Category Archives: #medicalization

பாலியல் மருத்துவமயமாதலைக் கண்டு விழித்தெழுதல்

Zahra-Luengo-3-844x1024

ஆங்கிலத்தில்: லியோனார் டீஃபர்

தமிழ் மொழிபெயர்ப்பு: கொற்றவை

பெண்களுக்கான பாலுறவுத் தேர்வு மற்றும் பாலுறவு அதிகாரம் குறித்து சமகாலங்களில் பலவிதமான சொல்லாடல்கள் நிகழ்ந்துவரும் போதிலும், ஒரு ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் பாலுறவு அனுபவமானது எப்போதும் ‘மற்றமை’களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பெண்ணியவாதிகள் இதை ஒப்புக்கொள்கின்றனர். அதேவேளை, பாலியல் விஷயத்தில் இதுவரை நிலவி வந்த இரட்டை நிலைப்பாடு தற்போது மறைந்துவிட்டது எனவும், குறைந்தபட்சம் வைதீக மதங்களின் ஆதிக்கம் இல்லாத நாடுகளில் பெண்கள் பாலுறவு சுதந்திரம் பெற்றுவிட்டனர் என்றும் இன்று பலரும் கதைக்கின்றனர். இருப்பினும், பழங்குடிப் பெண்கள், மாற்றுத் திறனாளிப் பெண்கள், பதின்பருவ வயதுப் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள், காதல் வயப்பட்டு ஆடவருடன் ஊர்சுற்றும் பெண்கள் (dating women), திருமணமான பெண்கள், முதிய வயதுப் பெண்கள் மற்றும் பலப் பெண்கள் இவ்வாதத்தை மறுக்கின்றனர். அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்புகள் மற்றும் அவர்கள் பற்றிய ஆய்வுகள் மூலம் இது தெரியவருகின்றது. பாதுகாப்பின்மை, துயரம், மற்றும் அப்பட்டமான கீழ்படுத்துதலால் நேரும் ஏமாற்றம், அவமானம், மகிழ்ச்சியின்மை மற்றும் நம்பிக்கையின்மை போன்ற உணர்ச்சிள் எவ்வாறு வழக்கமாகிவிட்டது என முக்கியத்துவம் கொடுத்து விளக்கும் கதைகள் பெண்களின் பாலுறவு வாழ்க்கை பற்றிய பதிவுகளில் வழக்கமாகிவிட்டது.

பாலுறவு வாழ்க்கையில் ஆணாதிக்க தாளத்திற்கு ஏற்றவகையில்தான் நாம் ஆடுகிறோம் என்பதை ஒப்புக்கொள்வதால் உடல்ரீதியான இன்பம், உணச்சிப்பூர்வமான நெருக்கம், சரச விளையாட்டுகளில் உளவியல்ரீதியான அதிகாரம், சுய-இன்பம் அல்லது ஏதோ ஒரு தருணத்திலாவது கூட்டுப்பாலுறவு போன்றவற்றை பெண்கள் அனுபவிக்கவில்லை என்று பொருளில்லை. மாறாக, பாலுறவில் இன்பமடைதல், நெருக்கம் மற்றும் அதிகாரம் போன்ற உணர்ச்சிகள் நமது ஆணாதிக்க சமூகத்தின் அங்கங்களாக இருக்கும் பெருநிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை வரையறுத்துள்ள எல்லைகளுக்குள்ளும், விதிகளுக்குள்ளுமே நிகழ்கின்றன என்று வலியுறுத்துவதே எமது நோக்கம். இவ்வாறாக, பெண்ணிய கண்ணோட்டத்தில் கூறுவதானால், பாலுறவு விடுதலை என்பது இன்னமும் தொலைதூரத்தில்தான் உள்ளது.

சமகால தாராளவாத சமூகத்தில், பாலுறவு விதிகளையும், எல்லைகளையும் கட்டுப்படுத்தும் தரவுகளுக்கான பிரதான மூலமானது “பாலின்பம் என்பது உடல்நலம்” எனும் சொல்லாடலை முன்வைத்து சொற்பொழிவு வடிவம் பெற்ற அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வணிகநலன் சார்ந்த போதனைகளிலிருந்தும் உருவாகிறது. மாறாக அவ்வுரையாடல்கள், “பாலின்பம் என்பது ஒரு பொழுதுபோக்கு,” “பாலின்பம் என்பது உணர்ச்சிப் பெருவெள்ளம்,” “பாலின்பம் என்பது இயல்பாக ஒரு கற்றல் நடவடிக்கை,” அல்லது “பாலின்பம் என்பது பரந்த பன்முகப்பட்ட கலாச்சார வெளிப்பாட்டின் கூட்டுத்தொகை,” போன்ற கருத்துகளை முன் வைத்து நடப்பதில்லை. ஆனால் அவை, சுவாசிப்பது போல், ஜீரணிப்பது போல் அல்லது தூக்கம் போல் “பாலின்பம் என்பது பாலுறுப்பு சார்ந்த உலகளாவிய பரிணாமவியல் நடத்தை மற்றும் தேவை” என்றும் முன் வைக்கின்றன. இந்த வரையறைக்குள் இருந்து பார்க்கும்பொழுது, உடலுறவுச் செயல்பாடற்ற வாழ்க்கை அல்லது திருமணமானது ஆரோக்கியமானதல்ல, உடலுறவு என்றாலே அது பாலுறுப்புச் செயல்பாட்டை உள்ளடக்கி இருக்க வேண்டும், உச்சகட்டத்தை அடைவதே உடலுறவின் உச்சபட்சம், குறைவான உடலுறவுச் செயல்பாடுகள் இயல்பானதல்ல, உடலுறவு என்பது ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இன்னபிற ஆதாயங்களையும்… கொடுக்கவல்லது.

இதுபோன்ற கட்டமைப்புகள் பாலுணர்வு என்பதை உயிரியல் நலன் சார்ந்த ஒரு சொல்லாடலாக முன்வைக்கின்றன. அதன்மூலம் அவை, இயல்பானச் செயல்பாடு, இயல்புக்கு மாறானச் செயல்பாடு என வகைப்படுத்தி மக்களுக்கு பாலியல் குறித்த விளக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்கும் அதிகாரம் படைத்த மத்தியஸ்தர்களாக மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை உருவாக்குகிறது. நம் சமூகங்களின் பாலுணர்வு நிபுணர்களாக இம்மக்கள் பதவி உயர்வு பெற்றவர்களாகிவிட்டனர்.

இக்கட்டமைப்பை மானிடவியலாளர்களும், சமூகவியலாளர்களும் “மருத்துவமயமாக்கல்” என்று விளிக்கின்றனர். மேலும் அவர்கள், 20ஆம் நூற்றாண்டில் மருத்துவமயமாக்கலின் வளர்ச்சியை ஆய்வு செய்துள்ளனர். ஏனென்றால் அக்காலகட்டத்தில்தான் மனிதர்களின் அன்றாட வாழ்வின் உணர்வம்சங்களான மனநிலை, உறக்கம், பசி, உணர்ச்சிகள், மதுப்பழக்கம், செயல்பாட்டு அளவு, உடல் எடை, மூப்படைதல், கர்ப்பம், மாதவிடாய், போதைப் பழக்கம், மனத்திடம், சமூக நடத்தை மற்றும் இன்னும் இதர அம்சங்களை முழுவதுமாக பொதுமையாக்கியதோடு, அதுகுறித்த ஒரு துறைசார் புரிதலையும் ஏற்படுத்தும் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. இவையனைத்தும் உடல்நலம் (நோய்) சார்ந்த அம்சங்களாகிப் போனது. மேலும், சமூக விதிமுறைகளிலிருந்து மாறுபடும் எதுவொன்றும் மருத்துவ அல்லது மனநலப் பிரச்சினையாக அடையாளப்படுகிறது. பல்லாயிர ஆண்டுகால ஆணாதிக்க மதக் கோட்பாடுகளின் விளைவால் பாலின்ப வாழ்க்கை குறித்து நிலவும் ஒழுக்கநெறி கண்ணோட்டமும், அப்போதனைகள் மற்றும் நடைமுறைகளில் பெண்களுக்களிக்கப்படும் அதி-ஒழுக்க முன்நிபந்தனைகள் கொண்ட இடத்தையும் வைத்து இந்த பாலியல் மருத்துவமயமாக்கல் என்பதை “பாவத்திலிருந்து நோயாக” (sin to sickness) மாற்றப்படும் ஒரு நிகழ்வாக மட்டுமே நான் காண்கிறேன், கட்டுப்பாட்டிலிருந்து விடுதலைக்கு மாறும் நிகழ்வாக அது இல்லை.

பாலுணர்வானது 1980கள் மற்றும் 1990களில் ”பாலியல் மருத்துவம்” எனும் ஒரு புதிய சிறப்பு மருத்துவப் பிரிவாக வளர்ச்சிபெறத் தொடங்கியபோது, ஒரு பெண்ணியவாதியாக பாலியலானது மருத்துவமயமாவது குறித்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதாவது, உண்மையில் அத்துறையானது, பாலின்ப நாட்டத்திலும், அனுபவத்திலும் சமூக விதிமுறைகளை மீறும் பெண்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, உதவுவதற்காக அல்லது சரிசெய்வதற்காகப் பிரத்யேகமாக உருவானத் துறையாகும். இருப்பினும், முந்தைய மருத்துவ வளர்ச்சிக் காலகட்டங்கள் போல், தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் அல்லது பாலின்ப வெறி பிடித்தப் பெண்களை அடக்குவதற்காக உருவான பாலியல் மருத்துவமல்ல, ஆனால் உடலுறவில் ஆர்வமற்ற திருமணமானப் பெண்களின் அசமந்த நிலையைச் சரிசெய்வதற்காக உருவானது. இதுபோன்ற பெண்களுக்கு   “உதவுவதற்காக” எடுக்கப்பட்ட முயற்சிகள், வயாகரா மற்றும் விறைப்புத் தன்மையூக்கிகளின் வரவுக்கு வழிவகுத்ததோடு, வாழ்நாள் முழுதும் பாலுறுப்பை உட்செலுத்தும் உடலுறவிலும், உச்சகட்ட இன்பத்தை அடைவதற்கும் உதவும் மருந்துகளுக்கான விளம்பரங்கள் மூலம் ஆண்களுக்கான ஊக்குவிப்புகளும் நடந்தன என்பது கவனத்திற்குறியது.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்கள் / பவுண்டுகள் அல்லது யுரோ மானியங்களைப் பெற்றுத்தரும் ஆண்களுக்கான வயாகராவுக்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுதரவல்ல பெண்களுக்கான “இளஞ்சிவப்பு வயாகராவுக்கான” வேட்டையை மருந்து நிறுவனங்கள் தொடங்கின. பெண்களுக்கான வேட்கை / கிளர்ச்சி மருந்துகள், ஊக்கிகள் விளம்பரப்படுத்தப்பட்டன. சந்தேகமின்றி, அவை பன்னாட்டு கூட்டு ஸ்தாபனங்களின் நலனுக்காக என்றோ, விளம்பர நிறுவனங்களின் நலனுக்கென்றோ விளம்பரப்படுத்தப்படவில்லை! ஆனால், பெண்கள் மத்தியில் காணப்படும் பரந்த பாலின்பச் செயல்பாட்டின் போதாமை மற்றும் துயரத்தைப் போக்கும் தேவையாக, பெண்களின் அத்தியாவசிய சுய தேவையாக முன்வைக்கப்பட்டன.

பெண்களின் பாலுறவுப் பிரச்சினையும், நிறைவின்மையும் பெரும்பாலும் சமூக மற்றும் ஒருவருக்கிடையே ஒருவர் கொள்ளும் உறவுசார் பிரச்சினையின் விளைவு என்று விளக்கும் சலவைப் பட்டியல் போன்ற (இச்சொல் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது) நீண்ட, பரந்தளவிலான ஆய்வுகள் மூலம் முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த வேட்டை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஏனென்றால், “பெண் பாலுறவுப் பிழற்ச்சி”க்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற மருத்துவ சோதனைகள் தோற்றுப்போக, மருந்துகளுக்கு அமெரிக்க அங்கீகாரம் கிடைக்காத நிலையே அதற்குக் காரணம். ஆனால் இதுவும் தற்காலிகமானதே, ஏதோவொரு மருந்து நிச்சயம் பரிசோதனையில் வெற்றி பெரும். அதன்பிறகு, கிடைக்கும் அத்தனை தொடர்பாடல் ஊடகங்கள் வாயிலாகவும் அவ்வளவு ஏன், இன்னும்கூட கண்டுபிடிக்கப்படாத ஊடகங்கள் வாயிலாகவும் ”நற்செய்தி” என்ற தலைப்பில் விளம்பரத் துறையானது பரந்த அளவில் அதனைக் கொண்டு சேர்க்கும்.

கடந்த இரண்டு பத்தாண்டுகளாக என்னுடைய செயல்பாடுகளும், கல்வியியல் பணிகளும் இந்தப் பாலியல் மருத்துவமயமாதலுக்குப் பின்னால் உருவாகும் அமைப்புமுறை மற்றும் வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதமாகவே இருந்துள்ளது. ஒரு உளவியல் சிகிச்சையாளர் மற்றும் ஆய்வாளராக எனக்கு வழங்கப்பட்ட வரம்புக்குட்பட்ட எனது தொடக்ககாலப் பயிற்ச்சியைக் கடப்பதும், நுண்ணாய்வு பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை பற்றிய சமூகவியல் ஆய்வு போன்ற பிரிவுகள் குறித்த எனது அறிவை விரிவுபடுத்திக்கொள்வதும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தன. பெண்ணியம் எனக்கொரு அடிப்படை நிலைப்பாட்டை வழங்கியது – பாலியல் என்பது உடல்நலனுக்குறிய உயிரியல் மருத்துவம் என்பதைக் காட்டிலும், அது ஒரு கலாச்சார ஏற்பாடு என்று புரிந்துகொள்வது – ஆனால், உலக அரங்கில், முடிவுக்கு வராத, காலத்துக்கும் நீளும் வகையிலான பாலுணர்வு ஆய்வுகள், நோயறிதல் மற்றும் சிகிச்சை போன்ற கட்டமைப்புகள் வழி தொழில்முறைக் கூறுகளும், வர்த்தகக் கூறுகளும் உலக அரங்கில் எவ்வாறு பாலுணர்வு குறித்து உரையாடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்துவிட்டது.

மொத்தத்தில், நிலைமையை நான் இவ்வாறு புரிந்துகொள்கிறேன்: நுகர்வுலகத்தில் பாலின்பம் என்பது ஒரு பண்டமாகிவிட்டது. ஆளும் அதிகாரிகளால் தற்போது பாலின்பம் என்பது “உடல் நலம்” எனும் ஒட்டுமொத்த நுகர்வு வகையினத்திற்குள் அடக்கப்படும் ஒரு பொருளாகிவிட்டது. நியமிக்கப்பட்ட பாலியல் ஆலோசக நிபுணர்களாக மருத்துவர்கள் கருதப்படுகின்றனர். அதன் மூலம் அவர்கள் தங்களது ‘சேவை’ பற்றிய ஒரு சுய-நியாயப்படுத்தலில் ஈடுபட்டவாறு தங்களது அதிகாரத்தையும், பொருளாதார வாய்ப்புகளையும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் செயல்பட முடியும். ஆரோக்கியமான மற்றும் வயதுக்கேற்ப தொடர்ந்து மாறுகிற பண்புடைய பாலுறவு வாழ்கை என்பது கேள்விக்கப்பாற்பட்ட உரிமையாகவும், சமூக அவசியத் தேவையாகவும் உருவாகிவிட்டது. பெரும்பாலான மக்களுக்கு பாலியல் அறிவுறுத்தல்கள் கிடைப்பதில்லை, அதனால் அவர்களின் பாலுறவு வாழ்க்கையானது யதார்த்தத்தில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத குறைபாடுடையதாகிறது. ஆனால், அத்தகைய ஏமாற்றங்கள் என்பது சமூகத்தால் உருவாக்கப்படும் ஒன்று என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர், மேலும் இயலாமை உணர்வு மேலோங்க அவர்கள் தங்களை குறைபாடுடையவர்களாக எண்ணி மருத்துவ வடிவமைப்புகளுக்கும், கண்காணிப்புகளுக்கும், தலையீடுகளுக்கும் பலியாகிவிடுகின்றனர். அதே அனுமானங்களுக்கு ஊடகங்களும் வசப்பட்டு, வெறும் செய்தி வெளியீடு என்று சொல்லத்தக்கத் தகவல்களைக் கூட ஏதோ பெரிய கண்டுபிடிப்புப் போல ஊதிப் பெருக்குகின்றன. இவ்வாறாக பாலியல் மருத்துவமயமாக்கல் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Thanks to: http://www.hystericalfeminisms.com/

To read in English: http://www.hystericalfeminisms.com/waking-up-to-the-medicalization-of-sex-2/