Tag Archives: #Karlliebknecht

புரட்சியாளரும், கோட்பாட்டாளரும், தியாகியுமான ரோசா லுக்சம்பர்க்கை நினைவுகூர்தல்

96 வருடங்களுக்கு முன்பு பெர்லினில்: ரோசா லுக்சம்பர்க் கொல்லப்பட்ட தினம் இன்று.

rosa

96 வருடங்களுக்கு முன்பு, 15 ஜனவரி 1919ஆம் ஆண்டு, சோஷலிஸ்ட் அமைச்சர் குஸ்தவ் நோஸ்கேவின் தலைமையிலான வலதுசாரிப் படையினரால் ரோசா லுக்சம்பர்க் கைது செய்யப்பட்டு, விசாரனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.  ரோசா லுக்சமபர்க்கின் சிந்தனையும் வாழ்வும் இன்றளவிலும் போற்றப்படுகின்றன.

ருஷிய போலந்தின் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1873ஆம் ஆண்டு பிறந்த ரோசா லுக்சம்பர்க் மேற்படிப்பு முடித்தவுடன் சுவிட்ஜர்லாந்திற்கு குடியேறினார்.  ஜூரிச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மாணவியாக இருக்கும்பொழுதே, 1897ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பே ரோசா, லியோ ஜொகிச்செஸ், அடால்ஃப் வார்ஸாவ்ஸ்கி மற்றும் யூலியன் மார்ச்லாவ்ஸ்கி ஆகியோருடன் இணைந்து போலந்து இராஜ்ஜியத்தின் சமூக ஜனநாயகம் என்னும் அமைப்பை உருவாக்கினார் (Social Democracy of the Kingdom of Poland (SDKP, later SDKPiL).

அதன் தொடர்ச்சியாக, அவர் பெர்லினுக்கு சென்றார். அங்கு அவர் அப்போதைய காலகட்டத்தில் உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சோஷலிச அமைப்பான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இணைந்தார். பொருளாதாரம், தேசியம், ஏகாதிபத்தியம், போர், சோஷலிசம் மற்றும் ஜனநாயகம் பற்றிய தனது எழுத்துக்கள் மூலம் எஸ்.பி.டியின் இடதுசாரிப் பிரிவில் தீப்பொறி பறக்கும் பேச்சாளராக, பத்திரிகையாளராக, கோட்பாட்டாளராக முக்கியத்துவம் பெற்றார்.

எஸ்.பி.டி கட்சிப் பள்ளியில் லுக்சம்பர்க் போதித்தார், கட்சி சஞ்சிகையில் எழுதினார். மேலும், 1914ஆம் வருடத்திற்கு முன்பான சோஷலிஸ்ட் அகிலத்திலும் போலந்து மற்றும் ஜெர்மனிக்கான பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். 1905ஆம் ஆண்டில் தன் சொந்த மண்ணில் புரட்சி வெடித்தபோது, ரோசா வார்சாவிற்குத் திரும்பினார், தன்னுடைய புரட்சிகர செயல்பாடுகளுக்காக ஜெர்மனிக்கு நாடுகடத்தப்படும் முன்னர் சிறைவாசத்திற்குள்ளானார்.

1914கை தொடர்ந்த வருடங்களில், நெருங்கிவரும் ஏகாதிபத்திய நெருக்கட்டி குறித்தும், பேரழிவை வழங்கப்போகும் போர்கள் குறித்து தொடர்ந்து எச்சரித்தவண்னம் இருந்தார். தமக்குள்ளாகவே ஒருவருக்கெதிராக ஒருவர் ஆயுதமேந்த மாட்டோம் என்று முழுங்குமாறு ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914 ஆகஸ்ட் மாதத்தில் போர் வெடித்தபோது, போருக்கெதிராக நீண்டகாலம் குரல் கொடுத்து வந்தவர்களும், எல்லாவகையிலும் போர் எதிர்ப்பையே வலியுறுத்துவோம் என்று சொல்லி வந்த ஐரோப்பிய சோஷலிசக் கட்சியானது உடைந்தது. மேலும், போரில் அது தத்தமது அரசாங்கத்தை ஆதரிக்கவும் செய்தது. ரீஷ்டாகில் போர் வரவுக்கு ஆதரவாக எஸ்.பி.டி கட்சி ஓட்டு போட்டபோது (அதன் மூலம் கெய்சர் அரசாங்கத்திற்கும், போருக்கும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்) தன் வாழ்நாளிலேயே ரோசாலுக்சம்பர்க்கிற்கு முதன்முதலாக தற்கொலை எண்ணம் மேலோங்கியது.

ஜெர்மன் சோஷலிஸ்டுகள் சிலருடன் இணைந்து போர் எதிர்ப்புக்கான சோஷலிஸக் குழுவை நிறுவினார் ரோசா. ரோமானிய புரட்சிகர அடிமையின் பெயரை நினைவூட்டும் வகையில் அக்குழுவிற்கு ‘ஸ்பார்ட்டக்கஸ் லீக்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அவருடைய போர் எதிர்ப்பு செயல்பாடுகளால் வெகு விரைவிலேயே கைது செய்யப்பட்டார். நான்கு வருடப் போரின் பெரும்பாலான நாட்களை ரோசா கெய்சர் சிறையிலேயே கழித்தார். சிறையிலிருந்தபடியே, இரகசிய அமைப்பான ஸ்பார்ட்டகஸ் லீகை வழிநடத்தியபடி, போர் எதிர்ப்புக்கான ‘யுனியுஸ் துண்டறிக்கை’ மற்றும் இதர படைப்புகளையும் எழுதினார். அவருடைய சொந்தக் கட்சியான எஸ்.பி.டியே அவரை கைவிட்டது. அத்தோடு ரோசாவையும், இதர போர் எதிர்ப்பு செயல்பாட்டாளர்களையும் வெளியேற்றியது.

1918ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் மாலுமிகள் கிளர்ச்சி வெடித்து, ஜெர்மனியின் நவம்பர் புரட்சி தொடங்கியது.  கெய்சர் பதவியிறக்கப்பட்டார், தொழிலாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மன்றம் உருவாக்கப்பட்டு, எஸ்.பி.டியின் தலைமையிலான ஒரு புதிய அரசாங்கம் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றியது. சிறையிலிருந்து ரோசா லுக்சம்பர்க் விடுவிக்கப்பட்டார்.  பெர்லினுக்குத் திரும்பிய அவர் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய இரவில், தம் சோஷலிஸ்ட் கூட்டாளிகளுடன் இணைந்து ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) உருவாக்கினார்.

1919, ஜனவரி 5ஆம் தேதியன்று, எஸ்.பி.டி அரசாங்கத்திற்கும் (ஃப்ரெட்ரிக் எபர்ட் மற்றும் பிலிப் ஷிடெமன் தலைமையிலான) அதிதீவிர சோஷலிஸ்ட் கட்சிகளான சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி (USPD) மற்றும் கே.பி.டி கட்சியினருக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. நவம்பர் புரட்சியின்போது பணியமர்த்தப்பட்ட யு.எஸ்.பிடியின் உறுப்பினரான, பெர்லினின் முதன்மை காவலதிகாரி எமில் எயிக்கார்னை அரசாங்கம் பதவியிறக்கியதே அம்மோதலுக்கான காரணம். அதனை எதிர்க்கும் வகையில், யு.எஸ்.பி.டி, கே.பி.டி மற்றும் புரட்சிகர மேலாளர் பிரதிநிதிகளின் கூட்டணியான ‘புரட்சிகர கமிட்டி’யின் தலைமையில் நகரெங்கும் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் வெடித்தன.

புரட்சிகர கமிட்டியின் தலைவர்கள் விவாதத்தித்துக்கொண்டும், தயங்கிக்கொண்டும், பிளவுபட்டுக் கொண்டும் இருந்த வேளையில் மத்திய பெர்லினின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் நாளிதழ் வெளியாகும் மாவட்டங்களை ஆயுதமேந்திய தொழிலாளர்களும், இராணுவ வீரர்களும் ஆக்கிரமித்தனர். அதேவேளை, அரசாங்கமோ ‘சுதந்திர காவலர்கள்’ (Freikorps – பிற்போக்கு அதிகாரிகளின் தலைமையிலான இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்) எனும் படைப்பிரிவைக் கொண்டு அரசாங்கம் முன்னேறியது. ‘புரட்சியின் வேட்டையன்’ என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட இராணுவ மந்திரியான குஸ்தவ் நோஸ்கே அவர்களை நகரத்திற்கு வெளியே படையமர்த்தினார்.

அரசாங்கம் அழைத்தது போல் ‘ஸ்பார்ட்டகஸ் எழுச்சி’யானது, சுதந்திர காவலர்களின் காட்டுமிராண்டி நடவடிக்கைகளைக் கொண்டு எண்ணற்ற ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் மற்றும் சிவில் தொழிலாளர்களை கொன்று குவித்ததன் மூலம் ஒடுக்கப்பட்டது. முன்னணி கம்யூனிஸ்டுகள், இடதுசாரி சோஷலிஸ்டுகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டனர்.

15 ஜனவரி அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கே.பி.டியின் சக தலைவருமான கார்ல் லீப்னெஹ்ட்டும் பெர்லினின் மத்திய வர்க்கப் புறநகர் பகுதியில் இருந்த ஒருவீட்டிலிருந்து கார்டே-கவாலெரி-ஷியுட்ஜென் பிரிவு சுதந்திர காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரனைக்காக அவர்கள் ஹோட்டல் ஏடெனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். பெர்லினின் டியெர்கார்ட்டென் என்னும் இடத்தில் அவர்களது உடல்கள் வீசியெறியப்பட்டன.karl-liebknecht-6

கொலைகாரர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை.

1919ஆம் ஆண்டிலிருந்து (நாஜிகளின் ஆட்சி காலத்தில் கல்லறைகள் நாசப்படுத்தப்பட்டிருந்த காலம் தவிர)  ரோசா லுக்சம்பர்க் மற்றும் லீப்னெஹ்ட்டின் நினைவு நாளன்று ஃப்ரீட்ரிக்ஃபெல்டே கல்லறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி அப்புரட்சியாளர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.Berlin-Friedrichsfelde, Einweihung Gedenkstätte

ரோசா லுக்சம்பர்க்கின் படைப்புகள் மற்றும் கடிதங்கள் ஆகியவை மார்க்சிஸ்ட் இணைய காப்பகத்தில் at: http://marxists.org/archive/luxemburg/index.htm இலவசமாக படிக்கக் கிடைக்கின்றன.

download

 Source: https://rosaluxemburgblog.wordpress.com/2015/01/15/96-years/ 

Pics – http://thecharnelhouse.org/2013/07/10/mies-memorial-to-rosa-luxemburg-and-karl-liebknecht-1926/berlin-friedrichsfelde-einweihung-gedenkstatte/

http://www.quotessays.com/images/karl-liebknecht-6.jpg