Category Archives: women’s day program

Women’s Day recognition

VSTB6979

ஜில்லெட்டின் படை வீரர்கள்

no-68481_640

சமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.

அந்த விளம்பரம் என்ன சொல்கிறது:

ஆங்கிலத்தில்:

Soldiers Wanted not to guard the borders

Not to go to war

But to

Support the most important Battle of the Nation

To stand up for women

Because when you respect women

You respect your nation

Support the Movement

Gillette salutes the Soldier in You

தமிழில்:

// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)

பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்?

அது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேசத்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே  ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா?

பெண்ணுக்கு மதிப்பளிப்பதென்றால் என்ன?  பெண் விடுதலை என்றால் என்ன? பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று  மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா?

ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).

அடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள்.  சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை.  இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.

(பெண்கள் வில்லன்கள்)

தெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.

பெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன? முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா?

பெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்?

,

குறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….

எங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys!!)…

பெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….

 

Related Links:

http://facttruth.wordpress.com/2010/05/28/victimization-of-women-officers-in-indian-army/

http://www.huffingtonpost.com/2012/12/27/india-gang-rape-suicide_n_2370859.html

http://indianmilitarynews.wordpress.com/tag/sexual-harassment/

http://www.firstpost.com/india/code-of-injustice-silencing-sexual-assaults-in-the-military-660748.html

http://www.ndtv.com/article/cities/court-martialled-female-iaf-officer-commits-suicide-132943

http://syaanand.blogspot.in/2012/07/islam-act-matter.html

http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/

தூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி

thooththukkudi

தூத்துக்குடி கடற்கரையில்

17.3.2013

பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி என்ற பெயரில், தூத்துக்குடி ராஜா சில்க்ஸ் நிறுவனம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்திட உறுதிமொழி எடுக்கவும், கையெழுத்து பிரச்சாரம் செய்திடவும் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் இந்த நிகழ்வை ஏற்றுக்கொண்டேன்.

வழக்கமாக மூடிய அறையில், ஓரளவு ஒத்த சித்தனையோ அல்லது மாற்று தேடலோ உள்ள கூட்டத்தினர் மத்த்யில், கல்லூரி மாணவர் மத்தியில் உரையாற்றி இருக்கும் எனக்கு ஒரு திறந்தவெளியில், கடற்கரை ஓரத்தில் பொது மக்கள் மத்தியில் உரையாடியது ஒரு மாறுபட்ட அனுபவம். பொது புத்தியில் அத்தனை ஆழமாக ஊறிப்போயிருக்கும் மக்களிடையே நான் பேசப்போவது கிரக்கமும், லத்தீனும் ஆகிவிடக் கூடாது எனும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தது. மைய நிகழ்ச்சி தொடங்கும் முன் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், கடற்கரைக்கு வந்திருந்த மக்களை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஈர்க்கும் வகையிலும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை அறிவித்தார்கள்.

உற்சாகத்துடன் குழந்தைகள் மேடை ஏறி தங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பாடினார்கள், சில குழந்தைகள் தமிழ் அறப் பாடல்களைப் பாடினார்கள். குழந்தைகளின் இந்த இனிமைக் குரலில் கடலும் தன் இரைச்சலை குறைத்துக் கொண்டது போல் இருந்தது. குழந்தைகளின் குறும்பு மனதை ஆட்கொண்ட அதேவேளை, திறமை எனும் பெயரில் ‘சினிமாப் பாடல்களை’ப் பாடியபோது மனம் பதைபதைத்தது.

என்னுடைய பேச்சு பின் வருமாறு:

“எல்லோருக்கும் வணக்கம். பெண்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சி எனும் பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி, தாங்கள் அதை உறுதிபடுத்துவோம் என்று உறுதி மொழி ஏற்கும் வகையில் ராஜா சில்க்ஸ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பாராட்டுக்குறியது.

மேடை ஏறும் முன் என்னை “பாசிடிவ்வாக பேசுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள். அதுதான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய குறிக்கோள் மக்களுக்கு அறிவூட்டுவது, அவ்வறிவு பாசிடிவ்வா, நெகட்டிவ்வா என்பதை பேசிய பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.  ஏனென்றால் சுற்றிலும் அச்சுறுத்தும் வகையிலான மனநிலையைக் காணும் போது நான் எங்கிருந்து பாசிடிவ்வாக தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்வோம். நாளுக்கு நாள் பெண்கள் வன்கொடுமை அதிகரித்து வருகிறது, உங்கள் வீட்டுப் பெண்களை தைரியமாக வெளியில் அனுப்ப இயலவில்லை எனும் நிலையிருந்தும், அதை மாற்றுவதற்கான ஒரு முயற்சி, அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்குகூட சில ‘பொழுது போக்கு’ விளையாட்டுகள் மூலமே உங்களை ஈர்க்க முடிகிறது. விளையாட்டு, மேஜிக் ஷோ என்று அறிவித்து கூப்பிட்ட பின்னரே இங்கு கூட்டம் வந்துள்ளது. இந்த மனநிலையை நாம் எப்படி புரிந்து கொள்வது சொல்லுங்கள்.

அதேபோல் குழந்தைகள் பாடல்கள் பாடினர். சில குழந்திகள் ‘ரைம்ஸ்’ பாடினர். மகிழ்ச்சி. ஒன்றிரண்டு குழந்தைகள் பாடிய சினிமா பாடல் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. “வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு” எனும் அந்த பாடல் வரிகளின் பொருள் கூட தெரியாமல் அந்த குழந்தைகள் அதைப் பாடிச் சென்றது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் குழந்தை டவுசர் அவுருண்டா, ஃபிகரு வேணாண்டா என்று தன்னை அறியாமல் பாடுகிறது.

(அந்த தத்துவப் பாடல்

” வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு…

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா…
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா…”)

அதாவது ஃபிகரு எனும் அந்தச் சொல் பெண்ணினத்தை இழிவுபடுத்துகிறது என்று தெரியாமல் பாடுகிறது, அதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்கின்றனர். பொது புத்தி அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்களை நான் குறை சொல்வதாகவோ, பொது புத்தி என்று சொல்வதால் எனக்கேதோ விசேச புத்தி இருப்பதாகவோ புரிந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பொது புத்தி என்றால் நாம் ஒரு குறிப்பிட்ட வகையான சிந்தனைப் போக்கிற்கு பழக்கப்பட்டுவிட்டோம் என்று பொருள். கேள்வி ஏதுமின்றி கண்மூடித்தனமாக அடிபணியும், உள்வாங்கிக் கொள்ளும் ஒரு புத்தி. அது ஒரு பழக்கம். உ.ம்: குழந்தைகளை A to Z நேரடியாக சொல்லச் சொல்லும் போது அவர்கள் வேகமாக சொன்னார்கள், ஆனால் அதை தலைகீழாகச் சொல்லச் சொன்னபோது தடுமாறினர்கள். காரணம் என்ன? பழக்கம், ஒரு குறிப்பிட்ட முறையில் பழக்கம், பயிற்சி அவ்வளவே. நம் மூளையும் அப்படித்தான் செயல்படுகிறது. அதுபோன்ற ஒரு சில உதாரணங்களை உங்களுக்கு சுட்டிக் காட்டவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

ஆண் பெண் பேதம் முதலில் நம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது, அது குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்படுகிறது. உ.ம்: ஆண் குழந்தைக்கு விளையாட, மெக்கானிக்கல் பொம்மைகளையும், பெண் குழந்தைகளுக்கு சொப்பு, பார்பி போன்ற பொம்மைகளையும் நாம் வாங்கிக் கொடுக்கிறோம். ஏன்? சமைப்பது, பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற விளையாட்டுகளைத்தான் பெண் குழந்தைகள் விரும்புகிறது என்றால் ஏன்? சிந்திக்க வேண்டும்.

அதேபோல் “பொம்பளையா நடந்துக்க”, “ஆம்பிளையா நடந்துக்க” போன்ற வசனங்கள். திரைப்படங்களில் கூட ஒரு ‘தாதா பெண்’ என்றால் “ஹே…. நான் பாக்கத்தாண்டா பொம்பள… நிஜத்துல ஆம்பளை” என்று கர்ஜிப்பார். ஏனென்றால் ஆணாக இருப்பது அத்தனை உயர்வானது, வீரம் நிறைந்தது எனும் புரிதல். அதேபோல் ஒரு ஆண் “ஹே…. நான் பாக்கத்தாண்டா ஆம்பிளை….. நிஜத்துல பொம்பள…” என்று கர்ஜிப்பாரா. அப்படி கர்ஜித்தால் நாம் சிரித்துவிடுவோம் இல்லையா? ஏனென்றால் பெண்ணாக இருத்தல் என்பது அத்தனை கேவலமானது? ஏன் அப்படி?

இந்த நிகழ்ச்சியில் என் பெயருக்கு முன்னர் போடப்பட்டிருக்கும் ஒரு சொல் கூட ஆண் பெண் பாகுபாட்டிற்கு ஒரு உதாரணம் தான். ‘திருமதி. கொற்றவை’ என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் ஆணுக்கு எப்போதும் ‘திரு.’ மட்டுமே, பெண்ணுக்கு மட்டும் திருமணம் முடிந்தவுடன் திருமதி சேர்க்கப்படும். ஏன்? பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் அல்லது கணவன் பெயரை போட்டுக் கொள்கிறார்கள் (போட வேண்டும் என்ற விதி) எந்த ஒரு ஆணாவது தனது பெயருக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்கிறாரா? எனக்கு திருமணமாகிவிட்டது என்று சொல்லிக் கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. ஆனால் அந்த அடையாளப்படுத்துதல் ஏன் பெண்ணுக்கு மட்டும் வலியுறுத்தப்படுகிறது. சிந்திக்கவும்.

ஆண் பெண் பாகுபாடு வளர, இடைவெளி பெருகிட ஊடகங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. முதலாளிகள் உருவாக்கும் பண்டங்கள் மீண்டும் மீண்டும் ஆண், பெண் அடையாளங்களுக்கு விதிகள் வகுத்து, நீ ஆண், நீ பெண் என்று அழுத்தம் கொடுத்துக் கொடுத்து பெண்களை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறது.  ஒரு பெண்ணுக்கு ’இடுப்பு, தொடை, மார்பு, நீளமான கூந்தல்’ இவைகள் அழகு என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார். ஒரு புறம் பெண்களை புகழ்வது போல், பெண்கள் மிது அக்கறை உள்ளது போல் ஒரு நாடகம், மறுபுறம் பெண்களைக் கேவலப்படுத்துவது.

இத்தகைய சித்திரிப்புகளை, பாலியல் பாகுபாட்டு அடையாளவாதங்களை சுட்டிக் காட்டுவது, விழுப்புணர்வை ஏற்படுத்துவது இவையே மாசெஸ் அமைப்பின் குறிக்கோள்.  உ.ம்: உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த ஒரு நடிகர் நடித்த விளம்பரம். இமாமி ஃபேர் & ஹாண்ட்சம் க்ரீம் ஃபார் மென் எனும் விளம்பரத்தில் சூர்யா சொல்வது ‘பெண்மையோடு இருப்பது அவமானத்திற்குரியது’ என்பதாகும். அதில் அவரது தோற்றத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு ‘குறியீடு’ என்று பெயர். அவர் பெரிய மிசையோடு வருவார், ஏன் அவர் சாதாரண மீசையோடோ அல்லது மிசை இன்றியோ வரவில்லை? ஏனென்றால் மீசை என்பது ‘ஆண்மைச் சின்னம்’ பெரிய மிசை ‘பெரிய ஆண்மை’! அதேபோல் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுபவர் ‘பயில்வான்’ அதுவும் ஒரு ஆண்மைச் சின்னம். பெண்களுக்கு அடையாள விதிகளை வகுத்து வந்தக் கூட்டம் இப்போது ஆண்களுக்கும் அழகு, சிக்ஸ் பேக்ஸ் என்று விதிகளை வகுக்கிறது. ஆண்கள் பாவம்.

பெண்களுக்கான முகப்பூச்சை போட்டால், பெண்மை மேலோங்கும், அது எத்தனை அவமானகரமானது என்றொரு கேள்வியை ஏழுப்புகின்றனர். நிச்சயம் இவர்கள் பெண் வயிற்றிலிருந்துதானே பிறந்து வந்திருப்பார்கள்? ‘ஆண்’ முகப்பூச்சைப் பூசிய பின்னர், ஐந்தாறு பெண்கள் பயில்வானைச் சுற்றி நடனமாடுவார்கள். எத்தனை அசிங்கமான ஒரு கற்பனை, சிந்தனை? இதை நாம் கவனித்திருக்கிறோமா?

பொதுவெளியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்ளும் இத்தகைய நடிகர்கள் எப்படி இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல், பொது நலனில் ‘அக்கறை’ காட்டும் இவர்கள் ஏன் பெண்களை அரைகுறை ஆடையோடு நடனமாட வைத்து பிழைக்கிறார்கள்?

இந்த ஊர் மீனவர்கள் பெரும்பகுதியாக வாழும் ஊர். சமீபத்தில் இலங்கை இராணுவம் மீனவர்களுக்கு அளித்து வரும் துன்பங்கள் நிச்சயம் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. அதேபோல் தமிழ் இனப் போராட்டம், தமிழீழப் போராட்டம் ஆகியவை. அதற்கு ஆதரவளிப்பது அவசியமே. ஆனால் அதற்கு ஆதரவளிக்கும் நடிகர்கள், சினிமாக்காரர்கள் செய்வது என்ன? சிந்தித்திருக்கிறோமா? நடிகர் விஜய், மீனர்வர்களுக்கு இலவச வலை கொடுத்து தன் கடமையை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு கதாநாயகிக்கு அரைகுறை உடை கொடுத்து ஆடக் கிளம்பிவிடுவார். மற்றவர்களும் இதேபோல், பெயருக்கு உண்ணாவிரதம், ஆதரவு என்று தெரிவித்துவிட்டு தங்கள் படங்களில் பெண்கள் விசயத்தில் சிறிதளவும் பண்பின்றி நடந்து கொள்கின்றனர்.

அந்த நடிகைகளும் அதற்கு உடன்படத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், பணம் ஆண் பெண் பேதமறியாது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவறாக சித்தரித்துவிட்டால் எத்தனை கொந்தளிப்பு நிகழ்கிறது. பெண்களை இத்தனை கேவலமாக சித்திரிப்பதற்கெதிராக பெண்களாகிய நாம் கொத்தித்தெழுகிறோமா? இல்லையே?

இதுபோன்ற இழிவான சித்தரிப்புகளுக்கெதிராகவும் நாம் கொத்தெழ வேண்டும். இன்று உறுதிமொழி எடுக்க வந்திருக்கும் இளைஞர்கள் அதற்காகவும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சிந்தனையில் மாற்றமின்றி செயலில் வராது. பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துக்களை மாற்றாமல் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.

இன்றைய நிகழ்ச்சியில் முதலமைச்சர் அறிவித்திருக்கும் 13 அம்ச திட்டத்தை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு சில மாற்று கருத்தும் விமர்சனமும் உண்டு. ஆனால் மற்ற மாநிலங்கள் ஏதும் அறிவிக்காத முன்னர், முதலமைச்சர் அவர்கள் முன் கை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. அதற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அதில் உள்ள ஒன்றிரண்டு பரிந்துரைகளில் எனக்கு மாற்று கருத்துள்ளது. மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம். இந்த இரண்டுமே பயனற்றது. மேலும் இது மற்றவரைக் குற்றவாளியாக்கி நாம் தப்பித்துக் கொள்ளவே உதவும். ஏனென்றால் இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களிலும் அனைவருக்கும் பங்குண்டு. நாமனைவரும் ஒவ்வொரு பங்கு வகிக்கிறோம். மேற்சொன்ன அந்த ‘பாலியல் சுரண்டல்களைக்’ கண்டு கொள்ளாமல் இருப்பது கூட ஒரு குற்றமே.

எந்த காரணத்தாலும் நாம் மரண தண்டனையை ஆதரிக்க முடியாது. ஏனென்றால் அது தீர்வல்ல. அது குற்றத்தை தடுக்காது. உ.ம் புதிதில்லி சம்பவம் நடந்தவுடன் பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை என்று முழங்கினார்கள். நேற்று ஒரு ஸ்விஸ் தம்பதிகள் சுற்றுலா சென்றபோது, அப்பெண் குழு வல்லுறவுக்கு உள்ளானார். வல்லுறவு செய்தவருக்கு மரண தண்டனை விவாதம் குறித்து தெரியாதா? அதையும் மீறி அவர்களை அந்த குற்றத்தை செய்விப்பது எது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் எவ்வித மனநிலையிலிருந்து அதைச் செய்கிறார்கள் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உளவியல் ரீதியான அனுகுமுறை அவசியம்.

சுற்றிலும் பெண் உடலை கவர்ச்சியாக காட்டி, வெறி ஏற்றி ஒரு கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிலரை மட்டும் குற்றவாளியாக்குவது சரியல்ல.

அதேபோல் ஆண்மை நீக்கம், இது நிச்சயம் ஆண்களைக் கேவலப்படுத்தும் செயல். ஆம் நீ ஆண் என்று அழுத்தம் கொடுத்து மீண்டும் ஆண்மைச் சிந்தனையை தூக்கிப் பிடிக்கும் செயல். இதனால் பகைதான் வளருமே ஒழிய மாற்றம் ஏற்படாது.

(rel. interview http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=3&contentid=875a4b56-d2c0-45b5-80ea-1f0112df57ff)

ஆண்மை பெண்மை அடையாளங்கள் எப்படி உருவானது என்று புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆண் பெண் என்பது உயிரியல் ரீதியான அடையாளம், ஆனால் ஆண்மை பெண்மை என்பது உயிரியல் ரீதியானதல்ல. அது சமூகத்தால் உருவாக்கப்பட்டது. அப்படியே வேறுபாடுகள் இருந்தாலும், அது வேறுபாடே ஒழிய அதில் ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு என்று கருதுவதற்கு இடமில்லை. அது அது அதன் தன்மையில் இருக்கிறது. அந்த வேறுபாட்டை நாம் மதிக்க வேண்டுமே ஒழிய, அதைவைத்து ஒருவரை பலவீனமானவர் என்று சொல்லும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படியே பலவீனமானவராகப் பெண் இருந்தாலும், அவரை ஒடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை.

பேசுவதற்கு நிறைய இருக்கிறது. நேரத்தோடு முடித்துக் கொள்வது நலம். நம் மூளைகள் எப்படி ஒரு பொதுச் சிந்தனைக்கு பழக்கப்படுகிறது என்பதை ஒரு சில உதாரணங்கள் மூலம் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். பெண் பற்றிய கருத்துக்கள் மாறாமல் பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது, இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, ஆண்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்தல், கையெழுத்திடுதல் போன்ற முயற்சி பாராட்டுக்குறியது. இதில் கலந்து கொள்ள வந்திருக்கும் அத்தனை இளைஞர்களையும் நான் பாராட்டுகிறேன்.

பகுத்தாய்ந்து செயல்படுதல் பயனளிக்கும். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

மாசெஸ் அமைப்பின் துவக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சாரம்

10.3.2012 – மாசெஸ் அமைப்பின் துவக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்ச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண் விடுதலை, பெண்ணியம் தொடர்பான பேச்சு, 20 நிமிட காட்சிப்படம், ஓவிய பட்டறை ஆகியவை இடம்பெற்றன. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைப்பாடு கொண்டவர்கள் கலந்து கொண்டு ஒரே மேடையில் பேசினார்கள். கருத்தியல் தளம், மனித உரிமை செயல்பாடு, அரசியல் களம், கல்வியியல் தளம் ஆகியவற்றில் இயங்குபவர்கள் கருத்துரையாற்றினர், இதன் மூலம் பெண் விடுதலை சிந்தனையின் பல்வகை பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள்:

தோழர். ப. சிவகாமி (நிறுவனர், சமூக சமத்துவப் படை கட்சி), பேரா. அ. மார்க்ஸ், பேரா. பத்மினி, பேரா. மோனிக, கோ. சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி)

நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்தவர்கள்:

தோழர்கள் விஸ்வம், ராஜன், வசந்த், ஏழுமலை, ஆனந்த், கிரிஸ்டி, ரோஹினி மணி, விதார்த்தி, மோனிகா, திலிப், சூரஜ், யுகன். கிரன் துளசி என்பவரின் ’பாலுறுப்பு அடையாளம் அழித்த’ புகைப்படம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

மாலை 3 மணி அளவில் ஓவியர்கள் இக்சா மையத்திற்கு வந்து ஓவியங்களை வரையத் துவங்கினர். ஆணாதிக்க கருதூன்றியப் பார்வையிலிருந்து  (male gaze) பெண் உடலை மீட்டு ஒரு புதிய பொருள் கொடுக்கூடிய வகையில் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு ஓவியமும் பெண்ணின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. 5.45 மணி அளவில் துவக்க நிகழ்வு தொடங்கியது. கொற்றவை வரவேற்புரையாற்றினார். மாசெஸ் அமைப்பின் செயல் திட்ட முன் வரைவை வெளிட்டு அமைப்பு துவக்கம் பற்றி அதிகார பூர்வ அறிவிப்பை வைக்குமாறு தோழர் ப. சிவகாமி அவர்களை கேட்டுக்கொண்டார் கொற்றவை. சிவகாமி அவர்கள் வெளியிட, பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் அதை பெற்றுக் கொண்டார். பின்பு பேரா. பத்மினி, பேரா. மோனிகா, கோ. சுகுமாரன் ஆகியோரிடம் செயல் திட்ட பிரதி கொடுக்கப்பட்டது.

கருத்துரை நிகழ்த்துவதற்கு முன் கொற்றவை தயார் செய்திருந்த 20 நிமிட காட்சிப்படம் ஒன்று திரையிடப்பட்டது.  இலக்கியம் தொடங்கி, இன்றைய விளம்பரங்கள், திரைப்பட பாடல்கள் ஆகியவற்றில் நிகழும் பெண் கதாபாத்திர சித்திரங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டிருந்தன. பெண் விடுதலை, மானுட விடுதலை குறித்து முன்னோடிகள் சொல்லியிருப்பது எனும் பகுதியில் பெரியார், அம்பேதகர் ஆகியோரின் பேச்சுக்கள், இவற்றோடு பெண் எழுத்தாளர்கள், உளவியலாளர்கள், புரட்சியாளர்கள் சிலரது குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த காட்சிப்படத்தின் ஊடாக ஒரு பெண்ணியவாதியாக எனக்குள் (கொற்றவை) நெடுநாள் நெருடிக்கொண்டிருந்த ஒரு கேள்வியும், அதன் இறுதில் கோரிக்கைகள் சிலவும் வைக்கப்பட்டன. உழைக்கும் உடல்களை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் வைக்கபட்டிருக்கும் உழைப்பாளர் சிலையில் ஏன் ஒரு பெண் உழைப்பாளி கூட இடம்பெறவில்லை என்பதே அக்கேள்வி. பெண் உழைப்பாளர்களுக்கான சிலை வைக்கப்பட வேண்டும், அது பெண் மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் இனைந்து இருக்கும் சிலையாக இருக்க வேண்டும், மூன்றாம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்தும் சிலையும் வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசப்படும் அளவுக்கு லுக்சம்பர்கிசம் ஏன் பேசப்படுவதில்லை – மார்ச் 5, 2012 சே குவேரா அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய ஒரு பெண் ஆளுமை பிறந்து 141 வருடங்கள் முடிவடைகிறது… அவர்தான் ரோசா லுக்சம்பர்க்.

ஆணாதிக்கம் இயற்கை மீது போர் தொடுப்பது போல் இயற்கையின் பிரதியான பெண்ணிடமும் போர் புரிந்தவாரிருக்கிறது, ஆங்காங்கே சில பெண்கள் சீறிக்கொண்டிருப்பது போய், ஒட்டுமொத்த பெண்ணினமும் பொங்கி எழும் காலம் வெகுதொலைவில் இல்லை எனும் முழக்கத்தோடு அந்த காட்சிப் படம் முடிந்தது.

அதைத் தொடர்ந்து:

முதலில் பேசிய பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் 90களில் நிறப்பிரிகை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் பெண்ணியம், மாற்றுச் சிந்தனைகள், அரசியல் குறித்தெல்லாம் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. வெவ்வேறு அரசியல், கருத்து நிலைப்பாடு கொண்டிருந்தவர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து நிறைய உரையாடல்கள் நிகழும். புதிய சிந்தனைகளை அறிவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. ஆனால் தற்போது அச்சூழல் குறைந்து வருகிறது என்று சொன்னார். மேலும் பெண் உடல், காமம் குறித்து  பெண்கள் எழுதும் போது எத்தகைய எதிர்ப்புகளைப் பெண்கள் சந்திக்க நேர்கிறது என்று சொல்லி, முத்துப்பழனி அவர்களின் நூல் மீது கொண்டுவரப்பட்ட தடை குறித்தும் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ப. சிவகாமி அவர்கள் பேசினார். மூத்த அரசியல் செயல்பாட்டாளராக அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசினார். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதும், அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபறுவதும் அதிகரித்திருக்கிறது என்றார்.  சுமார் ஒன்றரை லட்சம் பெண்களைத் திரட்டி மாநாடு நடத்தியதை குறிப்பிட்டார். படித்த மேல்தட்டுப் பெண்கள் பெண்ணியம், பெண் விடுதலை சிந்தனை என்பதை ‘பாலியல்’ என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கி விடாமல், பெண்களை அரசியல் படுத்துவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களின் விடுதலைக்காக போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்றார். பெண் உடல் மீதான கருத்தாக்கங்களை மாற்றியமைப்பது என்பது அவசியம், அதற்கு ஆண்களிடத்தில் மாற்றம் கொண்டுவருவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களின் மன நிலையைலும் மாற்றம் வரவேண்டும். பாலியல் சுரண்டல் குறித்து அதிக கோஷங்கள் எழுப்ப்பப்பட்டு வருகிறது. அதுவும் தேவைதான், அதற்கப்பால் பெண்களின் தேவை, உரிமைகளை சட்டபூர்வமாக பெருவதற்கு பெண்கள், பெண்ணியவாதிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உதாரணமாக பொது இடங்களில் ஆண்கள் தனியாக உலவுகின்றனர், ஆனால் ஒரு பெண் அப்படி தனியாக நிற்பதோ, சாலையை, சுற்ற வட்டாரத்தை வெறுமனே ரசிப்பதற்கோ சாத்தியமில்லை. அதேபோல் பெண்களின் பெயரில் பாட்டா கோருதல், நிலம் கோருதல், பெண்களுக்கென்று விளையாட்டுத் திடல் வேண்டும் என்று சட்ட ரீதியான கோரிக்கைகளை வைக்கலாம். உடல் ரீதியாக பெண்களைப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால். பெண்கள் இன்று அரசியல் வந்துவிட்டல் 33% என்ன 50% சதவிகிதம் கூட அவர்களால் கைப்பற்ற முடியும் என்றார்.

அதைத் தொடர்ந்து கொற்றவை பெண்கள் அரசியல் பங்கு பெருவதில் குடும்பம் எனும் அமைப்பு ஒத்துழைப்பதில்லை, குறிப்பாக உயிர் குறித்த அச்சம் ஆண்களையே அரசியல்களத்தில் தயக்கம் கொள்ளச் செய்கிறது, பெண்களுக்கு அதைவிட மிகுந்த அச்சறுத்தல்கள் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி பெண்கள் செயல்படவேண்டியது அவசியமாகிறது என்றதோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பிரச்சனைகளை எடுத்துப் போராடும் அமைப்புகளோடு மாசெஸ் அமைப்பு சேர்ந்து பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக முனைவர் பத்மினி பேசினார். பெண்ணியக் கல்வியின் அவசியம் குறித்தும், அது பள்ளி பாடதிட்டத்திலேயே சேர்க்கப்படவேண்டும் என்பது குறித்தும் பேசுமாறு அவரைக் கேட்டிருந்தேன்.  இலக்கியம் தொடங்கி பெண் உடல் மீது என்ன வகையான பிம்பங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, பெண் ஒடுக்குமுறையில் உற்பத்தி முறை, பொருளாதார முறை ஆகியவற்றின் தொடர்பு ஆகியவற்றை பேசியவர், அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருக்கக்கூடிய பெண்ணியக் கல்வியை அரசாங்கம் பாடதிட்டத்தில் சேர்க்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, இருந்தாலும் முயல்வோம். அதைத் தாண்டி இதுபோன்ற முயற்சிகள் மூலம் பெண் உடல் மீதான பிம்பங்களை கலைக்கும் உரையாடல்களை நிகழ்த்தி பெண் எழுத்துக்கான புதிய மொழியை உருவாக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேரா. மோனிகா பேசினார்.  பாலினம், பாலியல் ஆகியவற்றின் வேறுபாடுகளை சுட்டிக்காட்டியவர், பிம்பம் என்பது எவர் அதை உருவாக்குகிறாரோ அவரின் மனம்படியே இருக்கும் என்றார். அந்தவகையில் ஆணாதிக்கமானது ஒவ்வொருவரின் மனதில் பெண் என்பவள் பாலியல் பண்டம் எனும் பிம்பத்தையும், அவளுக்கான தன்மைகள், கடமைகள் யாவை என்றும் ஏற்றிவைத்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சுற்றி ஒரு உடையால் நிகழும் போது அந்த பிம்பங்கள் எப்படி தோற்றுவிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைப்பது எளிதாகிறது என்றார். மேலும் அவர் மாசெஸ் அமைப்பு மூன்று மாதிதிற்கு ஒருமுறை வெளிவரக்கூடிய ஒரு சஞ்சிகையை கொண்டுவர முயலவேண்டும் என்று கூறினார்.

அடுத்ததாக தோழர். கோ. சுகுமாரன் அவர்கள் பேசினார். மனித உரிமை செயல்பாட்டாளரான இவர் காவல் நிலயத்தின் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பத்மினி மற்றும் இதர பெண்கள் வழக்கு விசாரனைகளின் போது எப்படி வேசி என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்று சொன்னதோடு, அவ்வழக்குகள் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்றும் பேசினார். அத்தோடு அ. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய இப்போதை உரையாடலுக்கு சாத்தியமற்ற சூழல் குறித்தும், அதனால் கருத்தியல் தளத்தின் பின்னடைவுகள் குறித்தும் பேசினார்.

கொற்றவை நன்றியுறையாற்றி நிகழ்ச்சியை முடித்தார்.

(அன்றைய நிகழ்ச்சியில் பேசுவதற்காக ஒரு நீண்ட உரையை தயார் செய்து வைத்திருந்தேன். நேரம் காரணமாக அதை பேச முடியவில்லை. வேறொரு தளத்தில் அது பதிவு செய்யப்படும்)

Related Links:

http://www.newsalai.com/2012/03/blog-post_8589.html

https://masessaynotosexism.wordpress.com/events/

 

Women’s Day Program – M.A.S.E.S launch

 

MASES LAUNCH & PAINTING WORKSHOP

INTERNATIONAL WOMEN’S DAY PROGRAM

M.A.S.E.S Launch and Painting Workshop

 Movement against Sexual Exploitation and Sexism

Invites you for

the formal launch

and campaign against EMAMI Fair & Handsome Cream For Men

‘Bailwan’ advertisement that

demeans women, propagate Racist Notion and Gender Bias

Speakers

Ms. P. Sivakami (Political Activist & Writer)

Prof. A. Marx (Human Rights Activist & writer)

Ko. Sugumaran (Secretary, Federation for People’s Rights, Pudhucherry)

Prof. Padmini

Monika (Artist & Writer)

Few more Writers / activists would participate.

Venue: Conference Hall, ICSA Center, Egmore (near Museum)

Date: 10.03.2012 Time: 5pm

 On this occasion a Painting Workshop is organized. Eminent Artists would be participating. Interested People could come attend the workshop and interact with Artists & contribute works for exhibition. The workshop will start from 3 p.m Exhibition will be open at 7p.m.

 மாசெஸ் அமைப்பின் துவக்கம் மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சார நிகழ்வு. தோழர்கள் சிவகாமி, அ. மார்க்ஸ், முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும் சில எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது தவிர… பிரபல ஓவியர்கள் கலந்து கொள்ளும் ஓவியப் பட்டறை நடக்கவிருக்கிறது. அது மாலை 3 மணி அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஓவியர்களை சந்தித்து உரையாடலாம், நிகழ்வுக்கான ஓவியங்களை அங்கு வரைந்து பங்களிக்கலாம்.

for details contact: Kotravai,  kotravaiwrites@gmail.com

MASES formal launch and Women’s day program

Formal Launch of MASES…Lectures on Gender Representation in Media (Speakers yet to be finalized)…. Face Painting, Poster Painting & Photography Collage protesting the EMAMI Advertisement… End of the Meet – Resolution – Emami should withdraw the Advertisement and Request to ‘Creators’ to get sensitive about Gender Representation in their creative ‘Products’ –

Volunteers wanted to Organize the Event, Artist Volunteers wanted & Volunteers who could lend their ‘faces’ to put forth our ‘message’ wanted…also Photographs / Photographers are welcome…concept will be shared shortly..

To make it comfortable for all…. the MASES 1st meet & events has been scheduled on 10th March, 2012. Time: 5pm venue: Conference Hall, ICSA Center, Egmore. Near Museum. Confirmed Speakers as of now Marx Anthonisamy and Sivakami Palanimuthu, Prof. Padmini, Ko. Sugumaran, (Secretary, Federation for People’s rights, pudhuchery)…..few more People are being approached.

Artists who like to participate and contribute paintings during this event pl write to kotravaiwrites@gmail.com

Photographs are also welcome.

மாசெஸ் அமைப்பு துவங்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு… வெகுஜன ஊடங்கங்களில் பாலின அடையாள சித்தரிப்பு குறித்த காட்சி ஒளிபரப்பு மற்றும் உரைகள்….இமாமி விளம்பரத்தை எதிர்க்கும் நூதன எதிர்ப்பு போராட்ட வெளிப்பாடாக முக ஓவியம்… போஸ்டர் ஓவியம், புகைப்பட கொலாஜ்…கூட்ட முடிவு தீர்மானம்… இமாமி விளம்பரம் தன் பாலினவாத விளம்பரத்தை திரும்பப் பெறவேண்டும். வெகுஜன படைப்பாளிகள் பாலின சித்தரிப்பைக் கூறுணர்வோடும், பொறுப்புணர்வோடும் அணுகவேண்டும் எனும் கோரிக்கை…

நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு, உதவிகள் தேவை… ஓவியர்கள், ஓவியஙகள், புகைப்படங்கள் தேவை. தங்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்வதற்கு தன்னார்வலர்கள் தேவை. விரிவான அறிவிப்பு நாளை வெளியிடப்படும்.

இடம்: இக்ஸா மையம்… நாள்: 10 மார்ச்,2012… நேரம்: மாலை 5 மணி.

உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சாளர்கள்:

சிவகாமி பழனிமுத்து (அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர்)

அ. மார்க்ஸ் (மனித உரிமை ஆர்வலர், எழுத்தாளர்)

முனைவர் பத்மினி (பேராசிரியர், பெண்ணிய எழுத்தாளர்)

கோ. சுகுமாரன் (மனித உரிமை மக்கள் கூட்டமைப்பு, புதுச்சேரி)

மேலும் விவரஙகள் அறிய, நிகழ்வில் ஓவியம் வரைய விரும்புவோர் தொடர்பு கொள்க:  kotravaiwrites@gmail.com