதிவர்களும் இதனை பலவிதமாக பேசி உள்ளனர் என்றாலும் பாரி. அரசுவின் பதிவு-2 ஐ முன்வைத்து எனது கருத்துக்கள் இங்கு. இது உரையாடலுக்கான எனது கருத்துக்களே தவிர நண்பர்களுடன் ஆன விவாதம் அல்ல.

//பெண்ணியத்திற்குப் போராடுவதாக ஜல்லியடிப்பது//
ஏன் இந்த கொலைவெறி? ))

உடைகளைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் பேசத் துவங்கினால் கண்டிப்பாக பெண்ணியம் பற்றி பேசியே ஆக வேண்டும். காரணம் பண்பாடு என்பது பெண் உடல் தைக்கப்பட்ட சமூகம் பற்றிய பேச்சுதான்.

தமிழில் பண்பாடு என்கிற வார்த்தை சமீபத்தியது அதாவது 75 ஆண்டுகால கண்டுபிடிப்புத்தான் என்றும் பழந்தமிழக்த்தில் இன்று நாம் கூறும் பண்பாடு போன்ற பொருளில் தமிழில் திருவள்ளுவர் பயன்படுத்திய “சால்பு“ என்கிற பழஞ்சொல் புழுங்கியதைப் பற்றியும் தமிழ் பண்பாடு குறித்தும் தமிழை உலக ஆய்வுப் புலத்திற்குள் வைத்து பார்க்கும் ஆய்வாளரான பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ”தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் – மேற்குலகின் பங்கும் பணியும்” என்கிற நூல் சுருக்கமாகப் பேசுகிறது.  பண்பாடு என்பது மேற்குலகம் எழுதிய வரலாற்றின் மீள்கண்டுபிடிப்புடன் புழக்கத்திற்கு வந்த ஒன்று.  இதன் பொருள் பண்டைய சமூகம் என்பது தனது பண்பாட்டுக் கூறுகளை தனது இருத்தலுடன் உறவுகொண்டே புழங்கி வந்தது என்பதுதான். ஒரு மக்கள் கூட்டம் கணக்குழுவிலிருந்து (clan) இனக்குழுவாக (race) மாற இப்பண்பாட்டு ஒழுங்கமைப்பு என்பது அடிப்படையாக உள்ளது.

//கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.//

பண்பாடு குறித்து ஏற்கனவே எனது பதிவில் விளக்கியுள்ளேன்.
”கலாச்சாரம் (பண்பாடு என்பது நல்ல தமிழ்ச்சொல்) என்பது ஒரு உடலினை சமூகத்திற்கு ஏற்ப முன் நிறுத்துவதற்காக அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சங்கேத மொழியாகும். அதாவது, ஒரு உடலானது என்ன செய்ய வேண்டும்? எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும்? எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்? எதற்காக துன்பம் அடைய வேண்டும்? என்பதை ஒரு கண்காணிப்பு கருவி போலக் கண்காணித்து உடலை வழிநடத்தும் ஒரு எந்திரம். அதற்காக அது கண்காணிக்கும் ஒரு முக்கிய தளம் பாலியலாகும். பாலியலை ஒடுக்குவது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பண்பாடானது சமூக அமைப்பை அதன் ஆதிக்க வடிவிலேயே காக்கிறது. அதற்காக சில உடலியல் விழைவுகளை (desires) புறமானதாக ஒதுக்கி அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.”

நீங்கள் கூறும் பண்பாடு என்பது உள்ளிருந்து உருவாகுவதில்லை அல்லது அடையாளப்படுத்தப்படுவதில்லை.. அது மற்றக் குழுக்களுடன் ஆன இயக்கத்தில் உறவில் வேறுபாட்டில் கட்டமைந்து இறுகுகிறது என்பது ஒரு முக்கிய விடயமாகும். காரணம் பண்பாடு என்பது மற்ற குழுவினராலேயே அர்த்தப்படுத்தப்படுகிறது. அர்த்தம் என்பதே பிறாரால் மட்டுமெ சாத்தியம். அல்லது பிறர் பற்றிய உணர்வின் வழியாக மட்டுமே சாத்தியம்.  ஒரு குழு தனது பண்பாட்டை புரிந்துகொள்ள அதனை வேறுபடுத்தி அர்த்தமாக்கும் பிறிதொரு குழு தேவை. அவ்வகையில் பண்பாடு என்பது பிற குழு ஒப்பிடல் இல்லாமல் சாத்தியமி்ல்லை. அதேநேரத்தில்  பிற குழுக்களினை ஒப்பிட்டு உயர்ந்தது தாழ்ந்தது என்பது ”பண்பாட்டு அரசியலாக” வடிவெடுக்கிறது.

//அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.//

பண்பாடு என்பது வரலாற்று வகைத்திணை மட்டுமல்ல அது ஒரு அரசியல் வகைத்திணையுமாகும். உண்மையில் பண்பாட்டிற்குள்தான் மனித உடல் நடப்பட்டுள்ளது. இயல் உடலை பண்பாட்டு உடலாக மாற்றாமல் எந்த குழுவும், அரசும், சமூகமும் உருவாகியிருக்க முடியாது. புதிய அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப இவ்வரையறைகள் மறுவரை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். பண்பாடு என்பது ஒரு உடல்- அங்கங்களற்ற உடல்களான (body without organ)  மண்ணுடன், நிலத்துடன், குழுவுடன், சமூகத்துடன், குடும்பத்துடன் மற்றும் மதத்துடன் இணைப்பதன் வழியாக உடலைநிலமயமாக்கலில் (territorialization) உருவாகி கட்டமைவதாகும்.   ஒவ்வொரு வரலாற்றுக் கட்டங்களிலும் இந்த நிலமயமாக்கல் என்பது புதிய குழுவின் பண்பாட்டால் நிலத்தகர்ப்பு (deterritorialization)செய்யப்பட்டு அப்புதியக் குழுவின் பண்பாட்டுக் கூறுகளால் மறுநிலமாக்கல் (reterritorialization) செய்யப்படுகிறது. ஆங்கிலேயக் காலனி என்பது இந்திய பண்பாட்டை இவ்வாறாகத்தான் மறு கட்டமைப்பு செய்தது.  ஆங்கிலேயக் காலனியின் பார்வைப்புலம் இல்லாத இந்தியப் பண்பாடு என்பது சாத்தியமற்றதாக இருப்பதை உணரலாம்.  தமிழ் பண்பாட்டு புலத்தில் நிகழ்ந்த காலனிய பாதிப்புகள் பற்றி மேற்கண்ட சிவத்தம்பியின் குறுநூல் விவாதிக்கிறது.

//நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்… அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் //

ஆண் என்கிற கட்டமைவே பெண் என்கிற மையத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. அதனால் பெண் உடலை தனது ஆதிக்கத்திற்குள் வைப்பதே ஆணியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும். அதனால்தான் பெண் என்கிற கருத்துருவத்தை மையமாகவும் அவளது உடலை விளிம்பிலும் வைத்து ஒடுக்குகிறது ஆணியம்.  ஒருபடிக்கு மேலாக பெண்ணை தெய்வநிலைக்கு கொண்டு சென்று இயக்கமற்றவளாக புணிதப்படுத்தி ”மென்மையாக” ஒடுக்கி வைக்கிறது.  இன்றைய பண்பாடு என்பது ஆணியம் கட்டமைத்த ஒன்று.  இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணியம்தான் பண்பாடு என்கிற தொழில் நுட்பத்தையே வரலாற்றின் வகைத் திணையாகக் கண்டுபிடித்து அது குறித்து ஆய்வுகள் மற்றும் பேச்சுகளை பெருக்கி உள்ளது.  கருத்துருவ நிலையில் பெண் இயற்கை என்றால் ஆண் பண்பாடாக உள்ளான். அதனால்தான் ஆண் எல்லா சமூகங்கிளலும் கலாச்சாரக் காவலனாக உள்ளான்.  பெண்ணுக்கு ஆணால் கையளிக்கப்பட்டிருப்பத அதீத பாலியல் வேட்கைக்கொண்ட பேய்நிலை அல்லது பாலியை முற்றிலுமாக ஒடுக்கிய தெய்விநிலைதான். இது குறித்து புதமைப்பித்தனின்காஞ்சனைப்பற்றிய எனது பதிவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சான்றாக தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொள்வோம். அகம்Xபுறம் என்கிற சங்கக்காலப் பிரிவு நமது பண்பாட்டின் ஒரு உயர்ந்த மாண்பாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரிவினை வழியாக உடல் உற்பத்தி (காதல் – காமம் – அகம் – பெண்மை-பெண் உடல்) என்பதும் உடல் வலிமை அல்லது காப்பது (வீரம்-போர்-புறம்-ஆண்மை-ஆண்உடல்) என்பதாக குறியிடப்படுகிறது. “விழுப்புண் இல்லாத மார்புகள் பெண்களால் தழுவப்பபடாது“ என்பதன் அடிப்படையில் பெண் காதலைப் பெற போர் என்கிற வீரச்செயலில் ஈடுபடும்படி ஆண் உடல் கட்டமைக்கப் படுகிறது. பொருளாதாரம் எனும் ஆணிரைக் கவர்தல் மற்றும் பாலின்பப் பொருளாக பெண்ணைக் கவர்தல் என்பதற்காகவே போர் என்பது நிகழ்கிறது.  இன உற்பத்தி, இன வலிமை என்கிற இரண்டு கண்ணோட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒருவகை உடலரசியல் நிலைகளே அகம் புறம் என்கிற பிரிவினை. இதுதான் தமிழக அரசுமுறை உருவாக்கத்தை காப்பாற்றிய ஒன்று.  இதன்வழிதான் தமிழ்பண்பாடு கட்டப்பட்டுள்ளது.

இன்னும் சங்க இலக்கியங்களில் வரும் “நெய்யனி மயக்கம்“ என்கிற அதி உச்ச கிளர்ச்சி நிலைகள் “கார்னிவல்“ கொண்டாட்டங்கள் பிந்தைய மதப் பண்பாட்டு ஆதிக்கத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆக, பண்டைய தமிழர்களிடம் இருந்த பெண் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என்பது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது.   பெண் ஒரு வளமையான நிலமாக உருவகப்படுத்தப்பட்டு ஆழமாக உழுது பயிர் இட வேண்டிய ஒரு site ஆக மாற்றப்பட்டுவிட்டால். பெண் வெளி (feminine space) என்பது பெண் களமாக (feminine site) மாற்றப்பட்டுவிட்டது. இதனைதான் இன்றைய பண்பாட்டு வரலாறு சாதித்துள்ளது.

//இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது.//

ஒரு வரலாற்று உண்மையை புரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலேய காலனிக்கு முந்தைய இந்திய மக்கள் மேலாடையின்றி உடலை  முற்றிலும் வெளிப்படுத்தக்கூடிய (இன்றைய பொருளில் கவர்ச்சியான) உடைகளையே அணிந்ததாக வரலாற கூறுகிறது. ஆங்கிலேய ”விக்டோரியன் பண்பாடு” என்பது கழுத்து முதல் கால்வரை மறைக்கும் நீண்ட “கவுனை“ (தமிழ் படுத்த நண்பர் டிபிசீடி கவனிக்கவும்)  அணிவதுதான். இதிலும்கூட இது மேல்தட்டு வர்க்க உடையே. உழைக்கும் மக்களின் உடை அல்ல. இந்த உடையை மாற்றியமைத்து இன்றைய இரு-துண்டு (2 piece) உடைகளாக ஐரோப்பிய பண்பாட்டை மாற்றியமைத்தது இந்தியப் பண்பாடுதான். ஆங்கிலேய எஜமானர்களிடம் தங்களது இடத்தை உறுதி செய்ய இந்தியாவின் இந்தவகை உடைகளின் வெளிப்படும் தன்மையை ஆங்கிலேயப் பெண்கள் பயன்படுத்த துவங்கியதாக வரலாற்றைப் படிக்க முடிகிறது. பரங்கிப் புண் எனப்படும் பால்வினை நோயை இந்திய பெண்களின் உடலில் பரவவிட்ட ஆங்கிலேயர்களின் கிளர்ச்சி வெள்ளை உடலைவிட கருப்பு உடல் மீதான மிகுக் காமமாக வெளிப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

விக்டோரின் பண்பாடுதான் நிர்வாணமாக (அம்மணமாக அல்ல) இருந்த நமது கடவுள்களை ரவிவர்மா என்கிற ஓவியரைக் கொண்டுஆடைகட்டி “அழகு” பார்த்தது.  இவர் இந்துப் பெண் கடவுள்களை தென்னிந்திய பெண்களின் பண்பாட்டை ஒட்டி வரைந்தார்.  இன்றைய உடல் மறைக்கும் உடைகள் அடிப்படையில் இந்தியப் பண்பாட்டிற்கு அந்நியமானதே. காமசூத்ரா போன்றவை வெளிப்படுத்தம் பெண் உடல் பற்றிய வேட்கைகள் ஒரு திறந்த பாலியல் செயல் பாட்டிற்கான களத்தைக் கொண்டவை. இன்றைய பாலியல் உயிர்த்தலுக்கானதாக இல்லை. துரிதகதியில் சாவை நோக்கிச் செல்லும் மரணத்தின் உத்திக்கானதாக உள்ளது. முழுமையடைந்த பாலியல், வேட்கைகளை ஏற்படுத்தாது.  பாலியல் வேட்கையே அதன் நிறைவடையாத குறைத் தன்மையால் வருவதுதான்.  பெருக்கப்பட்ட பாலியல்தான் இந்த வேட்கையை உயிர்ப்புடன் வைத்து சமூகத்தின் மொத்த உடலையும் அதை நோக்கி திருப்பி விடுகிறது. உடல்சார்ந்த மரணத்திலிருந்து உடல்சார்ந்த உயிர்த்லுக்கு பாலியலை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் உடல் குறித்த இந்த கவர்ச்சி உணர்வுகள் அதன் நுகர்வத் தன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். கவச்சியில் சிக்கிக் கொண்டுவிட்ட நமது புலன்களை அழகியல் நொக்கியதாக திருப்ப வேண்டும்.

//உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை     மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.//

பிரச்சனை பெண் அணியும் உடையில் இல்லை. அதனை ஒரு சரக்காக மாற்றி சங்கேதப்படுத்தியிருக்கும் ஆரோக்கியமற்ற நமதுஒடுக்கப்பட்ட பண்பாட்டில் உள்ளது. துணிவிலகியவுடன் மனம் விலகி உடல் வெலவெலக்கும் நமது பாலுணர்வின் பலவீனத்தில் இருக்கிறது.  உடல் தெரிய ஆடை உடுத்தும் ஒரு பெண் உடல், ஒரு ஐரொப்பியனுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. நமக்கோ அதுதான் மிகப்பெரிய கவர்ச்சி. காரணம் பாலுணர்வு பற்றி நம்மிடம் உலவும் மர்மங்களும், புனைவுகளும், ஆண்-பெண் இருவரையும் பழகவிடாத பண்பாட்டு இறுக்கமுமே காரணம். ஒருவேளை இதனை அனுமதித்தால் உடனடியாக எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் “தவறான“ நடைமுறைகளை பின்பற்றி பண்பாடு கெட்டு சீரழிந்துவிடும் என்று பயப்பட வேண்டியதில்லை.

இப்பயம் வரக் காரணமான ஊகங்கள் 1. எல்லா ஆண்களும் பெண்களும் எதையும் செய்ய முடியாத இறுக்கமான மனநிலையில் ஒருவகை மனோவியல் வன்முறையில் இருப்பதாக எண்ணுவது. 2. குடும்பம் போன்ற நிறுவனங்கள் சிதைந்து எல்லாம் தனியர்களாக சீரழிந்துவிடுவோம் என்று எண்ணுவது. 3. அதீத பாலியல் நடவடிக்கைகளால் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும் ஒழுங்கு குலைந்துவிடும் என நம்புவது.  4. பாலியல் பற்றிய சிந்தனைதவிர வேற சிந்தனைகளே மனிதருக்குள் இல்லை என்று எண்ணுவது. இவற்றிற்கு எந்த ஆதாரங்களும் அடிப்படைகளும் இல்லை. இவை எல்லாம் மனிதன் மிருக உணர்வு கொண்டவனாக பக்குவப்படாதவனாக உள்ளான் என்கிற ஊக அடிப்படையில் வருவது. அப்படியே இவை நிகழ்ந்தாலும் ஒரு தலைமுறைக்கு மேல் இவை தொடரப் போவதில்லை.   காரணம், மனித உடல் என்பது தான் உயிர் வாழ்வதற்கான ஒரு சமூக அமைப்பை தானே உருவாக்கிக் கொள்ளும்.  அது இயற்கை சார்ந்த பண்பு.  இதுநாள்வரை, மனிதகுலத்தை கசக்கிப் பிழிந்ததற்காக இந்த ஒரு ”தலைமுறைப் பலியிடலை” புராதன சமூகங்களின் சடங்கான கூட்டுப்பலியிடலாக எண்ணி நிகழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்வது?

//இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்… பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்… ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!//

பாலியல் தொழிலாளியும், இடுப்பில் அள்ளிச் சொருகப்பட்டவளும் ஒரேவகை பெண்கள்தான்.  அவர்கள் கவர்ச்சியாக அணியலாம் எனது மணைவியோ சகோதரியோ தாயோ கவர்ச்சியாக அணியக்கூடாது என்பதில் நியாயம் இல்லை.  பாலியல் தொழிலாளி அப்படியே வெளிப்படையாக கவர்ச்சிக்காட்டி வருவதில்லை. மேல்தட்டு மற்றும் அதை நகல் செய்யும் நமது பெண்கள்தான் கவர்ச்சி மோகத்தில் உள்ளார்கள். ஆண்சேவல் கொண்டையைத் தூக்கி நடக்குமாம் பெட்டையைக் கவர.. இன்னும் சேவல் பண்ணையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியலின் அழகுணர்ச்சி நுகர்வின் வழியாக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சனை. காரணம் சரக்குகளின் சுற்று வட்டத்தை நம்பி இயங்கும் உலகும் அதனை விற்பனை செய்யும் முதலாளிகளும் அதற்காக கட்டமைக்கப்படும் நுகர்வுப் பாண்பாடுமே. ஆண்கள் ஏன் கவர்ச்சியாக உடை அணிவதி்ல்லை என்றோ உடைப் பிரச்சனைகள் குறித்து பெண் பதிவர்களோ எழுதுவதே இல்லையே ஏன்?  நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக்கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்..?

//ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.//

இங்கு சமூக ஒழுங்கு என்பது என்ன? என்பதை வரையறுக்க வேண்டி வரும்.  அதைதான் அவர்களும் செய்கிறார்கள். அவர்களது ஒழுங்கை. அவர்கள் பின்பற்றுகிறார்கள். பிரச்சனை இந்த நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வும் இயக்கமும் அவசியம் என்பதே.  வரலாற்றில் மதங்கள் செய்து வந்த தையற்காரன் பணியை இன்றைய பண்பாட்டு காவலர்கள் செய்ய முற்படுவதே காரணம். இதன் பொருள் கவர்ச்சியான உடைகள் தேவை என்ற நான் கூறவரவில்லை. அவை கவர்ச்சியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளதுதான் பிரச்சனை. இப் பிரச்னைகள் இன்ற விவாதித்திற்கரியதாக இருப்பதே ஒரு முன்னேற்றம்தான்.

//குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.

இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.

பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்… எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?//

இவை ஆழமான ஆய்விற்கு உரிய கேள்விகள். உங்கள் விவாதம் நுட்பமாக சரியான தளத்தை வந்தடைந்துள்ளது.

இறுதியாக, பாலியல் என்பது பொதுப்பரப்பிலிருந்து தனிப்பரப்பிற்க மாற்றப்பட்டதன் தொடுதல் அரசியல் பற்றிய ஒரு ருசிகரமான நூல் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பெண்கள் எப்படி பாலியல் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு கட்டமைக்கப்பட்டார்கள் என்பதையும் அம்மணம் (nudity) என்கிற கருத்தாக்கம் எப்படி உருவானது என்பதைப்பற்றியும் அங்கிகள் மூலம் அம்மண உடல் என்பது தனியான ரகசிய தளத்திற்கு நகர்த்தப்பட்டது பற்றியும் விவாதிக்கிறதாம் லாரா கோவிங் மற்றும் டேவிட் டர்னர் என்கிற இரண்டு ஆய்வாளர்களின் நூல்கள்.   Laura Gowing. Common Bodies: Women, Touch and Power in Seventeenth-Century England.  David M. Turner. Fashioning Adultery: Gender, Sex and Civility in England, 1660-1740.

மேலதிகமாக இவற்றைத் தொடர இந்நூட்கள் உதவலாம். லாரா கோவிங் நூல் பற்றிய இந்த மதிப்புரையும் படித்து வையுங்கள்.

ஜமாலன்.

thanks to Mr. Jamalan – http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html


பெண்ணியம்: ஓர் உரையாடலுக்கான தொடக்கம் – கொற்றவை

முன்னுரை:

பெண்ணியம் – தீவிரவாதத்திற்கு இணையாக, பெரும்பாலானோர் கலக்கமுறும் ஒரு சொல்லாக, சிந்தனையாக கருதப்படுகிறது.  மத அடிப்படைவாத வன்முறைகள் செய்பவர்களை தீவிரவாதி என்று சொல்வதற்கும், குடிமைச் சமுதாய பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தீவிரவாதி, பயங்கரவாதி, மாவோயிஸ்ட் என்று அரசால் குறிக்கப் பெறுவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. கற்பனாவாத, கருத்துமுதல்வாத சிந்தனைகளுடனும், குறுகிய எண்ணங்களைக் கொண்டு, சுயநலத்திற்காக மக்களை பிரித்தாள்வதோடு மட்டுமின்றி, வன்முறையில் இறங்கி கொலைகளை, இன அழித்தொழிப்புகளை நிகழ்த்துவதை தீவிரவாதம் என்று கூறுகிறோம், ஆனால் ஒடுக்கப்பட்ட இனம், அல்லது ஒடுக்கப்படும் இனம் தங்கள் இருப்பே மறுக்கப்படும் பொழுது அதை எதிர்த்து நின்று கலகக் குரல் எழுப்புவதை எப்படி தீவிரவாதம் என்று சொல்வது. போராட்டங்களுக்குப் பின்னால் ஒலிப்பது ஒடுக்கப்பட்ட குரலா அல்லது ஆதிக்க வர்க்கக் குரலா, மத அடிப்படைவாதமா, ஆக்ரமிப்பு தந்திரங்களா என்பதைப் பொறுத்து வேறுபாடுகள் அமைகிறது.

இதேபோல் பெண்ணியம் குறித்தான சிந்தனைகளை, அதற்கான அவசியத்தை, அதன்  பயன்பாட்டை, பெண்ணியம் முன்வைக்கும் சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்வதில் குழப்பங்கள் நிலவுவதைக் காண முடிகிறது. பெரும்பாலும் பெண்ணியம் என்பது ஆணை எதிராக வைத்து, ஆண் என்ற ஒற்றை அடையாளத்தை எதிரியாக கருதி, குற்றச்சாட்டுகள் வைப்பது, பாலியல் சுதந்திரம், நுகர்வு கலாச்சார சுதந்திரம் ஆகியவற்றைக் வேண்டுவது, ஆணை விட பெண் உயர்வானவள் என்று வாதம் செய்வது அல்லது ஆணை முற்றிலுமாக நிராகரிப்பது, குடும்ப அமைப்பை உதாசீனப் படுத்துவது, குழந்தைப் பெற்றுக் கொள்ள மறுப்பது என்று பல்வேறு கோணங்களில் புரிந்துக் கொள்ளப் படுகிறது. இவைகளை முன் வைப்பது பெண்ணியமும் அல்ல, ஆணியமும் அல்ல அது தனி மனித சுதந்திரம். தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு காரணமாய் இருப்பது ஆணாதிக்கமுறைமை. பொருளாதார விரிவாக்கம், அதிகார விரிவாக்கம், எல்லை விரிவாக்கம் இவற்றுக்குத் தேவைப்படும் மனித உழைப்பும் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக நிலவும் சமூக கோட்பாடுகளும் தந்தை வழிச் சமூகம் தருவித்த ஆணாதிக்கமுறைமை என்று சுருக்கமாக சொல்லலாம்.  (Patriarchy & Male dominant Social Structure).

அதன்  ஒரு பகுதியாக பொருளாதார படிநிலையில் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதற்கேற்ற முறையில் சந்ததிகளை வளர்த்தெடுக்கவும், தாய்வழிச் சமூகத்தை குலைத்து குடும்பம் எனும் அமைப்பின் மூலம் பெண்களை ஒடுக்கி வைக்க, ஒழுக்க விதிகளை, சமூக கோட்பாடுகளை பெண் இனத்தின் மேல் நிறுவியது ஆணாதிக்க தந்தை வழி சமூகம். ஆணாதிக்கமானது ஒரு புறம் உழைப்பை கட்டுக்குள் வைத்திருக்கிறது. மற்றொருபுறம், அவ்வுழைப்பு ஈட்டித்தரும் உற்பத்தி மற்றும் உபரியின் பலன்களை ஆதாயமான முறையில் பரிவர்த்தனை செய்து, பொருளாதார உயர்வு நிலை அடைய வழிகளைக் கண்டுபிடிக்கிறது. அதற்கேயுரித்தான அதிகார சூழலை நிறுவுகிறது.  தங்களுக்கான அதிகார, ஆதாய சூழலுக்கேற்ற மேலாண்மை நிறுவனங்களை தோற்றுவித்து மக்களை, மக்களது சிந்தனைகளை, உரிமைகளை முடக்குகிறது. அரசு, மதம், ஆகிய நிறுவனங்கள் இதனுள் அடக்கம்.

சமூக  அமைப்பில் மாற்றம்:

ஆண்டாண்டு காலமாய் இயற்கையின் உற்பத்தி சக்தியையும், பெண்ணின் மறுஉற்பத்தி சக்தியையும் (இனப்பெருக்கம்) கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஆணாதிக்க அமைப்பு நிகழ்த்திய ஒடுக்குமுறைகள் வரலாற்றில் நிறைந்திருக்கிறது.  ஆண்களின் தலைமையில் உற்பத்தி மற்றும் சமுகத் தலைமைகள் கைமாறியது.  ஆதிக்கம், லாபம், அதிகாரம், உற்பத்திப் பெருக்கம், தனிச் சொத்து ஆகியவைகள நோக்கமாகக் கொண்டு தந்தைவழிச் சமூகத்தால் மாற்றியமைக்கப்பட்ட சமுதாய அமைப்பில், ஆண்களின் நலனும், அவர்களுக்கான உரிமைகளுமே ஓங்கி இருக்கிறது.  மேலும் சமுதாய அமைப்பை நிர்ணயிக்கும் அதிகாரமும் அவர்களிடமே இருக்கிறது. அதிகாரத்தையும், லாப நோக்கையும் கொண்டுள்ளதால் ஏற்றத்தாழ்வுகளும், பிரிவினைகளும் நிறைந்திருக்கிறது.  [தொல்பழங்கால தாய் வழி மரபில், குலக்குறிச் சமூகம் என்பது “அரசன் – குடிகள் பாகுபாடறியாதது.  அது ஜனநாயக அல்லது கம்யூனிசத் தன்மை உடையது. குலக்குறியுடன் தொடர்புள்ள ஒரு குலத்தின் மக்கள், சமத்துவ முறையில் வாழ்பவர்கள் எல்லா உறுப்பினர்களையும் சரிசமமான அளவில் வைக்கும் சாராம்சமான அம்சமாகும். இது தொல் பழங்கால கம்யூனிசம் (1) என்று மோரப்பின் மேற்கோளை வைத்துச் சொல்கிறார், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா . இதேபோல் ஆதிக்கிறித்தவமும் அபோத்தலர்கள் நடைபெடி எனும் மதப் பீடத்தை நிறுவி கம்யூனிச சிந்தனைக்கு நிகரான பொதுப் பகிர்வு முறைகளை, கூட்டு வாழ்க்கையை, ஆண் பெண் சமத்துவத்தை வளர்த்ததாக ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுகிறார் (2)].

பெண்ணின் மறுஉற்பத்தி சக்தி மீதும், அவள் உழைப்பைச் செலுத்தி வளர்த்த வேளாண் விளை நிலங்களின் மீதும் தந்தைவழிச் சமூகம் அதிகாரத்தை நிறுவியது. அதன் தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்ட சமூக அமைப்பு அதன் தாக்கங்கள், அதில் நிலவும் மனித விரோத, இயற்கை விரோத சிந்தனைகள், செயல்பாடுகள், அவ்வமைப்பை மாற்றுவதற்கான தேவைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டறிந்து பறைசாற்றுவது, அவற்றை நடைமுறைப் படுத்துவது ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை நிறுவதற்கு அவசியமாகிறது.  பெண்களின் விடுதலையை மறுத்து சமச்சீர் பொருளாதாரத்தை நிறுவுவது சாத்தியமில்லை. [வேட்டைப் பொருளாதாரத்தில் தந்தை வழி உறவு முறை இடம் பெற்றிருந்தது, வளர்ச்சி பெற்றுள்ள விவசாயக் கட்டத்தில் தாய் வழியுரிமை முறையின் வகை மாதிரியாக அச்சமூகத்தினர் இருந்துள்ளனர். ஈட்டி கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் வேட்டை ஆண்களது வேலையாக மாறியது. உணவு சேகரிப்பதைப் பெண்கள் தொடர்ந்தனர். வேட்டைச் சமுதாயங்களில் பாலின அடிப்படையில் வேலைப் பிரிவினைகள் பொதுவானது, ஏனென்றால் கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் பெண்கள் அதிகமாக அலையமுடியாது. பின்னர் இரும்பின் கண்டுபிடிப்பால், தொழில் வளர்ச்சியால் இவ்வேலைப் பிரிவினை நிரந்தரமாகிறது. வேட்டைப் பொருளாதாரம் ஆண் கடவுள்களைக் கற்பனை செய்தது என்கிறார் பிரிபால்ட். (அதுவரை இயற்கை வழிபாடு, யோனி வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு, உற்பத்திசார் கூட்டு வழிபாட்டு சடங்குகளாக இருந்துவந்திருக்கிறதே ஒழிய புனிதங்களின் அடிப்படையில் மதம் நிறுவப்படவில்லை). அதோடு “வேறுபடுத்தி அறிய முடியாத உடல் உழைப்புடன் மாந்த்ரீகமும் விஞ்ஞானமும் ஆரம்பத்தில் இணைந்தே இருந்தன – என்று சொல்கிறார் ஜோசப் நீட்ஹாம். (3)

கல்வி, பொருளாதாரம்,  குடும்பம், அதிகாரம்:

ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு கல்வி, பொருளாதாரம், நிலவும் சமூக அமைப்புத் தலைமையில் பங்கு மறுப்பு ஆகியவை அச்சமூகத்தைப் பின் தங்கிய ஒன்றாகவே நிறுத்திவைக்கும். வர்க்கப் போராட்டங்களைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கும் பாடம். ஒரு குறிப்பிட்டக் காலம்வரை கல்வியும், பொருளாதாரமும் மறுக்கப்பட்ட இனமாக பெண்களும், சாதியமுறை பகுப்பில் தாழ்த்தப்பட்டோரும் இருந்து வந்திருக்கின்றனர்.  அறிவு வளர்ச்சி முடக்கப்படும்பொழுது உடல் உழைப்பு மலினப்படுத்தப்பட்டு விலைப்பேசப்படுகிறது.  பெண்கள் வீட்டில் உழைத்து ஆண்களை ஆரோக்கியத்துடன் பராமரித்து, குழந்தைப்பெற்று அதையும் ஆரோக்கியமாக வளர்த்து, அதிகார வர்க்கத்திற்கு உழைப்பாளிகளைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாக குடும்பம் செயல்பட வைக்கப்படுகிறது. நிதர்சனமாகச் சொல்லப்போனால், முதலாளிகளுக்கு அடிமைகளைப் பெற்று பேணித் தருவது. அதற்கு சன்மானமாக சிறிய கூலியைப் பெற்றுக் கொள்வது. கல்வி, பொருளாதாரம் மறுக்கப்பட்டப் பெண், ஆணைச் சார்ந்து இருக்கும் சூழல் நிலவுகிறது. இச்சார்பு ஆண்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. மற்ற குடும்பங்களின் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டு போட்டிப் போடும் மனநிலைக்குப் தள்ளப்படுகிறார்கள். பெரும் பொருள் ஈட்டாத ஆணும், அவனது குடும்பமும் மரியாதையிழக்கும் சூழலின் அச்சுறுத்தல் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. அக்குடும்ப நிலையின் தாழ்வுக்குக் காரணமாய் பெண்களின் ஒத்துழைப்பு, மேலாண்மை, மற்ற குணாதிசயங்கள் விமர்சிக்கப்படுகிறது. இவ்விதமான சமூக நெருக்கடிகள் பணம் ஒன்றே குறியாக செயல்படவைக்கிறது. இவையே குடும்ப உறவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது, குடும்பம் சிதைவுறவும் காரணமாய் அமைகிறது.

அதேபோல் கல்வி, பொருளாதாரம் மறுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தார் கூலியை நம்பி இருக்கின்றனர்.  குடும்பத்தைக் காக்கும் பொருட்டு உழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.  இச்சமூகங்களில் பெண்களும் வேலைக்குச் செல்லும் சூழலை பொருளாதாரம் தீர்மானிப்பதை நாம் காணலாம்.

பெரும்  போராட்டங்களுக்குப் பின்னர் பெண்களுக்கும் கல்வி அனுமதிக்கப்பட்ட பின்னரே மற்ற சமூகங்களில் பெண்களும் வேலைக்கு செல்லும் சாத்தியங்கள் நிலவின.

மேலும் ஆணாதிக்கச் சமூகத்தின் நீடித்த பேராசையின் விளைவாய் தொழில்நுட்பங்களை இயற்கை சக்தியின் மீது ஏவி, இயந்திரமயமாக்கலை நிறுவி உற்பத்தியைப் அளவுக்கதிகமாய்ப் பெருக்கி உபரிகளின் மூலம் லாபத்தை வளர்த்து, அதிகார படிநிலைகளை உயர்த்திக்கொள்வதில் இறங்கியது.

அதிகார  விரிவாக்கம், பொருளாதாரா ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல்,  ஆகியவற்றிற்காக ஆணாதிக்கம் போர்களைத் தொடர்கிறது, வர்க்கங்களாக மக்களைப் பிரித்தாள்கிறது. பொருளாதார மதிப்பீடுகளைக் கொண்டே மனிதருக்கு சமூக மதிப்பீடு எனும் ஆதிக்க நிலையை நிறுவியது.  பாலின வேறுப்பாட்டிற்கான பிரிவினைவாத அடையாளங்களை சமூக கோட்பாடு எனும் பெயரில் கட்டமைத்து, உழைப்பாளர் வர்க்கத்தின் ஒரு பிரிவான பெண்ணினத்தையும் அடிமைப் படுத்திவைத்திருக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்பது ஆண் என்ற உயிரியல் பிறப்பை, அவனது எல்லா செயல்பாடுகளையும் எதிர்ப்பதாக தவறாக கருதப்படுகிறது.  அதற்கு மாறாக ஆணாதிக்க எதிர்ப்பு என்பது அச்சமூக அமைப்பு தோற்றுவித்த இயற்கை விரோத போக்கு, உழைப்புச் சுரண்டல், பாலின ஒடுக்குமுறைகள், தனி மனித சுதந்திரத்திற்கெதிரான கோட்பாடுகள், வர்க்க வேறுபாடுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை எதிர்ப்பதாக புரிந்துக் கொள்ளுதல் ஆகியவையே பெண்ணியச் சிந்தனையை வளர்த்தெடுக்க உதவும்.

ஒடுக்குமுறையின் வடிவங்களும், போராட்டங்களும்:

மேற்சொன்ன ஒடுக்குமுறைகள் பல்வேறு  வடிவங்களில் செயல்படுகிறது. இந்தியச் சமூகத்தில் அவை  சாதி, மதம், குடும்பம், பெண் பற்றிய கருத்தாக்கங்கள், பாலியல் அடையாளங்கள் என்ற வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.  உலகம் முழுமைக்கும் இது பொதுவென்றாலும் அவற்றை கட்டுடைப்பதில், ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க நாடுகள் பெண்ணியம் பற்றின ஒரு புரிதலை ஏற்படுத்தத் தொடங்கின.

1968 ல் நியுஜெர்சியில் அழகிப் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெண் அழகு சாதனங்கள், உள்ளாடைகள் ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி போராட்டங்கள் நடந்தன. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்ணியம் பல்வேறு கோணங்களில் பரவலாக வளர்ச்சி கண்டது.  1975-1985 ‘பெண்கள் பத்தாண்டு’ என அறிவிக்கப்பட்டது.  பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிடையே அமெரிக்க இலக்கியங்களில் பெண்ணுரிமை பற்றிய தீவிர சிந்தனைகள் எழுப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில்தான் பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். 1792 ஆம் ஆண்டில் மேரியுல்ஸ்டன் கிராப்ட் பெண்களின் உர்மையைக் கோரும் வகையில் ‘பெண்ணுரிமைக் கொள்கை நிறுவிடு” என்னும் நூலை எழுதினார் என்று விவரிக்கிறார் முனைவர் வாசுகி ஜெயரத்தினம். 1966-இல் ‘பெட்டி பிரெய்டன்’ என்பவரும் மற்றும் பலரும் இணைந்து ‘பெண்கள் தேசிய நிறுவனம்’ ஒன்றை அமைத்து ஆண்களுக்கு நிகரான உரிமைகளுக்காகப் போராடினர் (4)

இந்தோனேசியாவில் பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் குரல்  கொடுத்த கார்த்தினி, ஈரானில்  பர்தா அணிதலை நிராகரித்து  பர்தா அணியாமலே பிரசாரங்களை  மேற்கொண்ட குவாரத் உல் அயினர், டோக்கியோவில் கல்வி பயில்வதற்காக வீட்டை விட்டு வந்ததோடு, புரட்சிகரப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சீனப் பெண்மணி ‘சிசுசின்’, இலங்கையைச் சேர்ந்த சுகலா கஜமன்னோனா ஆகியோர் பெண்களின் தனித்துவ வெளிப்பாட்டிற்காகவும் பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடிய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு மற்ற நாடுகளில் ஏற்பட்ட தீவிரமான போராட்டங்களும், புதிய சிந்தனைகளும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. 19,20 ஆம் நூற்றாண்டுகளில் சிந்தனையிலும், கோட்பாட்டிலும் புதிய போக்கு உருவாயிற்று. (5)

நம் சமூகத்தில் கல்வி, பொருளாதார பின்னடைவு மற்றும் சாதி, மதம், கற்பு ஆகிய சிந்தனை மேலோங்கி இருப்பதால், இவற்றைக் கட்டுடைக்கும் பணி குறைவாகவே சாத்தியப் படுகிறது.  கட்டுடைக்கப்படும் சித்தாந்தங்களை ஏதோ ஒரு வகையில் ஒரு அடையாளப் பின்னணியில் வைத்து, விமர்சிக்கப்பட்டு பிளவுகள் நீடிக்கிறது.  இந்தியாவிலும் பல மகளிர் தற்சார்பு இயக்கங்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றது. வனங்களிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சிப்கோ போராட்டம்’ எனும் ‘மரங்களைத் தழுவும் போராட்டம்’ ஒன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

காலப்போக்கில், பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்படுத்தி உழைக்கும் வர்க்கத்தை மீட்டெடுக்க செயல்படும் அமைப்புக்கள் அதனுடைய முக்கியப் பிரச்சனையாக ஆண் மைய்ய உழைப்பை, ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பின் நலன்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடும் அமைப்புக்கள் ஆண் மைய்ய அரசியலில் வர்க்கக் வேறுபாட்டுகளை களைய போராடுகிறது. இவ்வாறு ஓவ்வொரு அமைப்பும் அவர்களுக்குரிய, உடனடி தீர்வுகளை ஏற்படுத்துகிற, மற்றும், பற்றி எரியும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போராட்டங்களை, கட்டுடைப்புக்களை நடத்துகின்றனர். இவை பெரும்பாலும் ஆண் தலைமையிலான பாட்டாளி வர்க்க விடுதலையை முதன்மைபடுத்தி செயல்படுகிறது, ஆகையால் பெண்களின் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட அளவிலான பங்களிப்பு மட்டுமே இருக்கிறது.

இந்திய  சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கெதிரான சாதியத்தை உடைக்க அரசியல் ரீதியாக ராஜாராம் மோகன் ராய், இயக்கமாய் ஜோதிராவ் புலே, சட்ட ரீதியாக அம்பேத்கரும், பெரியாரும், முன் மொழிந்த வழிகாட்டுதல்களும் அடக்கம்.  சாதிய ரீதியில் மிக மோசமாக ஒடுக்கப்பட்ட, மனிதர்களாகக் கூட கருதப்படாத மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே அம்பேத்கருக்கு அப்போதிருந்த முதன்மை பணியாக இருந்தது. அதோடு சேர்த்து அவர் அரசியல் சூழலில் பெண் விடுதலைக்கான (மறுமணம், சொத்து முதலானவை) சாத்தியங்களை சட்டத்தின் உதவியோடு வரையறுக்க உதவினார்.  இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டிலிருந்து பெண்கள் மிதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பரவலாக குரல்கள் எழத்துவங்கியது, பூலே உட்பட சுதந்திர போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சில தலைவர்கள் பெண்ணிய போராட்ட முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர், அவர்களைத் தொடர்ந்து பெண்களும் இப்பணியில் இணைகின்றனர். [அப்பெண்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகினர். பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று வலியுறுத்தியமைக்காக Dr. விஜலட்சுமி ரெட்டி “தேவடியா” என்று பாராளுமன்றத்தில் ஆண்களால் வசைபாடப்பட்டார்.]

இந்திய  அளவில் ஆங்காங்கே பெண்களின் உரிமைகளுக்காக சில தலைவர்கள் குரல் கொடுத்திருந்தாலும் தமிழ் நாட்டில் சாதிய எதிர்ப்போடு, பெண் விடுதலையை முழு வீச்சுடன் எடுத்துரைத்தவர்  பெரியார்.

 நாகரீக  கருத்தாக்கமும், பெண்ணிய சுதந்திரமும்:

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்பதில் துவங்கி, ஆண்கள் சம்பாதித்து கொண்டு வருவதை ஆடை அலங்காரங்களுக்கு செலவிடுபவர்கள் பெண்கள், பணத்தாசை பிடித்தலைபவர்கள், அழகைக் காட்டி மயக்கி ஆண்களை பயன் படுத்திக் கொள்பவர்கள் என்பது போன்ற ஆண்களின் பொதுக் கருத்துக்களும், பெண்ணியம் பேசும் பெண்கள் அடங்காத குணம் கொண்டவர்கள், பாலியல் சுதந்திரம் கோறுபவர்கள், புகை, குடி உள்ளிட்ட பழக்கங்களுக்கு உரிமைக் கோறுபவர்கள், குடும்ப உறவுகளை சிதைப்பவர்கள், அவர்கள் கையில் அதிகாரம் போனால் உருப்படாது என்பது வரையான விமர்சனங்களை பெண்கள் கேட்டிருக்கக்கூடும். மேலே குறிப்பிட்டிருக்கும் குணங்கள் பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய தனி நபர் சார்ந்த குணங்கள் மட்டுமே.

பெண்களுக்கு நிகராக ஆண்களும் அழகியலில், ஒப்பனையில், கவர்ச்சி காட்டுவதில் இப்பொழுது கவனம் செலுத்துகிறார்கள், (இன்னும் அதிகமாக என்றும் சொல்லலாம், அவர்களுக்கென்று ஃபேர்னஸ் க்ரீம்கள் தனியே வந்துவிட்டன) பெண்களை மயக்க பல் வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள், அவற்றை கையில் கிடைத்த தொழில்நுட்பங்களைக் கொண்டு, பதிவு செய்து, மிரட்டி, வல்லுறவுக்கும், பொருளாதார ஆதாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். (பெண்கள் இவ்வக்கிரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லையே) அடிப்படையிலேயே சுயமரியாதைக்கு மதிப்பளிப்பவராய் இருப்பின்,  ஆண்களும் யாருக்கும் அடங்கிப் போவதில்லை. புகை, குடி, போதை இவை எவருக்கும் உடல் நலக் கேட்டை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இவை பெண்களுக்கு உடல் நலம் சார்ந்து மறுக்கப்படவில்லை, அது பெண் என்ற பாலியல் அடையாளத்தை முன்வைத்தே மறுக்கப்படுகிறது. குழந்தைப்பேறு காலத்தில், குழந்தையின் உடல் நலன் கருதி என்று ஒரு வறட்டுக் காரணம் சொல்லப் பெறுகிறது, அதே குடி, புகை, போதை இவைகளை உபயோகிப்பவரின் விந்து ஆரோக்கியமற்றதாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது, கண் பார்வையை இழக்கும் வாய்ப்பிருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தும் ஆண்களுக்கு விந்து குறைபாடு, குழந்தைப்பேறின்மை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆண்கள் குடிப்பதற்காக ‘சலுகைக் காரணங்கள்’ ஏராளமாகக் சொல்லப்படுகிறது உடல் அலுப்பு, கடுமையான உழைப்பு, மன உளைச்சல், விரக்தி, கொண்டாட்டம், சோகம்…  இப்படி, பெண்களுக்கு இத்தகைய உணர்ச்சிகள் இல்லையா? இருக்கக் கூடாதென்று ஆண்கள் கூறுவது  புலனுணர்வு, அனுபவ அடிப்படையில் அல்ல, வெறும் ஆண் மைய்யக் கோட்பாடுகளாய் மட்டுமே என்பதை நிணைவு கொள்ளுதல் வேண்டும்.

இது போன்ற கேள்விகளை எழுப்புவதால் பெண்கள் இப்பழக்கங்களைக் கைக்கொள்வதற்கான சுதந்திரம் கோரித்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பது ஆண் மைய்யத்தின் வக்ரமான வாதம். அவற்றை செய்ய நினைக்கும் பெண் கேள்விகள் எழுப்பி யாரிடமும் அதற்கான அனுமதிகோர வேண்டியதில்லை. அக்கேள்விகளின் நோக்கம், கற்பனாவாத கோட்பாடுகளின் தாக்கம் பெண்ணின் (மனிதரின்) விருப்பு வெறுப்புக்களின் மீது ஏன் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுதான். அதேபோல் சிகரெட், மது இவற்றை ‘ஆண்மை’ சின்னமாய் கருதப்படுவதை உடைத்தெறிவதற்கும் இவ்வுரையாடல்கள் அவசியமாகிறது.

கூடுதலாக  சொல்வதானால், முந்தையக் காலக்கட்டத்தில் பெண்கள் கள் அருந்திய தகவல்கள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதும் தாய்வழிச் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் குறவர் சமுதாயத்தில் பெண்களும் குடிக்கச் செய்கிறார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பெரும்பாலான பெண்கள், கடினமான வேலை செய்யும் பெண்கள் குடிக்க செய்கிறார்கள். முதலாளி வீட்டுப் பெண்களும் மது அருந்துகிறார்கள். இதில் குழப்பத்தில் உழல்வது இடைநிலை பொருளாதார படிநிலை மக்கள். ஆண் பெண் இருபாலாருக்கும் இருக்கும் தனி மனித பழக்கவழக்கத்தின் வெளிப்பாடுகளுக்கும், அது சார்ந்த உரிமைப் பிரச்சனைகளுக்குள் மட்டும் பெண்ணியத்தை சுருக்கிவிட இயலாது.  

பெண்ணியம் என்பது ஆணாதிக்கப் பார்வையில் நிலவும் பாலின அடையாள வேறுபாட்டின் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் நடைமுறை. பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டறிவது, எவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை வரலாற்றின் துணையுடன், கருத்தாக்கக் கட்டுடைப்பு ஆகியவற்றைக் கொண்டு கண்டடைவது, ஆணுக்கிருக்கும் அத்தனை சுதந்திரங்களையும், அதற்கும் மேலாக மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்குமான சுதந்திரங்களையும் கோருவது என்று பெண்ணியம் விரிகிறது. ஆணாதிக்க சமூக கட்டமைப்பு விதைத்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளை (வர்க்கம், சாதி, பாலின அடையாளம், பொருளாதாரம் ஆகியன) களைந்து, சமதர்ம சமுதாயத்தை நிறுவுவது பெண்ணியத்தின் நோக்கம்.

பெண்ணியத்திற்கு ஒடுக்கப்பட்டவர்களில் ஆண், பெண், பாலியல் சிறுபான்மையினர், சாதிய சமுதாயப் படிநிலையில்  பின்தங்கியவர்  என்கிற பேதமில்லை. பெண்ணியம் ஏகாதிபத்தியத்திற்கெதிராக அடக்குமுறைக்கெதிராக, ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக ஒலிக்கும் குரல். அது தனி மனித சுதந்திரத்திற்கான சுயமரியாதையைப் போற்றுகிற குரல். இவற்றை முடக்குகின்ற கருத்தாக்கங்களை, ஆதிக்க சக்திகளை, சமூக முறைமைகளை அடையாளம் காட்டுவது, அவற்றை முறியடிப்பது ஆகியவற்றின் பகுதியாகவே, தவறு என்று கருதப்படும் அத்துணை விஷயங்களையும் விவாதத்திற்குட்படுத்துவது (மதுப்பழக்கம், பாலியல் சுதந்திரம், பெண்ணெழுத்தில் பாலியல் சொற்கள் உட்பட).

தவறு  என்று சொல்லப்படும் எல்லாமே  ஆணாதிக்க சமூகம் தோற்றுவித்தக் கோட்பாடுகளே ஆகும். பெண்களின் அறமாக சமூகத்தில் எல்லா சித்தாந்தங்களும், அறிவுரைகளும் ஆணாதிக்கத்தின் குழந்தைகளான ஆண்களால் தோற்றுவிக்கப்பட்டவையே. (இந்த உண்மையை அறியாமல் அவற்றிற்கு அடிமையாகிப் போன ஆணின் பெண்களாலும், அவ்வொழுக்கக் கோட்பாடுகளை அப்படியேக் கடைபிடிப்பதாக பறைசாற்றி தங்களை கற்புக்கரசிகளாய் நிறுவ முயலும் ஆணாதிக்க சிந்தனைக் கொண்ட பெண்களாலும்).  இவற்றில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் உடல் சார்ந்த ஒழுக்கக் கருத்தாக்கங்களாக முதன்மை பெறுகிறது. ஆண்களுக்கும் அவ்வொழுக்க விதிகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு அவற்றை மீறும் சலுகைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இலக்காக பெண்கள் ஆணாதிக்கமுறைமையை எதிர்ப்பதில் பெரும்பங்கு  வகிக்கின்றனர். அது பெண்ணியம் எனும் சித்தாந்தமாக, கோட்பாடாக வரையறுக்கப்படுகிறது. இக்கருத்துக்களை புரிந்துக் கொண்ட ஆண்கள் சிலரும் பெண்ணியத்திற்கு பங்களிக்கின்றனர். ஆண், பெண், பாலியல் சிறுபான்மையினர் என்று எல்லோருக்குமான தனி மனித சுதந்திரத்தை ஆணாதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பதிலும் பெண்ணியத்தின் பங்கிருக்கிறது.

பெண்  எங்கே ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்ற கேள்விக்குப் பதில் சொல்வது என்பது அவற்றைக் கேள்விகளால்தான் எதிர்கொள்ளமுடியும் என்பதிலிருந்துதான் தொடங்கும். ஆண் அறம், பெண் அறம் என்ற விதிமுறைகள் சமூகத்தில் எவ்வாறு தோன்றியது.  தோற்றுவித்தது எவர். பாலியல் ஒடுக்கத்தின் பாற்பட்டு பெண்ணின் இயல்புகளில் ஒன்றாக  நாணம் அமைவது பெண் அறம்.  ஆணின், அறமெல்லாம் நீட்சே கூறுவது போல ‘வென்று எழுதலை’ (Overcoming) ஒட்டியவை. பெண் அறமெல்லாம் பணிந்து அடங்குவதை (submission) ஒட்டியவை என்று சொல்லலாம் என்கிறார் ராஜ் கௌதமன். மேலும் அவர் சொல்வது பதிவிரதை என்கிற பாலியல் தகுதிக்காகப் பெண்ணுக்குரிய அறம் பாலியல் அடிப்படையில் கூறப்படுகிறது. சங்க இலக்கியங்களைக் காண்கையில் ஆண் அறம் பொருள் அறமாகவும், பெண் அறம் இன்பம் சார்ந்து, இயற்கையோடு ஒன்றக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார்.  ”மேலாதிக்கப் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆன்கள் கூறிய ஆண் அறத்தில் பெண் எழுவாயாக இல்லை, செயப்படு பொருளாகத்தான் இடம் பெற்றாள்” என்று ஃபூக்கோவின் மேற்கோள்களைக் காட்டி ஆணின் அறம் தனியுடைமை அறம் என்று விளக்குகிறார். (6)

பெண்ணின்  தருமத்தில் பிசகு ஏற்பட்டால் அந்த வீட்டு ஆண்களுக்கு எத்தனை இருந்தாலும் அத்தனையும் ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்*. பெண்களுக்கான திருமன வயது 9 என்று சட்டம் இயற்றிய மநுவில் தொடங்கி, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், சங்க இலக்கியப் பாடல்கள், திருக்குறள் உள்ளிட்ட படைப்புகளில் பெண்கள் பற்றிய வருணனை, பெண்களுக்குரிய கடமைகள், தண்டனைகள், அங்கிகாரங்களுக்கான செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வகுத்திருப்பது ஆணாதிக்க அமைப்பு.  பெண் விடுதலைக்கெதிரான அத்தனைக் கோட்பாடுகளையும் கடவுளின் பெயரால், புனிதங்களின் பெயரால் நிறுவியதன் மூலம் பெண்களை கடவுள் நம்பிக்கைகளுக்குள் மூழ்கடித்து, புனிதத்தன்மைக்காக அடிமைப்பட்டு கிடக்கவேண்டிய நெருக்கடியை ஏற்றிவைத்தது அவ்வமைப்பு. கடவுள் நம்பிக்கையற்ற ஆணை பகுத்தறிவாளனாக, அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் நாத்திகவாதியாக இருக்க அனுமதிப்பதில்லை. அனுமதி மறுப்பானது நேரடியான விதிகளாக இல்லாமல் பெண் பற்றிய கொச்சையான வசைச் சொற்களாக, நடத்தை சார்ந்த விமர்சனங்களாக வைக்கப்படுகிறது. இவ்விமர்சனங்கள் பெண்களின் நடத்தைக்கான எழுதா விதிகளாக மாறி உளவியல்ரீதியாக பெண்ணை அச்சுறுத்தி அறிவுத் தேடலுக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. [ஏவாள் அறிவுக் கனியை உண்ண வற்புறுத்தியதால் ஆதாம் கடவுளின் அன்பிலிருந்து விலக்கப்பட்டான் என்பது ஆதி உதரணம்]

மறு உற்பத்தி, பொருளாதாரம், உபரி, அதீத லாபம், விரிவாக்கம், அதிகார மோகம் ஆகியவை சமூக கட்டுமானங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றிற்கான சாதகமான சூழலை ஏற்படுத்த அதிகார வர்க்கம் பல்வேறு கோட்பாடுகளைத் தோற்றுவிக்கிறது. சில வேளைகளில் நிலவும் நம்பிக்கைகளைப், பழக்கவழக்கங்களை திரித்து அவற்றை தேற்றங்களுக்குள் (theory) அடக்கிப் பரிவர்த்தனை செய்கிறது.

இப்படி  மனிதர்களுக்காக மனிதர்கள்  தோற்றுவிக்கும் விதிகளை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் ஏற்றி வைப்பதற்கு கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இயற்கையின் விதியான ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஓர் சக்தி பற்றிய கருத்தாக்கங்கள் மூலம் ஓர் ஒற்றை அதிகார மையம் நிறுவப்படுகிறது. மரணம் பசி பற்றிய பயம் ஆகியவைகள் அனைத்து உயிரினிடத்தும் காணக்கூடிய ஒன்று.  [இதேபோல் உடல் இன்ப வேட்கையும், ஆனால் அதில் பெண்களுக்கு விதிமுறைகள் நிலவுகிறது]

சமூக  உளவியல்

மரணத்தையும், பசியையும் வெல்வதற்கான போராட்ட சூழலில் சமூக அமைப்பு மாறிக்கொண்டே இருக்கிறது. பசியை வெல்ல பொருளாதார போராட்டம், மரணத்தை வெல்ல அழியாப் புகழும், வாழும் காலத்தில அதிகாரத்தைக் கைக்கொள்ளவும் மனிதர்களை தள்ளுகிறது என்பதை வரலாறு உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. அதன் ஒரு பகுதியாய் மரணத்தையும் பசியையும் வெல்வதற்கான சாத்தியங்கள் பற்றிய கருத்தாக்கங்கள் மூலம் மனித மனங்களில் ஊடுருவல் செய்து சார்பு நிலைகள், பற்றுணர்ச்சிகள் பரிவர்த்தனை செய்யப்பட்டது. கேள்விக்கப்பாற்பட்ட ஒற்றை அதிகார மையமாய் ’கடவுள்’ எனும் கருத்தாக்கம் நிறுவப்படுகிறது. அவரைப் பணிவதன் மூலம் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று நம்பவைக்கப்பட்டது. (அது இன்றும் தொடர்கிறது).  அப்பணிவுக்கான போர்வையில் தனிச்சொத்து, ஒரு தார மணமுறை மற்றும் அதிகாரம், அரசு, முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு உறுதுணையாக கோட்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டது. அவ்வதிகாரப் புனைவுகளைச் செய்வோர் அறிவைப் பெறும் தகுதியாக வரையறுத்தனர் (ஆனால் அது பொருளாதார உயர்வு, கல்வி அறிவு, சாதிய மேல்நிலை ஆகியவைகளை உள்ளடக்கியது). உடல் உழைப்பிலிருந்து அறிவு பிரிக்கப்பட்டது. அறிவு உன்னதப்படுத்தப்பட்டு, உழைப்பு விலைமதிப்பற்றுப் போனது, குறிப்பாக பெண்ணின் உழைப்பு. [உ.ம். ஞானக்கனியைப் பெற முருகன் உலகெலாம் சுற்றி வருவார், பிள்ளையாரோ தாய் தந்தையை சுற்றி வந்துப் பெற்றுவிடுவார். இதன் மூலம் உடல் உழைப்புக்கு மதிப்பு குறைக்கப்பட்டு, அறிவுத் திறன் ஏற்றிவைக்கப்பட்டது.  தந்திர புத்தியை அறிவு என்று வகுத்து அறிவுடையோருக்கே ஆதாயமான சூழல் நிலவும் என்று கற்பிக்கப்படுகிறது. இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. இன்னும் கட்டுடைத்தால் முருகன், விநாயகன் ஆகியோர் வெவ்வேறு பழங்குடிகளின் தலைவர்கள், சிவனும், பார்வதியும் பார்ப்பனியம் உட்புகுத்திய தலைக் கடவுளர்கள், பழங்குடிகளின் தலைவர்களில் முருகரானவர் அத்தலைமைக்குப் பணிய மருத்து உழைத்து தன் கூலியைப் பெற முனைகிறார், விநாயகரோ அத்தலைமையே சிறந்த தலைமையென்றும், அதுவே உலகத்தின் வடிவம் என்றும் பணிந்து தந்திரமாக வெல்கிறார் என்றும் புரிந்துக் கொள்ளலாம்.]

பொருளாதாரம், மூலதனம், முதலாளியம், அடிமை முறை, சமூக கோட்பாடுகள் ஆகியவை ஒரு தனி இயங்கு பொருளாக வானிலிருந்து குதித்துவிடவில்லை. மனித செயல்பாடுகளிலிருந்தும், மனித போராட்டங்களிலிருந்தும் தோன்றின, தோன்றுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த ஆண்கள் தலைமையிலான சமூக அமைப்புக் கைக்கொண்ட வழிகள் சமச்சீர்தன்மைக்கு எதிரானதாய் பூதாகரமாய் வளந்துவிட்டது எனலாம்.  இப்போராட்டத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டிருப்பது பெண்ணினம். ஆணை சார்ந்து நிற்கும் நிலை, சமூகப் பாதுகாப்பற்ற சூழல், அவளது உடலுக்கும் மனதுக்கும், கருத்துக்கும் நிலவும் ஆணிய அச்சுறுத்தல்கள் என நீள்கிறது.

பெண்களுக்கெதிரான  வன்முறைகள் சில  புள்ளி விவரங்கள்:**

32000 கொலைகள், 19000 வல்லுறவுகள், 7500 வரதட்சனை மரணங்கள், 36500 பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை பெண்களுக்கெதிரான குற்றங்களாக 2006இல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறைய குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் விடப்படுகிறது. இது இந்தியக் குற்றவியல் ஆவண நடுவர் மன்றம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

வன்புணர்ச்சிக்  குற்றம் இந்திய அளவில் அதிகரித்துவரும்  குற்றமாக இருப்பதாக தெரிவிக்கின்றது அம்மன்றம். ஒரு மணி நேரத்தில் 18 பெண்கள் ஆண்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறது. பத்திரிகைகளில் வன்புணர்ச்சி பற்றியும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனலாம். கூட்டமாக ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்வது முதல், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் கூட்டமாக சேர்ந்து அடித்தது வரை பெண்கள் மேல் ஆண்கள், ஆணாதிக்கம் கொண்டுள்ள வக்ரமான வளர்ச்சியைக் காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளாக வரும் பெண்கள் மீது கூட இத்தகைய வன்முறைகள் ஏவப்படுகிறது. இவற்றோடு காதலிக்க மறுக்கும் பெண் மீது அமிலத்தை ஊற்றுவது, கடத்திக் கொலை செய்வது, அப்பெண்ணின் பெற்றோரை அச்சுறுத்துவது என்று நாம் நாள்தோறும் செய்திகளைக் காணமுடிகிறது. நந்திக்ராம், கவுஹாத்தி போன்ற ஊர்களில் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஆண்கள் அடித்து உதைத்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்ததற்காக, ஊரே சேர்ந்து அப்பெண்ணை வன்புணர்ச்சி  செய்ய தீர்ப்பு அளிப்பதிலிருந்து, கௌரவக் கொலைகள், இணையக் குற்றங்கள் [சைபர் க்ரைம்] என எல்லாம் பெண்களின் மீது ஆணாதிக்க சமூக அமைப்பால் ஆண்களால் ஏவப்பட்ட வன்முறையே.

ஆண்களால்  நிலவும் இத்தகையப் பாதுகாப்பற்ற சூழலே பெண்களை குடும்ப  உறவில் தள்ளுகிறது. அதை எப்பாடுபட்டாவது  காத்துக்கொள்ள வேண்டும் என்று அதனுள் நடக்கும் வன்முறைகளை சகித்துக் கொள்ளச் செய்கிறது. ஆண்களால் சீரழிவதை விட ஆணால் சீரழிவது மேல் என்ற எண்ணத்திலேயே இது புகுத்தப்படுகிறது. இவ்வச்சமே பெண் சிசுக் கொலை வரை நீள்கிறது. 2008இல் பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை 19,5,856 ஆக இருக்கிறது. இது 2006 ஐ விட கூடியிருப்பதை நாம் காண முடிகிறது.****

இந்தியாவில் பாலியல் தொழிலானது ஆண்டுக்கு 400000 மில்லியன் வரையிலான வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கிறது. இதில் 30% தொழிலாளிகளின் குழந்தைகள். அவர்கள் ஈட்டுவது 110000 மில்லியன்கள். சுமார் 3 மில்லியன் குழந்தைகளில் 1 மில்லியன் 18 வயதுக்கு குறைவானவர்கள்.  15 சதவிகிதத்தினர் மும்பை, கல்கத்தா, டெல்லி, சென்னை, பங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களைக் கடத்தும் குற்றமாக 1998இல் மட்டும் சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய வருடத்தை விட இது 5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

ஐ.நா பொதுக்கூட்டம் நவம்பர் 25 ஆம் நாளை மகளிருக்கெதிரான வன்முறைகளைக் களையும் உலக தினமாக 54/134 டிசம்பர் 17,1999 தீர்மானத்தின் மூலமாக அறிவித்திருக்கிறது. இதன் பின்ணனியில் இருக்கும் வரலாறு, மிரபால் சகோதரிகள் 1960களில், டொமினிக்கன் அரசர் ரஃபேல் ட்ருஜிலோவின் ஆணையின் பெயரில், சில அரசியல் செயற்பாட்டாளர்களால் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். 1981 முதல் பெண்ணியலாளர்கள் 25 நவம்பரை பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகளுக்கெதிரான தினமாக அறிவிக்கக்கோரினர்.  20 டிசம்பர், 1993 ஐ.நா அதை ஏற்றது.

யுனிசெஃபின் “உலக குழந்தைகளின் நிலை – 2009” இன் அறிக்கைப்படி 20-24 வயதில் உள்ள 47 சதவிகித பெண்கள் 18 வயதிற்கு முன்னறே திருமணம் செய்துக்கொண்டவர்கள். 40 சதவிகித குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடப்பதாக அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது. 1994இல் ஹையிஸ் என்பவரால் செய்யப்பட்ட ஆய்வில் ஐந்து நிமிடத்திற்கொருமுறை பெண்களுக்கெதிரான குற்றங்கள் நேர்வதாக பதிவாகியிருக்கிறது.

உலகளவில்  பெண்கள் நிலைப் பற்றிய சிலத்  தகவல்கள் 1

* வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் தொகையான 1.2 பில்லியனில், 70 சதவிகிதம் பெண்கள்.

* உலக உழைப்பின் அளவில் 67 சதவிகிதத்திற்குமான உழைப்பு பெண்களுடையது, ஆனால் 10 சதவிகிதம் மட்டுமே அவர்களின் வருவாய் அதோடு 1 சதவிகிதம் மட்டுமே அவர்களின் சொத்து.

* கூலிப் பெறாத உழைப்பின் மதிப்பீடான 16 பில்லியன் டாலரின் 11 பில்லியன் டாலர் பெண்களின் காணாப் பங்களிப்பிற்கானது.

* 30 முதல் 40 சதவிகிதம் வரை பெண்களின் கூலி ஆண்களைவிடக் குறைவானது.

* 60 முதல் 80 சதவிகித உணவு, முன்னேறும் நாடுகளில் பெண்கள் உற்பத்தி செய்வது.

* 10 முதல் 20 சதவிகிதமே மேலாண்மைப் பணிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை

* 5 சதவிகிதம் மட்டுமே அரசுத் தலைமைப் பதவியில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை.

பெண்களும் கல்வியும்

* 130 மில்லியன் கொண்ட  6 முதல் 11 60 சதவிகித பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில்  60 சதவிகிதம் பெண் குழந்தைகள் ஆவர்.

* தோராயமாக கல்வியறிவில்லாத 875 மில்லியன் இளைஞர்களில் 67 சதவிகிதம் பெண்கள், அதில் தெற்காசியாவில் 5 இல் 3 பெண்களும், ஆப்ரிக்க, அரேப்ய நாடுகளில் 50 சதவிகித பெண்களும் கல்வியறிவற்றவர்கள்.

இந்தியாவில் பெண்கள் நிலை:

* விவசாயமற்ற  கூலித் தொழிலில் பெண்களுக்கான பங்கு வெறும் 17 சதவிகிதமே.

* பணியாட்கள் எண்ணிக்கையில் நகரங்களில் பெண்களின் பங்கு 13.9 சதவிகிதம், கிராமங்களில் 29.9 சதவிகிதம்.

* பெண்களின் கூலி ஆண்களின் கூலியில் 25 சதவிகிதம் குறைவாக உள்ளது, அது 25 சதவிகித குடும்ப வருமானத்திற்கு பங்களிக்கிறது.

* இந்தியாவில் விவசாயக் கூலியில் எங்கும் சரிசமக் கூலி பெண்களுக்குக் கிடைப்பதில்லை.

* நீதிமன்றப் பணிகளில் 4 சதவிகிதமும், மேலாண்மைப் பணியில் 3 சதவிகிதமும் மட்டுமேப் பெண்கள்.

* 245 மில்லியன் பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.

பெண்களும் ஆரோக்கியமும்:

* பெண்கள் உட்கொள்ளும் காலரிகள் 1440 மட்டுமே, அவர்களுக்குத் தேவை 2200 காலரிகள்.

* சென்சஸ் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் பெண்கள் பிரசவக் காலத்தில் இறக்கின்றனர்.

2011 ஆம்  ஆண்டு சென்சஸும் வெளிவந்துவிட்டது, குழந்தைப் பாலின விகுதியில் (0-6 yrs) ஆயிரம் ஆண்குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகளே இருக்கின்றனர், இது 2001இல் 927 என்ற விகிதத்தைவிட குறைவு. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 830,846 என்று இருக்கிறது. பெண் சிசுக் கொலைகள் இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வியறிவு விகிதமும் ஆண்களைவிட பெண்களில் குறைவாகவே முன்னேற்றம் கண்டிருக்கிறது.

பெண்கள் விடுதலையில்  கால மாற்றம்:

“எப்படி ஒருவர் தன் நிழலைத் தாண்டவியலாதோ, அதேபபோல் நாம் வரலாற்றைத் தாண்டிச்செல்லவியலாது, அதே வேளையில் அவ்வளர்ச்சியை திருகிவிடவோ அல்லது முடக்கவோ செய்யவியலும்” என்கிறார் ஷோசலிசப் புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். மேலும் அவர் சொல்வது, மனிதர்கள் (ஆண்) அவர்கள் வரலாற்றை அவர்களே படைக்கின்றனர். ஆதலால் வரலாற்றின் முன் உழைப்பாளிகளுக்கும், (பெண்ணும் அடங்கிய), உழைப்பளிகளின் கட்சிக்கும் அவர்களின் சொந்த விதியை நிணைவூட்டவும், இயந்திர வளர்ச்சியின் ஆதாரமற்ற வெற்றியை நம்பிக்கையுடன் வலியுறுத்தும் போக்கையும், அதன் விளைவான சோம்பலும், மனநிறைவையும் எதிர்த்தல் அவசியமாகிறது என்கிறார்.

வரலாற்றில்  சமூக அமைப்பானது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது தடுக்கவியலாதது. அம்மாறுதலின் போது அதிகாரம் கைமாறுவது, உரிமைகள் பறிக்கப்படுவதும் நடந்தேறுகிறது. பெண்களின் சமூக வரலாற்றைப் பொறுத்தவரை குலக்குறிச் சமூகத்திலிருந்து தனிச்சொத்தை மையமாகக் கொண்டு எழுந்த சமுதாய அமைப்பு, அவளை இரண்டாந்தர நிலையிலேயே வைத்திருக்கிறது. இனவிருத்திக்கும், குடும்ப மேலாண்மைக்குமான பிறப்பாய் மட்டுமானவள் பெண் என்ற நிலையைத் திணித்தது ஆண் தலைமையிலான தந்தைவழிப் பொருளாதார சமூக அமைப்பே.

பண்டையப்  பலதார மணமுறையில் பிள்ளைகளின்  மேல் பெற்றவனுக்குப் பெரிய  உரிமைகள் இருந்திருக்கவில்லை என்று தொல்பழங்கால ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு ஆண் ஈட்டும் பொருளை, பெண் மற்ற ஆணுக்குப் பிறந்த வாரிசுகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பதிலிருந்து, தன் சொத்து தனக்கான இரத்த உறவுக்கு மட்டுமே செல்லவேண்டும் என்ற நோக்கோடும், அக்காலக் கட்டத்தில் நிலவிய தொழிற்முறைப் போட்டிக்கேற்பவும், பொருளாதார வாய்ப்புகள், அரசியல் அதிகாரம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகிய சூழலுக்கேற்பவும் ஒருதார மணமுறைக்கு மாற்றம் ஏற்பட்டது எனும் தகவல்களை அவ்வாயுகள் மூலம் கண்டுக்கொள்ளலாம்.  இது பொருட்படுத்தக்கூடிய ஏற்பாடு என்பதில் ஐயமில்லை, ஆனால் இருவர் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு முறையில் ஒருவருக்கு மட்டும் விதிகளாக ஒடுக்குமுறை, பொருளாதார அச்சுறுத்தல் (வரதட்சனை), உடல் வதை வன்முறைகள் நிலவக் காரணமாய் இருப்பது களையப்படவேண்டும். உறவுகள் அன்பினால் தீர்மானிக்கப்படவேண்டுமே அன்றி சமுதாயம் கட்டமைக்கும் நலம் பயக்கும் அமைப்பு என்றோ,  கடமை உணர்சிகளினாலோ  அல்ல.

நிலங்களின்  மீது தனிமனித அதிகாரம், அதற்கேற்ற  ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வுகள்  என சமூகம் மாறுதல் பெற்றது. பொதுவாக உழைத்துப் பொதுவாகப் பகிர்ந்து உண்ட நிலைமை மாறி, ஒருவர் உழைக்க மற்றவர் அவ்வுழைப்பின் பலனை அனுபவித்தல் என்ற ஏற்றத்தாழ்வுக் கூடிய சுரண்டல் நிலைத் தோன்றியது. இத்தனிச் சொத்து முறையானது ஆண்களுக்கு கவுரவத்தைப் பெற்றுக் கொடுத்தாலும், நாட்டின் பொருளாதார நிலவரத்திற்கேற்ப தலைமகனுக்கு கடும் நெருக்கடிகளைத் தருகிறது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ளுதல் உதவும். பெண்களும் பொருளீட்டுவதன் மூலம் அந்நெருக்கடிகளை பகிர்ந்துக் கொள்கின்றனர். ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்கள் பொருள் ஈட்டுவது இரண்டாம்தர விமர்சனங்களுக்குள்ளாகிறது.

ஆணாதிக்க  சிந்தனைகளால் பணிக்குச் பெண் எதிர்கொள்ளும் மனநிலைகள்:

1. பெண்களினால் ஆண்களுக்கு வேலை வாய்ப்புக் குறைகிறது.

2. பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் குறித்தான அச்சம் அல்லது பெண்கள் கைக்கொள்ளும் பாலின அடையாள முன்னிறுத்தல், அதை வைத்துப் பெறும் சலுகைகள்.

முதலில் எல்லா சமூக நிலைகளிலும்  பெண்ணுக்கு சம உரிமை அவளது பிறப்புரிமை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டியுள்ளது. வேலை வாய்ப்பு குறைவது பெண்களால் என்பது மூடத்தனமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க பொருளாதார அணுகுமுறையின் இயந்திரமயமாக்கல் அதற்கு முக்கியக் காரணமாய் உள்ளது.  தொழில்மயமாக்கலின் தொடக்கக் காலங்களில், கடும் எடை கூடியவை, ஆபத்து நிறைந்தவை என்று சொல்லி பெண்களை தொழிற்சாலைப் பணிகளிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். இது போன்ற காரணங்களால், பெண்கள் தொழில் நிறுவனங்களில் பங்கு பெறாமல் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பின்னர் அவை நவீன இயந்திரமாக்கலின் போது எளிய தானியங்கி (automation)  யுக்திக்கு மாற்றம் பெற்று, எவரும் கையாளக்கூடிய திறனுக்கு மாறுதல் பெறுகிறது. விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம் பெண்கள் கல்வி கற்றனர், அவர்களுக்கான உரிமைகளை கோருகின்றனர். வேலையற்ற தன்மை (‘unemployment’)  என்பது அரசு தீவிரமாக ஆய்ந்து தீர்வுக் கான வேண்டிய ஒன்று, இதில் பெண்களைப் பழிப்பது ஆணாதிக்க மனநிலை.

ஆணாதிக்க  மனநிலை பொருளாதார அதிகாரம் பெற்றிருக்கும் ஆண்களின் உளவியலை அறிந்து, பெண்களை பாலினக் கவர்ச்சிக்காக முன்நிறுத்துவதற்காக பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கிறது எனவும் சொல்லலாம். அதோடு, ஆணாதிக்க தலைமை பெண்களை தங்கள் பாலியல் இச்சைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறது, கொடுக்கும் காசுக்கு அதிக லாபம் எதிர்பார்க்கும் ஆணாதிக்க, முதலாளித்துவ மனோபாவம்.

பெண்களை ஒடுக்குவதற்காக ஆணாதிக்கம் அவள் உடலின் மேல் ஏற்றிவைத்த சிந்தனைகளே, பெண்களுக்கு நாள்தோறும் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்குக் காரணமாய் இருக்கிறது. ஒருபுறம் அவள் உடலின் மேல் புனிதங்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றிவைத்துவிட்டு, மறுபுறம் இலக்கியம், திரைப்படங்கள், மற்ற ஊடகங்கள் அவளது பாலியல் உறுப்புக்களை சந்தைப்படுத்தி காம உணர்ச்சிகளை விநியோகம் செய்கிறது. (சங்க இலக்கியம் முதல் இதே நிலைதான்). இது மேலும் மேலும் பெண் ஆணுக்கான ஒரு பாலியல் பயன்பாட்டு பண்டமே என்று அறிவுறுத்துகிறது. பெண் உறுப்புகளைக் கண்டு உணர்ச்சி எழாத ஒருவன் ஆண்மையற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, ஆதாரமற்ற உடலின்ப அச்சுறுத்தல்களையும் கற்பிக்கிறது. உடலின்பத்திற்கு சரியான வடிகாலற்ற சூழலில் காம வறட்சியோடு திகழும் ஆண்மகன் கவர்ச்சிக் காட்சிகளால் தூண்டப்பெற்று, காணும் பெண் உடலின் மீது வன்முறையை உபயோகித்தேனும் தன் வேட்கையைத் தீர்த்துக்கொள்கிறான். பணியிடங்களில் இவ்வுளவியல் அங்கிகாரம், பொருளாதார உயர்வு என்ற காரணங்களோடு செயல்படுத்தப்படுகிறது. ஆணின் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆண்மைப் பற்றிய சிந்தனைகளும், ஆணின் உள பலவீனமும் பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறது, பின்பு அவளை குற்றம் சாட்டுகிறது. மேலும் கற்பனாவாத கட்டுப்பாடுகள் அவற்றை மீறுவதில் நிலவும் சுவாரசியத்தை ஒழுக்க மீறலுக்கான வெற்றியாகவும், புரட்சிகர சிந்தனையாகவும் தவறாக புரிந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. 

பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிற்காக ‘பாலியல் சுதந்திரத்தை பெண் சுதந்திரம், நாகரீக வளர்ச்சி’ என்று திரிப்பதும் ஆணாதிக்கமே. இவற்றை உணரத் தவறும் பெண்கள் இரையாகுகிறார்கள். பெண்கள் கவர்ச்சிக் காட்டி ஆண்களைப் பயன் படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பொருளற்றது. மனிதரை மனிதர் ஏய்ப்பதும், பயன்படுத்திக்கொள்வதும், சுரண்டுவதும் காலம் காலமாய் நடந்துவருகிறது. உயர் பதவியில் இருப்பவரைப் புகழ்ந்து பேசி ஆண்கள் ஆண்களைப் பயன்படுதிக்கொள்வதில்லையா? வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை அபகரித்துக் கொள்வது, களவாடுவது போன்ற செயல்களை அதிகமாக செய்வது எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்கள்தானே அதிகம்.

ஆணுக்குப் பெண் துணையாய்க் கிடைப்பதிலும் தடையாய் செயல்படுவது பொருளாதாரம், பணமற்றவனை எப்படி ஆணாதிக்க சமுதாயம் மதிக்க மறுக்கிறதோ, அதே போல் பெண்களும் மறுக்கின்றனர். பணம், பாதுகாப்பான வாழ்க்கை இவற்றைப் பெண் மட்டும் கோருவதில்லை, மனித சமூகமே அதைத் தான் கோருகிறது. மனித மதிப்பிற்கான சமூக அளவுகோல் மாறாதவரை இச்சிந்தனைகள் மாறுவது கடினம்.  

பெண்கள் கவர்ச்சி உடை அணிவது, குடிப்பது, புகைப் பிடிப்பது, கட்டற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதென்பது ஊடகம் கற்பிக்கும் நாகரீக வளர்ச்சி, நவீனமயமாக்கல், உலகமயமாக்கல் இவற்றின் விளைவுகளே தவிர அவைகளே பெண்களின் முழுவிருப்பல்ல. ஆண் உட்கார்ந்து மலங்கழிக்கும் கக்கூஸ்கள் முதற்கொண்டு, பல் துலக்கும் பசையிலிருந்து, அவன் ஓட்டும் வாகனத்தில் தொடங்கி, அக்குளில் அடிக்கும் வாசனைத் திரவியம் முதற்கொண்டு விற்பதற்கு பெண்களின் திறந்த மார்புகளே ஊடகத்திற்கும் முதலாளிகளுக்கும் தேவைப்படுகிறது. இதற்கும் பெண் விடுதலைப் போராட்டத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பி.பி.ஓ நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைப் பெருகிய பின், நாகரீகத் திணிப்பு தவறான சுதந்திரக் கருத்துக்களை முன்வைத்து பெண்களை வழிநடத்துகிறது. பூர்ஷ்வா பெண்கள் இச்செயல்பாடுகளுக்கு பெண் விடுதலைச் சாயம் பூசுகின்றனர். இவ்விஷயங்களில் பெண்ணிய விமர்சனமாய்  எழுவது ஒன்றே ஒன்றுதான், பெண்கள் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று வரையறுத்தது ஆண்கள், இன்றும் அந்நிலையேத் தொடர்கிறது. அது எவ்வாறு அந்நிலைக்குச் சென்றது? பாலின அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட வேறுபாடுகளை கண்டறிவது, களைவது ஆகியவையே பெண் விடுதலைக்கான அடிநாதங்களாய் முன் வைக்கலாம்.

சமூக  அமைப்பும் மார்க்சியத்தின்  பயன்பாடும்:

உழைப்பு, கூலி பற்றிய சிறு உரையாடல் மூலமும் ஆணாதிக்க பொருளாதார இயக்கவியல் மூலம் சமூக கட்டமைப்பை உரையாடலுக்குட்படுத்தலாம்.  முதலில் ஒரு சிலர் முதலாளிகளாகவும், சொத்துப்படைத்தோராகவும் எவ்வாறு முன்னிலையில் இருக்கின்றனர்? எல்லா வளங்களும் பூமியிலிருந்தே எடுக்கப்படுகிறது, அவற்றைக் கொண்டு மனிதப் பயன்பாட்டிற்கான மற்றத் துணைப் பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. மற்றொரு புறம் மனித உயிரின் பராமரிப்பிற்கான சேவைகள் என மருத்துவம், இன்னபிற சேவைகள் செயல்படுகிறது.

பொதுவுடமை பொருளாதார சூழல் நிலவிய தொல்பழங்குடிக் காலத்திற்குப்  பின் இப்படி பூமியிலிருந்து எடுக்கப்படும் பொருள்களின்  உரிமை, அவற்றை எடுக்கும்  உரிமை சிலரிடம் மட்டுமே இருக்கிறது [இதைப் பற்றி விரிவாக பேச வேண்டும்]. அவ்வளங்களை எடுத்துக் கொடுக்கும் பணிக்கு மனித உழைப்பு செலுத்தப்படுகிறது அதற்கு கூலி வழங்கப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் நிலையிலும், மற்றவர் பெறும் நிலையிலும் இருப்பதற்கான காரணங்கள் எவை?  இக்கேள்விகளை அதன் முளையிலேயே எழுப்பவியலா வண்ணம் அடிமைமுறையை தற்காத்துக்கொள்ளவே பாவம், புண்ணியம் எனும் மதக் கருத்தாக்கங்கள் இதனோடு தொடர்புப்படுத்திப் புனையப்பட்டது.

நம் நிலத்தில் நமக்குத் தேவையான  அளவு உழைத்துப் பொருளீட்டி  மனநிறைவோடு வாழ்வதென்பது நமக்காக நாம் உழைப்பதென்றாகிறது. அவ்வாறில்லாமல் எவர் பிடியிலோ இருக்கும் நிலங்களில், தொழிற்சாலைகளில் [தொழிற் சாலைகள் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பது பெரிய விளக்கங்களுக்குரியது [அந்நியமாதல்], பொதுவளங்களை ஒரு சிலர் சுரண்டிவிட்டு, அதை வளப்படுத்துவதற்கான மனித உழைப்பைக் கைக்கொள்ள, வேலை வாய்ப்புப் பெருக்கம் என்பதெல்லாம் விவாதிக்கப் படவேண்டியவை.] ஒரு சிலர் உழைத்துப் பொருளீட்டித் தருதல் என்பது மற்றவர் வளம்பெற நாம் நம் உழைப்பைச் செலுத்துதல் என்பதாகிறது.  கொள்ளை லாபம் போக, மனித உழைப்புச் சக்தியை தக்கவைத்துக் கொள்ள முதலாளித்துவமானது கூலிகளைக் கிள்ளித் தருகிறது.  தொடக்கத்தில் ஆண்கள் உழைப்புச் சக்திகளாகப் பயன்பட்டனர், அவர்களைப் பராமரிக்கவும், சந்ததியை வளர்த்து தனிச் சொத்துப் பேணவும் பெண்கள் வீட்டில் வைக்கப்பட்டனர்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்பது நன்மையே. ஆனால்  பெண்களுக்கு மட்டுமே அப்பணி என்று விதிக்கப்படுவதே, ஒடுக்குமுறையாகக் காலப்போக்கில் மாறிவிடுகிறது.  இவ்வொடுக்கு முறைகளுக்கேற்ற கருத்தாக்கங்கள் பற்றுத் தன்மையை, சார்பு நிலைகளை, பிரிவினைவாத சிந்தனைகளை, அதோடு சேர்ந்து பொருளாதார, போட்டி, பொறாமைகளை விதைத்து மனித உறவுகளில் சிதைவுகளை ஏற்படுத்துகிறது. எல்லோரும் சமம் எனும் கம்யூனிச வாழ்க்கை முறையை, அதை அடைவதற்கான வழிமுறைகளை முன் வைத்தவர் ஆசான் காரல் மார்க்ஸ். இதற்காக அவர் கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறார். வறுமையில் உழன்று குடும்பத்திற்கென பெரிதாய் ஏதும் செய்யவியலாமல் மடிந்தார். அவரது மனைவி ஜென்னி வசதியான வாழ்க்கையப் புறந்தள்ளி குழந்தைகளை பட்டினிக்குப் பறிகொடுத்து, வறுமையிலேயே அவரும் இறந்து போனார். [இது காதலால் அவர் செய்த தியாகம். “கற்பு, கடமை, பத்தினித் தன்மை ஆகிய அச்சுறுத்துல்களை ஏவி மனைவிகளை சோதித்த ரிஷிகளின் கதையாடல்கள் அவ்வுறவில் தாக்கம் செய்திருக்கவில்லை].

கார்ல் மார்க்ஸும், அவரைப் பின்பற்றி  மனித விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திச் சென்ற எண்ணற்ற  அவரது தோழர்களும் (பெண்கள் உட்பட) குடும்பத்தை பின்னுக்குத்தள்ளி, மனித குல மேம்பாட்டை முதன்மையாகக் கருதியதன் பயன்களை இன்றைய குடும்ப உறவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. [8 மணி நேர வேலை மட்டுமே என்பதுக் கூட இதன் விளைவே] அவருக்கு உறுதுணையாக எங்கல்ஸ் செயல்பட்டதோடு, அவரும் மார்க்சியம் எனும் சமுகவிஞ்ஞானக் கருவியுடன் பல ஆய்வுகளை மேற்கொண்டார். ‘குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் அவரது புத்தகம் அதில் முக்கியமான ஒன்று.

சர்வதேசிய அளவில் ரோஸலிண்ட் மைல்ஸ், கிளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வார் உள்ளிட்ட பெண்ணியலாளர்களும், இந்திய அளவில் சாவித்திரி பாய் பூலே முதல் தற்போதைய பன்வாரி தேவி வரை,  தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட சுயமரியாதை வீராங்கனைகள் ஆற்றியப் பணிகளும், அவர்களது எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போது இஸ்லாத்தில் உள்ள பெண்களுக்கான சமத்துவமின்மையை எதிர்த்து ஆஸ்ரா நொமானி எனும் இந்தோ-அமெரிக்கப் பெண்மணி எடுத்துரைக்கும் கருத்துக்களும், போராட்டங்களும்  சமீப காலங்களில் கவனம் பெற்றுவருகிறது.  (இது போன்ற கருத்தை வலியுறுத்தியதற்காக தஸ்லிமா நஸ்ரின் எத்தகைய எதிர்ப்புக்களை சந்தித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே)

பெண்களுக்கு கல்வி, ஓட்டுரிமை, சமமான கூலி, கருக்கலைப்பு உரிமை, விவாகரத்து உரிமை, தொழுகை உரிமை என எல்லாவற்றையும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே நமது முன்னோடிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

 பெண்  புத்தியும், காம  நாட்டமும்:

சொலவடைகள், பழமொழிகள் என எல்லாவற்றிலும் பெண் பேச்சைக் கேட்கும் ஆண்  பின்னடைவான் என்று அச்சுறுத்தி வைத்திருக்கிறது ஆணாதிக்க முறைமை. பெண் பேச்சைக் கேட்டு நடக்கும் ஆண் மகனை ஆண்மையற்றவன், பெண்டாட்டி தாசன், அதீத காமநாட்டம் கொண்டவன் என்று ஆண்களை இழிவு படுத்துகிறது. பெண்டுகன், பெட்டை, பேடி, பேடு என்ற சொல்லாடல்கள் ஆணை மிகவும் கோபமுறச் செய்வதாக இருக்கிறது. இங்கு பெண்மைத்தன்மை என்பது ஒரு இழிவான தகுதியாக கருதப்படுகிறது,  இதனால் ஆண் அவனுக்கான, மற்றும் அவன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிற ஆண் மையத்தின் சமூகத் தகுதியை இழந்து விடக்கூடியவனாக இருக்கிறான். இம்மனநிலை சக ஆண்களையே விலக்கும் பட்சத்தில், மூன்றாம் பாலினரை மிகக் குரூரமான பார்வையோடு அணுகி, அவர்களை மனிதர்களாக பார்க்க மறுத்து இழிபிறவிகளாக ஆண்களைப் பார்க்கவைக்கிறது. அதோடு ஆண்களால் கட்டியமைக்கப்பட்ட பெண்களின் உலகத்தில் மூன்றாம் பாலினர் பரிதாபத்திற்குரியவர்களாகவும், கடவுள்கொள்கை உடையவர்களால் கழுவ முடியா பாவம் செய்தவர்களாகவும் உற்று நோக்கப்படுகின்றனர். இம் மூன்றாம் பாலினத்தினரிடமும் ஆண்மையவாதிகள் தங்களது பாலுணர்வைத் தீர்க்கும் அடிமைகளாய் மட்டுமே அவர்களை காணுகின்றனர். அந்த வகையிலும் தங்கள் ஆண்மையை நிருபித்துக் கொள்கின்றனர்.

பேடி இலக்கணமாய் திவாகர நிகண்டு அவர்களது உடல் அசைவுகள் முதற்கொண்டு அவர்கள் நினைப்பது, அவர்களின் நோக்கம் அனைத்தையும் மிகக் கீழ்த்தரமான ஒன்றாக அவர்கள் ஆணிகளிடம் மிகுந்த இச்சை மிக்கவர்கள்,அதோடு அறுவெறுக்கத் தக்க குணங்களே அவர்களது ஆதார குணம் என்ற அளவிலேயே இலக்கணம் வகுக்கிறது. (இப்படிப்பட்ட இலக்கணங்களை பெண்கள் வகுப்பார்களா என்பது ஐயமே).

தன்னை,மற்றும் தன் புலன்களை, பெண்ணைக் கட்டுப்படுத்த முடியாத ஆணைப் பெண்தன்மை கொண்டவன் என்று கூறும் ஆணாதிக்கம், அதனாலேயே, மிகுந்த பிடிவாதத்தோடு துறவைக் கொண்டாடுகிறது, ஒருவகையில் துறவு, புலன் கட்டுப்பாடு எல்லாமே ஆணாதிக்கத் தத்துவங்களே. பண்டையத் தாய் வழிச் சமூகங்களில் துறவு என்றொரு கோட்பாடிருந்திருக்கவில்லை, அவர்கள் உலகாயதவாதிகளாக பொருள்முதல்வாதிகளாக, இன்பவியல் வாழ்வுமுறையை கடைபிடித்தவர்களாக இருந்திருக்கின்றனர்.. வேத காலம், வைதீக சிந்தனை கருத்துமுதல்வாத ஆன்மா எனும் அகத்தின் உன்னத நிலை இவையெல்லாம் தந்தை வழிச் சமூகத்தின் கோட்பாடுகள். இதுவே பெண்ணுக்கு ஞானத்தை மறுத்தது, அறிவை மறுத்தது, பெண்ணை ஆணிற்கு குழந்தை பெற்றுத் தரும் கருவியாய் அதே சமயம் ஆண் தருவதால் அவனுக்கு அடிமையாயும் இருக்க கற்பித்தது.

அதீத  காமம் என்ற ஒன்றை பெண்தன்மை கொண்டதாக தோற்றுவித்து, சமூக ஒழுக்கத்தை காமத்தைக் கட்டுப்படுத்தும் செயலை வைத்தே மதிப்பிடும் அறமாக ஆணாதிக்க அறம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. முரணாக, பக்தி இலக்கியங்களில் ஆண்கள் தங்களை நாயகியாக பாவனைச் செய்து ஆண் கடவுளைத் தொழுவர். காமமும், கலவியுமே அதன் முழுச் சாரமாக இருக்கும். பெண்ணான ஆண்டாளின் பாடல்கள் காமமாகிக் கசிந்துருகிக் கலவிக்கு ஏங்குவதாகவே பதிவாகியுள்ளது, தனது உறுப்புகள் திருமாலுக்காகக் கிளர்ந்து ஏங்கி ஏக்கத்தால் விம்மி, பொங்கி, சதா அவன் வருகைக்காக  திறந்து காத்திருப்பதாக பாடியுள்ளார். இங்கு காமம் பக்தியாகக் கடவுளின் பெயரால் கொண்டாடப்படுகிறது. மானிடருக்கு அது மறுக்கப்படுகிறது. பெண்கள் காம நாட்டத்தினால் பார்வைகளை வீசி, மயக்கி விடுவர், அதுவே அவர்களது பிறப்பு என்று மநு சொல்லியிருக்கிறார். ஆண் பற்றிய இத்தகைய மதிப்பீடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணுக்கு பெருமை, வீரம், வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, உரிமை, ஆள்வினை, செயலூக்கமான  பாலியல் அதிகாரம் ஆகியவை, பெண்ணுக்கு பெருமை உடல் அழகு, மென்மை, பணிவு, அடங்கிய பாலியல், கற்பு ஒழுக்கம், வேவைச் செயல் [தாய்மை], மடமை, நாணம் ஆகியவை.

ஆண்டாண்டுக் காலமாக வகுக்கப்பட்டுள்ள இவ்வறங்களுக்கேற்ப வாழ்வதே  பெண்களுக்கு கௌரவம் நிறைந்த ஒன்று. இவற்றை ஒரு சொல்லாக, அல்லது ஒரு கேள்வியாக  முன்வைத்தால் அப்பெண் ஆண்களின் உலகத்தில் மாற்றுக் கூற முடியாத பரத்தை, குடும்பத்தை குலைக்க வந்த வேசி. இதுவே ஆண்கள் மனமுவந்து பெண்ணிக்கு இடும் நற்பெயர்கள்.

கண்டுபிடிப்புகள், தத்துவங்கள் எல்லாம் காலத்திற்கேற்ப, அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, மாறிவந்திருக்கிறது. சமயச் சிந்தனைகளுக்கு தத்துவக் கோட்பாடுகள் செயல்பட்டுவந்திருக்கிறது, பின்பு 15 ஆம் நூறாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் புலனுணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்  தத்துவங்கள் உருவாகின்றன. பொதுக் கோட்பாடுகள் என்பவை சமூக அனுபவங்களிலிருந்து உருவாக்கப்படுபவை, ’பிறப்புக் கோட்பாடுகள்’ என்று எதுவில்லை. “மனிதனே சகலவற்றிகும் பொது அளவுகோல்” என்றார் புரோட்டகோரஸ். உண்மைக்கு கூட ஒவ்வொரு தத்துவவாதிகள் ஒவ்வொரு விளகங்களை அளித்துள்ள்னர். உண்மைகளின் அளவுகோல் ஒரு கருத்தின் பயனே என்கிறது பயன்வழிக் கொள்கை (Pragmatism), அமைதியைத் தரும் பயன்பாடு உண்மை எனச் சொல்கிறார் பீர்ஸ்.

அறிவு, சிந்தனை, உழைப்பு, ஆகியவை ஒற்றை மைய அதிகாரத்திற்குள் ஆதாயங்களாக முடக்கப்படுகிறது. அவ்வாதாயம் என்பது ஒட்டுமொத்த மனிதருக்கானதாய் அல்லாமல் ஆதிக்க வர்கத்தினருக்கானதாய் இருப்பதை மார்க்சிய ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு புற உலகப் பொருளோடு புலனுணர்வு அனுபவங்கள் எல்லோருக்கும்  ஒன்றாக இருக்கவல்லது [பசி, தாகம், வலி போன்றவை] ஆனால்  இறை, மறை, ஒழுக்கம், புனிதம் போன்றவை அக உணர்வு சார்ந்தவை என்ப்படுகிறது. அதற்கென சிறப்புத் தகுதிகளைக் கோருவதாய் இருக்கிறது.  அது உண்மையோ இல்லையோ அத்தகுதி பெற்றவர் என்ற முத்திரை வேண்டி மனித மனத்தை தூண்டிப் பிரிதாளுகிறது கற்பனாவாத கோட்பாடுகள். அத்தகுதியை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்திரத்தை ஆணாதிக்கச் சமூகம் தருவதில்லை. ஆணாதிக்கச் சிந்தனையானது முழுக்க முழுக்க சமய சிந்தனைகள் முன்வைக்கும் ‘ஆன்ம’ சுத்தத்தைக் கோருவதன் மூலம் இயற்கையை, புலனுணர்வை, தனிச் சக்தியாக புற உலகோடு வினையாற்றி பெறக்கூடிய தனி அனுபவங்களை, அதற்கான சுதந்திரத்தை மறுத்தலிக்கிறது என்பதை நம் பெண்கள் புரிந்துக் கொள்ளச்செய்யவேண்டும்.

இந்தியாவில் மதக் கட்டமைப்புகள் இறுகி, கெட்டித்தட்டிவிட்டன, அதை அசைக்கும், ஆட்டுவிக்கும்  காரணிகள் பற்றிய அறிதலை மக்களிடம்  எடுத்துறைத்தல் தற்போதைய அவசரத் தேவை. உலகுக்கும், புலன்களுக்கும் அப்பால் ஓர் உலகமிருக்கிறது, புலன்கள் குறைபாடுடையவை என்றக் கருத்து ஆண்மகனைத் தன் மனைவியிடம் கூட கட்டுபாடற்ற உடலுறவில் ஈடுபடுவதிலிருந்துத் தடுக்கிறது எனத் தோன்றுகிறது. அதனால் பண்டமாய் நினைக்கும் மற்ற பெண்களிடம் அச்சோதனை முயற்சிகளை செய்துப் பார்க்க ஆண்களைத் தூண்டுகிறது. பெண்ணுக்கும் இது பொருந்தும், வெளிப்படுத்தமுடியாத காம நாட்டத்தை அவள் வேற்று ஆணிடம் வெளிப்படுத்தமுடிகிறது. கட்டாய பிணைப்பு (bondage) இல்லாதி்ருத்தல் கூச்சத்தைக் கட்டுபாட்டைத் தளர்த்திவிடுகிறது. புலன்களைப் பற்றிய புரிதலும், அது உணர்ச்சியவப்படும் நிலைகளையும், இயற்கை சார்ந்த பார்வையுடன் கூடிய பாலியல் கல்வி ஆண் பெண் உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக தொடு உணர்ச்சிகளை ‘அகத் தூய்மை’ என்ற கற்பனாவாத கருத்தாக்கத்தைத் தாண்டி, இயல்பாக எப்படி அவற்றை எதிர் கொள்வது, அவ்வுணர்ச்சி நிலைகள் ‘காதல்’ என்ற புரிதலை எவ்வாறு விதைக்கிறது போன்ற உரையாடல்கள் பெண்களை பாலியல் சுரண்டல்களிலிருந்து காக்க உதவும். இங்கு வழங்கப்படும் கல்வியும் ஆண் தன்மை கொண்டதாகவே இருக்கிறது.

ஒழுக்கக்  கோட்பாடுகள், பாவம், புண்ணியம், தண்டனை என்று முழங்கும்  சமூகத்தில் தான் எயிட்ஸ்  முதன்மையிடம் வகிக்கிறது, பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் வல்லுறவுகளுக்கு ஆளாகுகிறார்கள், கொலை, கொள்ளை, ஊழல் என்று சகலவிதமான உடல், உழைப்பு, பொருளாதார சுரண்டல்கள் தலைவிரித்தாடுகின்றன.

இயற்கையிலேயே  பெண் பலகீனமானவள் என்பது முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டும். ஒருவேளை [அழுத்தமாக] அவள் பலகீனமாக இருந்தாலும், அவளை ஒடுக்குவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. தாய்வழிச் சமூக நிலைமைகளுக்கு திரும்புவோமாயின் அவளுக்கு ’பலமான’ ஆண்கள் பாதுகாவலர்களாக இருக்கும் பேறுதவி தேவைபடப்போவதில்லை. இன்னொரு ஆண் துன்புறுத்தாத வரையில் அவளுக்கு ஆண் துணை பாதுகாப்பையொட்டி எப்பொழுதும் தேவைப்படுவதில்லை. பல ஆண்டுகாலமாய் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டதன் காரணமாக உடல் வலிமை சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடமுடியாமல் போனது. ஆண்களுக்கு நிகராய் அவர்களும் அத்தகையப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் பெண்ணும் பலசாலியாகிவிடுவாள் என்பதில் ஐயமில்லை. மேலும் ’உடல் சக்தி’ என்பது பயிற்சியால், வேலை முறைகளால் வடிவமைக்கக்கூடிய ஒன்று என்று நம் பெண்கள் புரிந்துக் கொள்ளுதல், இயற்கையைக் காரணம் காட்டி நம் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை எனும் உண்மையை உணர்த்தும்.

வன்முறைக் குற்றங்களில் பெண்ணின் பங்கு  சொற்பமானது. சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டால் எவரும் எவரையும் பாதுகாக்க வேண்டியதில்லை. ஆண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது, இதற்கு எவ்வகையிலும் பெண்களும், பெண் விடுதலைப் போராட்டங்களும் காரணமில்லையே. பெண்ணிய சிந்தனை ஆண்களுக்கும் விடுதலை அளிக்கவல்லது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம் சமூகத்தில் வன்முறை, பொருளாதார  ஏற்றத்தாழ்வு, சாதி இவை மட்டுமே  ஒடுக்குமுறையின் வடிவங்களாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது.  மனித உணர்ச்சிகளின் மேல், சிந்தனைகளின் மேல் செலுத்தப்படும் கருத்தாக்க ஒடுக்குமுறைகள் முக்கியத்துவமற்றவை, ஒருவேளை அவை பரிசீலனைக்குட்படுத்தப்படுமாயின் அது ஆண்களின் நலன் கருதியதாக இருத்தல் அவசியம் எனும் நிலைதான் நிலவுகிறது.

பெண்  விடுதலை என்பது புரட்சிகரமான அறிக்கைகளினாலும், ஆண்களை வசைபாடுவதாலும், நாகரீகத் தோற்றத்தினாலும் திடீர் என்று ஒரு நாள் நம் கையில் தானாய் கனிந்து விழக்கூடிய பழமன்று.  ஆணாதிக்க முறைமையால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபட்ட பாலினத் தேர்வுக்கொண்டவருக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை சரியாக புரிந்துக்கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று.

சீமாட்டிகளுக்கும், நாகரீக கோமான்களுக்கும் மட்டுமான ஒன்று அல்ல பெண்ணியம். சொல்லப்போனால், அடித்தட்டு பெண்களுக்கும், கல்வி அறிவற்ற சமூகத்தவருக்கும், பால் பேத அடிப்படையில் குறைந்த கூலி வாங்கும் பாட்டாளி வர்க்கத்துப் பெண்களுக்காகவும் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டிய ஒன்று. கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையைப் போன்று வர்க்க அடிப்படையிலான, சாதி மனநிலையைக் கணக்கில் கொண்டும், பொருளாதாரம், கல்வி நிலையில் பின்னடைவு ஆகியவைகளை நினைவில் கொண்டும் பெண்ணியத்திற்கான  ஒரு அறிக்கையைத் தயார் செய்தல் அவசியமாகிறது.

அம்மக்களிடத்து  பண்பாட்டு மீறல், பண்பாட்டுக்  காவல் இரண்டுமற்ற கண்ணோட்டத்துடன் ஆணின் பங்கையும், குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் அங்கிகரிக்கும் வகையான உரையாடலைத் துவங்குதல் முக்கியம் எனக் கருதுகிறேன். அதே வேளை கூட்டுச் சமூக வாழ்வின் பயன்களையும், அதற்கு எதிராய் குடும்பம் என்பது சுயநலத் தன்மைக் கொண்டதாக விளங்குகிறது என்பதையும், மனித உறவுகளை இரத்த உறவுகளாய் சுருக்குவதன் மூலம் முதலாளிகள், ஆதிக்க சக்திகள், மத நிறுவனங்கள் சமூகத்தில் விதைக்கக் கூடிய ஆபத்தான கருத்தாக்கங்கள் எடுத்துரைக்கப்படவேண்டும்.

நம்  அறிவு நிலைகள், உழைப்பு  ஆகியவை எப்படி மற்றவரின்  கட்டுப்பாட்டில் இயங்குகிறது  என்ற உளவியலை மையமாகக் கொண்டிருத்தல் உதவும். இது நேரடியாக ஆண் பெண் நடவடிக்கைகளைச் சாடாது, அறியாமையை சுட்டிக் காட்டுவதாக அமைக்கபெறும். அவற்றோடு தொன்மைச் சமுதாயத்தில் பெண்ணின் பங்கு, சடங்குகளில் அவளுக்களிக்கப்பட்ட முதன்மை நிலை ஆகிய வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட வெளிப்பாடுகள் தொடர்புப்படுத்தலுக்கு ஏற்புடையதாய் அமையலாம். இவற்றோடு பெண்களுக்கென்று சில “ஆணாதிக்கத் தற்காப்புச் சிந்தனைகளை” வலியுறுத்த வேண்டும் அது அழகியல், பொருளாதார மேன்மை நிறைந்த வாழ்வு, கௌரவம், சமூக அங்கிகாரம் இவற்றின் மேல் அதீத நாட்டம் பற்றியத் திணிப்பிலிருந்து பெண்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ளுதல் என்பனவற்றை உள்ளடக்கியதாய் ஒரு திட்ட வரைவாய் மேற்கொள்ளப் படவேண்டும்.

இந்தியாவில் நடைபெறும் கொலைகள், மற்றும்  தற்கொலைகளில் கணிசமானவை  கலாச்சாரக் காரணங்களுக்காக நடைபெறுகின்றன என்று பதிவு செய்திருக்கிறார் அசோகன் முத்துசுவாமி,. கப் பஞ்சாயத்து பற்றிய ஒரு தொகுப்பில். 2003 ஆம் ஆண்டு முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் அதே மாதங்களில் 13 கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. ஜனநாயக மாதர் சங்கம் திரட்டியுள்ள தகவல்களின்படி, 2007ம் ஆண்டு வெறும் நான்கு மாத காலத்திற்குள் 107 கவுரவக் கொலைகள் ஹரியானாவில் நடந்துள்ளன. இதன் பின்னணியில் சாதி, பொருளாதார, கலாச்சார காரணங்கள் நிலவுகின்றன. தமிழகத்தில் பார்ப்பனிய-இந்துத்துவ-கலாச்சார கௌரவத்  தாக்கம் சற்றுக் குறைவாக இருப்பதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

தருக்கம்  என்பது இரு தரப்பையும் நியாயப்படுத்தக்கூடியது. ஆனால் கற்பனாவாத புனிதத்தன்மை, முன் முடிவுகள், அனுபவ ஒப்பீடுகள் எதிர் தரப்பை ஏற்க மறுக்கிறது. ஏற்க மறுப்பது அவர் அவர் சுதந்திரம் என்றாலும், அது எதிர் தரப்பென்று ஒன்று நிலவுவதையே ஒடுக்க நிணைக்கும் மனநிலையே பொதுப் பண்புகளுக்கெதிரான பெண்ணியக் கேள்விகளைப் புரந்தள்ளச் செய்கிறது. பொதுப் பண்புகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் நிலவுவது போல், அதை மறுக்கும் சுதந்திரமும் பொருட்படுத்தவேண்டிய ஒன்று. அத்தகைய மறுப்புக்குரலாக பெண்ணியக் குரல் உள்ளது. தற்போது கடைப் பிடிக்கப்படும் பண்புகளுக்குள்ளேயே நின்று உரையாடுவது பெண் விடுதலைப் பாதையில் ஓர் முடக்கம். புது பண்புகளை, பெண்களுக்கான பண்புகளை பெண்கள் உருவாக்க வேண்டும். சாதி, மதம், புனிதக் கோட்பாடுகள், பொருளாதார தற்காப்பு இவைகளை மீறிய பண்புகளை மார்க்சிய வழி பெண்ணிய சிந்தனைகளைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். அது மனிதனை இயற்கையோடு இணைக்கும் தன்மைக் கொண்டதாகவும், மனிதரை மனிதராக (ரிஷி நிலைக்கு உயர்த்தாத) அங்கிகரிக்கும் தன்மைக் கொண்டதாகவும் இருக்கும் என்று உறுதி கூறலாம்.

உதவிய நூலகள் மற்றும்  சுட்டிகள்:

உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாய, தமிழில் தோதாத்ரி, என்.சி.பி.எச், 2009

  1. மார்க்சியம் – பெண்ணியம்: உறவும் முரணும், வெ. கோவிந்தசாமி, நடராஜ், விடியல் பதிப்பகம், 1998.
  2. குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ், தொகுப்பு பக்தவத்சல பாரதி.
  3. பெண்ணியச்  சுவடுகள், முனைவர் வாசுகி  ஜெயரத்னம், 2009, அறிவுப் பதிப்பகம்.
  4. சோசலிசமும், பதபீடங்களும், ரோசா லக்சம்பர்க், தமிழில் ராமசந்திர வைத்தியநாத், பாரதி புத்தகாலயம், 2009
  5. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம், எங்கெல்ஸ், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ,
  6. ’கப்’ பஞ்சாயத்து: சாதியின் மற்றொரு கோரமுகம், அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், 2010.
  7. கார்க்சியக் கட்டுரைகள், ந. முத்துமோகன், காவ்யா, 2007.
  8. Rosa Luxemberg – Her Life and Work, Paul Frolich, Translated by Edward Fitzgerald, Victor Gollancz Ltd, London.

* http://ncrb.nic.in/

* http://www.census.gov/ipc/prod/wid-9803.pdf

* http://www.swayam.info/swayam_gi_leaflet_31mar.pdf

* http://www.sparrowonline.org/

** http://www.azadindia.org/social-issues/crime-against-women-in-india.html

*** http://hubpages.com/hub/Violence-against-women-in-India

ஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் – கொற்றவை

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1000 திரைப்படங்கள் எடுக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.  வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கென்று விசேடமாக இந்தியத் திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது.  இருபதாம் நூற்றாண்டில் திரைத் துறை உலகளாவிய நிறுவனமாக மாறியது.  பல பன்நாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்வதும் சமீபகாலங்களில் நடக்கிறது. 2010ன் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி திரைப்பட தயாரிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, சைனாவையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னணியில் இருக்கிறது.  இந்தியத் திரைப்படங்கள் 90 நாடுகளுக்கு மேல் வெளியாகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக விற்பனை செய்யப்படும் ‘மென் தட்டானது’ (DVD) 2000ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி 1.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. இந்திய இசைத் துறை முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக உள்ளது.  தமிழ் திரைப்படத் துறையானது இந்திய திரைத் துறையில் இரண்டாம் நிலையில் உள்ளது.
திரைப்படமானது மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாகி விட்டதை மறுப்பதற்கில்ல. செலுலாய்ட் ஊடகம் பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக மேடை நாடகங்கள், தெருக் கூத்து போன்ற வடிவங்களில் மக்கள் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிவோம். வரலாற்றுக்கு முந்தையக் காலக்கட்டத்திலிருந்தே தொலைத் தொடர்புகள் நிகழ்ந்துள்ளன. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குறியீடுகள் வாயிலாகத் தொடங்கிய இத்தொடர்பு பின்பு  20 லட்சம் வருடங்களுக்கு முன்பு ஒலி வடிவம் பெற்றது, எழுத்து வடிவமானது 7000 ஆண்டுகளுக்கு முன் பரிணமித்துள்ளது. குகை ஓவியங்கள் (cave paintings), கற்பாரை செதுக்குதல் (petroglyphs), உருவ விளக்கப்படம் (pictogram), படவெழுத்து (ideogram) பின்பு எழுத்து என்று தொடர்பு முறையானது பரிணாமம் பெற்றது.  ஆதியில் தாங்கள் எதிர் நோக்கும் ஆபத்தான மிருகங்கள், சவால்கள் ஆகியவற்றை மற்றவருக்கு சுட்டிக்காட்டி எச்சரிப்பதற்காக, பின்பு சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக என்று படிப்படியாக வளர்ந்து 17 – 18 நூற்றாண்டு வாக்கில் மின்னாற்றல் வழியாக தகவல்களை பரிமாற்றம் செய்யும் மின்னியல் தொழில் நுட்பத்திற்கு முன்னேறியது. 1895 லூமியர் சகோதரர்கள் “சலனப் படம்” (motion picture)  கண்டுபிடித்தது உலகளாவிய அளவில் ஒரு புதிய அலையை உருவாக்கியது.  மும்பையில் ஒரு திரைப்படத்தை திரையிட்ட பின்னர் இந்தியாவிலும் அத் தொழில் நுட்பம் ஒரு வீச்சை ஏற்படுத்தியது.  இன்று உலக வரிசையில் இந்திய சினிமா முன்னணியில் உள்ளது.
புராணக் கதைகள், வரலாற்று சம்பவங்கள், பின்பு குடும்பக் கதைகள் என்று பல்வேறு படைப்பு வகைகள் (genre) உருவாகின. இரண்டாம் உலக் போருக்கு பிந்தையக் காலக் கட்டத்தில் “மசாலா” சினிமா என்ற ஒரு பேச்சு வழக்கில் “வியாபார நோக்கோடு” எடுக்கப்படும் திரைப்படங்கள் குறிக்கப்பெற்றன. ’கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சந்தன மரம்’ அதாவது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடம்  ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் ’மசாலா’ வகையிலேயே இருப்பதை சமீபகாலமாகக் காணமுடிகிறது. (ஓரளவுக்கு மலையாளம், வங்காளம், ஒரியா, போஜ்புரி போன்ற மொழித் திரைப்படங்கள் சமூக அவலங்களப் பேசினால் கலைப் படங்கள் (art film) என்று வகுக்கப்பட்டு விருதுகள் கொடுத்து ஓரங்கட்டப்படும்). ‘மசாலா’ என்பதற்கு, ஒரு குறிப்பிட்ட படைப்பு வகையில் இல்லாமல் ”சண்டை, நகைச்சுவை, காதல், மிகைச் சோகம், நாடகம்’ என்று எல்லா உணர்வுகளையும் கலந்தது என்று விளக்கம் சொல்லப்படுகிறது.  இது தென்னிந்திய மற்றும் ஹிந்தி திரைப்படங்களுக்கே பெரும்பாலும் பொருந்தும் ஒரு அடையாளமாக காணமுடிகிறது.
தகவல் பரிமாற்றம், வரலாற்றுப் பரப்புரை, சமூக விழிப்புணர்வு எனும் பயன்பாடு நலிந்து ஊடகம், குறிப்பாகத் திரைப்படம் பொழுதுபோக்கிற்காக எனும் கருத்தாக்கம் உருவக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்பாட்டிற்கு இல்லாதவருக்கு பொழுதைப் போக்க நேரம் ஏது? அது ஒருபுறம் இருக்கட்டும். வேலைகளுக்கூடே களைப்பு தெரியாமல் இருக்க பாடல்கள் பாடி வேலை செய்வது, சமூகக் கூடல்கள், வேளான் சடங்குகள் (கும்மிப் பாட்டு) ஆகியவற்றின் போது எல்லோரும் தகுதி பேதமின்றி களிப்பில், வேண்டுதலில் பங்கு பெற்ற நிலை மாறி ஒரு சிலர் களிப்பூட்ட, போதிக்க அதில் மற்றவர் பார்வையாளராய் பங்கு பெரும் நிலை உருவானபோது ‘தகுதி’, ‘ஞானம்’, ‘கலை’, ‘மேன்மை’, ‘தூய்மை’, ‘உன்னதம்’ போன்ற விதிகள் ‘களிப்பு’, ‘தொடர்பு சாதனங்கள்’ இவற்றை ஒரு சிலரது கட்டுப்பாட்டுக்குள் அடக்கியது.  மக்கள் கலையாக இருக்கும் தாய் வழிச் சமூக கலைகள் ‘நாட்டுபுறக் கலைகள்’ (folk art) என்றும், தந்தை வழிச் சமூகமான பார்ப்பனியம் திரித்த, திணித்த, அபகரித்த சமத்துவமற்ற ‘கலை’ யானது ‘செம்மைக் கலை’ யாகவும் (Classical Art)வகுக்கப்படுகிறது.  குறிப்பாக கி.மு 200 முதல் கி.பி. 200 க்குள் இயற்றப்பட்ட ‘பரத சாஸ்திரம்’ அல்லது ‘நாட்டிய சாஸ்திரம்’ எனும் நூல் கலைக்கென (இசை, நாட்டியம், நாடகம், இலக்கியம் அணைத்திற்கும்) ஒரு கோட்பாட்டை உருவாக்கியது. இக்கோட்பாட்டுக்குள் அடங்கும் கலையானது ’கவின் கலை’ (aesthetic art) என்று உயர்த்திப் பிடிக்கப்பட்டது, அந்நிலை இன்றும் தொடர்கிறது.  பண்டைய காந்தர்வ வேதத்தின் அடிப்படையில் சாம வேதத்தின் பின் இணைப்பாக நாட்டிய சாஸ்திரம் 6000 ஸ்லோகங்கள் கொண்டதாக இருக்கிறது.  இதில் குறிக்கப்பெரும் சமஸ்கிருத ’சொல்லியலை’ வைத்தே நாம் எளிதாக இவ்வதிகாரம் எவரின் கையில் இருந்தது, இது எவருடையக் கலையைத் தூக்கிப் பிடிக்கிறது என்று எளிதில் சொல்லி விடலாம்.
இப்படி சிறிது சிறிதாக அன்னியப் படுத்தபட்டக் கலையானது இந்தியச் சூழலில் மன்னராட்சிக் காலத்தில் பார்ப்பனிய அதிகார வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது என்று சொன்னால் அதில் தவறில்லை.  கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் என்பவையேக் கலையென்றாகி, தெருக்கூத்து போன்றவை மதிப்பிழந்து ஆங்கிலேய ஆட்சியில் பார்ப்பனிய சாதுர்யத்தால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.  ராஜ ராஜன் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட அல்லது வளர்த்து விடப்பட்ட தேவதாசி மரபு ஆங்கிலேய ஆட்சியில் ‘பார்ப்பனியக் கலை வளர்ப்பிற்கு’ பெரிதும் உதவியது என்றும் சொல்லலாம்.
’கவின் கலை’யில் இத்தகையச் சூழல் என்றால் திரைத் துறையிலும் ஒரு காலக் கட்டம் வரை பார்ப்பனிய, ‘உயர் சாதி’ ஆதிக்கம் இருந்ததை மறுப்பதற்கில்லை.  கலைஞர்கள் பார்ப்பனியர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கையாண்ட கதையம்சங்களும் பார்ப்பனியப் புராணக் கதைகள், ‘ஒழுக்கச் சித்திரங்கள்’, பெண்ணடிமை பரப்புரைகளே. கலாச்சாரம், குடும்ப அறம், சமூக அறம் என்று திரைப்படங்கள் முன் வைப்பது பெரும்பாலும் அவர்களது கற்பிதங்களே.
நிமாய் கோஷ், சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்னன், ஜான் அப்பிரஹாம், மீரா நாயர், தீபா மேத்தா, சாய் பரஞ்பயின என்று வெகு சிலரது படங்கள் சர்வதேசிய அங்கிகாரம் பெற்றுள்ளது.  தமிழகத்தில் ‘பசி’ துரை, பாலு மகந்திரா, பாரதிராஜா போன்றோர் 70 களின் இறுதியில் விளிம்பு நிலை மக்கள், மாற்றுக் கதாப்பாத்திரங்கள், சமூக அவலங்கள் ஆகியவற்றைத் தொட்டிருந்தாலும்,  பெண் கதாப்பாத்திரச் சித்தரிப்பில் அவர்களும் எந்த மாற்றங்களையும் பெரிதாக செய்துவிடவில்லை. ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, பாரதிராஜாவின் ’புதுமைப் பெண்’, ‘கருத்தம்மா’,  சீமானின் ‘பசும்பொன்’, ஆர். சி. சக்தியின் பத்தினி, , சில வி. சேகர் திரைப்படங்கள் பெண் மைய்ய கதாப்பாத்திரங்களைக் கொண்டு எடுக்கப்பட்டதாக உள்ளது, அதுதவிர மற்றவை எல்லாம் ஆணாதிக்க பெண் கதாப்பாத்திரங்களே.  விசு, பாலசந்தர் போன்றவர்களின் பெண் கதாப்பாத்திரங்கள் ‘அரை குறை’ பெண் விடுதலைச் சிந்தனை மற்றும் முற்போக்கு குழப்பவாத கதாப்பாத்திரங்கள் என்று தான் சொல்ல முடியும். பாடல்களில் ஆடை அவிழ்ப்பு செய்துவிட்டு ‘கற்புக்கரசியாக’ தீச்சட்டி ஏந்தி ஆடவைப்பார்கள் ’பண்பாட்டுக் காவலர்கள்’ அத்தோடு வாய்கிழிய பெண்ணுக்கான ’கற்பு’ அறம் பற்றி வகுப்பெடுப்பார்கள்.
இப்படி ‘குடும்ப’ பொறுப்புள்ள பெண்கள் ஒரு புறம் இருக்க, இளைஞர்களுக்கான காதல் திரைப்படம் என்றால் ‘கவர்ச்சி’க் கதாநாயகி, கொண்டாட்டக் குத்தாட்டப் பாடல்கள் என்று ஒரு காலக் கட்டத்தில் ‘வளர்ச்சிப்’ பெற்ற ‘நவீன’ திரைப்படப் போக்கானது, பெரும் முதலாளிகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள், பன்னாட்டுக் குழுமங்கள், அரசியல் அதிகார வர்க்க ஊடக முதலாளிகள் இவர்களின் நுழைவுக்குப் பின்பு ‘குரங்கினால் பங்கு போடப்பட்ட அப்பம்’ போன்றானது.
கலைக்கு அங்கிகாரம் என்பது ரசனை சார்ந்தது எனும் ஒரு வழக்கு உள்ளது. ’மசாலாத்’ திரைப்படங்களைப் பொறுத்தவரை அதன் தேவையாக மக்களின் ரசனையேக் காரணமாக சொல்லப்படுகிறது.  ’ரசனை’ என்ற ஒன்று எவ்வாறு தோன்றியது.  சந்தைப் படுத்தப்படும் ஒரு பொருளில் இருந்து தானே ரசனை அல்லது தேர்வு உருவாகிறது.  சந்தைப் படுத்தும் முதலாளியே ‘ரசனை’ என்பதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான்.  சினிமா என்பது வியாபாரம், அதற்கு பொழுதுபோக்கு வரிதானே உள்ளது கல்வி வரி, சேவை வரியா உள்ளது என்றெல்லாம் எள்ளலாக பேசுவோர் உண்டு. இங்கு தான் ஒரு கேள்வி எழுகிறது இன்னாருக்கு இது தான் ‘பொழுது போக்கு’ என்று தீர்மானிக்கும் அதிகாரம் அரசுக்கோ அல்லது அத்துறையினருக்கோ யார் கொடுத்தது.  எங்களையே குறை சொல்கிறீர்களே நாங்கள் விஷத்தைக் கொடுத்தால் வாங்கி குடித்து விடுவீர்களோ என்று மடக்க நிணைக்கும் ‘அறிவு ஜீவிகள்’ ஒன்றை தெளிவு படுத்தவேண்டும், நீங்கள் கொடுப்பது விஷம் என்று அறிவித்து விட்டா கொடுக்கிறீர்கள், தேன் என்றல்வா சொல்கிறீர்கள்.  நாங்கள் எங்கள் திரைப்படங்களைப் பார்க்கச் சொல்லிக் யாரையும் கட்டாயப் படுத்தவில்லையே என்று அடுத்த முட்டாள்தனமான ஒரு விவாதமும் வைக்கப்படுகிறது.  எவரும் பார்க்க வேண்டியதில்லை என்றால் சந்தைப் படுத்தவே தேவையில்லையே.  ஆக நீங்கள் செய்வது முன் கூட்டியே திட்டமிட்டு செய்யும் துரோகம், பண்பாட்டுச் சிதைவு.
பண்பாடு என்பதற்குள் என்றும் சுருக்கப்படுவது பெண்ணின் நடத்தையே, அதனால் தான் பெண்கள் சற்று சுதந்திரமாக செயல்பட்டால் உடனே பண்பாடு கெட்டுவிட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. பண்பாட்டுச் சிதைவு பற்றிக் கவலையுற்று போர் கொடி தூக்கும் பிரிவினர் நாட்டின் ‘சமதர்மத்தை’க் குலைக்கும் பலவேறு சீர்கேடுகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.  உதாரணமாக குஷ்பு ‘கற்பு’ பற்றி பேசியதற்கும், காலணியுடன் ‘கடவுள்’ முன் அமர்ந்ததர்கும் வழக்கு போட்டு ‘போராடி’யவர்கள், திரைத் துறையில் பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்தி, வெட்ட வெளிச்சமாக ‘ஆடை அவிழ்ப்பு’ செய்வது பற்றி ஏன் கவலைக் கொள்வதில்லை.  ‘தமிழ்’ பண்பாட்டின் படி ஒரு பெண் முழுக்கப் போர்த்தியவளாகவல்லவா இருக்க வேண்டும், மார்புக்கு ஓர் அங்குலமும், யோனிக்கொரு அங்குலமும் மட்டுமே உடையாக கொடுத்து பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கும் முதலாளிகளை எதிர்த்து இவ்வமைபுகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன.
பெண்கள் தங்கள் உடல்ழகை வெளிக்காட்டத் தயாராய் இருக்கிறார்கள் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் எனும் ஒரு விளக்கம் வரலாம். இதற்கு நேரடியாக பதில் சொல்வதை விட வெகுஜனத் திரைப்படங்களில் பெண்களுக்கான் பாத்திரம் என்னவாக இருக்கிறது என்று நோக்குவோமானால் ‘காதலி’ ‘சகோதரி’ ‘மனைவி’ இன்னபிற குடும்ப உறவுகள். இதில் அவள் காதலியாக இருக்கும் வரை ’வீரம்’ நிறைந்த கதாநாயக ஆணின் பின்னால் அலைவது, அல்லது அவனை இவள் பின்னால் அலைய விடுவது, கணவுகள் காண்பது அல்லது ‘வில்லனின்’ கணவில் தோன்றி நடனமாடுவது, ‘பணத்திற்காக ஆடும் நடன மாது’ வாக இடையை முன்னுக்குத் தூக்கி தூக்கி உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் அசைவுகளை காமிராவின் நுணியில், அதாவது பார்ப்பவரின் முகத்துக்கு நேரே காண்பித்து ஆடுவது என்ற அளவில் தான் இருக்கிறது. கதாநாயகியாக நடிப்பதற்கு நடிப்புத் திறமையை விட உடல் வனப்பு, நிறம், எந்தளவுக்கு சதைக் கண்காட்சிக்கு ஒத்துழைப்பார் என்ற அடிப்படையில் தான் ஒரு பெண்ணுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அல்லாதவர் சிறு வேடங்களில், அல்லது நடனப் பெண்ணாக வேண்டியது தான். இச்சூழலில் உடல் மட்டுமே ஒரு பெண்ணுக்கான முதலீடாக்கப்படுகிறது. அடித்துப் பிடித்து ஒரு வாய்ப்பு தேடி நடித்த பின்னர் அதுவும் கவர்ச்சி காட்டி நடித்த பின்னர் (அதற்குள் அவள் எவ்வகையில் எல்லாம் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியிருப்பாள் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை) அப்பெண்ணுக்கு அடுத்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை, ஆழ்ந்த கதாப்பாத்திரங்கள் பெண்களுக்காக இல்லாத நிலையில் ‘பார்பி’ பொம்மை போன்று நடமாட மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். (ஓரிரண்டு விதிவிலக்கு உண்டு) ஆணாதிக்க கண்ணோட்டமும், மனோபாவமும் நிறைந்திருக்கும் சினிமாவில், புது புது முகங்களை மன்னிக்கவும் உடல்களைத் தேடி இயக்குனர்கள் செல்கையில், ஒரு முறை ‘சேற்றில்’ விழுந்து விட்ட பெண்ணுக்கு வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது பெரும் சவாலாக அமைகிறது. இளமை போவதற்குள் அவள் தன்னை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் எனும் நெருக்கடி நிலை.  குடும்ப உறவுகளையே பண்டமாக மாற்றும் சக்தி பெற்ற பணமானது இங்கேயும் வென்றுவிடுகிறது. போட்டவனுக்கு முதலை எடுக்க வேண்டும், நடிக்கும் ‘ஆண் மகனுக்கு’ தனது படம் எப்படியாது ஓட வேண்டும், ‘பெண்ணைத்’ தவிர இவர்களை காக்கும் சக்தியுள்ள கருவி ஏதாவது இருக்கிறதா என்ன?
பணம், புகழ், கை சொடுக்குக்கு வேலையாள், உயர்தர வாழ்க்கை என்று கிடைக்கப்பெறும் ஒரு துரையாக சினிமா இருப்பதால், மனித மனம் அதில் எளிதில் விலை போகிறது. குறிப்பாக பெண் ஒரு முறை நடிகையாகி விட்டால் ஆணாதிக்க மனோபாவம் அவளை தினம் தினம் கற்பனையில் வல்லுறவு செய்துவிடுகிறது. பொது இடத்தில் பார்த்தால் கூட அவளை ஒரு பாலியல் பண்டமாகவே கருதி, இரட்டை அர்த்த ஏளனங்கள், பாலியல் தொல்லைகள் கொடுத்து அச்சுறுத்துகிறது.  நடிகர் நடிகைகளைக் கொண்டாடும் ‘பொது’ மனநிலையானது, அவர்கள் தெருவில் வருவதை விசித்திரமாகப் பார்த்து மொய்த்து விடுகின்றது, பெண் என்றால் கண்டிப்பாக பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றது (நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்).  பணம், ஆசை, ‘கலைத் தாகம்’ இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக நடிக்க வந்து விட்ட பெண் அடுத்து அதை உதறிவிட்டு மற்ற பெண்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமுதாயம் விடுவதில்லை.  ‘பொது தொல்லைகளில்’ இருந்து தப்பிக்க இப்பெண்கள் ’சீருந்து’ போன்ற சில வசதிகளை கொள்ளுதல் அவசியமாகிறது.  இவ்வசதிகளைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு நடிகை ‘சில சமரசங்களை, அர்ப்பணிப்புகளை’ செய்வதென்பது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது. தன் உடலுக்கு மட்டுமே சந்தை என்று புரிந்து கொள்ளும் அவளுக்கு மாற்று வழி இருப்பதில்லை.
ஏதாவது வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது.  வேலைக்குச் செல்பவர் ஒரு நிறுவனம் பிடிக்கவில்லையென்றால் வேறொரு நிறுவனத்திற்கு செல்லும் சுதந்திரம் இருப்பது போல், நடிகர் நடிகைகளுக்கு அச்சுதந்திரம் வாய்க்கிறதா என்பது சந்தேகமே.  ஓரளவுக்கு பிரபலமான ஒரு நடிகை அத்துறை பிடிக்கவில்லை என்று வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தால் அவள் எத்தகைய விமர்சனங்களையும் எள்ளல்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது விவாதிக்க வேண்டிய ஒன்று.
நடிகர்களுக்கும் இந்நெருக்கடிகள் இருந்தாலும் அவனது உடல் பண்டமாக்கப்படுவதில்லை, ஆணாய் அவன் பாலியல் சார்ந்த தொல்லைகள், அவமானங்களை சந்திக்க வேண்டியதில்லை.  ஆனால் வாய்ப்பின்றி குடித்து, குடித்து தற்கொலை செய்யும் அவலங்கள் நடந்தேறியுள்ளன.
இன்று பெரும்பாலான பத்திரிகைகள் பெண்களின் கவர்ச்சிப் படங்களை நம்பித்தான் நடக்கின்றன. இப்புத்தகங்களை எதிர்த்து ‘கலாச்சார காவலர்கள்’ கோஷங்களை எழுப்புவதில்லை, ஆனால் ஒரு பெண் கவிஞர் உடல் மொழி சார்ந்து எழுதிவிட்டால் போதும் கிளம்பிவிடுகிறார்கள். இது போன்று எண்ணற்றப் பத்திரிகைகள் மொழி பேதமில்லாமல் உலகளாவிய அளவில் பெண் உடலை வைத்து பிழைப்பு நடத்துகின்றன. இப்படி ஒவ்வொரு செயலும் பெண் ஆணுக்கு ‘இன்றியமையாதவளாய்’ இருக்கிறாள் என்பதையே வலியுறுத்துகிறது.
திரைபடங்களின் தரம், அதன் முரண்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுதப்படவேண்டும். திரை நாயக நாயகிகள் ஒரு விஷயத்தை அல்லது கதையை பரப்புரை செய்வதற்கான ஒரு ஊடகம் அவ்வளவுதான் எனும் புரிதலை வளர்க்க வேண்டும்.  ஒருவர் கூலி வேலை செய்வது போல், அலுவலக பணி செய்வது போல் திரைத் துறையினரும் ஓர் பணி செய்கிறார்கள், அவர்களைக் கொண்டாடுவதற்கும், வழிபடுவதற்கும், அதிசய பிறவி போல் மெச்சுவதற்கான மனநிலை எவ்வாறு உருவாகிறது, அவர்களால் சமுதாயத்தில் என்ன பயன் இருந்திருக்கிறது, என்ன வகையான மாற்றங்களை இவர்கள் சமூகத்தில் விதைத்திருக்கிறார்கள் என்ற உரையாடல்கள் மக்கள் மத்தியில் எழுப்பப் படவேண்டும்.  திரைப்படங்களில் எண்ணற்ற புரட்சி செய்யும் இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் அரசுக்கு ‘காக்கா’ பிடிப்பவர்களாகவே இருக்கின்றனர், ‘கற்பு’, தமிழ் பண்பாடு என்று வகுப்பெடுக்கும் இவர்கள் ஏன் சக நடிகையின் உடலை எந்த தார்மீக அறமுமின்றி கையாள்கிறார்கள் என்று மக்கள் இவர்களை நோக்கி கேள்விகள் எழுப்ப வேண்டும்.
மனித மனமானது உணர்ச்சி மிகுந்த புலன்களால் ஆனது என்று சொல்லவும் தேவையில்லை, அது ஒவ்வொரு புலன்களின் வாயிலாக கற்கிறது, உணர்கிறது, செயல்படுகிறது.  ஒலி ஒளி என்பது மிகுந்த சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் அதன் வாயிலாக ஏற்றிவைக்கப்படும் கருத்துக்கள் விளைவுகள் கொண்டவை என்பதற்கு மாற்று கருத்து இருந்துவிட முடியாது.  ஆண்மை பெண்மை பற்றி இவர்கள் பரப்பும் கருத்துரைகள் சமூக முன்னேற்றத்தில், சிந்தனை வளர்ச்சிப் பாதையில் முடக்காக இருக்கிறது. பெண் விடுதலைப் பாதையில் பெருத்த முட்டுக்கட்டையாக இருப்பது திரைப்படங்களே, பெண்களைப் பாலியல் பண்டமாய் பயன்படுத்தி மேலும் மேலும் பாலியல் வக்கிரங்களை விதைக்கொண்டேயிருக்கிறார்கள், அது பெண்களுக்கெதிரான வன்முறையாய் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டேயிருக்கிறது.
திரைப்பட, காட்சி ஊடக மாயையிலிருந்து மக்களை மீட்பதே சமூக சிந்தனையாளர்களுக்கு, சீர்திருத்தவாதிகளுக்கு இருக்கும் முதனமை சவாலாக கருதுகிறேன்.  உலகமயமாக்கலின் விளைவால், இச்சவால் மிக கடுமையானதாக நீண்டுகொண்டேயிருக்கிறது.
சமீபத்தில் காயல்பட்டினம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு பார்க்க நேர்ந்தது.  இசுலாமியப் பெரும்பான்மை நிறைந்த இவ்வூரில் பல அசாத்திய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.  முக்கியமாக இவ்வூரில் திரையரங்குகள் இல்லை.  விளையாட்டுக்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள், இளைஞர்கள் என்று எல்லோரும் எச்ச நேரங்களை கால்பந்து விளையாட்டில் கழிக்கிறார்கள், கூடி உண்கிறார்கள், கூட்டுத்  திருமணங்கள் பொது சமூகக் கூடத்தில்தான் நடக்கிறது.  காயல்பட்டினம் கால் பந்து போட்டி உலகப் புகழ் வாய்ந்தது.  அத்தோடு அவ்வூரில் காவல் நிலையம் இல்லை. இசுலாமிய மார்கத்தின் படி ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்வதோடு, ஆண்களே புகுந்த வீட்டிற்கு செல்கின்றனர். இதற்கு காரணமாய் இருக்கும் நிகழ்ச்சி வருந்தத்தக்கதாயினும், அதனைத் தொடர்ந்து அவர்கள் எடுத்திருக்கும் முடிவானது, தாய் வழிச் சமூகத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது.  ஒரு முறை கர்பிணிப் பெண் ஒருவர் மாமியாரால் நிறைமாதமாக இருக்க்ம் பொழுது தண்ணீர் துறைக்கு சென்று நீர் எடுத்துவர விரட்டப்படுகிறார். அவர் கணவர் வீட்டில் தான் இருந்திருக்கிறார், இருந்தாலும் மாமியார் அவரை அனுப்பவில்லை. தண்ணீர் எடுத்து வரும் வழியில் அப்பெண் மயங்கி விழுந்து இருக்கிறார் (அவர் இறந்து விட்டாரா என்பது சரியாக நிணைவில் இல்லை). இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாமியார் வீட்டில் ஒரு பெண் இருக்கப்போய் தானே இத்தகையக் கொடுமைகளை அனுபவிக்கின்றாள் அம்மா வீட்டில் இருந்தாள் அவளுக்கு பாதுகாபு என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஊர் பராமரிப்பு, முன்னேற்றம் ஆகியவை இவர்களது தொடர் சிந்தனைகளாக இருப்பதற்கு இவ்வூரில் பொழுதைத் தின்னகூடிய திரையரங்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
‘புறக்கணிப்பு’ ஒன்றே நமது ஆயுதம்.  அவ்வாயுதம் அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தக்கூடியது. மக்கள் சக்தியின் மகத்துவத்தை வலியுறுத்தக் கூடியது. புறக்கணிப்பு சிந்தனைகளை, அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று சுயமரியாதையை வளர்ப்பது நம்முன் இருக்கும் தலையாயக் கடமை.

ஆணின் பெண்: உடை அரசியல். – கொற்றவை

நவீனம் அதி நவீனமாகி ஊதிப் பெருத்து மனிதனின் வாழ்க்கை முறைகளை தன் இரக்கமற்ற பொருளாதார வாய்களால் மென்று தின்று கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் என்பது நடை, உடை, உண்ணும் உணவு வரை இன்னும் ஆழச்சொன்னால் மனிதர்களது கனவுவரை பெரும் தாக்கத்தைப் பாய்ச்சியிருக்கிறது. அதன் வெற்றியை பன்னாட்டு நிறுவனங்களின் பெருக்கம் உறுதி செய்கிறது. சமூகம் என்பது ஆணின் வெளி. அதில் பெண் பார்வையாளர்களாய் இருப்பதற்கும் தகுதியற்றவர்கள். ஆண் வெளிக்காட்டும் பாவனைகளில் எவ்வளவு நவீனங்கள் பெருகியிருந்தாலும் பெண் பற்றிய ஆணின் பார்வை ஒரு போதும் மாறுவதில்லை. ஆணுக்கு எப்போதும் பாலுறவுக்கான ஒர் பொருளே பெண். அதைத்தான் அன்றைய மனுதர்ம சாஸ்திரம் முதல் இன்றைய ஊடகம் வரை முன் மொழிகிறது. ஆண் இவ்விசயத்தில் பழமைவாதியாகவே இருக்கிறான்.

நவீனம், உடைகள் மூலம் சமூகத்தில் ஏற்றிவைக்கும் பெண் பற்றிய கருத்தாக்கங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். உடை ஒன்றே நம் உடலுக்கு எப்போதும் மிக நெருக்கமான ஒன்றாக திகழ்கிறது. அது அல்லாதவரை பிச்சைக்காரர் என்றும், மன நிலை பிறழ்ன்றவர் என்றும் அடையாளம் காணப்படுகிறது. ( ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை நினைவில் கொள்க) உடலை மறைக்கவும், பாதுகாக்கவும், சுற்றுச்சூழலின் தாக்கத்திலிருந்து காக்கவும் உடை அவசியமாகிறது. ஆனால் இப்பயன்களையும், கண்ணோட்டங்களையும் தாண்டி உடை என்பது ஓர் மொழியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது உடல் பற்றிய மொழியாகவும், ஒருவரது சிந்தனை, தேர்வு, சமுதாய வெளிப்பாடு மற்றும் மதம், ஜாதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் அங்கிகாரம், மற்றும் மொழியாகவும் திகழ்கிறது. (புத்தரும், காந்தியும் தங்கள் உடையை ஒரு ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் வன்புணர்ச்சிக்கெதிராக மணிப்பூர் பெண்கள் நிர்வாணத்தையும் ஆயுதமாக பயன்படுத்தியிருப்பது இங்கு நினைவில் வருவது தவிர்க்கவியலாதது)

உடைகளுக்கு இவ்வளவு பின்புலமும் அரசியலும் இருக்கையில் பெண்ணுடைகள் மட்டும் ஆணுக்கு கிளர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும் என்ற ஆண்களது பார்வையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்களாகிய முதலாளிகள் பெண்கள் மேல் செலுத்தும் உடைத்திணிப்பை நாம் அரசியலாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண் பெண் உடலீர்ப்பு இயற்கையால் தீர்மானிக்கப்பட்டது. உடல் என்பது உயிருள்ள, உணர்ச்சிகளால் தூண்டப்பெறும் சாதனமாய் இருப்பதால்,. பெண்களுக்கான உடை வடிவமைப்பு குறித்தும் அதற்கு பின்னால் செயல்படும் ஆண் அரசியல் குறித்தும் நோக்கவேண்டும். பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பதில் பெரும் பங்கு ஆடை, அலங்கார, அழகுணர்ச்சி கருத்தாக்கங்களே. நவ நாகரீகம், பெண் சமூகவயப்படுதல் மற்றும் பெண் சுதந்திரம், முற்போக்கு சிந்தனை, இன்னபிற…. பெயரால் பெண்கள் ஆண்களின் இச்சைகளுக்கு காட்சிப் பொருளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல் திரைப்படங்கள், விளம்பரங்களைப் பார்த்து பெண்கள் “நவீன பாணி” (ஃபேஷன்) பித்து பிடித்தலையுமாறு பல்வேறு புனைவுகள் நடைபெறுகின்றது. பெண்ணுக்கு முன் நிறுத்தப்படும் சுதந்திரமானது ஆண் அவளுக்கு தர நினைக்கும் ( தன் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ) சுதந்திரம்தானேயொழிய அது பெண்ணுக்குரிய சுதந்திரம் ஆகாது.

நாகரீகமானது அதிகாரத்தின் கட்டமைப்பு. ஒவ்வொரு சமூகத்தையும் ஆளும் கருத்துக்கள் ஆள்வோரின் கருத்துக்களே என்கிற மார்க்சின் கூற்றை இங்கு நான் நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். அடிமைத்தனத்தின் வடிவம் தான் மாறுகிறது, அடிமைத்தனம் அப்படியே இருக்கிறது. நிலவும் சூழலுக்கேற்ப பெண் உரிமைக் கோட்பாடுகளை ஆராய்தல் காலத்தின் அவசியம். பெண்கள் தங்களது உடல், உணர்வு சுதந்திரம், அதற்கான தேவைகளை சிந்திக்கத் தவறும் நேரத்தில் ஆண்கள் அப்பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட்வர்களின் சுதந்திர நோக்கத்தை, அரசியல் பார்வையை ஒடுக்குகிறவர்கள் எழுத முடியாது. முடியுமாயின் அது முற்றும் திரிபாகவே முடியும், அமையும். பெண்ணானவள் தான் செல்லும் வழி தன் தேர்வா, அல்லது திணிக்கப்பட்ட தேர்வா, அறியாமையால் பின்பற்றும் தேர்வா, சுயநலத் தேர்வா என்று பகுத்தாராய்வது தத்தமதுசிந்தனைகளை வேவு பார்க்க உதவியாக இருக்கும்.

ஆதி காலத்தில் இருப்பியல் சூழலினால், பிறகு குழு வாழ்க்கை முறையினால், பின்னர் வணிக பரிமாற்றங்களினால் உடையின் வகைகள் பற்றிய தேர்வு (choice) கிட்டியது. மற்றொரு வகையில் புராணங்கள், புனிதப் புத்தகங்கள் வாயிலாகவும், பண்டைய சிற்பம், ஓவியங்கள் வாயிலாகவும் உடை பற்றிய அறிதல் கிடைக்கிறது. விவசாய பொருளாதாரத்திலிருந்து, தொழில் பொருளாதாரத்திற்கு மாறுதல் பெரும்பொழுது உடை வகைகளில் பெரும் மாறுதல் ஏற்படத்துவங்கியது. தொழில் சார்ந்து உடை வடிவமைக்கப்பட்டாலும், அந்நிறுவனங்களில் அதிகார படிநிலைகள் நிர்ணயிக்கும் பொருளாதார சூழல் உடைகளிலும் ஏற்றத் தாழ்வுகளை நிறுவியது. உலகமயமாக்கல் மூலம் அந்நிய பொருளாதார படையெடுப்பு நாகரீகத்தின் பெயரால் உடை என்பதை பயன்பாட்டுப் பொருட்குறிப்பிலிருந்து மாற்றி சமுதாய படிநிலை கருத்தாக்க குறியீடாக மாற்றிப்போட்டது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உடை என்பது அறிவு நிலையின் வெளிப்பாடாக, சுதந்திர சிந்தனையின் (கட்டமைக்கப்பட்ட) வெளிப்பாடாகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. (உடை என்று நாம் பேசும்போது ஆடை, அணிகலன் இதர அலங்காரப் பொருட்களையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.)

இது எவ்வாறு நடக்கிறது? ஒவ்வொரு தனி நபரிடமும் உடை வடிமைப்பாளர் ஒருவர் வந்து கற்றுக்கொடுப்பதில்லை. மாறாக கூட்டுத் தகவல் தொடர்பு (group / mass communication) மூலம் நடக்கிறது. இது நாமே அறியா வண்ணம் நிகழ்கிறது. இது ஒரு மூளை மழுங்கடிக்கும் செயல். (Brain Washing). இச்செயலுக்கு முழுவதும் உறுதுணையாக இருப்பது ஊடகங்கள் (சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், காலாந்திர இதழ்கள், (periodical magazines), விளம்பரங்கள், இவர்கள் முன்னிறுத்தும் ஊடக மனிதர்கள் (media personalities) ).

ஒரு காலக்கட்டத்தில் புராணங்களிலிருந்தும், பக்தி இலக்கியங்களிலிருந்தும், கோயில் சிற்ப ஓவியங்களிலிருந்தும் கதாப்பத்திரங்களை மாதிரிகளாக்க் கொண்டு அதில் குறிப்பிடப்படும் குணங்களுக்கும், வாழ்வியலில் ஒருவர் செயல்படும் கதாப்பத்திரத்திற்கும் (role) தக்கவாறு ஆடைகள் வடிவம் பற்றிய தேர்வு கிடைக்கப்பெற்றது (உ.ம் அரச / அரசியர் உடை, குடியானவன் உடை, திருடனின் உடை, ஒடுக்கப்பட்ட மக்களின் உடை, ஆண் உடை, பெண் உடை என்று பல. கண்ணகி, சீதை, தலைவி அணிந்த உடை, ஆடல் மகளிர், பரத்தையர் ஆகியோர் அணியும் உடை). உடை பற்றிய விளக்கங்கள் நமக்கு அதுபோன்ற உடைகளை அணிபவர் பற்றிய குணச்சித்திரத்தைத் தருகிறது. அச்சித்திரம் காரணமாக அன்றாட வாழ்வில் நம் சார்பை பிரதிபலிக்க உடைகளை தேர்ந்தெடுக்கும் போக்கு ஏற்படுகிறது. அதேபோல் அங்க லட்சணங்கள் பற்றிய வருணனைகள். வில்லொத்த புருவம், மீன் போன்ற கண்கள் கொண்டவளே சிறந்த அழகி என வருணிக்கப்பட்ட பெண்களைப் பின்பற்றி அழகு பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அது போன்று அலங்காரம் செய்து கொள்வது நடக்கிறது. இதன் உச்சக்கட்ட வருணனை பெண் தெய்வங்கள் பற்றியது. நீண்ட கூந்தல், வளைந்த இடைகள், பெரிய பொட்டு, அணிகலன்கள் என்று தீட்டி இவைகளைக் கொண்டவளே தெய்வீகத் தன்மை நிறைந்தவள், பத்தினித் தன்மை நிறைந்தவள் என்று உள்வாங்கிக் கொண்டு அது போன்ற ஒப்பனைகளை செய்துக் கொள்வதும் உண்டு. இப்படி புத்தகங்கள் வாயிலாக கிடைத்த அறிதலின் அடுத்தக் கட்டமாக திரைப்படங்கள் உடைகளின் மூலமாய் அணிபவரின் குணாதியசங்களை சித்தரிக்கத் துவங்கின.

நடிகர்கள் அணியும் உடையானது சித்தரிக்கும் கதாப்பத்திரங்களின் குணம் பற்றியக் கருத்து மக்களைப் பற்றத் துவங்கியது. பெரும்பாலும், கற்பு நெறியில் உயர்த்தி சித்தரிக்கப்படும் நடுத்தர குடும்பக் கதாநாயகிகள் அணியும் புடவை, முக்கால் கை கொண்ட ரவிக்கை, நடு வகிடெடுத்து சீவி, புட்டம் வரை தொங்கும் கூந்தல், மஞ்சள் பூசிய முகம், பெரிய பொட்டு, கை நிறைய வளையல்கள், போன்றவை நடுத்தரக் குடும்பப் பெண்கள் தங்களுக்கன அடையாளங்களாய் மாற்றிக்கொண்டனர். பணக்காரப் பெண்ணாய், கற்றவளாய் வலம் வரும் கதாநாயகிக்கான அடையாளம் உடலைக் கவ்விப் பற்றிய சுடிதார், வடிவமைக்கப்பட்ட புடவை (designer saree) குதிகால் உயர செருப்பு, அரிதாரம் பூசிய முகம், நவ நாகரீக கைப்பை போன்றவை ஒரு அடையாளத்தை முன் மொழிந்தது. வெளிநாட்டுக்குச் சென்று வரும் கதாநாயகி அல்லது மெத்தப் படித்தவள் என்றால் குட்டைப்பாவாடை, விரித்த கூந்தலுடன் திரியும் திமிர் பிடித்தப் பெண். இப்படி பெண்களின் குணத்தை கற்பனைக்கேற்றவாறும், அவர்களின் எதிர்பார்புகளுக்கேற்றவாறும் ஆண் படைப்பாளிகள் அக்காலம் முதல் இக்காலம் வரை புனைந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களும் அவை சித்தரிக்கும் குணங்களும் மக்கள் மனதை பெரிதும் ஆட்கொள்ளத் தொடங்கின. அதற்கு பெரிதும் உதாரணமாக நடிகர்கள் பெயரில் சந்தையில் உலவும் ஆடை அணிகலன்கள். கதாநாயகிகளின் பெயரால் தயாரிக்கப்பட்டு, திரைப்படங்களின் பெயராலும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. அவற்றைத் தேடிப் போய் பெண்கள் வாங்குகிறார்கள். திரைப்படங்களில் அவற்றை அணிந்துக் கொண்டு வரும் பெண் மிகவும் அழகானவளாகவும், தேவதையாகவும், எல்லோரையும் கவர்பவளாகவும், உயர்வானவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். அவற்றைப் பார்க்கும் பெண்களின் மனது அவற்றை அணிவதன் மூலம் தன்னையும் ஒரு கதாநாயகியாகக் கற்பனை செய்துக்கொண்டு மகிழ்கிறது. (இது ஆணுக்கும் பொருந்தும் என்று சொன்னாலும் அவனது ஆண் தன்மைதான் பெண்மையை வடிவமைக்கும்போது அவன் தன் தேர்வை மிக எளிதாக மாற்றிக்கொள்ளக்கூடும்.) பெண்ணுக்குரிய உடல் அளவு (size zero), அங்கங்களின் அளவுகளை குறைவின்றிக் காட்டும் இறுகப் பற்றும் உடைகள், அதற்கு பொருந்தும் இதர அணிகலன்கள், காலணி, கைப்பை என எல்லாவற்றையும் விளம்பரங்களும், திரைப்படங்களும்தான் கற்றுத் தருகின்றன. சரியாகச் சொல்வதென்றால் நாம் ‘நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாறிப்போன உடல்கள்’ – ராமாநுஜம்.

திரைப்படங்களில் தாய், தங்கை கதாப்பாத்திரங்கள் அணியும் உடையும், கதாநாயகி அணியும் உடையும் எவ்வாறு இருக்கிறது? குறிப்பாக பாடல் காட்சிகளில் கதாநாயகி அணியும் உடை எத்தகையது? தாய், தங்கையான பெண்கள் மங்கலமான (அவர்களின் குறிப்பின்படி), முழுவதும் போர்த்திய உடை அணிபவர்களாக இருப்பார்கள். கதாநாயகியோ மார்புக்கோடு தெரியும் உடை, தொப்புள் காட்டும் உடை, குட்டைப் பாவாடை, குட்டைச் சட்டை, ஸ்லீவ்லெஸ் உடை என்று அணிந்துக் கொண்டு சுற்றி சுற்றி வருவார்கள். கதாநாயக ஆணின் பார்வையைக் கவரும் விதத்தில் வலம் வருவாள். அவளது நோக்கம் முழுதுமே கதாநாயகனான ஆணைக் கவர்வதும், அவனை மகிழ்சிக்குள்ளாக்குவதும் மட்டுமே. (அப்படிக் கவர்ந்தால்தான் அவள் கதாநாயகியாக முடியும் என்ற ஆணின் கட்டமைப்பு). இதற்கு எதிர்மறையாக கதாநாயகனது தங்கை கதாப்பாத்திரமானது குடும்பப் பாங்கான பெண்ணாக இருப்பாள், ஒழுக்கமான (கதாநாயக ஆணின் குறிப்பின்படி, எதிர்பார்ப்பின் படி) உடை அணிந்திருப்பாள். அவளை வேறு ஆண் உற்று நோக்கினால் அண்ணனாகிய கதாநாயகன் வெட்டிப் போடவும் தயங்கமாட்டான். ( இதிலிருந்து நாம் ஆணாதிக்க வரலாற்றை கூறு போடலாம்.) அதே கதாநாயகன் கதாநாயகியை உள்ளாடைக்கு நிகரான ஆடையை அணியவைத்து தானும் அவள் தொப்புளைச் சுற்றி நடனமாடிக்கொண்டிருப்பான்.

ஆண் பித்தாகித் திரியும் அக்கதாநாயகிகளை வாழ்வின் மாதிரிகளாக பாவித்து அவர்கள் அணிவது போன்று உடைகளைத் தேர்வு செய்யும் போக்கு இன்று அதிகமாக்க் காணப்படுகிறது. இன்று நடிகர்களுக்கு கிடைக்கும் புகழும், பணமும் வேறு எந்தத் துறையினருக்கும் கிடைப்பதில்லை. உயரிய, பயனுள்ள படைப்புகளை கொடுத்த எழுத்தாளர்கள், சமுதாய சீர்த்திருத்தவாதிகளின் பெயர்களை எவரும் அறிந்து வைத்திருப்பதில்லை, ஆனால் ஒரு திரைப்படத்தில் / தொலைக்காட்சி நாடகத்தில் ஒரே ஒரு காட்சியில் தலைக் காட்டிவிட்டுப் போகும் ஒரு நடிகரை எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். நடிகர்களை ஊடகம் கொண்டாடும் விதமே இதற்குக் காரணம்.

கற்பு நெறி, ஒழுக்கம், சமுதாய அக்கறை பேசும் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அதற்கு முரணாக கதாநாயகியின் உடை விஷயத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருப்பார். இது எதன் பொருட்டு? பெண் சுதந்திரமா? அப்படியென்றால் அவர் தாயும், தங்கையுமாய் நடிக்கும் பெண் பெண் இல்லையா? நிஜ வாழ்க்கையிலும் தங்களின் குடும்பப் பெண்களுக்கும் அந்த சுதந்தித்தைக் கற்றுத் தர வேண்டியதுதானே. திரைப்படங்களில் தாய்மைப் பற்றியும், பெண்ணின் பெருமைகளைப் பற்றியும் கண்களில் கருணையோடு பேசும் கதாநாயகர்கள் ஏன் முதலாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காக குரல் கொடுப்பதில்லை? பெண்களைக் கவர்சிப்பொருளாகக் காட்டுவதை எதிர்த்து தீர்மானங்கள் இயற்றுவதில்லை. கவர்ச்சி நடனங்கள் வேண்டாம் என்று மறுப்பதில்லை? மாட்டார்கள், அவர்களின் கதாநாயகத் தன்மை கெட்டுவிடும். அதற்கும் மேலான காரணம் மூலதனம்.

இதற்கடுத்து விளம்பரங்கள் இதில் பெண் சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் அனைத்துமே அவள் உடை சார்ந்தே இருக்கிறதே ஏன்? அல்லது ஆணுக்கு நிகராய் பெண்களும் ஊர் சுற்றலாம் என்று முன் வைக்கிறார்கள். இது தான் ஒட்டு மொத்தப் பெண்களுக்கான சுதந்திரம் என்று இவர்கள் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கான பொருளாய் விளம்பரப்படுத்தப் படுபவையெல்லாம் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்கள். அவள் அந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தி அழகாய் மாறியவுடன் நடப்பது என்ன.. மாடலிங்கிற்கான வாய்ப்பு, நடிப்பதற்கான வாய்பு அவளைத் தேடிக்கொண்டு வரும். அல்லது பல ஆண்கள் அவளை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு பின்னால் ஓடுவார்கள்.

வீட்டு உபயோகப்பொருட்கள் என்றால் போர்த்திய உடையணிந்தப் பெண் சமைத்துப்போட்டு தன் கணவனைக் கவர்வது, மாமியாரைக் கைக்குள் போட்டுக்கொள்வது, உறவினர்களை திருப்திப்படுத்துவது. ஆணுக்கான பொருட்கள் என்றால் அவன் அதை உபயோகித்து அடைவது பெண் அல்லது பெண்கள். அதுவே அவனுக்கு சாதனை. ஆக இப்பொருட்கள் எதுவுமே தனக்கான பயன்பாட்டை விட, மற்றவரைக் கவர்வதற்கான ஒன்றாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அங்கிகாரம் ஒன்றே மனிதத் தேவையாக, அவஸ்தையாகக் கட்டமைப்பது முதலாளிகளே. அப்பொழுதுதான் அந்த அங்கிகாரத்தை தங்கள் பொருள் கொடுக்கும் என்று தங்கள் பொருகளை சந்தைப் படுத்த முடியும்.

பெரும்பாலும் அவற்றை எவ்வித எதிர் கேள்வியும் இல்லாமல் பொதுமூளையில் அழுத்தமாகப் பதியவைக்கிறார்கள்.. ஊடகக் கதாபத்திரங்கள் மூலம் உடல் மற்றும் உடை பற்றியக் கருத்துக்கள் அல்லாமல், சமுதாயப் படிநிலைகளையும் ஏற்றிவைக்கிறார்கள். உதாரணமாக கருமைத் தோலுடன் இருக்கும் ஒர் பெண் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவளாக இருப்பாள், அல்லது வேலைக்காரியாக இருப்பாள். கருமை நிறத் தோலுக்கு கிரீம்களைப் பூசி வெண்சருமம் பெற்றதும் பணக்காரியாகி விடுவாள். இவற்றைப் பார்க்கும் ஒரு பெண் முதலில் தன் சரும நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை வள்ர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருக்கின்றது. பின்பு பொருளாதார நிலைக் குறித்து அவமான உணர்வை வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் தன் பணத்தகுதியை உயர்த்திக்கொள்ள எப்பாடுபட்டாவது அப்பொருட்களை வாங்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறார்கள். அது தன் உடம்பாலும், அழகாலும் மட்டுமே முடியும் என்றும் கட்டமைத்துவிடுகிறார்கள் ஆண் முதலாளிகள்.

நாம் எதற்காக அழகாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்? கவர்சியான உடை அணிகிறோம், உயர்த்திக்காட்டிக்கொள்ள முனைகிறோம்? மற்றவர்களின் அங்கிகாரத்திற்காகத் தானே, குறிப்பாக எதிர் பாலின் கவனத்தைப் பெறவே. இது நேர்மையாக ஏற்றுக்கொள்ள கூசத்தான் செய்யும். சந்தேகியுங்கள். உடலைக் கொண்டாடவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடுதான் ஆனால் அது ஆணின் வக்கிரங்களுக்கு முன்னால் ரசனையாக அல்ல ஆயுதமாக.

மேலை நாட்டுப் பெண்கள் மட்டும் அங்கங்கள் தெரிய உடை அணியவில்லையா? ஆண்களுக்குப் பயந்து நாங்கள் போர்த்திக்கொண்டு நடக்க வேண்டுமா? இது போன்ற கேள்விகள் இங்கு எழலாம். எங்கிருந்தாலும் பெண் ஆணுக்கு போகப் பொருளே இந்தியாவில் மார்பகம் கண்ணுக்கு விருந்தென்றால் ஃப்ரான்சில் பெண்ணின் கால்கள், இப்படி ஆணுக்கு ஒட்டு மொத்த பெண்ணுமே கிளர்ச்சிச் சாதனம்தான்.

மேலை நாட்டவர் உடல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்து வேறு, காமம் பற்றிய அவர்கள் புரிதல் வேறு. கலாச்சாரத்தை மறு நிர்மாணம் செய்து கொண்டார்கள் அவர்கள். கருத்துக்களை அறிவியல் விளக்கங்களோடு பகுத்தாராயும் முறையை கையாளுகிறார்கள். கல்லாமை என்பது அங்கு குறைவு. அறிவியல் நிகழ்வான கிரகணத்தைக் கூட பாம்பு சூரியனை விழுங்கும் பார்பணியக் கதைகளை நம்பிக்கொண்டிருக்கும் மத நம்பிக்கைவாத மக்களின் மனநிலையை நாம் நிணைவுக்கொள்ளவேண்டும். (பார்பணிய வர்ணபேதத்தால்) கல்வியறிவு நிராகரிக்கப்பட்டு பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவும் சூழலில் நாம் வாழ்கிறோம். ஒழுக்கம், கற்பு என்று கட்டுப்படுள்ள நம் நாட்டில் தான் வன்புணர்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன .(2,3 வயது குழந்தைகள் உட்பட), ஒருத்தனுக்கொருத்தி என்பது இந்திய சமூகம் என வாய்கிழியப் பேசிய இந்தியத் தன்மான வாயில்தான் எயிட்ஸ் சிறுநீர் பெய்தது. இன்னும் அசிங்கமாகச் சொல்லப்போனால் ஜாதி இங்குதான் தன் வெறிக்கரங்களை ஆழ அகல பரப்பிப் பற்றியிருக்கிறது. இதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும் – எதேனும் ஒரு ஜாதியையோ, மதத்தையோ கதா நாயகன் அசிங்கப்படுத்தியோ தரக்குறைவாகவோ பேசினால் கொதிக்கும் அமைப்புகள் ஒரு பேச்சுக்குக் கூட தங்கள் ஜாதி, மத, பெண்களை இவ்வளவு அசிங்கமாகக் காட்டியிருக்கிறார்கள் என்று போராடுவதில்லை. (பெண்களமைப்புகள் உட்பட, பெண் கற்பு பற்றி ஏதாவது கருத்து தெரிவித்துவிட்டால் போராட்டங்கள் செய்கிறார்கள்) அப்படி ஒன்றிரண்டு நடந்தாலும் அது அந்தப் பெண்ணை வைத்து சம்பந்தப்பட்ட தனிமனித விரோதங்களை பயன்படுத்திக்கொள்ளவே.

மேலும் ஊடகங்கள் மற்றும் பாலியல் பற்றிய அறியாமை – எங்குப் பார்த்தாலும் பெண்ணின் மார்பும், தொப்புளும், இடுப்பும், தொடையையும் காட்டும் சுவரொட்டிகள், பத்திரிகை அட்டைப்படங்கள், சினிமாக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் என்று கவர்ச்சித் திணிப்பு. மறு பக்கம் கற்பு, ஒழுக்கம், ஆண் பெண் வேற்றுமை என்று கட்டுப்பாடுகள். எப்படி சாத்தியம் பெண்களின் விடுதலை…..

நடிகைகள், மாடல்கள் அணியும் உடைகளாக முதலாளிகள் கொடுப்பவை எது போன்றவை? உடலை, பாலுறுப்புகளை அங்கும் இங்கும் காட்டும் உடைகள். உலகமயமாக்கலின் காரணத்தினால் முதலாளிகள் வெளிநாட்டு உடைகளை சந்தைகளில் நிரப்பி விடுகிறார்கள். அவற்றை அணிந்துக் கொண்டு நடிகைகள்,மாடல்கள் வருவதால் எல்லோரும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதாக விளம்பரப்படுத்துகிறார்கள். அது ஏதோ பெரிய மரியாதைக்குரிய விஷயமாகவும், முற்போக்குச் செயலாகவும் கட்டமைக்கிறார்கள். அவ்வுடைகளை அறிமுகப்படுத்தும் பெண்கள் பணம் படைத்தவர்கள். ஆகையால் கார்களில் பாதுகாப்பாக செல்வார்கள். ஆண்களோ வீதியில் செல்லும் பெண்களின் மேல்அவ்வுடைகளை அணிந்து அவர்களே அதைக் கிழித்தும் வன்புணர்ச்சி செய்வார்கள். உடையை அறிமுகப்படுத்திய பெண்ணோ காரில் வலம் வருவாள், ஆண்களின் பாதுகாப்போடு. இங்கு பெண் என்பவள் ஆணின் கருத்தாக்கத்தை ஏற்று அதை பணமாக மாற்றும் முதலாளி என்றும் பொருள் கொள்ளலலாம்.

ஒரு நடிகை, மாடல் ஆணைப் பொருத்த வரை வேசி ஆகவே அது போல் உடை அணியும் அப்பெண்ணும் அதுபோலத்தான் இருப்பாள் என்று வம்புக்கிழுக்கிறான். ஆம், திரைப்படங்களில் கதாநாயகியைக் கவரும், வம்பு செய்யும் ஆணைக் கதாநாயத் தன்மைக் கொண்டவராக காட்டும் பொழுது இப்பெண்ணைக் கவர்வதின் மூலம் , வம்பிழுப்பதின் மூலம் அவன் அந்த அந்தஸ்தைப் பெற நினைக்கிறான்.

“காலங்காலமாக ஆண்கள் பெண்களைப் பகுத்தறிவற்றவர்களாக, பகுத்தறிவுக்கு உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக கருதி வந்ததால் பெண்கள் பகுத்தாய்ந்து சிந்திக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது; பெண்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழப் பழகிவிட்டனர்.; தம்மைக் கட்டுப்படுத்தி ஆண்களுக்கு அடிமையாக்கும் விஷயங்களில் காதலுக்கும், இதர உணர்ச்சிகளுக்கும் பங்குண்டு என்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; காதலைத் தூண்டும், உணர்ச்சி ததும்பும் அனுபவங்களையும் மோகத்தையும் பகுத்தறிவின் துணை கொண்டு கடந்துச் செல்ல பெண்கள் பழக வேண்டும்; உணர்ச்சிகள், உடலுறவு ஆகியவற்றைக் கடந்த தனிமனித உறவுகள்தான் அறிவான, முறையான குடும்பம், பகுத்தறிவுக்கு கட்டுப்பட்ட நெறியான, நீதியான சமுதாயம் ஆகியன உருவாக வழிவகுக்கும்” என்கிறார் மேரி வுல்ஸ்டன்க்ராஃப்ட்.

ஆண் வக்கிரங்களிலிருந்து பெண் தன்னைக் காத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது அழகுணர்சியிலிருந்து மீள்தல். உங்கள் உடலை சுயமரியாதையுடன் அணுகுங்கள், அவற்றை முன்னிறுத்திக் காட்டுவதன் மூலம் நீங்கள் (உங்களையறியாமலேயே) ஆண்களுக்கு விடுப்பது அழைப்பு. ஆம் ஒரு ஆணின் அங்கிகாரம் தேவையில்லை என்றால் ஏன் அழகை , உடலை எடுத்துக்காட்டும் விதத்தில் உடை அணியும் எண்ணம் தோன்றுகிறது? என்று உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்புங்கள். ”cleavage” தெரிய உடை அணிந்து செல்லும் ஒரு பெண்ணைக் காணும் ஆண் அதைக் கண்டுக் கொள்ளக் கூடாது என்று சுதந்திரம் பேசும் நாம், கொலையுணர்சி என்பதையும் ஒருவரின் சுதந்திரமாக கருதலாமா? இக்கருத்துக்கள் யாருடைய திணிப்பு என்று சிந்திக்கவேண்டும்.

ஆண் ஏற்றிவைக்கப்பட்ட ஆண்மைக் குணங்களைக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்கிற அளவுக்கு பண்டைய வேதக் கலாச்சாரம் முதல் இன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்திய கலாச்சாரம் வரை முன் மொழிவது ஆணாதிக்கத்தைத் தான். முந்தையப் பெண்ணினம் கலாச்சார அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கோரியக் காலத்தில் அவர்கள் கல்வியறிவு இல்லாமலும், பொருளாதார சுதந்திரம் இல்லாமலும் இருந்தார்கள் ஆகையால் கலாச்சார அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். பெண்களின் உற்பத்தி திறன் மீது ஆண்கள் கொண்ட பயமும், குடும்பம் எனும் நிறுவனம் மூலம் கிடைக்கும் சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளே அதற்கு காரணமாய் அமைந்திருக்கிறது.. இன்றைய பெண்கள் கல்வி, பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் கலாச்சார மீறலை முன்னிறுத்தி, அழகுணர்சிகளுக்கு அடிமைகளாக்கி, பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது ஆண் முதலாளித்துவம். ஆகவே இன்றையப் பெண்ணியமானது பொருளாதார அடிமைகளாகிப் போன சமுதாயத்தில் பெண் மீதான நவ நாகரீகத் திணிப்புகளைக் கண்டறிந்து மீண்டும் ஆண்களுக்கு இரையாகமல் இருப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகிறது. உடை பற்றிய திணிப்பு கருத்தாக்கங்களை மீள் கருத்தாக்கம் செய்வது, பெண் பற்றிய பார்வையை சரியாக எடுத்துரைப்பதற்கு வித்திடும்.

நாம் நமக்கெதிரான பார்வைகளை களைந்தெரிய (மார்க்சிய, ஷோசலிச) பெண்ணியக் கல்வியை பயன்படுத்த வேண்டும். பிரிவினைகளை உண்டாக்கும் முதலாளித்துவ சிந்தனைகளைக் கைவிட்டு முதலில் பெண்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். மதம், கலாச்சாரம், கல்வி, அரசியல் பொருளாதார சுதந்திரம் பற்றிய சரியான அறிதல் இல்லாமல் வாழும் பெண்கள் ஒரு புறம், கலாச்சார புரட்சி, கல்வி, பொருளாதார சுதந்திரம், நவநாகரீக கருத்தாக்கங்கள் கொண்ட பெண்கள் மறுபுறம் என்று நாம் சிதறுண்டு கிடக்கிறோம். நமக்குத் தேவையானது மொத்த இனத்திற்குமான சுதந்திரம். அது ஒருமித்த அடையாளங்களை தோற்றுவிப்பதின் மூலமே சாத்தியம்.

லெனினின் வாசகங்களை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இது நடைமுறை புரட்சிகர உசிதமேயன்றி, முதலாளித்துவ பெண்ணுரிமைவாதமல்ல”. மேலும் அவர் கூறுகிறார் – “சுதந்திரக் காதல், பாலுறவு சுதந்திரம், இதயத்திலிருந்து விடுதலை, குடும்ப அமைப்பை நிராகரித்தல், ஆகியவை தொழிலாளி வர்கத் தேவையில்லை. அது குட்டி-பூர்ஷ்வா ஜனநாயக கோட்பாடுகள், முதலாளித்துவ-தனிமனித நோக்கம் நிறைந்தவை”.

ஆண்களுக்கு நிகராய் புகைப்பிடிப்பதும், மது அருந்துவது பாலியல் உறவுகளுக்கான சுதந்திரம் கோருவது போன்றவை ஆண்களை முன் உதாரணமாக நாம் ஏற்றுக்கொண்டதாக அமையும். மேலும் இவையெல்லாம் முதலாளித்துவ பெண்ணுரிமை வாதம், எல்லோருக்கும் பொதுவான உரிமைப் பிரச்சனையாக கருதிவிட இயலாது. இது பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இயங்கும் பெண்களுக்கே நன்மையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயமும் பொதுவாக உடல் பற்றிய கருத்தாக்கங்களை மாற்றிகொள்ளாத போது பணம் படைத்தவர்கள், ஆதிக்கவாதிகள் (குறிப்பாக ஆங்கிலேய நாடுகள்) பேசும் சுதந்திரமானது பெரும் சுயநலம் கொண்டது, நம்மை விலைப் பேசும் தன்மைக் கொண்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால் முதலாளிகள் (ஊடகங்கள் மூலம்) பெண் பற்றிய தவறான கருத்தாக்கங்களைத்தான் ஏற்றிவைத்திருக்கிறார்கள். ஆணாதிக்க முதலாளிகள் கட்டமைக்கும் ஒன்றை பெண்கள் தேர்வாகக்கொண்டால் பெண்கள் அடிமைகளே. முன்பு பெண்கள் அதிகாரத்தின் அடிமைகள், இப்பொழுது “பொருளாதார அடிமைகள்”. அன்று கற்பின் பெயரால் பெண்களை அடிமையாக்கினார்கள், இன்று போலி பெண் சுதந்திரத்தின் பெயரால் பெண்களை இரையாக்குகிறார்கள். இதிலிருந்து விழித்துக்கொள்வது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது. ஆண் முதலாளிகள் தங்களது வக்கிரத்தை ஆதிக்கப்பார்வையை, தங்களது சுதந்திரத்தை, எதிர்பார்ப்புகளை பெண்கள் சுதந்திரமாக மாற்றி பெண்களின் உடலைக் கண்காட்சிப் பொருளாக மாற்றி பெண் என்பவள் வெறும் பாலியல் பண்டமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

பெண் என்பவள் ஆணுக்கு யார்? பெண் என்பவள் யார்? விவாதிப்போம் தோழர்களே.