Tag Archives: ஜில்லட் விளம்பரம்

ஜில்லெட்டின் படை வீரர்கள்

no-68481_640

சமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.

அந்த விளம்பரம் என்ன சொல்கிறது:

ஆங்கிலத்தில்:

Soldiers Wanted not to guard the borders

Not to go to war

But to

Support the most important Battle of the Nation

To stand up for women

Because when you respect women

You respect your nation

Support the Movement

Gillette salutes the Soldier in You

தமிழில்:

// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)

பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்?

அது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேசத்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே  ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா?

பெண்ணுக்கு மதிப்பளிப்பதென்றால் என்ன?  பெண் விடுதலை என்றால் என்ன? பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று  மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா?

ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).

அடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள்.  சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை.  இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.

(பெண்கள் வில்லன்கள்)

தெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.

பெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன? முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா?

பெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்?

,

குறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….

எங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys!!)…

பெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….

 

Related Links:

http://facttruth.wordpress.com/2010/05/28/victimization-of-women-officers-in-indian-army/

http://www.huffingtonpost.com/2012/12/27/india-gang-rape-suicide_n_2370859.html

http://indianmilitarynews.wordpress.com/tag/sexual-harassment/

http://www.firstpost.com/india/code-of-injustice-silencing-sexual-assaults-in-the-military-660748.html

http://www.ndtv.com/article/cities/court-martialled-female-iaf-officer-commits-suicide-132943

http://syaanand.blogspot.in/2012/07/islam-act-matter.html

தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !