1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே இக்கட்டுரை.
இந்திய துணைக்கண்டத்தின் தேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நாடாக மாறிய சூழலில் மாபெரும் அறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமன் எத்தகைய அறிவியல் ஆய்வுகளை இந்திய துணைக்கண்டம் செய்யக்கூடாது என எதிர்த்து, இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து வெளியேறி ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை தனியே துவங்கினாரோ, அன்றைய சூழலில் இந்திய துணைக்கண்ட அறிவியலாளர்களின் தலைமை எத்தகைய அறிவியல் ஆய்வுகளை செய்ய வேண்டும் என முடிவு செய்ததோ அதனையேதான் இந்திய துணைக்கண்டம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
சுயமான அறிவியல் ஆய்வுகளை ராமன் விரும்பினார். புதிதாக உருவான நாடு சுய அறிவியல் செய்வது என்பது கள பரிசோதனையாக மட்டுமே முடிந்துவிடும். ஒருவேளை நம்மை அறிவியல் உலகில் இருந்து அப்புறப்படுத்திவிடும் என பிறர் நினைத்தனர். இதன் விளைவாக, இந்திய துணைக்கண்ட அறிவியல் உலகம் பிற நாட்டின் அறிவியல் ஆய்வுகளுக்கான எடுபிடி வேலை செய்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது என்றே நேரடியாக என்னால் குற்றம் சாட்ட முடியும். 1947களுக்கும் பின்னர் சோவியத் ரசியாவின் ஆய்வுகளை ஒட்டி வேலை செய்துவந்த இந்திய துணைக்கண்டம், 1990களுக்கு பிறகு அமெரிக்கவின் தேவையை பூர்த்தி செய்யும் ஆய்வுகளை செய்து வருகிறது என்பது என் அறிவியல் உலக அனுபவ பாடம்.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தில் எனது முதுநிலை படிப்பிற்கான ஆய்வு செய்த காலத்திலும் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி உதவியளனாக வேலை செய்த காலத்திலும் படித்த படிப்பினைகள் இவை. இந்திய அறிவியல் கழகத்தில் இந்திய துணைக்கண்ட அரசின் நிதியோடு முனைவர் பட்ட ஆய்வுகளை முடிப்பவர்களின் தரத்தை அவர்களுக்கு அமெரிக்காவில் உயர்தர ஆய்வு பணிகள் கிடைக்கிறதா என்பதைலிருந்தே கணக்கிடப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரியதும் மிகப்பழையதுமான இந்திய அறிவியல் கழகத்தின் உற்பத்தி அமெரிக்காவிற்கானது என்பதை முதலில் நினைவில் நிறுத்திக்கொள்வோம். அவ்வப்பொழுது கூடங்குள அணுவுலை திட்டங்களை ரசியாவுடனும் பகிர்ந்துகொள்ளும் இந்தியா, அமெரிக்காவை மட்டுமே அனைத்திலும் ஆய்வுகளிலும் சார்ந்து நின்று நிற்கிறது. இந்த அடிப்படையில் இருந்தே அமெரிக்காவின் நியூட்ரினோ ஆய்விற்கு இந்தியா எப்படி களம் அமைத்து கொடுக்கப்போகிறது என்பதனை நமக்கு புரிதலை கொடுக்கும் என நினைக்கின்றேன்.
நியூட்ரினோ தொழிற்சாலை:
இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொடர்பாக பேசும் அதனைச் சார்ந்தவர்கள் அனைவரும், அமெரிக்காவில் கட்டமைக்கப்படும் நியூட்ரினோ தொழிற்சாலைக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என திரும்ப திரும்ப ஒரு பொய்யை கட்டமைத்து வருகிறார்கள். இது வெறும் அடிப்படை அறிவியல் ஆய்வுதான் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்திட்டத்திற்கும் அமெரிக்காவின் ஆய்விற்குமான தொடர்பின் வரலாற்றை சற்று பின் நோக்கி பார்ப்போம்.
வான்வெளி நியூட்ரினோவை பதிவு செய்து ஆய்வு செய்யும் ஆய்வுத்திட்டங்கள் பல வருடங்களாக தொடர்ந்துவந்தாலும் நியூட்ரினோவை உற்பத்தி செய்து ஆய்வு செய்வது என்ற சிந்தனை கோட்பாடு 1990களுக்கு பிறகே வந்திருக்க வேண்டும். அதுவும் உற்பத்தியாகும் நியூட்ரினோ பல நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க செய்து ஆய்வு செய்யும் நோக்கத்தினூடாகவே தொழிற்சாலை திட்டம் செயல்வடிவம் பெற்றது.
நியூட்ரினோ தொழிற்சாலை குறித்த திட்ட ஆலோசனைகள், என்னுடைய சிற்றறிவிற்கு எட்டிய வகையில், 1990களில், இங்கிலாந்து நாட்டு அதிசக்தி இயற்பியல் ஆய்வு மையங்களில் முதன்முதலாக விவாதிக்கப்படுகிறது. அதில், தொழிற்சாலை நியூட்ரினோக்கள் அதி அடர்த்தி கொண்டதென்பதால் அதனை பதிவு செய்வதும் எளிது என்றும் பூமியின் ஒரு புறத்தில் இருந்து பூமியின் மறுபுறம் வரை அதனை பயணிக்கச் செய்து பதிவு செய்ய முடியும் எனவும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்து நியூட்ரினோ தொழிற்சாலை திட்டத்தை செயல்படுத்தியதாக பதிவு இல்லை.
இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், தொழிற்சாலை நியூட்ரினோக்களை வான்வெளியில் இவர்கள் செலுத்தப்போவதில்லை. கீழே உள்ள படத்தில் தோராயமான வரைப்படத்தை காணலாம். பூமிக்கு அடியில் செலுத்துவதா? என குழப்பமாக இருக்கிறதா? பூமிக்கு அடியில் நியூட்ரினோவை பல நூறு கிலோமீட்டர் செலுத்தி அறிவியல் உலகம் வெற்றியும் பெற்றுள்ளது.
உதாரணமாக, ஜப்பான் நாட்டில், டோக்கியோ நகரில் இருந்து 295 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காமியோகா நகரத்தில் இருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கும் நியூட்ரினோவை உற்பத்தி செய்து அனுப்பி வருகிறார்கள். 295 கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் நியூட்ரினோ பயணிக்கிறது இதனை T2K Neutrino beam (Tokyo to Kamioka) என்று வரையறுக்கிறார்கள்.
அதேபோன்று, சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இருந்து இத்தாலி நாட்டின் கிரான் சாசோ நகரில் இருக்கும் நியூட்ரினோவை பதிவு செய்யும் மையம் 732 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஜெனீவாவில் உற்பத்தியாகும் நியூட்ரினோவை பல வருடங்களாக இத்தாலி நாட்டின் கிரான் சாசோ ஆய்வு மையம் பதிவு செய்து வருகிறது. இத்திட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 750ற்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் பங்குபற்றி ஆய்வில் ஈடுபடுகிறார்கள். ஆக, பூமிக்கு அடியில் நியூட்ரினோவை பயணிக்க வைக்க முடியும் என்பது புலனாகிறது.
வான்வெளியில் இருந்து மழை போல வரும் நியூட்ரினோக்கள் தொடர்ச்சியாக பூமியில் ஊடுருவி அதனை கடந்து பயணித்துக்கொண்டேதானே இருக்கிறது. இதில் என்ன புதிய செய்தி என சிலர் வாதம் செய்கின்றனர். செயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களை குறிப்பிட்ட திசையில் செலுத்தி, குறிப்பிட்ட இடம் நோக்கி பயணிக்க செய்து, குறிப்பிட்ட கருவியில் பதிவு செய்து ஆய்வு செய்வதில்தான் புதுமையும் அறிவியல் உலகின் அடுத்த கட்ட நகர்வும் இருக்கிறது. ஆனால், இத்தகைய நகர்வு நிச்சயமாக ஆபத்தைத்தான் கொண்டுவரப்போகறது பல்வேறு ஆய்வுகளின் இருந்து விளக்குகிறேன்.
சமகாலத்தில் செயல்படும் எல்லா நவீன அறிவியலிலும் மிகப்பெரிய ஆபத்துகள் இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கும் சுற்றுச்சூழல்/மனித உரிமை ஆர்வர்களுக்கும் இடைவெளி அதிகரித்தே வருகிறது. நவீன அறிவியலாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மக்களின் வருங்காலத்தின் மீதும் பார்வை இல்லை நிகழ்கால உலகை மாசுபடுத்துவதிலும் குற்ற உணர்வில்லை என்பதே இதன் உள்ளர்த்தம். உலகை காப்பாற்ற போகிறோம் என சொல்லும் அறிவியலாளர்களே உலகை அழிக்கும் ஆயுதமாக திகழ்கிறார்கள். இப்பிரபஞ்சம் எப்படி உருவானது என கண்டுபிடிக்க பிரபஞ்சத்தை அழிக்க முன்வருவதற்கு சமம்தான் நியூட்ரினோ திட்டம்.
இப்படியான திட்டம்தான் நமது தமிழகத்திற்கு கொண்டுவர இந்திய துணைக்கண்ட அரசாங்கத்தின் அறிவியலாளர்கள் துடிக்கிறார்கள். உலகத்தில் நடக்கும் ஆய்வுகளில் இது மிக பிரமாண்டமானது என சொல்லலாம். தேனி பகுதியில் நிறுவும் ஆய்வு மையம் பிரமாண்டமானதில்லை. இத்திட்டத்தில் பின்னால் இருக்கும் நமக்கு இதுவரை சொல்லப்படாத ‘பிரமாண்டமான’ ஒன்று இருக்கிறது.
ஃபெர்மி ஆய்வகம் – நியூட்ரினோ தொழிற்சாலை – சர்வதேச நிறுவனங்கள்:
உலகெங்கும் உள்ள பல நூறு நிறுவனங்கள், நியூட்ரினோ ஆய்வையும் நியூட்ரினோ தொழிற்சாலையின் அடுத்தக்கட்ட ஆய்வையும் ஒன்று சேர்ந்து செய்வதாக முன்வருகிறார்கள். அதனை ஒருங்கிணைத்து செயல்படுத்தி தலைமை தாங்கி வருவது அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகம் (Fermi Lab). இப்படியான பல்தேசியத் திட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த இந்திய அணுசக்தி கழகம், டாடா ஆராய்ச்சி கழகம், இந்திய கணித அறிவியல் கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்குபெற்று ஆய்வு கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இதே இந்திய துணைக்கண்ட நிறுவனங்கள்தான் தேனி நியூட்ரினோ ஆய்வகத்தை கட்டமைத்து வருகிறார்கள் என்பதனை நினைவில் கொள்க.
இத்திட்டத்திற்காக, பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு – நியூட்ரினோ தொழிற்சாலை (International design study) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் 11 ஆய்வு நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 50ற்கும் மேற்பட்ட அறிவியல் நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள் பங்குபெற்று வருகிறது.
2012 ஆம் ஆண்டு திரு. பத்மநாபன் அவர்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத்தின் சார்பில் எழுதப்பட்ட கடித்தத்தில், ஃபெர்மி ஆய்வகத்தில் இருந்து கட்டப்படும் நீயூட்ரினோ தொழிற்சாலையில் இருந்து உருவாகும் நீயூட்ரினோ ஒருபொழுதும் தேனிக்கு செலுத்த முடியாது. அப்படி திட்டம் இல்லை என மறுக்கிறார்கள்.
- பிறகு, ஃபெர்மி ஆய்வகத்தோடும் பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு மையத்தோடும் உடன்பாடு ஏன் போடப்பட்டது என்ற கேள்வி நாம் முன்வைக்க வேண்டாமா?
- பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு மையமும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் 2009 ஆம் ஆண்டு மும்பையில் சந்தித்து பிறகு எந்த ஆய்வு குறித்து விவாதித்தார்கள்?
- அந்த சந்திப்பு குறிப்பில், நியூட்ரினோ உணர்த்து கருவியை பற்றின விவாதம் ஏன் நடத்தப்பட்டது? அக்கருவி எங்கு பொறுத்தப்போகிறார்கள்?
இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொடர்பாக சிந்திக்கும்பொழுது முதலில் நினைவிற்கு வருவதே இந்த 50000 டன் எடையிலான காந்த மையப்படுத்தப்பட்ட இரும்பிலான எரிசக்திமானி உணர்த்து கருவிதானே (50 kton magnetized iron calorimeter detector). உலகிலேயே முதன் முறையாக இத்தகைய எரிசக்திமானியை நிறுவியே நியூட்ரினோவை பதிவு செய்து ஆய்விற்கு உட்படுத்தப்போகிறோம் என பிரமாண்டமான விளம்பரம் கொடுக்கப்படுகிறது.
ஆய்வு கட்டுரைகளை தேடிப்பார்த்த பொழுது, இத்தகைய உணர்த்துக்கருவி குறித்து 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வு கட்டுரை என் கண்ணுக்கு அகப்பட்டது. அதில், இத்தகைய உணர்த்துக்கருவிதான் பிற்காலத்தில் கட்டமைக்கப்படப் போகும் நியூட்ரினோ தொழிற்சாலையில் இருந்து வெளியேறு நியூட்ரினோக்களை உலகின் இன்னொரு மூளையிலும் பதிவு செய்ய பயன்படும் என கூறப்பட்டுள்ளது. (Nuclear Instruments and Methods in Physics Research A, 500 (2003), 441–445).
அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்துடன் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் கூட்டு நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கான வரையறை வகுத்தப்பின், 2004 ஆம் இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத்தின் நிலவரம் என்ற ஆய்வுக்கட்டுரையில் திரு. மொண்டால் அவர்கள், வருங்காலத்தில் உலகெங்கிலும் உள்ள நியூட்ரினோ தொழிற்சாலைகளில் இருந்து நியூட்ரினோக்களை பெறுவதற்கு வசதியாகத்தான் காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு எரிசக்திமானி உருவாக்குகிறோம் என எழுதியிருக்கிறார் (Proc Indian Natn Sci Acad, 70, A, No.1, January 2004,pp.71–77).
அதேபோன்று, 2006 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரை, அதுவும், மிக இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரபலமானதும் தரம் வாய்ந்ததுமானInstitute of Physics இல் வெளிவந்தது. அதில், இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வு மையத்தின் ஆய்வுகளை இரு கட்டங்களாக வரையறுத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. முதலாவது கட்டம் வான்வெளி நியூட்ரினோவை ஆய்வு செய்வதென்பதும், இரண்டாவது கட்டம் அமெரிக்காவின் நியூட்ரினோ தொழிற்சாலை நியூட்ரினோவை ஆய்வு செய்வதென்றும் வரையறுத்து இருக்கிறார்கள்.
அதே ஆண்டு ஜெனீவாவின் CERN ஆய்வகத்தில் நடந்த சந்திப்பொன்றில், மேலே கூறிய கட்டுரை எழுதிய ஆராய்ச்சியாளர் சுருபாபதி கோஸ்வாமி கலந்துரையாடும்பொழுது கீழ்க்காணும் படத்தை காட்டி விவரித்திருந்தார். உலகெங்கிலும் இருந்து நியூட்ரினோ படையெடுப்பு இந்தியாவை நோக்கி மட்டுமே செலுத்தப்படப்போகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
அன்றைய காலக்கட்டத்தில் பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகாமையில் அல்லது இமாலய மலைப்பகுதிக்கு அருகாமையில் இத்திட்டம் அமைவதாக இருந்ததால் PUSHEP என்றும் Rammam என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 2009 ஆம் ஆண்டு நடந்த பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு நியூட்ரினோ தொழிற்சாலை – டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் கலந்துகொண்ட சந்திப்பில், இரண்டு விதமான உணர்த்து கருவி குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்று, Silver-channel detector at the intermediate baseline (3000—5000 km) மற்றொன்று Magnetised Iron Neutrino Detector (7000—8000 km) என்று அவர்களது ஆவணங்களில் உள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 7000-8000 கிலோ மீட்டர் தூரத்தில் எந்த இடம் உள்ளது.? சந்திப்பு குறித்த அறிக்கையை காண:
ஆக, காந்த மையப்படுத்தப்பட்ட இரும்பிலான எரிசக்திமானி உணர்த்து கருவி கொண்டு 7000-8000 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பயணிக்கும் நியூட்ரினோ தொழிற்சாலை நியூட்ரினோக்களை பதிவு செய்ய முடியும் என்பது உறுதியாகிறது.
பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு இணையதள பக்கங்களில், நியூட்ரினோ தொழிற்சாலை நியூட்ரினோக்களை 7500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவிற்கு செலுத்தி ஆய்வு செய்யப்போவதாக வரைபடத்திலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்கள். படத்தினை கீழே காணவும். அணுக்கருவியல் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வுகள் என்ற பெயரிலும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஜெனீவாவிலும் 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியலாளர்கள் சந்திப்பு நடந்து வருகிறது. ஃபெர்மி ஆய்வகத்துடனான இந்திய நிறுவனங்களின் அறிவியல் தொழிற்நுட்ப சந்திப்புகள் மற்றும் அதனை விளக்கப்படுத்தி ஜெனீவாவில் இயங்கி வரும் CERN ஆய்வகத்தில் இந்திய இயற்பியலாளர்களின் நடத்திய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் கட்டுரைகளும் ஆவணங்களும் அந்நிறுவனங்களின் இணையதளங்களில் காணக் கிடைக்கிறது.
இதேக்கருத்தை, 2011 ஆம் ஆண்டு இந்திய கணித அறிவியல் நிறுவனத்தால் மிக பிரபலமான இயற்பியல் ஆய்வுக்கட்டுரை சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்க: (http://scitation.aip.org/content/aip/proceeding/aipcp/10.1063/1.3661606?ver=pdfcov)
நியூட்ரினோ ஆயுதம்:
அமெரிக்காவும் பல நாடுகளில் இருக்கும் ஆய்வு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் சேர்ந்து இந்த ஆய்வினை நடத்துவதில் என்ன பிரச்சனை.? இயற்பியலின் அல்லது வான்வெளி அறிவியலில் இருக்கும் அடிப்படைகளை வெளிக்கொணரும் ஆய்வுகளில் என்ன கெடுதல் இருக்கப்போகிறது என்று பலர் கேட்கலாம். இந்த முடிவுகள் அடிப்படை அறிவியலின் முடிச்சுகளை அவிழ்க்கும் ஆக்கமுறையிலான அறிவியலுக்கு (constructive science) பயன்படுத்தப் போவதில்லை. இது அழிவுமுறை அறிவியலுக்குத்தான் (destructive science) பயன்படப்போகிறது.
வான்வெளியில் உருவாகும் பிரபஞ்ச வெடிப்பில் இருந்து கிடைக்கப்பெறும் ஹிக்ஸ் போசான் துகள் குறித்தான தேடல் ஆய்வினை CERN ஜெனீவா ஆய்வகம் அதனை உருவாவதற்கு வசதியான இயந்திரங்களை (Large Hardon Collider) செய்து, சுரங்கத்தினுள் ஆய்வினை நிகழ்த்தினார்கள். கணிசமான வெற்றியையும் ஈட்டினார்கள். காஸ்மிக் கதிர்களில் பீட்டா தேய்வுகளில் கிடைக்கப்பெறும் நியூட்ரினோக்கள உணர்வதும் பதிவு செய்வதும் கடினம் என்கின்ற நிலையில் அதனை பதிவு செய்யும் அதிநுட்ப கருவிகள் உருவாக்குவதுதானே அறிவியல். அப்படி செய்யப்படும்பொழுது/செய்யப்பட்டால் அதனை அடிப்படை அறிவியலை உணர்வதற்கான ஆய்விற்கான வேலைப்பாடுகள் என கருத்தில் கொள்ளலாம்.
ஜப்பானில் 295 கிமீ ம் ஜெனீவா முதல் கிரான் சாசோ வரை 732 கி.மீ ம் பூமிக்கடியில் பயணிக்கச் செய்து ஆய்வுகளை புரிந்து வருவதும், அமெரிக்கா சர்வதேச வடிவமைப்பு ஆய்வினை செய்வதும் அதற்கான முன் அறிக்கையில் 7500 கி.மீ பூமிக்கு அடியில் பயணிக்க செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அறியும்பொழுது, இவர்களின் ஆய்வினை வேறு ஒரு கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க வேண்டியுள்ளது. அதுதான் நியூட்ரினோ ஆயுதம்
நியூட்ரினோ ஆய்வகத்தின் முடிவுகள் இறுதியில் நியூட்ரினோ ஆயுதம் தயாரிக்கத்தான் பயன்படப்போகிறது என்ற வாதத்திற்கு வலு சேர்க்க, அறிவியல் உலகத்தின் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகால நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. நியூட்ரினோவின் அதிதிறன் ஆற்றலைக் கொண்டு புதிய ஆயுதத்தை வடிமைக்கலாம் என முதன்முதலில் ஜப்பானின் அறிவியலாளர்கள் (Hirotaka Sugawara, Hiroyuki Hagura, Toshiya Sanami) 2003 ஆம் ஆண்டு கோட்பாட்டு அறிவியலின் (theoretical science) முடிவுகளின்படி ஆய்வுக் கட்டுரைகள் மூலம் உறுதி செய்கின்றனர். பார்க்க:http://arxiv.org/pdf/hep-ph/0305062%C3%B9
அக்கட்டுரையில் அவர்கள் இத்தகைய ஆயுதம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை விளக்குவதோடு அதி உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களால் எத்தகைய கதிர்வீச்சு ஆபத்துகள் வரும் என்பதனையும் 1999 இல் வந்த கட்டுரையைக் கணக்கில் கொண்டு விளக்கப்படுத்தியும் உள்ளனர். பார்க்க: http://arxiv.org/pdf/hep-ex/0005006v1.pdf . கதிர்வீச்சு அபாயம் குறித்தான படத்தினை கீழே பார்க்கவும்.
செயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளது என்பதனை விளக்க எண்ணற்ற ஆய்வறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக,http://slap.web.cern.ch/slap/NuFact/NuFact/nf105.pdf,http://ieeexplore.ieee.org/stamp/stamp.jsp?tp=&arnumber=792184,மற்றும் http://www.cap.bnl.gov/mumu/ftp.mumu/transparencies/master19.pdfஆகிய கட்டுரைகளை படித்து பார்க்கவும்.
இதில் இன்னொரு செய்தி என்னவெனில், இதுவரை நியூட்ரினோக்களினால் வர நேரும் கதிர்வீச்சு அபாயம் குறித்து விளக்கிய கட்டுரைகள் அனைத்தும் நியூட்ரினோ ஆயுதமாக மாறும் நிலையில் அது கொண்டிருக்கும் ஆற்றலில் 1000தில் ஒரு மடங்கிலும் கீழான ஆற்றலைக் கொண்டே கதிர்வீச்சு அபாய எச்சரிக்கை விடுக்கின்றன. அப்படி இருப்பின் நியூட்ரினோ ஆயுதத்தின் வீச்சு எத்தகையது என யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஜப்பானிய அறிவியலாளர்கள் தங்களது கட்டுரையில் மேலும், “உலகின் எந்த ஒரு மூளையிலும் இருக்கும் பொருள், நபர், ஆயுதங்கள், அணு ஆயுதம் ஆகியவற்றை துல்லியமாக கணித்துவிட்டால், யாருக்கும் புலப்படாத வண்ணம் நிலத்தின் அடியிலேயே உலகத்தின் இன்னொரு மூளையில் இருந்து நியூட்ரினோவை செலுத்தி அழிக்க முடியும். அணு ஆயுதங்களை அழிக்கும்பொழுது முற்றிலும் செயலிழக்கச் செய்யும் என சொல்ல முடியாது. தற்போதைய தங்கள் கணக்குப்படி அணு ஆயுதத்தின் 3 வீதம் வெடிப்பு நிகழும். அதனை குறைக்க ஒருவேளை வருங்கால அறிவியல் உலகம் வழி செய்யலாம். ஆனாலும், நியூட்ரினோவின் பாதையில் கவசத்தை உருவாக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது என்பதாலும், நீயூட்ரினோ அணு ஆயுதத்தோடு புரியும் வினையில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் வெடிப்பை தவிர்க்க முடியாது” என்று தெரிவிக்கின்றனர்.
அறிவியல் உலகம் வளர்ச்சியில் இவ்விபத்துகள் தவிர்க்கப்படலாம் என யாரேனும் கருதுவார்களேயானால், 2003 ஆம் ஆண்டு வெளியான முதல் கட்டுரைக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து வெளியான நியூட்ரினோ ஆயுதக் கட்டுரை இன்னொன்றும் இதே ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது. இம்முறை இதனை எழுதியவர் அமெரிக்கர். பார்க்க:http://arxiv.org/pdf/0805.3991.pdf.
வருங்காலம் ஒருவேளை ஆபத்தை குறைக்கும் வழிமுறைகளை தீர்மானிக்கலாம் என சிலர் எண்ணலாம். அணுக்கழிவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும் அணுக்கழிவுகளை கிடங்கில் சேமிக்கவும் முழுமையான வழிமுறைகளை அறிவியல் உலகம் இன்னுமுமே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நினைவுல் கொள்க.
அதேபோன்று 2003 இல் வெளியான ஜப்பானிய அறிவியலாளர்களின் அதே கட்டுரையில் இன்னொரு முக்கியமான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. அச்செய்திதான் இன்றைய நியூட்ரினோ ஆய்வு குறித்த புரிதலை ஏற்படுத்துகிறது. அதாவது, நியூட்ரினோ ஆயுதம் ஒருவேளை வருங்காலத்தில் சாத்தியப்பட்டாலும், அதனை நிறுவ தனியாக ஒரு நாடாலோ, தனி ஆய்வு நிறுவத்தாலோ முடியாது. அதற்கென பல்வேறு நாடுகள் பல ஆய்வு நிறுவனங்கள் பல நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்த “உலக அரசாங்கங்கள் – World Governments” உருவாக வேண்டும். மிகுந்த பொருட் செலவுகள், காலம், மனித உழைப்பு, பல்வேறு துறைசார் வல்லுநர்களின் ஆய்வு தேவை. அதற்கென தனி அமைப்பாக உலக அரசாங்கம் போன்ற ஒரு ஒன்றிணைவு தேவை என கூறியுள்ளனர்.
இக்கட்டுரையின் “உலக அரசாங்கம்” சொல்லாடலை, “சர்வதேச வடிவமைப்பு ஆய்வு – International design study” என்ற சொற்பதத்தோடு சேர்த்து பார்த்தால் விளைவுகள் எளிதில் விளங்கும். இதில் இன்னுமொரு முக்கிய செய்தியினை யாரும் புறக்கணித்துவிட முடியாது. இத்தகைய ஒருங்கிணைப்புகளை செய்துவருவதும் தலைமை தாங்குவதும் அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகம். உலக அழிவிற்கான தொட்டிலை உருவாக்கி குளிர் காயும் அமெரிக்கா நியூட்ரினோ ஆய்வினையென்ன உலக அமைதிக்காகவா செய்யப்போகிறது. உலகத்தை, தனது காலடியில் வைக்கவும், உலகத்தை, தலைமை கொண்டு ஆளவும், அமெரிக்கா செய்த பயங்கரவாத அரசியல்/பொருளாதார/ஆயுத நடவடிக்கைகளை அறிய, அமெரிக்க அரசாங்கதிற்காக பணிப புரிந்த அமெரிக்கரான ஜான் பெர்கின்ஸ் எழுதிய, “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – Confessions of an economic hitman” என்ற புத்தகதை வாசிப்பது, மேலும் இத்திட்டம் குறித்த அரசியல் புரிதலுக்கு வலுச்சேர்க்கும் என நினைக்கின்றேன்.
அதேபோன்று நீயூட்ரினோ ஆயுதம் தொடர்பாக ஆல்பிரட் டாங்க் என்ற அமெரிக்கர் 2013 இல் எழுதிய கட்டுரையில் வரும் (http://xxx.tau.ac.il/pdf/0805.3991.pdf) வாசகம் மேலும் அச்சத்தைக் கூட்டுகிறது. அதில், “Even if such a neutrino beam is made available, its radiation hazard will render it politically nonviable” என்று நிகழ்கால அரசியலின் சதுரங்க விளையாட்டுகளையும் அறிவியல் என்ற பெயரில் செய்து வரும் ஆபத்துக்களையும் துல்லியமாக விளக்குவதாகவே எனக்குப்படுகிறது. நியூட்ரினோ ஆயுதம் உருவானாலும் அதன் கதிர்வீச்சு தீங்கினால், அத்தகைய ஆயுதம் சாத்தியமானது இல்லை என்றே அரசியல் உலகம் சொல்லிவரும். இந்தியாவில் அறிவியலாளர்கள் அனைவரும் அரசியல்வாதிகளே என்பதனை பல்வேறு சுற்றுச்சூழல் வழக்குகளிலும் குறிப்பாக கூடங்குளப் பிரச்சனைகளிலும் பார்த்துவரும் நமக்கு இது எளிதில் புரியும் என நினைக்கின்றேன்.
கிரான் சாசோ ஆய்வுக்கூடம்:
கட்டுரையின் முற்பகுதியில், இத்தாலியில் இருக்கும் ஆய்வுக்கூடம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதேவேளை, அந்நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை அதன் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படுத்தி வருகிறது என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
2003 ஆம் ஆண்டு, இந்த ஆய்வு மையத்தில் இருந்து வெளியாகும் வேதி பொருட்கள் மக்கள் பயன்படுத்தும் நீரை முழுவதுமாக மாசடையச் செய்து விட்டது எனக்கூறி, இத்தாலி நீதிமன்றம், ஆய்வு மையத்தை முற்றிலுமாக பணி நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது. இதில் ஒன்று புலனாகிறது. 24 நாடுகளைச் சேர்ந்த 750 அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் எவ்வளவு அறிவுநுட்பமானவர்களாக இருந்தாலும் விபத்துகளும் நடக்கும். அது மக்களின் வாழ்வாதார வருங்காலத்தையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆய்வு மையம் செயல்படுத்தத் தொடங்கிவிட்டாலும் தீ விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் சுரங்கத்தினுள் தொடர்ந்து வருகிறது.
இத்தாலி புவியியல் வல்லுநர்களும் சமூக ஆர்வலகர்களும், “இந்த ஆய்வு மையம் அண்டிய பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் தன்மை முழுவதும் பாதிப்படைந்துவிட்டது. ஆய்வு மையத்தை மூடியே தீருவோம்” என தொடர்ந்து போராடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.
ஆய்வு மையத்திற்கு எதிராக போராடி வரும் புவியியல் வல்லுநர்கள், “ஆய்வு மையத்திற்கான சுரங்க மையம் அமைக்கும்பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் நீரியல் தன்மை முழுவதும் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இனி எவ்வளவு முயன்றாலும் நீரியியல் சமநிலையை (hydrodynamic equilibrium) மீட்க முடியாது. இதனால், அருகாமைப் பகுதியில் இருக்கும் நீர்நிலப் பொதியியலிலும் (Hydrogeology) மாற்றம் வரத் தொடங்கிவிட்டது என்பதால், மக்கள் பயன்படுத்தப்போகும் நீர், நிலம், விவசாயம் என அனைத்தும் பாதிப்புக்குள்ளாகிறது” என வாதம் செய்கின்றனர்.
2004-இல் இத்தாலி நீதிமன்றத்தால் மூடிய ஆய்வகம், பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு 2006 ஆம் ஆண்டு முழுவீச்சில் செயல்படத்தொடங்கியது. ஜெனீவாவில் இருந்து நியூட்ரினோவின் முதல் தகவலையும் பெற்றது. மக்களின் குரலுக்கு செவிக்கொடுக்காத இத்தாலி அரசிற்கு, இயற்கை தனது கோபத்தை காட்டியது. ஒரு நாள் அதிகாலையில் கிரான் சோசாவில் நில அதிர்வு ஏற்பட்டதால், 300 மக்கள் வாழ்விழந்தனர், 15000 பேர் படுகாயம் அடைந்தனர், 60000 பேர் வீடிழந்தனர். 2005 இல் நீர்நிலப் பொதியியலார்களும் அறிவியலாளர்களும் எச்சரிக்கைவிடுத்தும் கேட்காத அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கியது.
இந்த வாதத்தை மறுக்கும் சிலர் காக்கை அமர பனம்பழம் விழுந்த கதை என மறுக்கின்றனர். சுரங்கங்கள் அமைக்கும்பொழுது ஏற்பட்ட நீரியியல் அடுக்குகளில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என இத்தாலி நாட்டிலேயே பலர் ஆய்வுகளின் முடிவுகளை முன்னிறுத்தி எழுதி வருகின்றனர். தேனி மாவட்டத்திலேயும் அதன் சுற்று வட்டாரங்களிலேயும் இருக்கும் புவியியல் தன்மை குறித்தும் நீரியியல் அடுக்குகளில் ஏற்பட வாய்ப்பு இருக்கும் மாற்றங்கள் குறித்தும் அறிவியல் உலகம் பரந்துபட்ட ஆய்வுகளை செய்ததாக பதிவுகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் தரவுகளை மட்டுமே இந்திய நியூட்ரினோ ஆய்வுக திட்டக்குழு கணக்கில் எடுத்திருக்கிறது. புதிய சுரங்கங்கள் அமைக்கும்பொழுதும் வெடிகள் வைத்து பாறைகளையும் நில அடுக்குகளை தகர்க்கும்பொழுதும் ஏற்பட இருக்கும் அதிர்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் குறித்தும் ஒப்புருவாக்க ஆய்வுகளையோ(simulation) மாதிரியமைத்தல் ஆய்வுகளையோ (modelling) இந்திய அறிவியலாளர்கள் செய்ததாக ஆய்வுக்குறிப்புகள் தென்படவில்லை.
இத்தகைய ஆய்வுகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் மக்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை. நம் ஊரில், வெள்ளைக்காரன் சொன்னார் சரி, கோட் போட்டவன் சொன்னால் சரி என்ற பழமைவாதம் போல, அறிவியலாளர்கள் செய்தால் சரி என்ற புதியதொரு முட்டாள்த்தனம் முளைத்திருக்கிறது. எதனையும் கேள்வி கேள் என்று சொன்ன பெரியார் வாழ்ந்த மண்ணில் எதனையும் கேள்விக்குட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தலைமுறை வளர்ந்துவருவது ஆபத்தானதுதான்.
ஒரு பழைய கதையை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். 2004 ஆம் ஆண்டு நவம்பரில் ராமேஸ்வரத்தில், கூடங்குள அணு உலை தொடர்பான மக்கள் விளக்கக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியளார்கள், அறிவியலாளர்கள் முன்னிலையில், சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள், இப்பகுதியில் சுனாமி வர வாய்ப்பிருப்பதாகவும் அதனால் இதுபோன்ற திட்டம் இங்கே செயல்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்தனர். எங்களுக்கு தெரியாத அறிவியலா? இப்பகுதியிலாவது சுனாமி வருவதாவது என ஏளனம் செய்துவிட்டு கிளம்பினர் அரசு அதிகாரிகள். அதே ஆண்டு, ஒரு மாதத்தின் பின், 26 ஆம் நாள் டிசம்படில் சுனாமி தாக்கியதா? இல்லையா?
source: https://thamilinchelvan.wordpress.com/2015/02/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2/