வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கு சம்பளம்


பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கான வரைவு சட்டம் ஒன்றை தயாரித்து வருகிறது. வீட்டுப் பராமரிப்பைச் செய்யும் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 10 முதல் 20 சதவிகிதத்தை மனைவியின் பெயரில் வங்கியில் சம்பளமாகப் போடவேண்டும் என்பதே அப்பரிந்துரை.  இந்த வரைவு பாராளுமன்றத்தில் இன்னும் 6 மாத காலத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கன மத்திய அமைச்சர் கிருஷ்னா தீரத் தெரிவித்துள்ளார்.

மேற்சொன்ன இந்த வரைவை மேலோட்டமாகப் பார்த்தால் பெண்களுக்கு நலம் செய்யும் பரிந்துரை என்று கருதத்தோன்றும். இந்த வரைவு சொல்லும் பரிந்துரையை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும், இல்லத்தரசிகளுக்கான அந்த சம்பளத்தை தரப்போவது கண்வன்மார்கள். இதன் மூலம் வீட்டுப் பராமரிப்பு என்பது பெண்களுக்கானது எனும் தந்தைவழிச் சமூகத்தின் கருத்தாக்கம் வழி மொழியப்படுவதோடு, ‘கணவனாகிய குடும்பத் தலைவன்’ முதலாளி, மனைவி அடிமை, வீட்டு வேலைக்கானவள் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இது பெண்களின் சுயமரியாதையை குலைத்து, நிலப்பிரபுத்துவ தந்தைவழிச் சமூக வரையரையின் கீழ் பெண் / பெண்மை என்பதற்கான கடமைகளுக்கு அடி பணிந்து செல்வதை மட்டுமே நிறுவுகிறது.

வீட்டுப் பராமரிப்பை செய்யும் பெண்களுக்கு கணவன்மார்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி எனும் இந்த பரிந்துரையை நாம் கீழ்வரும் காரணங்களுக்காக எதிர்க்க வேண்டும்:

1.  இந்த பரிந்துரையின் படி கணவன்மார்கள் சம்பளம் தரவேண்டும், அரசு அல்ல. வெனிசுவலா,  உக்ரைன் போன்ற நாடுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன, கோவாவில் கூட இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது, ஆனால் அங்கெல்லாம் அரசாங்கம் அதைத் தருகிறது, கணவன்மார்கள் அல்ல.

கோவாவில் ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கபப்ட்ட சட்டமானது: 3 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 1000 தரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு வருமானம் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதை அரசு தருகிறது.  வெனிசுவலா, உக்ரைனிலும் அப்படியே. உக்ரைனில், ஆண்களும்  வீடுப்பராமரிப்பில் பங்கு பெற விரும்பினால், அதற்குரிய தொழிற்சங்கத்தில் இணையலாம் என்றிருக்கிறது.

3.  கணவன்மார்களிடமிருந்து, அவனுடைய சம்பளத்தில் ஒரு சதவிகிதத்தைப் பெறுவதென்பது குடும்ப உறவை முதலாளி, தொழிலாளி என்று மாற்றி, உறவுகளுக்குள் விரிசலை ஏர்படுத்தும். பெண்களுக்கு எவ்வித நலனையும் செய்யப் போவதில்லை.

4. இந்தியாவில் சராசரி வருமானம் 4,500 என்றிருக்கையில், இது ஆண் பெண் என்று எவருக்கும் அதிகாரத்தைக் கொடுக்கப்போவதில்லை. இதில் ஏழ்மை நிலை கணக்கில் கொள்ளப்படாமலிருப்பது, பாட்டாளி வர்க்க குடும்பங்களுக்கு பெரும் சிரமங்களைக் கொடுக்கும்.

5. பெண்களின் வீட்டு உழைப்பை போற்றுவதாகினும், இது பெண்மை எனும் படிமவார்ப்பை கணக்கில் கொண்டு மேம்போக்காக ஒரு பரிந்துரை அளிக்கிறது.  இது வேலைக்குப் போகும் சில பெண்களின் மனதையும் மாற்றி, வீட்டிலிருந்தாலே பணம் வரப்போகிறதே என்று எண்ணச் செய்யும்.  மேலும் அன்பின் அடிப்படையில், உரிமையின் அடிப்படையில் கணவன்மார்கள் வீட்டு வேலைகளைப் பகிர வேண்டும் எனும் கோரிக்கையை பெண்கள் வைக்க இயலாமல் போகும். எல்லாம் பணத்தால் சரி செய்யப்படுவதாக சொல்லப்படும்.

6.  ஆண்கள் குடித்துவிட்டு சம்பளத்தை வீட்டில் தருவதில்லை என்று சொல்லபப்டுகிறது.  பணக்கார வர்க்கத்தின் குடி பழக்கம் பற்றி இங்கு பேசப்படுவதில்லை. பாட்டாளி வர்க்கத்தையே பொது புத்தி குறை சொல்கிறது, அதிலிருந்து இப்பேச்சுக்கள் எழுகின்றன.  உண்மையில் இது அக்கறையாக இருக்குமேயானால், புகார் எழுதி கொடுத்து குடிக்கும் கணவன்மார்களின் சம்பளத்தை மனைவிகள் தாங்களே பெற்றுக் கொள்ளலாம் என்று கோரலாம். (இல்லையென்றாலும் மனைவிகளே முழு சம்பளத்தையும் பெறுவதற்கும் வழி வகை செய்யலாம்). சில அரசு துறைகளில் இதற்கு வழி இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.

7.  அதேபோல் மது வியாபாரத்தால் பெரும் இலாபமடையும் அரசு ‘குடிகாரர்களின் குடும்பங்களை’ காப்பதைல் பொறுப்பேற்க வேண்டும். அரசு தன்னுடைய எல்லா பொறுப்புகளையும் தனி நபர் மேல் சுமத்தி நழுவிவிட முடியாது.

8.  பெண்கள் மூலம் அது குடும்பத்திற்கு சேமிப்பு எனப்படுகிறது.  100 ரூபாய் தினக்கூலி பெறும் குடும்பங்களின் நிலை என்ன? சொற்ப வருமானத்திலிருந்து குடும்பத்தையே நடத்தவியலாத போது இது எந்த வர்க்கத்தை கணக்கில் கொண்டு பரிந்துரைக்கப்படுகிறது.

9.  பெரும்பாலும், பாட்டாளி வர்க்கங்களில் பெண்களும் வெளி வேளைக்குச் செல்வதால் ‘இரட்டை உழைப்பு’ உழைக்கிறார்கள். அரசோ, தந்தைவழிச் சமூக அமைப்போ இரட்டை உழைப்பிலிருந்து பெண்ணை விடுவிக்கும் வழிகளை யோசிக்காமல், மீண்டும் மீண்டும் அவளை பெண்ணாகவே வைத்திருக்கவும், அதற்கு ஒரு கூலியை நிர்ணையிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

10.  வீட்டுக் வெளியே சென்று வேலை செய்வது பெண்களுக்கு தன்னிறைவை, சுயமரியாதையை உறுதி செய்கிறது, இப்பரிந்துரையினால் பெண்கள் வீட்டில் முடக்கப்படுவர், வருமானம் குறைவாக இருக்கும் குடும்பங்களில் இது ஆணுக்கு பெரிய சுமையாகி, பெண் மனதையும் திரித்து குடும்ப உறவை சிதைக்கும்.

சமூகத்தின் பெண்மை கருத்தாக்கமானது, பெரும்பாலான பெண்களை இல்லத்தரசிகளாக இருக்கும் பணியை விரும்பி ஏற்கச் செய்துள்ளது. குழந்தைப் பேறு, வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு என்பவை பெண்ணுக்கான கடமைகள் என்றிருக்கிறது.  பெண்ணுக்கான கடமைகள் என்பதை மறு-சீராக்கம் செய்யாமல் அவ்வுழைப்பிற்கு கூலி மூலம் பேரம் பேசுவது பெண் விடுதலையாக கருதவியலாது, இது பெண் அடிமைத்தனம். இப்பரிந்துரை பிற்போக்குத்தனமானது.

பரிந்துரைகள்:

1.  தன்னுடைய கடமைகளிலிருந்து விலகிச் செல்ல அரசு இத்தகைய பரிந்துரைகளை கந்துடைப்பாக கொண்டுவர முயல்கிறது. ஆணைச் சார்ந்து வாழ்வதிலிருந்து பெண்ணுக்கு விடுதலை அளிக்க பெண்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

2.  இரட்டை உழைப்பிலிருந்து பெண்ணை விடுவிக்கவும், குழந்தை பராமரிப்பிலிருந்து விடுபட்டு பெண்ணும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவும் ஏற்ற வகையில் சமூகக் கூடங்கள், பொது சமயற்கூடம், பொது லான்ட்ரி, பொது குழந்தைப் பராமரிப்பு மையங்களை அரசு உருவாக்க வேண்டும்.  இதன் மூலம் பெண்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் தாங்களாகவே அதிகாரம் பெறுவர், கணவன்மார்களின் சம்பளத்தினால் அல்ல.

3.  வீட்டுப் பராமரிப்பை மட்டுமே செய்ய விரும்பும் பெண்களுக்கு அரசு ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு மாத ஊதியம் வழங்கலாம்.

4.   பெண்கள் விடுதலைக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதை விடுத்து 33% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்.

6.   எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதிய அளவை உறுதி செய்து, அது கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்கானிக்க வேண்டும்.

.

நிலப்பிரபுத்துவ-தந்தைவழிச் சமூக வரையரியின் படி பெண் எனும் வரையரைக்குள் வைத்து போலியாக பெண் உழைப்பை போற்றும், பெண் சுயமாக பொருள் ஈட்டவும், இரட்டை உழைப்பிலிருந்து விடுவிக்க முயலாததுமான இந்த பயனற்ற பரிந்துரையை, மாசெஸ் அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.

Related Links:

http://newindianexpress.com/states/tamil_nadu/article602773.ece

http://zeenews.india.com/news/nation/soon-husbands-to-pay-salary-to-their-housewives_797633.html

http://dailystuff.org/goa-government-to-pay-rs-1000-every-month-to-homemaker-mothers/

http://articles.timesofindia.indiatimes.com/2012-05-13/special-report/31689070_1_homemakers-fewer-women-household

http://www.deccanherald.com/content/70650/banner-300×250.swf

Tagged: , , , ,

2 thoughts on “வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கு சம்பளம்

  1. நல்ல பரிந்துரைகள்; அனைத்து நிலைகளிலும் மகளிரின் இட ஒதுக்கீடு சட்டப்படி செயற்படுத்தப்பெற்று அது கண்காணிக்கப்பெற வேண்டும். ஆண், பெண் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். அனைத்துப்பணிகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியமும் உரிமைகளும் உறுதிபடுத்தப்பெற வேண்டும். அரசின் இப் பயனற்ற பரிந்துரை போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது.

  2. The proposed bill for salary for House Wives to be paid by Husbands is adding fuel to the battle of the sexes…pl find below a question put up seeking clarity!!

    hi, many thanks for your mail. but would paying a salary to wife entitle a husband to record deficiency of service and on that grounds seek a divorce?
    or separation?

    கணவன் மனைவிக்கு சம்பளம் தருவதானால், மனைவியின் வேலைகளில் திருப்தியில்லாத போது அவர் விவாகரத்தையோ, விலகலையோ கோரலாமா !!!!

    ஆதரவு தரப்பினர் – கணவனை முதலாளியாக்க முயலும் இந்த பரிந்துரை ஆபத்தானது, இது பாலியல் போரை மேலும் வலுவாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a comment