Tag Archives: காதல் கொலை

காதலர்களுக்கு அச்சுறுத்தல்

மகள் காதல் திருமணம் செய்ததால் சமூக நெருக்கடியினாலோ அல்லது கலாச்சார மதிப்பீட்டின் காரணமாகவோ தவறான புரிதலின் அடிப்படையில் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குறிய விஷயமே.

இந்த கொடுமை நடந்ததற்கு நாம் அந்தப் பென்ணையோ அல்லது அந்தக் குடும்பத்தையோ குறை சொல்வதை விட காதல் திருமணத்திற்கு எதிராக இருக்கும் கலாச்சார மதிப்பீடுகள், சாதீய மதிப்பீடுகளைத்தான் களைய வேண்டியிருக்கிறது.

ஆனால் இச்சம்பவத்தை ஒட்டி அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த உறவினரை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அதுவும் மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அநீதி.

தங்களுக்கு சிக்கல் வாராத வகையிலும், வயது காரணங்களால் (major) வழக்கு தள்ளுபடியாகமலும் இருக்க இது ஒரு புது உத்தியாக இருக்கிறது. தற்கொலைக்கு தூண்டுதல் என்பது ஒரு வலுவான வழக்காகும்.

இதன் மூலம் காதலர்களுக்கு ஆதரவற்ற சூழலையும், காதலர்களுக்கு உதவி புரிபவர்களை அச்சுறுத்துவதுமான முயற்சி இது.

ஒருவேளை இக்காதலர்கள் காவல்துறையில் தஞ்சமடைந்து, காவல்துறையினர் திருமணம் செய்து வைத்து இப்படி நடந்திருந்தால், காவல்துறையினரை இப்படி கைது செய்திருப்பார்களா?

என்னவிதமான அடக்குமுறை இது?

சாதியம் – மற்றுமொரு கொலை

தர்மபுரி சம்பவத்தின் சூடு தணியும் முன்பே, அடுத்த பிரச்னை விழுப்புரத்தில் ஆரம்பம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ளது பள்ளிநேலியனூர். அங்கு கடந்த 10-ம் தேதி கோகிலா என்ற பெண் இறந்துவிட, ‘அவரது பெற்றோரே அடித்துக் கொன்று விட்டனர். காரணம் சாதி’ என்று அவரது கணவர் போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார்..

கட்டட வேலை செய்து வரும் கார்த்திகேயனை சந்தித்தோம். ”நானும், கோகிலாவும் எட்டு வருடங்களுக்கு முன் கண்டமங்கலம் வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அப்போதே எங்களுக்குள் காதல் அரும்பியது. நாங்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு பிரிவினர். எங்கள் திருமணத்துக்குச் சம்மதம் கிடைக்காது என்பதால், கடந்த 1.12.2010-ல் ரகசியமாக கடலூரில் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர் சம்மதம் கிடைக்கும் வரை, அவரவர் வீட்டிலேயே இருப்போம் என்று முடிவு எடுத்தோம். கோகிலா மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்ததால், அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்.

எப்படியோ எங்களது விவகாரம் கோகிலாவின் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. அதனால், உடனே அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து மாப்பிள்ளை பார்த்தனர். கோகிலா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, அவளது மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். திடீரென கடந்த 8-ம் தேதி, ‘உன் காதலனுடன் சேர்த்து வைக்கிறோம்’ என்று அழைத்து வந்திருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் அவளை ஒரு ரூமில் அடைத்து வைத்து, தற்கொலை செய்துகொள்ளச் சொல்லி மிரட்டியுள்ளனர். இதையெல்லாம் கோகிலா எனக்கு ரகசியமாக போன் செய்து சொன்னாள். சம்பவம் நடந்த 9-ம் தேதி இரவு நான் கோகிலாவுக்கு போன் செய்தேன். ஆனால், ஸ்விட்ச்ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. காலையில், கோகிலா இறந்த செய்திதான் எனக்குக் கிடைத்தது.

கோகிலாவை அவளது பெற்றோர்தான் அடித்துக் கொன்று விட்டனர். உடனே, நான் கண்டமங்கலம் போலீஸில் புகார் செய்தேன். விசாரணை நடத்தப்போன இன்ஸ்பெக்டர், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு கோகிலாவின் உடலை எடுத்துச் சென்று விடாமல் தடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இப்போது, புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி என்னையும் மிரட்டுகிறார்கள். புகாரை திரும்ப வாங்கும் வரை நிம்மதியாக வாழ முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆனால், நான் அவர்களுக்குப் பயப்படுவதாக இல்லை. என் மனை விக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி பெறாமல் விட மாட்டேன்” என்றார்.

கோகிலாவின் தந்தை நாகராஜனிடம் பேசினோம். ”அவங்க திருமணம் செய்துக்கிட்டதா சொல்றாங்க. ஆனா, அது எங்களுக்குத் தெரியாது. நான் அவளிடம், ‘யாரையாவது காதலிச்சு இருந்தா, வந்து பொண்ணு பாக்கச் சொல்லு’னு கேட்டேன். அப்பவும் அவ எதுவும் சொல்லலை. பிள்ளையார்குப்பத்தில் மாப்பிள்ளை பார்த்தேன். அவனைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னா. அப்புறம் ஒரு நாள் திடீர்னு எனக்குக் கல்யாணம் வேணாம்னு சொன்னா. ஏன்னு கேட்டதற்கு, ‘எனக்கு தைராய்டு நோய் இருக்கிறதால அடிக்கடி நெஞ்சு அடைக்குது’னு காரணம் சொன்னா. அந்த நோயால்தான் அவ செத்துட்டா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே திருமணம் செஞ்சதா சொல்றவன், இத்தனை நாளும் பொண்டாட்டியை ஏன் தனியே விட்டிருந்தான். இப்போ, நான் கொலை செஞ்சதா சொல்லி புகார் கொடுத்து எங்களையும் அசிங்கப்படுத்துறான்” என்று அழுதார்.

கோகிலாவுடன் வேலை செய்த சிலரிடம் பேசினோம். ”கோகிலா காதலித்தது உண்மைதான். கோகிலாவை கார்த்திகேயன்தான் வண்டியில் அழைத்துப் போவார். ‘நாங்க திருமணம் செஞ்சிக்கிட்டோம். எங்க திருமணத்தை அப்பாவிடம் சொல்லப் போறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, சொன்னது இல்லை. கேட்டா, ‘எங்க அப்பா கௌரவமா வாழ்ந்துக்கிட்டு இருக்கார். என்னால் எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாது’னு சொல்வா. அதேநேரம் அவ தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்குக் கோழையான பொண்ணும் கிடையாது” என்றனர் சோகத்துடன்.

கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் பேசினோம். ”உடலை எடுக்க விடாமல் கோகிலாவின் குடும்பத்தினர் எங்களைத் தடுத்தது உண்மைதான்(?). நாங்கள் செய்த விசாரணையில் அந்தப் பெண் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்கொலையை மறைத்தது தவறு. அதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுப்போம். அந்தப் பையனின் உறவினர்கள் அதே ஊரில்தான் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. கார்த்திகேயனுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.