‘கணவரின் அதிகாரத்தை நிராகரிக்கத் தூண்டியவர்கள்’ – பிபிசி


சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணை அவரது கணவரின் அதிகாரத்தை நிராகரிக்க தூண்டிய குற்றத்தின் பேரில் தண்டிக்கப்பட்டுள்ள இரு பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள், அந்த தண்டனையை நீக்குமாறு தமது அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

தமக்கு விதிக்கப்பட்ட 10 மாத சிறைத்தண்டனையை நீக்குமாறு அந்த இரு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இந்த வார பிற்பகுதியில் விசாரணைக்கு வரவுள்ளது.

வஜெகா அல் குவைதர் மற்றும் பௌசியா அல் ஒயோயுனி ஆகிய இந்த இரு செயற்பாட்டாளர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை, அவர்களை சிறையில் போட்டு, அவர்கள் பெண்களுக்காக எழுப்பி வருகின்ற குரலை அடக்குவதற்கான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

சவுதி பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர் வஜெகா.

பௌசியா சவுதியில் பெண்களுக்கான செல்வாக்கு மிக்க இணையதளம் ஒன்றை நடத்திவருகின்றார்.

வீட்டில் அடைக்கப்பட்ட கனடியப் பெண்

ஆகவே இரு வருடங்களுக்கு முன்னதாக தான் கடுமையாக தனது சவுதியைச் சேர்ந்த கணவரால் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக நத்தலி மோரின் என்னும் கனடிய பெண் முறையிட்ட போது, இவர்கள் இருவரும் அதில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தலையிட்டார்ககள் என்பது யதார்த்தமானதுதான்.

ஆனால், அந்த துஷ்பிரயோக குற்றச்சாட்டை அந்தப் பெண்ணின் கணவர் மறுத்தார்.

அந்த கனடிய பெண், தன்னையும் தனது குழந்தைகளையும் தனது கணவர் உணவு, தண்ணீர் இல்லாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், தனக்கு உதவுமாறும் தமக்கு டெக்ஸ்ட் மூலம் உதவி கோரினார் என்று பௌசியா கூறுகிறார்.

ஆகவே தாம் இருவரும், அந்த கனடிய பெண்ணுக்கு உணவு வழங்குவதற்காக அவரது வீட்டுக்கு சென்றதாக இரு பெண்களும் கூறுகின்றனர்.

ஆனாலும், அந்த டெக்ஸ்ட் செய்தி உண்மையில் தம்மை இந்த விடயத்தில் மாட்டி விடுவதற்காக நத்தலியின் கணவராலேயே அனுப்பப்பட்டதாக பௌசியா கூறுகிறார்.

நத்தலியின் கணவர் பொலிஸுக்கு புகார் செய்ய, பொலிஸார், நத்தலியை கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைது செய்தார்கள்.

இவர்கள் இருவருக்கும் இந்த ஜூன் மாதத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, அந்தக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக இவர்களுக்கு தக்பீப் – அதாவது ஒரு மனைவியை அவரது கணவரின் அதிகாரத்தை நிராகரிக்குமாறு தூண்டி விடுதல் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இவர்களுக்கு 10 மாதச் சிறைத்தண்டனையும், 2 வருடங்களுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

கண்டனம்

இதனை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

இந்த இரு பெண்களும் கடந்த காலங்களில் சவுதி பெண்களின் உரிமைகளுக்காக போரடிதற்கான பதிலடியாக, அவர்களை மௌனிக்கச் செய்வதற்காகவே அவர்களுக்கு இந்தச் சிறைத்தண்டனை வழங்க்கப்படுவதாக ”ஈக்குவாலிட்டி நவ்” என்ற அமைப்பின் செயற்பாட்டாளரான சவுட் அபு தையே பிபிசியிடம் தெரிவித்தார்.

செல்வாக்கு மிக்க சூரா கவுன்ஸிலில் பெண்களுக்கு உறுப்புரிமை வழங்குவது, அடுத்து வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க இடமளிப்பது ஆகியவற்றின் மூலம் மன்னர் அப்துல்லா சவுதியில் பெண்களுக்கு மேலும் உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவை வெறுமனே ஒரு குறியீட்டளவிலானவை மாத்திரமே என்று செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கக்கூடிய ”பாதுகாவலர்” என்ற அதிகாரத்தில் மட்டுப்பாடுகள் தேவை என்பதுதான் தற்போது பெண் உரிமைச் செயற்பாட்டாளர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இந்த இலகுவில் மாற்ற முடியாத அம்சங்களுக்கு எதிராகப் போராடி பெண்களுக்கான ஒரு மேம்பட்ட உலகை உறுதி செய்யும் போராட்டத்தில் வஜெகாவும் பௌசியாவும் உண்மையில் வீரப் போராளிகள் என்று அவர்கள் பாராட்டுகிறார்கள்.

 

source: http://www.bbc.co.uk/tamil/global/2013/07/130710_saudiwomen.shtml

 

Tagged: , , , , , , ,

Leave a comment