Tag Archives: உழைப்புச் சக்தி

மாற்றம் எதையும் கொண்டிராத ஒரு சம்பளத்திட்டம்

மொழிபெயர்ப்பு கட்டுரை

A salary plan that changes nothing

MAYA JOHN

தமிழாக்கம் – – வெங்கடேசன் நீலகிருஷ்ணன்

மனைவி தன் கணவனிடம் வீட்டுப் பராமரிப்புச் செலவிற்கான ஊதியத்தைக் கோருவதற்குப் பதில் அரசானது பெண்களை உண்மையிலேயே மேம்படுத்தும் வகையில் வீட்டிற்கு வெளியே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திட வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் அழைக்கப்பட்ட சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத் ஒரு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் கணவனின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மனைவி வீட்டில் ஆற்றும் பணிகளை ஈடு செய்யும் வகையில் அவளது வங்கிக்கணக்கில் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும் என்றிருக்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி கணவனின் இந்த குறிப்பிட்ட வருமானப் பகிர்வுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலு, வீட்டினைச் சிறந்தமுறையில் பராமரிப்பதற்கும் மிக முக்கியமாக அவளின் தனிப்பட்ட சொந்த நுகர்வுகளுக்குச் செலவிடுவதற்கும் மிகத்தேவையான வருமான ஆதாரத்தை பெண்களுக்கு அளிக்கிறது எனவும் கூறியிருக்கிறார். பின்னர் அளிக்கப்பட்ட ஒரு விளக்கத்தில் இதனை மனைவி தன் வீட்டில் செய்யும் அனைத்துவித பணிகளுக்கான சம்பளம் அல்ல ’’வெகுமானம்’’ என அடையாளப்படுத்தியிருக்கிறார்.

இந்த வரைவானது அவ்வளவு தூரம் மக்களைச் சென்றடையவில்லை; குறிப்பாக அதிக சம்பளம் ஈட்டும் பெண்கள் இந்த வரைவினை தனிமனித எல்லைக்குள் தேவையில்லாத குறுக்கீடாகவே காண்கின்றனர்; அதாவது குடும்ப உறவுகளுக்குள் தேவையில்லாத குறுக்கீடாக கருதுகின்றனர். இதைப்போல் பெரும்பாலான பெண்கள் அரசின் இந்த குறுக்கீட்டை, பெண்கள் சமையலறைக்கு நடக்கும் ஒவ்வொரு தடவைக்கும், குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு, வீடு துடைப்பதற்கு இன்னும் பிற வேலைகளுக்குச் சம்பளம் பெறும் ஒரு ’’மதிப்புமிக்க வேலைக்காரியின்’’ நிலைக்கு இல்லத்தரசியின் நிலையைத் தாழ்த்துவதாக உணர்கின்றனர். வருத்தமளிக்கும் விதமாக, வணிகமயமாக்கப்பட்டுவிட்ட கணவன்-மனைவி உறவைப் பற்றிய எல்லா கூச்சல்களுக்கும் நகைப்புகளுக்கும் மத்தியில் தன் குடும்பத்தைத் தாங்கி நிற்க வேண்டி இடுப்பொடிய வேலை செய்யும் பெண்களுக்கான அங்கீகாரம் ஓரங்கட்டப்பட்டு விட்டது.

உண்மையில் நாமும்கூட இந்த வரைவின் வெளிப்படையான உண்மையற்ற

தன்மையைக் காணத்தவறிவிட்டோம்உதாரணத்திற்கு இதுபோன்ற சட்டம் அமலாக்கப்பட்டால் பெண்கள் தங்கள் கணவரைச் சாராமல் ஒரு வருவாய் ஆதாரத்தைப் பெறமுடியாதபடி போய்விடும். பதிலாக, பெண் தன் கணவனின் சம்பாத்தியத்தையும் அவனது பணிநிலையையும் சார்ந்திருப்பதைத் தொடரும்படி ஆகிவிடும். அதையொட்டி அவளது நிதி ஆதாரத்திற்கு குடும்ப அமைப்பையே சார்ந்திருக்கும்படியாகும். உண்மையில் இந்த வரைவில் உள்ள 

பிரச்சினை,  இதுதேவையற்றதோ  இழிவுபடுத்தும்   வகையில் இருப்பதோ அல்ல;

வீட்டுப்பராமரிப்பு  பணி  மற்றும்  பெண்களின்  உழைப்பைச்  சுற்றிய  

பொருளாதாரத்தைப்  பற்றி  தவறாகப்  புரிந்துகொண்டு  அறிவிக்கப்பட்டதே  

இதிலுள்ளப்  பிரச்சினை.  பெண் தன் குடும்பத்தில் அவளது நிலையை மேம்படுத்துவதிலும் நாட்டின் பொருளாதாரத்தில் அவளது பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் இந்திய அரசு தீவிரமாக உள்ளதா என்பதும் இப்பொழுது கேள்விக்குரியதாவது தெளிவு.

வரலாற்றுநிகழ்வு

பெண்களின் வீட்டு உழைப்பிற்குரிய பொருளாதார மதிப்பு வேண்டும் என்ற விவாதம் நீண்டகாலமாக நிலவிவருவதாகும். சர்வதேசப் பெண்கள் இயக்கம் இதுபற்றி தொடர்ச்சியான விவாதம் மேற்கொண்டு பல முக்கிய முடிவுகளை எட்டியிருக்கிறது. அப்படியான முன்மொழிந்த முடிவுகளுடன் பெரும்பான்மை சமூகம் தீவிரமாக ஒன்றுபடுவதற்கு இதுவே நேரமாகும்.

முதற்கண், ஒரு சமூகமாக அன்றாட வேலைகளிலிருக்கும் மிகக்கடுமையான மனச் சோர்வூட்டும் வேலைப்பளுவை நாம் ஏற்கக்கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் கணவன் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யும் வேலையை பெரும்பாலான பெண்கள் உணர்வது போல் நன்றிபகிர்விற்கிடமில்லாத பிரதிபலன் பார்க்காத சுமை எனக் கருதி, பராமரிப்பு மற்றும் பேணிவளர்த்தல் என்ற பெயரில் மறைக்கப்பட்டுவிடக்கூடாது. சில பெண்களுக்கு அவர்களுடைய பணிப்பெண் தேவையானவற்றைச் செய்துவிடுகின்றபடியால் அவர்கள் அன்றாடம் சமையலறையில் நுழைவதில்லை என்பதற்காக எந்த உதவியுமற்ற சராசரி பெண் தினந்தவறாமல் சமையலறையில் கிடந்து உழல்வதை நாம் விட்டுவிடமுடியாது. இங்கே பணி ஓய்வோ, விடுமுறையோ சாத்தியமே இல்லை.

இரண்டாவதாக, பெண்களின் வீட்டு உழைப்பிற்கு பழங்காலத்திலிருந்தே மதிப்பளிக்கப்படாமலிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். இது தொழிற்துறை சமூகத்தின் தோற்றத்தின் விளைவாக நேர்ந்தது. வீடு மற்று பணியிடம் என பிரிக்கப்பட்டபின் பெண்களின் வீட்டுவேலைக்கான மதிப்பை இழந்த அதே நேரம் ஆண்களின் வெளி உழைப்பிற்கு ஊதியம் தருவிக்கப்பட்டது.

மூன்றாவதாக, பெண்களின் வீட்டு உழைப்புகளான துணிதுவைப்பது, துடைப்பது, சமைப்பது, குழந்தை வளர்ப்பு முதலிய வேலைகளுக்குப் பொருளாதார மதிப்பளிப்பதில் பலர் வருத்தம் கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற வேலைகளுக்கு சந்தையில் ஏற்கனவே ஒரு மதிப்பு அளிக்கப்பட்டிருப்பதை ஒரு சமூகமாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரும்பாலான நடுத்தர வர்க்கக் குடும்பங்களும்கூட இதுபோன்ற பணிகளுக்கு பணிப்பெண்களை அமர்த்திக்கொள்கின்றனர் மேலும் குழந்தைகளை விளையாட்டுக்கல்வி மையங்கள், குழந்தைகள் காப்பகம் இவற்றில் சேர்த்து தங்கள் பணிச்சுமையைக் குறைத்துக் கொள்கின்றனர். நான்காவதாக பெண்ணின் வீட்டு உழைப்புச் சக்தி பொருளாதார கணக்கீட்டில் கண்டிப்பாக கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால் நாட்டிற்கு தேவையான உழைப்புச் சக்திக்கு தனது மறு உற்பத்தி சக்தியின் மூலம் பங்களிப்பதும் பெண்ணே. உண்மையில் ஒரு பெண்ணின் உழைப்புச் சக்தி குறைத்து மதிப்பிடப்படுவதால்தான், ஆணின் கூலியும் குறைவாக இருக்கிறது. உதாரணத்திற்கு எல்லா குடும்பங்களிலும் துவைப்பது, சமைப்பது, பெருக்குவது முதலான வேலைகளை அன்றாடம் பணம் கொடுத்துப் பெறுபனவாய் இருந்தால்(பெண்கள் இதைப்போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கும் பட்சத்தில்) ஒவ்வொரு குடும்பத்திலும் வருவாய் ஈட்டுபவர்(ள்) இதற்காக ஒரு பெரும் தொகையை வெளியில் செலவிட வேண்டியிருக்கும்.

தீர்வு

இதுவே வீட்டுவேலை செய்யும் பெண்கள் சம்பளம் கிடைக்கப்பெறாமலிருப்பதற்கான யதார்த்தமாக இருக்க, இதற்கான சரியான தீர்வு எங்கிருக்கிறது? தீர்வானது, வரையறுக்கப்பட்ட ஊதியத்தினை கணவன் மனைவிக்கிடையில் பகிர்ந்தளிப்பதில் இருக்கிறதா? அல்லது  தேசிய  வருமானத்தை  பகிர்ந்தளித்து  குடும்ப  தனிநபர் 

வருமானத்தை  உயர்த்துவதன்  வாயிலாக  குடும்ப  நுகர்வில் பெண்களின்  பங்கை 

மேம்படுத்திக் கொள்வதில்  உள்ளதா? முக்கியமாக, பெண்களின் வீட்டு உழைப்பிற்கான மதிப்பினைக்கோரி அழுத்தம் கொடுக்கும்போது மொத்த குடும்ப வருமானத்தை அதிகரிக்காமல், ஊதியமற்ற வீட்டுவேலைகளுக்கு கொடுக்கப்படும் சன்மானம் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதென பெண்கள் முற்போக்கு இயக்கத்தினர் எப்பொழுதும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆக, ஊதியமற்ற வீட்டு உழைப்பிற்கான கேள்வியில் மிக முக்கியமான முடிவாக எட்டியிருப்பது, ’’அரசாங்கம் இதற்கு ஊதியம் தரவேண்டும்’’ என்பதாகும். குறிப்பாக, பெண்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், சிறப்பு நிதி வழங்கல், மானியவிலையில் வீட்டு உபயோகப்பொருட்கள், இலவச சுகாதாரப் பராமரிப்பு முதலியவற்றைச் செய்ய வேண்டும். இவ்வழியில் பெண்கள் எதையும் சார்ந்திராமல் ஒரு வருவாய் ஆதாரத்தைப் பெறுவதுடன் அவர்களது தேவைகளுக்குகுடும்ப அமைப்பைச் சாராமல் சுயமாக இருந்துகொள்ள முடியும். பாலியல் அடிப்படையில் வேலைப் பிரிவினை, அதன் தொடர்ச்சியாக பெண்கள் வீட்டிலேயே அடைக்கப்பட்டுக் கிடப்பது என்பதும் குறையும்.

இந்த வரைவானது இதுநாள் வரை ஏன் பரவலான கவனத்தைப் பெறவில்லையெனில், இது நீண்டகால அடிப்படியிலான தீர்வான பெண்களின் வேலைவாய்ப்பைக் காட்டிலும் அவர்களது வீட்டுவேலைக்கான ஊதியத்தைப் பற்றி பேசுவதாலேயாகும். உண்மையில், முன்மொழியப்பட்ட வரைவானது அமல்படுத்தப்படவல்லதா? தேவையுள்ளதா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அரசாங்கம் இதற்கேற்றவகையில் நிர்வாக எந்திரத்தை நிறுவுமா? எப்படி பெண்களின் வீட்டுவேலைகள் மதிப்பிட்டுக் கணக்கிடப்படும்? எத்தனை பணியாட்கள் மனைவிக்கு ஈடாக முடியும்? அவளால் பேணப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அவளது கூடுதலான ஊதியத்தை நிர்ணயிக்குமா? கணவனில்லாத விதவைப்  பெண்கள் பணத்தைப் பெற என்ன வழி?

அரசாங்கம்தன்கடமையிலிருந்துவிலகல்  எப்படியிருப்பினும்பிரச்சினைகளுடனான  சட்டத்தை 

அமல்படுத்துவது  வெகுதொலைவில்  உள்ளது.

 நேர்மையான  நிர்வாகம்  நிலவுமானால்  சட்டத்தினை  எப்பொழுதும்  சரியானபடி    

அமைக்கமுடியும்.   அமைச்சகத்தின் முயற்சியில் உள்ள உண்மையான பிரச்சினை என்னவெனில் எல்லாம் காரணத்துடன் இயக்கப்படுவதாகும். நாட்டின் பொருளதாரத் தை நிலைத்திருக்கச் செய்வதில் தினமும் பங்குபெறும் பெண்களுக்குக் கடமைப்பட்டிருக்கிற இந்திய அரசாங்கம் தன் பொறுப்பிலிருந்து விலகுவதால் இது விமர்சனத்திற்குள்ளாக்கப்படவேண்டும். உண்மையில், இந்த வரைவானது முறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்படுமாயின் இது பெண்களின் வீட்டு உழைப்பினை குறைத்து மதிப்பிட்டு குறைவான ஊதியத்தையே வழங்கும்.

இன்னும் தெளிவாக, நாம் இல்லத்தரசிகள் இலவசமாக செய்யும் அனைத்துவிதமான வேலைகளுக்கும் அமர்ந்து மிகச் சரியாகக் கணக்கிட்டோமானால் வரும் தொகையானது எந்தவகையிலும் கணவனின் வருமானத்தின் ஒரு சிறுபகுதியைக் கொண்டு ஈடுசெய்துவிட முடியாததாகவே இருக்கும். மேலும் வேறுபட்டிருக்கும் குடும்ப வருமானங்களில், இதுபோன்றதொரு சட்டம், ஒரே மாதிரியான ஒரே அளவிலான வீட்டு வேலைகளுக்குப் பெண்கள் வேறுபட்ட சன்மானத்தைப் பெறுவதற்கு வழிவகுக்கும். சராசரி அல்லது நடுத்தர வர்க்கக் குடும்பச் சூழலில், குடும்ப வருமானம் ரூபாய் 2000 முதல் 10000 வரை இருக்கும் குடும்பங்களில், இந்தமாதிரியான சட்டம் ஒரு அற்பத்தொகையினை அவர்கள் இடுப்பொடிந்து செய்யும் வேலையின் மதிப்பாக ஒதுக்கும். குடும்ப வருவாய் அப்படியே இருக்க, இந்த அற்பத்தொகை பெண்ணை மேம்படுத்திவிடாது. குடும்பவருவாயில் எந்த வளர்ச்சியுமின்றி, இம்மாதிரியான குடும்பங்கள் தங்கள் நுகர்வுமுறையை மாற்றியமைத்துக் கொள்ளவோ, வீட்டுவேலையின் இயல்பை மாற்றிக் கொண்டு வீட்டில் பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பதற்குப்பதில் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் விதம் வேறு வேலைகளைச் செய்யவோ முடியாது.

இறுதியாக நாம் பார்ப்பது எவ்வாறு பெண்களின் வீட்டு வேலைகளைக் குறைத்து அதன்மூலம் அவர்களும் கூட வீட்டிற்கு அப்பால் வருமானம் ஈட்டி, குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கும் குடும்பம் மற்றும் பொது விவகாரங்களில் சிறப்பானதொரு நிலையை அடைவதுமாகும். அதிமான வேலைவாய்ப்புகள் அரசாங்கத்தால் உருவாக்கப்படுதல், அனைத்துப் பணியிடங்களிலும் குழந்தைகள் காப்பகத்தைப் பரவலாகத் தோற்றுவித்தல், மானியவிலையில் வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கல், குழந்தைப் பிறப்பிற்குப் பின்னான தடையிலாத

பதவி உயர்வு / பேறுகால விடுப்பு  முதலானவை இந்த நேரத்திற்குரிய தேவைகளாகும். நேரடியான வேலை வாய்ப்பானது பொருளாதாரச் சுதந்திரம் கொண்ட பெண்களை உருவாக்கும். அதேநேரம், பின்னதை வழங்குவதன் வாயிலாக பெண்கள் குடும்ப வாழ்வைத் தொடங்கினாலும் வேலையிலேயே தொடர்ந்திருக்க உதவும்.

ஒரு சராசரி பெண்ணானவள் மிகக்கடினமான மனச்சோர்வூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து சுதந்திரமாக்கப்பட வேண்டுமெனில்  இந்திய அரசு அவளை வீட்டிற்கு வெளியே பொருளாதாரப் பங்களிப்பில் ஈடுபடுவதற்கான திட்டவட்டமான சூழலை உருவாக்கி அதன் மூலம் ஊதியமளிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

மூலம்: http://www.thehindu.c

om/opinion/lead/a-salary-plan-that-changes-nothing/article3951975.ece